இசைவிழா சமணம்

கச்சேரி நடந்து முடிந்து கலைஞர்கள் வெளிவந்து கொண்டிருந்தார்கள். உப – பக்க வாத்தியக் கலைஞர் எனக்கு நல்ல நண்பர். பாட்டுக்கு இயைந்தும், ’தனி’ நேரத்தில், நிறைவாக வாசித்து தாளப் பந்தல் வேய்ந்தும் ரசிகர்களின் கரவொலி பெற்றிருந்தார்.

என்ன கொஞ்சம் தாங்கித் தாங்கி நடக்கறீங்களே என்று விசாரித்தேன். ‘ஆமா சார், கால் மரத்திருக்கு… muscular cramps .. இன்னும் கொஞ்ச நேரத்திலே சரியாயிடும்’ என்றார் அவர்.

இரண்டு நாள் முன் பாடிய இரு சிறுமிகளில் ஒருத்தி மேடையில் கால் மடித்து அமர மிகவும் கஷ்டப்பட்டது தெரிந்தது. பாட்டுக்கு நடுவே அவ்வப்போது கால்களை முன் பின் அசைத்தபடி இருந்தாள் அந்தச் சிறுமி. அப்படியாவது கஷ்டப்பட்டு பாட வேணுமா என்று தோன்றியது.

எல்லா கர்னாடக, இந்துஸ்தானி இசைக் கலைஞர்களும் தரையில் சம்மணமிட்டு இரண்டரை – மூன்று மணி நேரம் அமர்ந்து தான் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும். சம்மணம் கொட்டி இருப்பது சமணத் துறவிகளுக்கு வேண்டுமானால் இயல்பானதாக இருக்கலாம். மற்றவர்களுக்கு, அதுவும் மணிக் கணக்காக சம்மணம் கொட்டி இருக்க சிரமம்தான்.

இதை சமாளிக்க, இந்துஸ்தானி இசைக் கலைஞர் ஷோபா குர்டூ ஒரு மர முக்காலியில் அமர்ந்து பாடியதை தூர்தர்ஷனில் பார்த்த நினைவு. முதிய சரோட் கலைஞர் ஒருவர் உள்மேடை ஓரமாக கால்களை மடிக்காமல் தொங்க விட்டு உட்கார்ந்து இசைத்த நினைவும் உண்டு.

இதெல்லாம் எவ்வளவு தூரம் பொதுவாக நடப்பாக்கக் கூடும் என்று தெரியவில்லை. மேடை அழகியலை சம்பந்தப்படுத்தி கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

இசை நிகழ்ச்சிக்கு நடுவே பத்து நிமிடம் இண்டர்வெல் விட்டால் என்ன?

சிறுவனாக இருந்த அறுபதுகளில் நான் பெரியவர்களோடு போயிருந்த இசை நிகழ்ச்சியில் ஓர் இந்துஸ்தானி இசைஞர் நிகழ்ச்சிக்கு நடுவில் இடைவேளை விட்டு, அற்ப சங்கைக்கு ஒதுங்கி வந்து, ஓரமாக உட்கார்ந்து புகைக்குழாய் புகைத்த நினைவு.

உ.வே.சாவின் ‘நினைவு மஞ்சரி’ நூல் வரிசையில், பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையறிஞர் ஒருவர் (மகா வைத்தியநாத ஐயர்?) திருவாவடுதுறை மடத்தில் மணிக் கணக்காக நிகழ்த்திய இசையரங்கில் நடுவே இடைவேளை விட்டு சந்தியாவந்தனம் செய்து வந்ததாகக் குறிப்பிடுவார்.

கேரளத்தில் சோபான சங்கீதம், எடக்க என்ற இசைக்கருவியை நின்றபடி மீட்டித்தான் இசைக்கப்படுகிறது. சாக்கியார் கூத்தில் சாக்கியார் பெரும்பாலும் உட்கார்வது இல்லை. கதகளியில் பெரும்பாலும் நின்றும், நடனமாடியும் தான் பாத்திரங்கள் கதையை நிகழ்த்துகிறார்கள். பிரகலாத சரித்திரம், குசேலாபாக்கியானம் போன்ற கதைகளில் சிறுது நேரம் நரசிம்ம மூர்த்தியோ, குசேலரைச் சந்திக்கும் கண்ணனோ உட்கார்ந்து அபிநயித்து எழ வசதியாக ஒரு ஸ்டூல் மேடையில் இட்டிருப்பார்கள்.

மேற்கத்திய செவ்வியல் இசையில் தனிப் பாடகரும், குழுப் பாடகர்களும் நின்றபடிதான் பாடுகிறார்கள்

உங்களால் எவ்வளவு நேரம் கால் மடித்து சம்மணம் கொட்டி உட்கார முடியும்?

Pic Chakyar Koothu – Vineeth Chakyar
Photo courtesy : youtube.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன