புதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்

நெய்மார் விளையாடும் நேர்த்த பிரஸீலா
பையன்மார் கோல்போடும் ஜெர்மனியா வையாது
ஆடிக் கெலித்திடும் அர்ஜண்ட்னா யார்வெல்வார்
தேடி அலைந்தேகும் பந்து.

இரா.முருகன் 1/2

யாரோடும் புத்தம் புதுநட்பு பேணாதீர்
***பார்போய் அழகி படுக்கையில் சேராதீர்
பேணிவைப்பீர் பாஸ்போர்ட் பணம்பொன்னும் ரஷ்யாவில்
காணவாரீர் ஃபீஃபா களிப்பு

இரா.முருகன் 2/2
***பார்போய் – going to the bar (pub)
————————————————————-

கோல்நானார் கண்டு கடவுளை கோல்போஸ்ட்டில் சந்திப்பாய் –
பால்போடும் ரெஃப்ரி பரந்தாமர்: -கால்பந்து
வேல்முருகர் மாமனின் வீர விளையாட்டு:
பாலாழி தானவர்கோல் போஸ்ட்…..கிரேசி மோகன் ….!
************************************************************************

ஆத்தாசொல் வார்த்தைகேள் ஆட்டம்போய்ப் பார்க்கயிலே
தோத்தவங்க ஆகவேணாம் சேவலையும் சேத்துப்போ
ஆத்தாவின் கோழி அரங்கில் தடையெனவே
சோத்தோடு வெஞ்சனமாச் சு

(இரா.முருகன்)
———————————————-
கந்தர் முருகனின் கோழி எடுத்துச்செல்
பந்து விழுந்திடும் கோல்போஸ்ட்டின் -சந்திலே
வந்திடும் வெற்றிபார் கோழிக் கொடியாலே
சந்த அருணகிரி சொல்….கிரேசி மோகன்….!

***********************************************************************

பின்னிருந்து சட்டை பிடித்திழுப்பார் கைவிலக்கி
முன்னே வழிமறைத்துத் திட்டுதிர்ப்பார் சன்னமாய்த்
தள்ளித் தரைவீழ்முன் தான்விரைந்து மண்தொட்டு
கொள்வாரே நல்லோர் நடிப்பு.

இரா.முருகன்
——————————–
சந்திலே பாய்ந்துவந்து சொக்காய் பிடித்திழுப்பார்,
முந்திடும் மோகன்(மோகன் பாகன் டீம்) முறைத்திட -பந்தினை
வல்லான் உதைத்திடுவார் ,மல்லாண்ட திண்தோளன்
புல்தடுக்கி பீமனாம் பார்….கிரேசி மோகன்….!

*********************************************************************

போலந்து என்றோர்சொல் வாய்திறந்து பேசாதீர்
காலன் நிகரென்றார் கண்டோமே கோலந்தான்
கையாலே பந்தாடும் ***கோலம்ப்யா போலின்று
பைய நழுவுமோ பேர்

இரா.முருகன்

Columbia – Handball – Sanchez

கொலம்பியா சாஞ்சஸ் கரத்தால் அடிக்க,
கிளம்பியது மைதானக் காதை: -விளம்பினார்,
’சந்தேசம்’ ஸ்ரீனிவாசன் ஸெல்லுலாயிட் தன்னிலே
சந்தோஷ வைரல் சிரிப்பு….கிரேசி மோகன்….!
************************************************************

மெக்ஸிகோ பந்துதைத்து மேல்வல்லோர் ஜெர்மனியைத்
தக்கபடி தோற்கடிக்கத் தன்நாட்டார் அக்கணமே
வேகம் நிலத்தில்கால் வைத்துதைத்துக் கூச்சலிடப்
பூகம்பம் ஆச்சுதே காண்.

இரா.முருகன்
———————————–
ஜெர்மனிக்கு மெக்ஸி செருப்படி(ஃபுட்பால் ஆச்சே) தந்திட
கர்மமே கண்ணாய் கவனிப்போர்(பார்வையாளர்)-மர்மமாய்,
ஓங்கி நிலத்தில் உதைத்திட ,வந்ததே
ஆங்கொரு பூகம்பம் ஆம்….கிரேசி மோகன்….!

********************************************************************
அலகிலாகோல் போட்(டு) அரசியல் கண்டார்
உலகநாய கர்கமல்சார் ஒத்து -பலகலைகள்
வென்ற கமல்சார்போல் வென்றார் ரொமாரியோ
இன்றவர் கோல்கவர்னர் போஸ்ட்….கிரேசி மோகன்….! https://t.co/l8xG7ABtGh

பேர்பெற்றார் ஆயிரம் கோல்கொள் பெருமானாய்
ஊர்சொல்ல ப்ரேஸில் அரசியலில் நேர்புகுந்து
கூறிய வண்ணம்செய் கூர்த்த தலைவரின்று
மாறியரொ மாரியோ பார்.
இரா.முருகன்
*****************************************************************************

ரூலறியேன், கால்பந்து கோலறியேன், வார(VAR)றியேன்,
வாலறிவு(பசுக்கள்) மேய்க்கும் வரதராஜ -மாலரிவேன்:
ஃபிஃபா(FIFA) அறியேன், இ.பா, இராமுருகன்(நாவலொடு)
ஃசோபாவில்(SOFA) மெல்லச் சரிந்து….கிரேசி மோகன்….!
——————————————–
வேகமாய்க் காலுதைத்து வெட்ட வெளியுயர்ந்து
போகையிலே கைரெண்டும் தான்விரிந்து போகாதோ
வார்மெல்லக் காட்டும் வழிதனில் ஆடினால்
போரடிச்சுப் போகும்ஃபி ஃபா’

இரா.முருகன்

***************************************************************************

France Vs Peru 1-0

கார்விற்றுப் போதாமல் கட்டிலும் தான்விற்று
ஊர்சுற்றிக் கால்நடந்து உத்யோகம் சேர்ந்தார்
தெருத்தூங்கிப் பட்டினியாய்க் காசுசேரஷ் யாவில்
பெருவாடக் கண்டார் பறந்து 1/2

(பெருவாட – பெரு ஆட; பெரு வாட – தோற்றுப்போய் வாட)
இரா.முருகன்
———————————-
குந்தி அருகமர்ந்து குண்டு ரசிகர்கள்
பந்தாட்டம் காணப்பே ராசனமே தந்தார்
தெருத்தெருவாய் ஓட்டல்கள் தேடிப்போய் தின்று
பெருநாட்டார் போனார் பருத்து

இரா.முருகன்
https://www.theguardian.com/…/36-years-of-hurt-peru-russia-…

————————————————————–
THE MONK WHO SOLD HIS FERRARI படித்ததால்….!
————————————————————-

ஃபெராரியை விற்று ஃபெவிக்கால் பற்றை
ஒரேடியாய் விட்ட ஓல்ட்-மாங்க் -பராரியாய்:
பேரின்பம் கொண்டார் பெருமையாய் ஊர்பெரு:
கூறாமல் சன்யாஸம் கொள்….!கிரேசி மோகன்….!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மற்ற வெண்பாக்கள்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ரெட்டை நாயனம் வெண்பாக்கள்
——————————————–
எல்லை கடந்தெவரும் என்நாட்டில் ஏகிடாது
நில்லாய் நெடுஞ்சுவரே நீங்கியது தொல்லையெலாம்
வெட்டியாய் ட்ரம்புசார் கொட்டமெக்ஸி கர்சொன்னார்
கட்டுசுவர் பல்லுடைப்போம் பார்

(இரா.முருகன்)
——————————————-

எல்லையில் ட்ரம்ப்சார் எழுப்பினார் வேலிசுவர்
இல்லை யினிதொல்லை இல்லீகல் -தில்லை
நடராஜரைக் காணவந்த நந்தனார் நந்தி(ட்ரம்ப் சார்)
தடைச்சுவரை மெக்ஸி உடை ’’….கிரேசி மோகன்…..!

———————————————
Donald Trump insists he will raise a wall in the USA – Mexico border to prevent illegal immigrants from Mexico into the USA

Mexico president hits back after Trump revives claim country will pay for wall

· At campaign-style rally, Trump insists Mexico will fund effort

· Peña Nieto’s response: ‘Not now, not ever’
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பச்சையாய்த் தேநீரும் பால்கலந்த போர்ன்விட்டா
இச்சை தரும்பூஸ்ட்டு ஓவல்டின் மெச்சேனே
தோசயிட்லி தின்றோய்ந்து துல்லியமாய் நாருசிக்க
மோசமான காப்பியும் மேல்

இரா.முருகன் 1/2

பார்த்துக்காய்ச் சும்பால் பதமாக பில்டரில்
நேர்த்து வடித்த டிகாக்ஷனுடன் சேர்சீனி
மண்ணுலகில் நாளும் மணிக்கொருவாய் மாந்தியே
விண்ணுல கேகும் கபி

இரா.முருகன் 2/2
——————————————————————
தளைதட்டா வெண்பாவொடு, டம்பளரில் காஃப்பி
களைகட்டும் காலைப் பொழுதில் -வளைகொட்ட
அண்ணா!வென்(று) அன்பாய் அகமுடையாள் தந்திட
MANNAR-AND- COவாய் மலர்….கிரேசி மோகன்….!
——————————————————–

“Coffee has always seemed to facilitate thinking and catching ideas. Not only that, but the flavor of coffee is beyond the beyond good. Even bad coffee is better than no coffee at all.”
– David Lynch
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சோறு தரமாட்டோம் சோடாவும் ஃப்ரீயில்லை
நீர்குடிக்கக் கிட்டாதே நின்றுவா தூரமெலாம்
எக்கணமும் தூங்கிவிழ ஏர்போர்ட்டில் பெஞ்சுண்டு
சிக்கனவி மானசேவை ரத்து

(இரா.முருகன்)

குடித்தேன் லெமொனேட் கோலிசோடா என்றே
எடுத்தேன் வாந்தியிந்த எம்டன் -வெடித்தனள்(ஏர்-ஹோஸ்ட்டஸ் சிக்கென்று சிக்கன உடையில்)
அக்கறையாய் சொன்னேனே ,ஆள் டமாரமா
இக்கரையில் சிக்கனம் ஈது’’….கிரேசி மோகன்….!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

——————————————–
நாலா யிரம்வருடம் நம்பின் வரப்போகும்
ஆள்வந்து சேர்ந்தாராம் டைம்மிஷினில் கோள்விட்டு
ஆருமில்லை வீடெங்கும் ஆடிக்குத் தள்ளுபடி
சேரும் இடம்நூறு ஷாப்பு.

(இரா.முருகன்)
—————————————————-

கண்ணனுடன் கீதை , கதிர்வேலன் அவ்வையார்
மன்னனுடன் நக்கீரன் ,மற்றும்பல் -வண்ணங்கள் ,
ஆடினேன் சேவகனாய் அய்யாநான் சாகவில்லை
மேடைத் தலைப்பு”கிமு மாது”(கிருஷ்ணருக்கு முன் மாது)….கிரேசி மோகன்….!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பெண்தேடி ராவில் பெரிய சுவரேறிப்
புண்படவே வீழ்ந்துள்ளே போய்க்கலந்து கண்விழித்த
அந்நியர்வீட் டின்பம் அதெல்லாம் நினைவிருக்கத்
தன்பேர் மறந்த பெரிசு

(இரா.முருகன்)
———————————————————————-

”பிறன்மனை நோக்கியும் பேர்மறவா ஃபிப்டி(50)
அரண்மனை வீட்டில் அதேதான் -இருள்மணியன்(கண்ணன்மணி இருள் வண்ணன்)
கீதை புரியும் கிழவருக்(கு) ஆனாலோ
பாதை, பெயர்,மறந்து போச்சு’’….கிரேசி மோகன்….!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&777

உப்பிப் பருத்த உடலுயரம் கூடுதல்
தப்பா அவர்க்கீசர் தந்தகொடை அப்பாகேள்
சென்ற விமானமது சேர்வழிக்கு சீட்டில்லை
நின்றுவரச் செய்தார்நீ சர்

இரா.முருகன் 1/2

சீட்டில்லை – seat இல்லை

இதுவுமது

உப்பிப் பருத்த உடலுயரம் கூடுதல்
தப்பா அவர்க்கீசர் தந்தகொடை அப்பாகேள்
சென்ற விமானமது சேர்வழிக்கு சீட்டில்லை
நின்றுவந்தார் நெக்ஸ்சீட் நபர்

இரா.முருகன் 2/2
Obese passenger made to stand during the entire flight
————————————————————————–
’’உப்பில்லா பண்டம் குப்பையிலே: ஆனாலோ
உப்புள்ள பண்டமோ தொப்பையிலே: -அப்புறம்
நின்னுண்டு போகணும் நீண்டிடும் ப்ளேன்சவாரி
கண்ணுண்டு கண்ணாடி காண்’’…..கிரேசி மோகன்….!
(அல்லது)
கண்ணுண்டே குண்டைக் குறை….!
****************************************************

கூடவந்து பீர்குடிக்க வாடாத தொப்பையுண்டு
தேடி ஒயினருந்த பாரில்கண் ஆடியில்நீ
ரம்குடிக்க கூட்டெதற்கு ராவும் பகலுமெலாம்
சும்மா தனிச்சுக் குடி

பாரில்கண் ஆடியில் நீ –ur image accompanies u in d mirror at d pub

இரா.முருகன்
————————————————
தனித்த மதுரம் தவமே கிருஷ்ணா
இனிக்கும் இவளோ(டு) இணைவாய் -மனித்தருள்
தோதாகத் தோள்கொடுக்க தோழர் வெகுசிலரே
நாதவிந்து ஓல்ட்மாங்க்கே(OLD MONK) நீ’’….கிரேசி மோகன்….!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாடியாடி ஆப்பரேஷன் பண்ணுகிறார் நம்சர்ஜன்
ஓடாதே உத்ரவாதம் உன்நலமே தேடிவரும்
ஆட்டத்தில் உற்சாகம் ஆழவெட்டும் கத்தியை
போட்டுத்தைத் தார்வயிற்றில் போ.

இரா.முருகன்

வசூல்ராஜா வந்தறு வைசிகிச்சை செய்தார்
குஷால்தாஸாய்ப் பாட குணமாம் -மஸால்வடை
வைத்தால் எலிமாட்டும் வாடிக்கை, வேடிக்கை
வைத்தியரும் எம்பிபிஎஸ்(MBBS) வே”….கிரேசி மோகன்….!

https://scroll.in/…/watch-this-doctor-posted-videos-of-hers…
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நாடுவிட்டு யூயெஸ்ஸில் தேன்நிலவு கொண்டாட
பாடுபட்டுக் காசுசேர்த்த தம்பதிகள் வாடிநிற்க
கட்டணமாய் வாங்கினராம் கால்டாக்சி நூயார்க்கில்
பட்டணத்தில் துட்டு பறிப்பு.

இரா.முருகன்

https://t.co/ibiUnTeOye

Honey-Moon புறப்பட்டார் ஹஸ்பண்டண்ட்(Husband And) ஒய்ஃப்பும்(Wife)
Money -Moonனாய் மேன்ஹாட்டன் மாற்ற -இனியேனும்
தேன்நிலவு ந்யுயார்க்கு தம்பதிகாள் செல்லாதீர்
வீண்செலவு வீடு(வரை) உறவு’’….கிரேசி மோகன்….!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

காலன் அழைக்கக் கணவனிடம் உத்திரவாய்
வேலைதந் தேவிண்ணில் ஏகினாள் சாலாச்சி
ஏச்சு பயந்தவன் எந்நாளும் நீர்வார்த்த
பூச்செடிகள் ப்ளாஸ்டிக்காம் சார்.

இரா.முருகன்
—————————-

செத்தவள் கேள்வனிடம் சாகும்(போது) வரம்பெற்றாள்
உத்திரவுக்(கு) உட்பட்ட உத்தமனும்(உத்தம புருஷன்) -பத்தினிக்காய்
ஆண்டாண்டு காலமாய் கோண்டு(கோதண்டராமன்)நீர் ப்ளாஸ்டிக்மேல்:
மாண்டவள் கூறினாள்நீர் மக்கு(ப்ளாஸ்டிக்)’’….கிரேசி மோகன்….!

https://t.co/YZ122KgSES?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வெண்ணெ யிடாமல் வெறுந்தண்ணீர் தான்கலந்து
பண்ணினால் நூறாண்டு உண்ணலாம் அண்ணா
உடலோய்ந்து போனாலும் ஊர்சுற்றத் தெம்பு
கடலோடி தின்னுபிஸ் கட்.

இரா.முருகன்

கடலோடி – மாலுமி

https://t.co/GEYpCgoDGP
————————————————–

நீர்பிஸ்கெட் கார்வண்ணன், நீர்வண்ணன்(திருநீர்மலை) கொள்வது
மார்பிஸ்கெட் ஊட்டிடும் மாற்றுத்தாய் -பார்வண்ணம்
தாதி(செவிலித் தாய்) யசோதைக்கு தந்தாரே அன்று,கண்ணன்
வீதிமண் உண்டார்,நீர் வான்(மண்வாச மழைநீர் பிஸ்கெட்….!)…..கிரேசி மோகன்….!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பெண்டாட்டி ஊர்போகப் பிள்ளை வளர்த்தபடி
கொண்டாடம் நீபெறலாம் கோயிந்து திண்டாட்டம்
ஏதுமில்லை பாரிலுண்டு தாதியொடு காப்பகம்
பாதிவிலை பீராம் பருகு.

இரா.முருகன்

https://t.co/cMahmMILQy

CUBஐ அழைத்துச்செல் PUBக்கு HUBBYஉன்
குப்பியூர் போனதால் கஷ்டமில்ல, -குப்பாகேள்
தாதியுண்டு புள்ளசேட்டை தாங்கிட, மீதிகேள்
பாதிவெல தேதியின்று பீர்(BEER) )….கிரேசி மோகன்….!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பொங்கும் எரிமலை போக்கு வரத்துரயில்
வங்கக் கடல்சீறி வந்திடும் அங்கேபார்
குல்ஃபி கரடிக்குக் கொண்டூட்டி நின்றபடி
செல்ஃபி எடுக்கணுமா சொல்

இரா.முருகன்
——————————–
https://t.co/kqTMn1jLRZ

அல்பி புகைப்படம் ஆத்தில்(வீட்டில்) எடுத்துக்கொள்,
SELFஃபாய் பொங்கும் சிவந்தமலை – ஸெல்ஃபியா!
கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சீருன்போல்
மற்றோர்க்கோ ஸெல்ஃபி மரிப்பு….கிரேசி மோகன்…..!

(அல்லது)
அல்பி புகைப்படம் ஆத்தில்(வீட்டில்) எடுத்துக்கொள்,
SELFஃபாய் பொங்கும் சிவந்தமலை – ஸெல்ஃபியா!
கேணையே! தீமலை தன்னில்போஸ் நீதரலாம்
சோணையும் தீதான் சிவம்….கிரேசி மோகன்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மன்றோய்ந்த சோவியத்து மாவீரர் ஆர்ட்டிக்கில்
சென்றபோது டப்பாவில் கொண்டுபோனார் அன்று
பருவம் குளிர்கூடிப் பட்டினியில் வாடும்
துருவக் கரடிக்குப் பால்

இரா.முருகன்

https://t.co/PD6oGb2tvb

பாலார்வம் கொண்டதோர் போலார் கரடியின்
மேலார்வம் ரஷ்ய மனிதர்க்கு -ஸீல்செய்த
டப்பாவில் பாலினைத் தந்தார்அம் மாவீரர்
அப்பாக்கள் நாளில்(Father’s Day)அவர்….கிரேசி மோகன்….!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மன்னுபுகழ் சர்ஜன் மயக்க நிலைதெளிந்த
கன்னையன் கைகுலுக்கிக் கேட்டாராம் என்னாச்சு
பண்ணியதோர் ஆப்பரேஷன் சக்ஸஸா இங்கிருந்து
இன்னுமா போகலே நீ

இரா.முருகன்

“Are you dead, sir?”: Video shows ER doctor mocking patient –
Washington Times
California

பேஷண்டாய் சர்ஜனிடம் பேஷண்ட் பதிலாய்
ஆஷாட பூதி, அடியேன்நான் -வேஷமிட்டேன்
நானார் விசாரம், நமதுமுனி(ரமணர்) சொன்னாற்போல்
(செத்துப்)போனவனைப் பார்த்துப் பகர்….!

(அல்லது)

பேஷண்டாய் சர்ஜனிடம் பேஷண்ட் பதிலாய்
’’ஆஷாட பூதி, அடியேன்நான் -வேஷமிட்டேன்
நம்பிவிட்டீர் சர்ஜனே நான்செத்துப் போனதாய்
கம்பியெண்ணப் போரீர்நீர் காண்’’….கிரேசி மோகன்….!

தொடரும்

(இவ்வெண்பாக்களின் எண்ணிக்கை 400 அடைந்ததும், ரெட்டை நாயனம் 400 என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்த் வெளியிடப்படும். இதுவரை 180 வெண்பாக்கள் எழுதப்பட்டுள்ளன)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன