பாட்டுக்குப் பாட்டெடுத்து

 

குங்குமம் புதிய பத்தி – அற்ப விஷயம்

‘தொட்டால் பூ மலரும்’. கோவளம் கடற்கரை ஓரமாக ஓர் அழகான மாலைப் பொழுதில் எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே வருவார். எதிர்த் திசையிலிருந்து சரோஜாதேவி மெல்ல நடந்தபடி ‘தொடாமல் நான் மலர்வேன்’ என்று எசப்பாட்டு பாடுவது அதே நிதானத்தோடு இருக்கும். அந்த நிதானத்துக்கு ஒரு அழகு உண்டு. ஒரு கம்பீரம் உண்டு. ஒவ்வொரு அடி முடிவிலும் ஒலிக்கும் கை தட்டும் சத்தம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு எதிர்பார்க்க வைக்கும். பாட்டு முடிந்து வெகுநேரம் ஆனாலும் மனதில் தாளம் கொஞ்சமும் தவறாமல் தொடர்ந்தபடி அந்தக் கைதட்டு கூடவே வரும். செவ்வானமும் கடலும் பின்னணியாக எம்.ஜி.ஆர் நடந்து கொண்டே இருப்பார். இருந்தார். அந்தப் பாட்டுக்கு கோட் – சூட் மாட்டி விட்டு வேறே ஒன்றாக அடையாளம் காட்டும் வரைக்கும். ரீ-மிக்ஸின் உபயம் இது.
‘தொட்டால் பூ மலரும்’ ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் அடையாளப் பாட்டு. இடுப்பில் இருந்து நிஜார் அவிழ்ந்துவிடாமல் நைந்துபோன பெல்டை ஜாக்கிரதையாக இருக்கிக் கொண்டு நாற்பத்தேழு பைசா டிக்கெட் பெஞ்சில் உட்கார்ந்து அதைப் பார்த்தபோது அதன் காதலும் கவிதையும் புரியவில்லை. ஆனால் இசை கட்டிப் போட்டது. இவ்வளவு பரபரப்பில்லாத, வாழ்க்கையில் பெரியதாக எதையும் ஆசைப்படாத, அலைமோதாத பொழுதுகள். பொங்கலையும், தீபாவளியையும், பள்ளிக்கூட விடுமுறையையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதிலேயே பாதி மகிழ்ச்சி கிடைத்த பொற்காலம். தொட்டாலும் தொடாவிட்டாலும் பூ மெல்லத் தான் அப்போது எல்லாம் மலரும். ரீ மிக்ஸ் வேகத்தில் கைதட்டினால் பூக்காத பூ.

ரெஹ்மானுக்காக அந்த ரீமிக்ஸை ரசிக்கப் பழகியபோது அடுத்தடுத்து மதுரைக்கு வந்த சோதனையாக ரீமிக்ஸ் படையெடுப்பு. சிவாஜியோடு ‘சுவர்க்கம்’ போன ‘பொன்மகள் வந்தாள்’. ரீமிக்ஸில் ராஜதானி எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவள் வந்ததையும் போனதையும் பார்த்து அரண்டுபோய் நிற்கும்போதே, கமலும் ரஜனியும் சேர்ந்து கட்டியம் கூறும் ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்’. ரீமிக்ஸ் மெஷின் கன்னால் சுட்டுத் துளைத்து குண்டுபாயந்த இடத்தில் ஆங்கில மசாலா தூவி எரிய வைத்ததில் சங்கீதம் இருந்ததோ என்னமோ சந்தோஷம் காணாமல் போனது. தாத்தா காலத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாட்டிலிருந்து ஒரு வரியை மட்டும் உருவி பல்லில் சிக்கின மாம்பழ நார் மாதிரி திரும்பத் திரும்ப புரட்டி ஒலிக்க வைத்து அடுத்த சித்ரவதை. போதையேற்றும் ‘ராதா காதல் வராதா’ ரீமிக்ஸில் வந்தபோது எஸ்.பி.பி சரியாக உச்சரித்த ‘ராசலீலை தொடராதா’ ‘ராஜலீலை தொடராதா’ என்று மாறிவிட்டது. ராசலீலை என்பது ரசமான இன்ப அனுபவத்தைச் சொல்வது. ராஜலீலை கோடம்பாக்கம் கண்டுபிடிப்பு.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்களின் திறமையைப் பற்றி எள்ளளவு சந்தேகமும் கிடையாது. அற்புதமான இசைமேதைகள் ஒவ்வொருத்தரும். டெலிஃபோன் டைரக்டரியைக் கையில் கொடுத்தால் கூட, அதற்கு அம்சமாக இசை அமைத்துக் கொடுத்துவிடுவார்கள். பாட்டு எழுத வேணுமா? கம்ப்யூட்டர் எதற்கு இருக்கு? என்ன மாதிரிப் பாட்டு வேணும் சொல்லுங்க. நாலு வார்த்தை இங்கிலீஷ், அடுத்த ரெண்டு ஜெர்மன், அப்புறம் சங்க காலத் தமிழ் வார்த்தை ஒண்ணு. எல்லாம் பாபா ப்ளாக் ஷீப் மாதிரி மோனையிலே, அதான், ரைமிங்லே அங்கங்கே கரெக்டா வந்து விழணும். அப்புறம் அங்கங்கே வாடா, போடான்னு காதலி காதலனை அதட்டி கொஞ்சற சத்தம். சத்தத்துக்கும் முத்தத்துக்கும் சந்தம் தேவை. இவ்வளவு தானே? ராத்திரியோட ராத்திரியா ஒரு எண்டர்பிரைஸ் ஜாவா புரொகிராம் எழுதி ரெடியா வச்சுடறேன். காலையிலே நீங்க வந்து பட்டனைத் தட்டினா பாட்டு வந்து விழும். மெட்டுப்படி இல்லாமல் போனால் காசு வாபஸ்.

எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் இருக்குமே, இந்த ரீமிக்ஸ் எங்கே தொடங்கியது என்று இண்டர்நெட்டில் தேடிப் பார்த்தேன். அமெரிக்காவில் ஆரம்பமானதாம். அங்கே வாரக் கடைசி ராத்திரிகளில் டிஸ்கோவும் மதுக்கடையும் நிரம்பி வழியும். ஜோடி ஜோடியாக உள்ளே போகிறவர்களின் ஆட்டமும் பாட்டமுமாக அமர்க்களப்படும். ஆடுகிற கால்கள் நிறுத்தாமல் ஆட வசதியாக பாப் ம்யூசிக் பாட்டுக்களை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று பிய்த்து எடுத்து ஒற்றை ஒலி நாடாவில் கலவையாகப் பதிந்து டேப் ரிக்கார்டரில் போட, முதல் ரீமிக்ஸ் பிறப்பு. நிற்காமல் ஆடினால் மட்டும் போதாது, இன்னும் வேகமாக பாட்டு ஒலிக்க வேண்டும் என்று அடுத்த கோரிக்கை. பாட்டு வரிகளை அப்படியே வைத்துக்கொண்டு இசைக் கருவிகளை வேகமாக இசைத்து ஒலிப்பதிவு செய்தபோது அதுவும் நடந்தேறியது. ரீமிக்ஸ் வளர்ந்த கதை இது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ரீமிக்ஸ் இப்போது இலக்கியத்திலும் வந்தாச்சு. ஷேக்ஸ்பியரின் அமர காவியங்களான நாடகங்களை இந்தக் கால இங்கிலீஷில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. தமிழ் இலக்கிய மேதைகள் எழுதிய படைப்புகளை அவ்வளவு கஷ்டப்பட்டு ரீமிக்ஸ் செய்ய வேண்டாம். அவற்றை சினிமாப் படம் எடுக்க திரைக்கதை அமைத்தாலே போதும்.
(குங்குமம் 20 ஆகஸ்ட் 2008)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன