கேட்விக் வெண்பா மூன்று

கேட்விக் வெண்பா மூன்று

லண்டன் கேட்விக் விமானதளம் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு அடுத்தபடி நிறைய ஃப்ளைட்களை கையாள்கிறது. பரபரப்பான கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் கேட்விக் ஏர்போர்ட்டை ஒன்றரை நாள் முழுக்க அடைத்து வைக்க வேண்டி வந்தது. யாரோ, எங்கிருந்தோ ட்ரோன்களைப் பறக்க வைத்து விமான தளத்தின் கட்டுப்பாடு பிரதேசத்தில் அவற்றை வட்டமிட வைத்து விமானப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து விட்டார்கள்.

இனி இது போல் நடக்காமல் தடுக்க, தொழில்நுட்ப வழியாகத் தீர்வு காண்பதோடு, எளிய தீர்வுகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளது – கழுகு வளர்த்து அவற்றுக்கு ட்ரோன்களைத் துரத்தி அழிக்கப் பயிற்சி அளிப்பது. ஆனால் இந்த ட்ரோன் தாக்குதலை வளர்ப்புக் கழுகுகள் உணர்ந்து கொள்ள முடியாமல் போனது. இன்னும் தீவிரமான பயிற்சி அவற்றுக்குத் தேவைப்படலாம்.

இங்கிலாந்து அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பெண்மணி, வேட்டை நாய் வளர்த்து ட்ரோன்களை விரட்டலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். வேட்டைநாய் பறக்காதே, தரைக்கு எட்டடி, அதற்கும் மேல் பறந்து வட்டமிடும் ட்ரோன்களை நாயை வைத்து எப்படி அழிப்பது என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை

கேட்விக் விமானதளம் கேடொன்று வந்ததென்று
பூட்டிவைத்தார் ஒன்றரைநாள் பேரவதி – நாட்டியாக
யாரோ பறக்கவிட்ட ட்ரோன்கள் சூழ்ந்திருக்க
நூறு விமானங்கள் ரத்து

வானில் பறந்தபடி வம்புசெய்யும் ட்ரோன்களை
தானே விரட்டத் தொழில்நுட்பம் – ஏனோசொல்
வல்லூறு தான்வளர்த்தால் வட்டமிட்டு ட்ரோன்தகர்க்கும்
எல்லோரும் சொல்வர் சரி

காவலுக்கு நாய்வளர்த்து கேட்விக்கில் சுற்றிவர
மேவிவான் ட்ரோன்பறக்க தாம்குரைத்து – தாவியோட்டும்
பொன்மணி முத்துதிர்த்த பெண்மணி இங்கிலாந்தில்
இன்னும் பதவி இருப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன