புதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.

வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘1975’-இல் இருந்து ஓர் அத்தியாயம்

அத்தியாயம் 20 பிப்ரவரி 1977
மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.

பேங்க் கவுண்டர் திறக்கக் காத்திருந்த ரிடையர்ட் பட்டாளக்காரர் ஸ்க்வாட்ரன் லீடர் அமர்ஜித் சிங், கவுண்டர் மேல் வைத்திருந்த ப்ளாஸ்டிக் தட்டில் இருந்து ஒவ்வொரு குண்டூசியாக எடுத்துப் பொறுமையாகத் தன் தலைப்பாகையில் குத்திக் கொண்டிருந்தார்.

வாடிக்கையாளர்களின் அடையாளக் கையெழுத்துகள் கொண்ட ஸ்பெசிமென் சிக்னேசர் காகிதங்களைத் தொகுத்து பைண்டு செய்த புத்தகங்களை ஜாக்கிரதையாக என் மேஜை ஓரம் அடுக்கியபடி அவரையே பார்த்தேன்.

”எங்கேப்பா உன் சகா, பட்டா?” குண்டூசி கொள்ளைக்கு நடுவே அமர்ஜித் சிங் கேட்டார்.

“இன்னும் எழுந்திருக்கலே சாப். இந்தக் குளிர்லே ஒரு டீ கூட போட முடியலே. கை நடுங்குது. பட்டா ரெண்டு நாளா நடுங்கிட்டிருக்கான்” என்றேன்.

பட்டாவின் முழுப்பெயர் சுந்தரேஷ் பட்டா. கன்னடக்காரன். அவனைச் சுற்றி எழுந்த பல சின்னச் சின்ன சரித்திரங்கள் அவனைப் பரவலாக அறியச் செய்தவை. புதிதாக ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது இப்போது.

பேங்க் கவுண்டரே நூறு வாட்ஸ் பல்ப் போட்டது போல் ஒளிர்ந்தது. டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கும் ஷபானா சுல்தானா அங்கே நின்று கொண்டிருந்தார். அவசரமாக ஓடி செக்கை வாங்கி நானே பாஸ் செய்து, இரண்டாவது கையெழுத்துக்கு அக்கௌண்டண்டிடம் ஓடினேன்.

ஒரு குறுஞ்சிரிப்போடு பார்த்த பாயல் நான் ஸ்பெசிமென் சிக்னேசரை எடுக்கக் குனிந்தபோது காதில் சொன்னாள் :

“உல்லு கா பட்டா. அழகான பொண்ணு வந்தா ஓடி ஓடி வேலை பார்ப்பியே”

’உல்லு கா பட்டா’வின் அதிரடியான மொழிபெயர்ப்பு ஆந்தைக் குழந்தை. முட்டாள் என்று அர்த்தம். டெலிவிஷன் நட்சத்திரத்தின் மேல் அழகு சார்ந்த அசூயை காரணமாக இப்போது எனக்கும் பாயலால் பட்டம் சூட்டப்பட்டது.

ஷபானாவை பிம்பமாக மாலை நேரத்தில் டெலிவிஷனில் பார்க்க முடியும். பாயல், பகலில் நேரில் வந்து கூடவே இருக்கும் சல்வார் கமீஸ் தேவதை.

பாயலா, ஷபானாவா என்றால் நான் யோசிக்காமல் பாயலுக்கு ஓட்டுப் போடுவேன். இந்த விஷயத்தில் நானும் பட்டாவும் அப்படித்தான். இதற்கு என்றில்லை, எதற்குமே யோசிக்காமல் துணிவான் அவன்.

பட்டா சென்ட்ரல் ஆபீசில் மனித வளத் துறையில் இருந்தபோது ஆபீசர்கள் மூன்று வருஷத்துக்கு ஒரு முறை பேங்க் செலவில் விடுமுறைப் பயணம் போகும் சலுகையான லீவ் ட்ராவல் கன்செஷன் பகுதியை நிர்வகித்து வந்தான். கையிலிருந்து முதலில் காசு செலவழித்து விடுமுறையில் போய் வந்து அவர்கள் ரயில் டிக்கெட்டுகளையும், பிற செலவுக் கணக்குகளையும் சமர்ப்பிப்பார்கள். அவற்றைச் சரி பார்த்து பாஸ் செய்து அவர்களுக்குப் பணம் கிட்ட வழிசெய்வது பட்டாவின் வேலை.

விடுமுறை பயணச் செலவுக்கான தொகை கேட்டு ஓர் ஆபீசர் அனுப்பிய கோரிக்கையை மேனேஜிங் டைரக்டருக்கே அனுப்பிய சாதனை செய்தவன் பட்டா.

”கரண்ட் அக்கவுண்ட் ஆபீசர் நாரங் வயிறு சரியில்லேன்னு டாய்லெட்டிலே குடியேறிட்டான். கொஞ்சம் அங்கேயும் கவனிச்சுக்க. டாய்லெட்டை இல்லே, கரண்ட் அக்கவுண்ட் கவுண்டரை. கவனமா பார்த்து செக் பாஸ் பண்ணு”

பட்டா விசாரத்தில் இருந்து வெளியேற, அகர்வால் சாப் எனக்கு இண்டர்காமில் ஆணையிடுகிறார்.

“நாரங் நாலு நாள் பழைய கிச்சடியை ப்ரிட்ஜ்லே வச்சு சாப்பிடற ஆள். வயிறு கெடாம என்ன செய்யும்?”

பாயல் அங்கலாய்த்தாள். கிளியரிங் செக் எல்லாம் போஸ்ட் செய்து வரக் காத்திருந்தேன். பட்டா இன்னும் வரவில்லை. இன்னும் அரை மணி நேரம் வராவிட்டால் அவன் லீவு போடணும். போடுவான். சட்டதிட்டப்படி நடக்கிறவன் பட்டா. தெரியாவிட்டால் தேவைப்பட்டால், ஜனாதிபதியிடம் கூடப்போய்க் கேட்க அஞ்ச மாட்டான். சங்கரன் விவகாரத்தை மேனேஜிங் டைரக்டரிடம் கொண்டு போய் ஒரு வழி பண்ணிய மாதிரி.

லட்டு சங்கரன் என்று ஒரு ஆபீசர். ஐந்தடி, ஐம்பதுக்கும் குறைவான கிலோகிராம் எடை, சாதுவான சிரிப்பைச் சதா ஒட்ட வைத்த முகம் என்று வரும் அவர் சாதனையாளரும் கூட. மொத்தம் பத்து குழந்தைகள். குழந்தைகள் என்றால் குழந்தைகள் இல்லை. இவருக்கு நாற்பத்தெட்டு வயசு. கடைசி பிள்ளைக்கு ஆறு வயது. முதல் பிள்ளை இருபது வயது. நடுவில் வேறு வேறு வயதுகளில் பிள்ளைகள், பெண்கள். எல்லோரும் சங்கரன் சம்பாத்தியத்தில் தான் உயிர்வாழ்கிறார்கள்.

பிள்ளை பிறக்கும்போது ஆபீசில் லட்டு கொடுத்து கொண்டாடுவதால் அவர் ‘லட்டு சங்கரன்’.

லட்டு சங்கரனுக்கு எண்பது வயதில் அம்மாவும், எண்பத்தைந்து வயதில் அப்பாவும் கூட உண்டு. அவருடைய பராமரிப்பில் இருப்பவர்கள்.

எட்டு வருஷமாக பேங்க் காசு கொடுக்கும் ’லீவ் ஃபேர் கன்சஷன்’ விடுமுறை எடுக்காமல் திடீரென்று ஒரு வாரம் எடுக்கிறார். பதினான்கு நபர் அணி அணிவகுத்து சென்னை – கல்கத்தா விமானம் ஏற, ஏர் ஹோஸ்டஸ்களே வசீகரிக்கப்பட்டு இவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

போய்விட்டு வந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு டிராவல் பில் போட்டு பணம் கேட்டு நீட்ட, அதிகாரியான பட்டா மயக்கம் போட்டு விழாத குறை.

இவ்வளவு பெரிய தொகையை தனக்கு மேலதிகாரியாக வாய்த்த யாரும் கொடுக்கச் சொல்ல மாட்டார்கள் என்றுபட, நேரே மேனேஜிங் டைரக்டர் கேபினில் யாருமில்லாத நேரத்தில் ஃபைலைக் கொண்டு போய் வைத்து விட்டான் பட்டா. ஆறாம் மாடியில் ஒரே ஒரு டாப் மேனேஜ்மெண்ட் அதிகாரியான எம்.டி பணி இடம் அது. அங்கே போகவே அவரவர்கள் தயங்குவார்கள்.

பட்டா ஃபைலை வைத்துவிட்டு எம்.டி அறை எப்படி இருக்கிறது என்று சாவகாசமாக அங்கே மாட்டியிருந்த நவீன ஓவியங்களின் பிரதிகள், தஞ்சாவூர் ஓவியம், புகைப்படங்கள் என்று வரிசையாகப் பார்வையிட்டிருக்கிறான். நடுவில் இங்கே நாரங் மாதிரி வயிறு கலகலக்க மேனேஜிங் டைரக்டரின் டாய்லெட்டுக்குள் போய்த் திரும்பும்போது, எம்.டி வந்து விட்டார்.

நாரங் வந்துவிட்டான். ”கேன் அண்ட் உட் கணக்கு ஓவர்ட்ராப்ட்லே போறது. கிளியரிங்க் செக் வேறே உண்டு” என்றேன் உடனடி பிரச்சனையைக் கோடி காட்டி. அவன் வயிற்றைத் தடவிக்கொண்டு திரும்பப் போய்விட்டான்.

”வணக்கம் சார், உங்களை ஒருநிமிஷம் பார்க்க வந்தேன். வயிறு கலகலன்னுடுத்து. அதான் உள்ளே போய். தண்ணியே இல்லே சார்”.

பட்டா பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசுகிற தோதில் ஆரம்பிக்க நீங்க யாரு, எங்கேயிருந்து வர்றீங்க என்று பொறுமையிழந்து கேட்டிருக்கிறார் எம்.டி.

”இதே ஆபீஸ் தான், முதல்மாடி, மனிதவளம்”.

தன் பிசினஸ் கார்டையும் கொடுத்து, ”கூப்பிட்டுடாதீங்க சார், மத்த வேலையே நெட்டி முறியது” என்று அங்கலாய்த்திருக்கிறான். அந்த நிமிடத்தில் எம்.டிக்கு அவனைப் பிடித்துப் போனதாகத் தெரிகிறது.

அவனை உட்காரச் சொல்லிவிட்டு அவன் கொண்டு வந்த ஃபைலை பார்த்து விட்டு ஏன் இதை எங்கிட்டே கொண்டு வந்திருக்கே என்று கேட்டிருக்கிறார்.

”பெரும் தொகை சார், ஒரு ப்ளேன் நிறைய உட்கார்ந்து போயிருக்காங்க”.

”போகட்டுமே உனக்கென்ன போச்சு. அவர் குடும்பம் அவர் கூட்டிப் போயிருக்கார்”.

“அதுக்காக பத்து பிள்ளையா? ரொம்ப அதிகம் சார்”.

“என்ன பண்ண்னும்கிறே?”

”ஐந்து அம்சத் திட்டப்படி ஆப்பரேஷன் பண்ணிட்டிருக்கலாமே”.

“நாம் பேங்க் நடத்தறோம். ஆஸ்பத்திரி இல்லே”.

சிரித்து விட்டு அந்த ஃபைலை கையெழுத்துப் போட்டு பாஸ் செய்து, இனிமேல் இப்படியான சில்லறை விஷயங்களைத் தனக்கு அனுப்ப வேண்டாம் என்று சொன்ன அந்த எம்.டி போன மாதம் பதவிக் காலம் முடிந்தபோது தில்லி வந்திருந்தார். கண்டேவாலா ஸ்வீட்ஸ் கடை தூத்பேடாவோடு மறக்காமல் போய்ப் பார்த்து விட்டு வந்தான் பட்டா.

கவுண்டரில் பரபரப்பு. மேஜர் ஜெனரல் சாம் மகேஷ் ஷா தடதடவென்று என் டேபிளுக்கு எதிரே நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, “சீக்கிரம் வா, லாக்கர் ஆபரேட் பண்ணனும். நிறைய வேலை இருக்கு. அப் அப்” என்று அன்போடு ஆணையிடுகிறார்.

வேகமாக நடக்கும் அவரோடு நான் உள்ளே ஓட ஆபீஸே வேடிக்கை பார்த்தது. இந்த வயதிலும் ஹீரோ தான் அவர். ரிடையர் ஆனால் என்ன?

மேஜர் ஜெனரல் தன் பாதுகாப்புப் பெட்டகத்தை திறந்து ஏதோ வைக்கவோ எடுக்கவோ செய்ய, நான் வெளியே காத்திருந்தேன். பட்டா என்ன ஆனான்? ஏன் இன்னும் வரவில்லை? சாப்பிட்டுக் கொண்டிருப்பானோ? தாபா திறந்திருக்காதே. வேறென்ன சாப்பிடுவான்? எல்லா ஆபீசர்களும் ஸ்டாக் செய்து வைத்திருக்கும், தீபாவளிப் பரிசாக வந்த உலர் திராட்சையா? ரோட்ரிக்ஸ் மாதிரி முந்திரிப் பருப்பா?

பிரான்சிஸ் ரோட்ரிக்ஸ் என்ற கோவாக்கார ஆபீசர் ஆபீஸ் வேலையாக ஹைதராபாத் போய் மூன்று நாள் இருந்து திரும்பியபோது சாப்பாட்டுச் செலவாக தினம் ஐநூறு ரூபாய் காட்டிய பில் பட்டாவிடம் வந்தது. அவரைக் கூப்பிட்டு அவ்வளவு தொகை வரக் காரணம் கேட்டிருக்கிறான் பட்டா. சாப்பிட்டேன் என்றிருக்கிறார் அவர் சுருக்கமாக.

“காலை பசியாற என்ன சாப்பாடு?” “வறுத்த முந்திரிப் பருப்பு”.

“பகலுக்கு?” “நெய்விட்டு வறுத்த முந்திரிப் பருப்பு”.

”ராத்திரி?”. “வேகவைத்து நெய் விட்டுக் கிண்டிய முந்திரி உப்புமா”.

“சாயந்திரம் முந்திரி பக்கோடா சாப்பிட்டதையும் சேர்த்துக்கணும்” என்று பிரான்சிஸ் ரோட்ரிக்ஸ் விளக்கி இருக்கிறார்.

’நாலு வேளையும் முந்திரிப் பருப்பு மட்டும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கும் ஆபீசரின் செலவுக் கணக்கைப் பார்வையிட்டு பாஸ் செய்ய வாய்ப்பு அளித்த பேங்குக்கு நன்றி. அவருக்கு இதெல்லாம் ஜீரணமாக பேங்க் செலவில் ஜெலூசில் ஒரு பாட்டிலும், வயிறு சரியாக டல்கோலாக்ஸ் பேதி மருந்தும் வாங்கித் தர சிபாரிசு செய்ய்கிறேன்’.

நீளமாக எழுதிக் கையெழுத்துப் போட்டு அசிஸ்டண்ட் ஜெனரல் மேனேஜருக்கு நோட் போட்டான் பட்டா.

இண்டர்காம் ஒலித்தது. மேலே பேங்கின் அந்நியச் செலாவணித் துறையில் இருந்து ஜஸ்பீர். “ஃபேஷன்ஸ் அபேரல் சைகோன் எக்ஸ்போர்ட் பில் டிஸ்கவுண்ட் பண்றேன். கரண்ட் அக்கவுண்ட் க்ளியரிங் முடிச்சுடாதே. எங்கே போனான் நாரங்?” என்று இரைந்தான்.

நாரங் மேனேஜரிடம் சொல்லி விட்டு வீட்டுக்குப்போய் விட்டானாம். எப்படி இருக்கு கதை? அவன் இருக்கட்டும். பட்டா ஏன் இன்னும் காணோம்?

மனிதவளத் துறையை விட்டு இங்கே தில்லிக்கு பட்டா வந்து சேர்ந்தது எமர்ஜென்சி தொடங்கிய 1975 ஜூன் 25-ம் தேதிக்கு நான்கு நாள் கழித்து.

பெங்களூர் செண்டரல் ஆபீசில் அந்தத் துறையில் ரொம்ப நாளாக இருக்கும் அதிகாரி சுனிதா தாஸும் வங்காளி, அசாமியப் படங்களில் நகைச்சுவை துணைக் கதாபாத்திர வேடத்தில் வரும் அவருடைய கணவரும் தில்லி சுற்றிப் பார்க்க வந்தபோது பட்டாவோடுதான் தங்கியிருந்தார்கள்.

எல்லோரும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு இந்தியா கேட்டும், ஜனாதிபதி மாளிகையும் கொண்டு போய்க் காட்டினால், பட்டா சிடியா கர் போனான். அந்த உயிர்க் காட்சி சாலைக்கு சுனிதா தாஸும், அவள் வீட்டுக்கார வங்காள காமெடியனும் போன நேரத்தில் சிம்பன்ஸி குரங்குகள் தீவிரமான இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால் தாஸ் மோஷாய் கூண்டுக்குள் வீசிய பட்டாணிக்கடலையை வாங்கிக் கொள்ளாது போடா வெண்ணை என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, ஏற்கனவே செய்து கொண்டிருந்ததைத் தொடரப் போய் விட்டனவாம்.

முகம் சிவந்த சுனிதா தாஸ் ‘வாட் இஸ் திஸ்’ என்று பட்டாவிடம் கோபத்தோடு கேட்டிருக்கிறாள். அவன் ஓடிப்போய் மிருகக் காட்சிசாலை அதிகாரி கெட் அப்பில் இருந்த யாரோடோ பேசி விட்டு வந்து சொன்னது :

“ஐந்து ரூபா டிக்கெட்டுக்கு சிம்பன்ஸி குரங்கு தானாம். நூறு ரூபாய் கொடுத்தா சிங்கம் புலி இப்படி பார்க்கலாமாம்”.

பட்டாவின் சம்பள உயர்வு இன்னும் வராததற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. என்று பட்டா தான் சொன்னான்.

”சப் கதம் ஹோ கயீ சாப்”.

கரண்ட் அக்கவுண்ட் கிளார்க் ஷோபா சந்த்வாகர் ஐநூறு கிளியரிங் செக்குகளை ஒரு மணி நேரத்தில் நேர்த்தியாக தலையணை சைஸ் லெட்ஜர்களில் போஸ்ட் செய்து முடித்து சிறு ஓய்வுக்காகக் கிளம்பிக் கொண்டிருக்க, வியப்பும் மரியாதையுமாக வழியனுப்பி வைத்தேன்.

“மராட்டி அக்கான்னா உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்லே. பம்பாய்க்கே ட்ரான்ஸ்பர் கேட்டுப் போய் உதட்டழகிகளைப் பார்த்திட்டிருக்கலாமே”. இது விமல் விடுத்த அம்பு.

“ஒவ்வொரு ஊர்ப் பொண்களுக்கும் ஒவ்வொண்ணு” என்று பொதுவாகச் சொல்ல, “நீ எதைத் தேடி இங்கே வந்திருக்கேன்னு தெரியுமே” என்றாள் பாயல்.

அறிவைத் தேடி என்றேன் பகவான் புத்தர் போல. மூஞ்சி என்றாள் அவள். அது மட்டும் தானா என்ன.

பட்டாவைக் கேட்டால் போட்டு உடைப்பான். ஆள் தான் வரவில்லை இன்னும். மேனேஜர் அறையில் இருந்து அவனுடைய வீட்டுச் சொந்தக்காரருக்கு போன் செய்து பார்க்கலாமா?

தொலைபேசி மத்தியதர வர்க்கத்துக்குத் தொட்டு விடும் தூரம் எனினும் கைக்கெட்டாத கனவாக இருந்த ரெண்டுங்கெட்டான் காலத்தில் ஊர் விட்டு ஊர் டெலிபோனில் ட்ரங்க் கால் போட்டுப் பேச ஒரு மாத சம்பளம் கூட சமயத்தில் செலவழிந்து விடும். பெங்களூருக்கு அவ்வப்போது பந்து மித்திரர்களோடு அரட்டை அடிக்க பட்டாவுக்குக் கிடைத்தது சீஃப் மேனேஜரின் டெலிபோன்.

அவர் வேலை முடிந்து கிளம்பும்போது வழக்கமாக டெலிபோனுக்குப் பூட்டு போடமாட்டார். பட்டா ஆபீசில் எல்லோரும் வேலை முடித்து வீடு போகப் பொறுமையாகக் காத்திருந்து, மெல்ல சீஃப் மேனேஜர் கேபினில் புகுந்து, இருட்டுக்கு நடுவே ஊர் உலகமெல்லாம் அழைத்து ஆபீஸ் செலவில் தொலைபேசி விடுவான்.

இரண்டு மாதம் முன்னால் இப்படி இருளோ என்று கிடந்த ஆபீசில் அவன் சீஃப் மேனேஜர் கேபினில் மும்முரமாக ட்ரங்க் கால் அரட்டையில் மூழ்கியிருக்க, செக்யூரிட்டி கார்ட் தர்யா சிங்க் கதவெல்லாம் அடைத்துப் பூட்டி இறங்கிப் போய்விட்டார்.

உள்ளே பொறிக்குள் எலி போல மாட்டிய பட்டாவுக்கு நல்ல வேளை சீஃப் மேனேஜர் வீட்டு டெலிபோன் நம்பர் தெரிந்திருந்ததால் கிட்டத்தட்ட ராத்திரி ஒன்பதுக்கு சீஃப் மேனேஜர் அகர்வால் சாப் அவர்களை பைஜாமா, முண்டா பனியனில் பாதி பிய்த்துத் தின்ற ஆலு பரத்தாவோடு ஆபிசுக்கு ஓடி வர வைத்து விடுதலை பெற்றான்.

அந்தக் கதை தில்லி, பம்பாய், கல்கத்தா, மதராஸ், பெங்களூர் என்று சகல கிளைகளிலும் இன்னும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இரண்டு நாளாக பட்டா ஆபீஸ் வரவில்லை. காரணம் ஜனாதிபதி ஃபக்ரூதீன் அலி அகமத் அவர்கள்.

ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு ரீஜனல் ஆபீஸ் சிபாரிசில் புதுசாக வந்திருக்கும் கருப்பு – வெள்ளை டெலிவிஷன் பெட்டிகள் வாங்க எங்கள் வங்கிக்கிளை மூலம் கடன்கொடுக்கப் பட்டது.

இன்னும் சில கவர்மெண்ட், தனியார் ஆபீஸ் ஊழியர்களுக்கும் இப்படிக் கடன் வழங்கப்பட்டு, அவர்களில் சிலர் திருப்பிக் கட்டவில்லை. அந்த நபர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் நிர்வாகிக்கு, அன்னார் சம்பளத்தில் பிடித்துக் கடன் தொகையை உடனே பேங்குக்குச் செலுத்தச் சொல்லிக் கோரிக்கை விடப்பட்டபோது தவணைக் கடன் நிலுவை எல்லாம் ஜரூராக வசூலாகியது.

அதைப் பின்பற்றி, ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் சிலர் டெலிவிஷன் செட் லோன் திருப்பிக் கட்டாதபோது, கடன் பிரிவில் மூன்றாம் ஆபீசராக இருந்த பட்டா, தன் கடமை அக்கடன்களை வசூலிப்பது என்று உணர்ந்து உடனே செயல்பட்டான். அவன் வராக்கடன் பற்றி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சம் இது –

”அரசுடமையான வங்கிகளில் குறைந்த கட்டணத்துக்கு கடன் பெற்றவர்கள் அப்படிப் பெற்ற தொகையை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால்தான் இருபதம்சத் திட்டத்தின்படி நலிந்த எல்லோருக்கும் அத்தொகையைப் பயன்படுத்திப் புதுக் கடன் வழங்க முடியும் என்பது ஜனாதிபதியாகிய தாங்கள் அறியாததல்ல. உங்கள் மாளிகை அலுவலர்களான …. (பெயர், பதவி விபரம்) எம்மிடம் வாங்கிய டெலிவிஷன் பெட்டிக் கடனை மாதாமாதம் செலுத்த உறுதிமொழி கொடுத்தாலும் அப்படிச் செய்யவில்லை என்று உம் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து மாதம் நூற்று முப்பது ரூபாய் ஒவ்வொருவருக்கும் பிடித்து எங்களுக்கனுப்பக் கோருகிறோம். புதிய பாரதம் காண தோள் கொடுப்பீர்”.

இதெல்லாம் பட்டாவே உத்வேகம் கூடிய மொழியில் சுமாரான ஆங்கிலத்தில் எழுதியது. அனுப்பிவிட்டு எல்லோரிடமும் பெருமை அடித்துக் கொண்டிருக்க, ஒரு மணி நேரத்தில் ரீஜனல் ஆபீஸ், அதற்கடுத்து சென்ட்ரல் ஆபீஸ் என்று வரிசையாக எங்கள் கிளைக்கு தொலைபேசி ஜெனரல் மேனேஜர், எக்சிக்யூடிவ் டைரக்டர், ஏன், மேனேஜிங் டைரக்டர் என்று ஆளாளுக்கு எங்கள் சீஃப் மேனேஜர் அகர்வால் சாப் அவர்களை வறுத்தெடுத்தார்கள்.

மத்திய நிதியமைச்சர் கூட அவருக்கு தொலைபேசி வைது தீர்த்ததாக வதந்தி.

ஜனாதிபதி, உப ஜனாதிபதி, பிரதமர் போன்ற உன்னத பதவியில் இருப்பவர்களுக்கு பேங்க் கிளைகள் என்ன காரணத்தைக் கொண்டும் எவ்விதமான கடிதமும் எழுதக் கூடாது என்று நாடு முழுக்க உள்ள கிளைகளுக்கு சென்ட்ரல் ஆபீஸ் சர்க்குலர் அனுப்பி உத்தரவிட்டது. மற்ற பேங்குகளும் இது மாதிரி சுற்றறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனவாம்.

”பட்டா, நானும் நீயும் உள்ளே போயிடுவோம். எமர்ஜென்சி. ஜாக்கிரதையா இரு. யாருக்கும் லெட்டர் போடாதே”, சீஃப் மேனேஜர் முந்தாநாள் சொன்னதிலிருந்து பட்டாவுக்கு அஸ்தியிலே ஜுரம். பயமோ பயம்.

இரண்டு நாளாக அவனுடைய அபார்ட்மெண்டில் முடங்கிக் கிடக்கிறான். நேற்று ஜகதீஷ் சாயந்திரம் போய் வலுக்கட்டாயமாகக் கூட்டி வந்து டேபுக் எழுதச் சொன்னான்.

குட்டிச்சாத்தான் உபாசகன் மாதிரி போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்து உட்கார்ந்து வேலை முடித்துப் போனான் அவன். அவனுக்கு லீவு மார்க் பண்ண வேண்டாம் என்று பச்சாதாபத்தோடு சொல்லி விட்டார் அகர்வால்.

”இன்னிக்கும் ராத்திரி உடையார்பாளையம் தர்பார் தானா போத்தி?”.

லட்சுமண் கௌடா கேட்டான். தமிழ்நாட்டில் வெள்ளைக்காரன் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் என்ற ஊர் சமாசாரம் அது. அங்கே சுகவாசிகளாக பகல் முழுவதும் சீட்டு, அரட்டை என்று சிலரும், வயல்வேலை என்று பலரும் பொழுது போக, ராத்திரி காடா விளக்கும் அகல் விளக்கும் கொளுத்தி உட்கார்ந்து வரிக் கணக்கும், வசூல் கணக்கும் எழுதும் வழக்கம் இருந்ததாம். பட்டா தில்லியில் உடையார்பாளையத்தைத் தொடங்கி விட்டிருக்கிறானாம்.

“இன்னிக்கு பாருங்க. பட்டா வெற்றி வீரனா இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்து நிற்பான்”

நான் சொல்ல, லட்சுமண் சிரித்தான். விமல் அஹூஜாவும் பாயலும் சிரித்தார்கள். பாயல் ஏலம் மணக்க என் அருகில் வந்து கேட்கிறாள் :

“ராத்திரி டே புக் பட்டா எழுதட்டும். நீ ஜெனரல் லெட்ஜர் போஸ்ட் பண்ணு. இங்கே ராத்திரி மோகினிப் பிசாசு நடமாட்டம் உண்டாம். நீ முந்திக்கிட்டா உனக்கு. பட்டா முந்திக்கிட்டா அவனுக்கு. எஞ்ஜாய்”.

அந்த மோகினி வேறே மோகினிகளைப் பற்றி நூல் விட்டுப் பார்க்க, நான் அந்தரத்தில் மிதந்தேன்.

நான் சொன்னது போலவே பதினோரு மணிக்கு, அரை மணி நேரம் தாமதமாக, மூன்று பீஸ் சூட், மஞ்சள் டை, காலில் கான்வாஸ் ஷூ என்று யோசித்துச் செய்து கொண்ட அலங்காரத்தோடு பட்டா ஆஜராகி விட்டான்.

சிரிக்கக் கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டு அவனை உள்ளே செண்டரல் ஆபீசுக்கு மாசாந்திர ஸ்டேட்மெண்ட்களை அனுப்பும் பிரிவுக்குப் போகச் சொன்னார் அகர்வால் சாப்.

“ரிசர்வ் பேங்க் ஸ்டேட்மெண்ட் போடணும். போன மாசம் போட்டது இருக்கும். பார்த்து அதே போல் போட்டுடு” என்று அவர் சொல்ல உற்சாகமாக மாடிப்படி ஏறினான் பட்டா.

அதே நேரத்தில் பேங்க் வாசலில் காரும், வேனும் வந்து நிற்க, ஒரு கூட்டம் புகைப்படக்காரர்களும் நிருபர்களும் உள்ளே வந்தார்கள். எல்லோரும் பட்டாவிடம் பேச வந்தவர்கள்.

நான் பட்டா தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று சொன்னது முழுப் பொய். பட்டா இன்றைக்கு விடிகாலையிலேயே, டெல்லிக்கும் குளிர்காலத்துக்கும் பொருந்தாத நாலரை மணிக்கே எழுந்து விட்டான்.

நான் எழுந்திருக்கும் நேரம் அது. உடம்புக்குள் ஒரு பயலாஜிகல் கடிகாரம் என்னை எழுப்பி விட, நான் எழுந்து, நாலு வீடு தள்ளி பட்டாவின் முதல்மாடி ப்ளாட்டுக்குப் படியேறி கதவைத் தட்ட உடனே சுறுசுறுப்பாகக் கிளம்பி விட்டான். அவன் காலில் பார்த்தேன். அவனும் ஸ்போர்ட்ஸ் ஷூ தான் போட்டிருந்தான்.

அவனுடைய நாள் நல்ல விதமாகத் தொடங்கினால் முழுநாளும் அப்படிப் போகும் என்று நான் நம்பிக்கை கொடுத்திருக்கிறேன். ஜனாதிபதிக்கு கடன்பாக்கி லெட்டர் அனுப்பியதெல்லாம் காராபூந்தி போல சப்பை விவகாரம். அது முடிந்து அவனை யாரும் இனி கவனிக்கக் கூட மாட்டார்கள் என்று எடுத்தோதி காலையில் வெளியே போய் நல்ல காற்றை சுவாசித்து நடந்துவிட்டு வரலாம் என்றேன் அவனிடம். உடனே சரி சொல்லிவிட்டான்.

”எங்கேடா போகலாம்?”

பட்டா கேட்க, அவன் ஸ்கூட்டரை எடுக்கச் சொன்னேன். ”அது ஓடினா நிக்காது, நின்னா ஓடாதுடா”, என்றான்.

உண்மைதான். சாவியை எடுத்தபிறகு கூட அந்த ஸ்கூட்டரின் டூ ஸ்ட்ரோக் இஞ்சின் லேசில் நிற்காது. பட்டா அதன் புட்டத்தில் தட்டி கன்னடத்தில் ஒரு அதட்டல் போட நின்று போகும் அது. ரெண்டு நாளாக குளிரில் நிற்கிறதால் லேசில் ஸ்டார்ட்டும் ஆகாது தான்.

என் ஸ்கூட்டரிலேயே இரண்டு பேரும் கிளம்பினோம்.

”இன்னும் இருட்டா இருக்கு. தெரு நாய் எல்லாம் இந்தியிலே கொலைச்சுக்கிட்டு பின்னாலேயே ஓடி வந்துடப் போறது”.

பட்டா சொல்ல அவனை அடக்கினேன். இங்கே நாய் கிடையாது. எப்போதாவது நரி வந்து போகும். ஓரிரு முறை வழி தப்பி வெளியே காடு மாதிரி புதர் மண்டிய பிரதேசத்திலிருந்து சிறுத்தை வந்து பிடிபட்டுப் போனதாக பிற்பகல் லாக்கர் ஆப்பரேட் செய்து விட்டு அரட்டை அடிக்க உட்காரும் பஞ்சாபி முதுபெண்டிர் சொல்லி இருக்கிறார்கள்.

“லோதி கார்டன் போறோம்”, நான் லாலா லாஜ்பத் ராய் ரோடில் வண்டியைத் திருப்பினேன்.

லோதி தோட்டத்தில் அந்த ஐந்து மணிக்கும் கணிசமான கூட்டம் இருந்தது. ஓடுகிறவர்களும் நடக்கிறவர்களுமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் எல்லோரும்.

”ஓடலாமா, நடக்கலாமா?”

நான் கேட்டேன்.

”ஓடலாம். டயர்ட் ஆனா நடக்கலாம்”.

அவன் கொடுத்த தீர்வு சரிதான். ஓட ஆரம்பித்தோம்.

காதருகில் குளிர் காற்று குறுகுறுவென்று பேசிப் போனது. பனிக்காலக் காலை நேரத்து தில்லிக்குப் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. உடன்படுகிறவர்களோடு பகிரப்படும் சந்தோஷ சமாசாரம் அவை எல்லாம்.

செடிகளும் மரங்களும் அடர்ந்து பரந்த புல்தரைகளுமாக ஓட ஓட நிலப்பரப்பு நீண்டு எங்களை அரவணைத்துக் கொண்டது. இன்று முழுதும் இதுவே வேலையாக இங்கேயே இருக்கலாம் என்று தோன்றியது.

வேண்டாம்டா, டாய்லெட் போகறதுக்கெல்லாம் கஷ்டம் என்று திரும்பவும் ப்ராக்டிகல் ஆனான் பட்டா.

நாங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது பின்னால் சிறு சத்தம். நான் திரும்பிப் பார்க்க பிரமித்துப்போய் விட்டேன்.

பாபு ஜகஜீவன் ராம் வந்து கொண்டிருந்தார். மத்திய அரசில் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் அவர். இந்த இரண்டு வருடமாக எப்படியோ மௌனமாக இருந்து வருகிறார். வெளியே போய் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கிற அதிருப்தியாளர் தலைவர்களோடு இவரையும் அகற்றாமல் இருக்கக் காரணம் ஒடுக்கப் பட்ட இனத்தின் தலைவர் என்ற சிறப்பு இவருக்கு இருப்பதால் என்று ஊரில் ஜெபர்சன் இவரைப் பற்றிப் பேச்சு வரும்போது சொல்லி இருக்கிறார். பாபு என்று காந்திஜியை அழைத்தது போல் இவரையும் அழைக்கிறார்கள்.

மெல்ல நடந்து போகிறார். நான்கடி இடைவெளி விட்டு உயரமும் ஆகிருதியும் உள்ள ஒருவர் அவரையும் எதிரே, அருகே வரும் மற்றவர்களையும் ஜாக்கிரதையாகப் பார்த்தபடி நடந்து வருகிறார். அவருக்கான போலீஸ் காவலராக இருக்கக் கூடும். ஒரு மத்திய அமைச்சருக்கு எமர்ஜென்சி நேரத்திலும் அவ்வளவுதான் பாதுகாப்பு.

ராம்ராம். அவர் பெயரையே அவருக்குச் சொல்லி கடந்து போனவர்கள் காலை வணக்கமும் வாழ்த்தும் சொன்னார்கள். நான் சுறுசுறுப்பாக ஒரு குட்மார்னிங் சொல்லி இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று அவரை வாழ்த்தினேன். முகம் மலர கை கூப்பி என் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டது மட்டுமில்லாமல், பதில் வாழ்த்தும் சொன்னார் அவர்.

பட்டாவுக்கு அவர் யாரென்று தெரியவில்லை. அவனுக்கு அரசியல் தொடர்பு மிகக் குறைவு என்பதைச் சொல்லியாக வேண்டும். எந்த செய்தித்தாளையும் அவன் படித்துக் கொண்டிருந்து நான் பார்த்ததில்லை. மற்ற செய்திகளைப் படிக்காவிட்டாலும் விளையாட்டு, சினிமா இந்த இரண்டில் குறைந்த பட்சம் ஒன்றிலாவது ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள் ஆகக் குறைவு. அந்த மைனாரிட்டியில் இவனும் அடக்கம்.

”யாருப்பா, கொஞ்சம் பூசினாப்பலே இருக்காரே”.

அவன் விசாரிக்க, அவசரமாக அவன் வாயைப் பொத்தினேன். செக்யூரிட்டிக்கு தமிழ் தெரிந்திருக்கலாம். எதற்கு வம்பு. அவர் யார் என்று சுருக்கமாகச் சொன்னேன்.

“அஞ்சு மணிக்கு லோதி கார்டன்லே ஜாகிங் வந்தா கேபினட்லே நம்பர் டூவைப் பார்க்க முடியுது பார்”, என்றேன்.

”நீ சொன்னேன்னு விடிய முந்தி ஒரு காப்பி கூட இல்லாம ஓடி வந்து என் நம்பர் டூவை இன்னிக்கு பார்க்க முடியாது போல் இருக்கே”, என்றான் அவன். டர்ட்டி ஃபெல்லோ.

”போகறபோது கன்னடா ஸ்கூல் கேண்டீன்லே சுடச்சுட டிபனும் வாய் பொள்ளிப் போகிற மாதிரி நெருப்புத் திரவமாக பில்டர் காப்பியும் வாங்கித் தரேன். போற வழியிலேயே நீ குத்த வச்சுடுவே”, கியாரண்டி கொடுத்தேன்.

”கன்னடா ஸ்கூல் மெஸ் திறக்கலேன்னா?” அவன் சந்தேகத்தைக் கிளப்பினான்.

“காலு கடையிலே ஆம்லெட், ஏலக்கா டீ”.

நாங்கள் காலையில் பசியாறுவது பற்றிப் பேசியபடி ஓடிக் கொண்டிருந்தபோது திரும்பவும் பரபரப்பு. வயதான இன்னொரு பெரிய தலைவர். அவரும் எங்கள் பாதையிலேயே நடந்து வந்து கொண்டிருக்கிறார். சௌத்ரி சரண்சிங்

”சௌத்ரி வரார். எதிர்க்கட்சித் தலைவர். அந்தக் காலத்துலே காங்கிரஸ் தான். எமர்ஜென்சியிலே உள்ளே இருந்தார். ஜெயில்லே இருந்து விட்டுட்டாங்க போல”, பட்டா அறிந்து கொள்ளச் சுருக்கமாகச் சொன்னேன்.

”ஏது, அஞ்சு மணிக்கு வந்தா, நீ சொன்ன மாதிரி ரெண்டு தலைவர்கள் வாக்கிங் வர்றாங்க. நாலு மணிக்கு வந்தா ஜனாதிபதியே வந்திருப்பாரோ. மூணு மணிக்குன்னா ப்ரைம் மினிஸ்டர் வருவாரா?”

”கம்முனு ஓடி வா”. நான் வேகத்தைக் குறைத்தேன்.

சௌத்ரி வரக் காத்திருந்த மாதிரி பாதையை விட்டு ஒதுங்கி ஜகஜீவன் ராம்பாபு நின்றிருந்தார். சௌத்ரி மெல்ல நடந்து ராம்பாபுவுக்குக் கை குவித்தார்.

உள்ளே ஏழெட்டுப் பேர் ஓடி வரும் ஓசை. ஜகஜீவன் பாபுவின் செக்யூரிட்டி காவலர் அவர்களை நிறுத்தினார்.

”இன்றைக்கு பரபரப்பான தகவல் ஏதாவது எதிர்பார்க்கலாமா?”

அவர்கள் இரைந்து அந்த இரண்டு தலைவர்களையும் பார்த்துக் கேட்க, பாபுவும் சௌத்ரியும் அவர்களை லட்சியமே செய்யாமல் கைகளை பரஸ்பரம் பற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

மெல்லிய பனிமூட்டம் அவர்களைச் சுற்றித் திரையாகச் சூழ்ந்தது. லோதி தோட்டத்தில் பாதியை மூடி மறைத்த மூடுபனிப் படலம் அது. கண்ணைக் கவிந்து கொண்டு நான் பார்க்க, சட்டென்று அவர்களோடு இன்னொருவரும் சேர்ந்து கொண்டது தெரிந்தது. பட்டா மாதிரி ஆகிருதி பனியில் தெரிந்தது.

பக்கத்தில் அவசரமாகப் பார்த்தேன். அவனைக் காணோம். பாதி ஓடிக் கொண்டிருக்கும்போது குறுக்கே ஓடி தலைவர்களோடு சேர்ந்து நிற்கிறான்.

ஒரு வினாடி கும்பிடுகிறான் அவர்களை. அடுத்த வினாடி, சரண்சிங் அவன் தோளில் தட்டுகிறார். இன்னொரு நொடியில் ஜகஜீவன்ராமின் காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்கிறான். அடுத்த நிமிடம் அவர் அவனை அணைத்துத் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்கிறார். அடுத்து சௌத்ரிக்கும் பாதம் தொட்டு நமஸ்காரம். அணைப்பு.

இரண்டு பக்கத்திலும் இரண்டு முதியவர்களும் ஆளுக்கொருவராக பட்டா கையைப் பற்றி நிற்க பனிக்கு இடையே புகைப்படம் எடுக்க முடியாத பத்திரிகை புகைப்படக் காரர்கள் பொறுமையிழப்போடு அப்படியும் இப்படியுமாக ஓடுகிறார்கள்.

இன்னும் இரண்டு நிமிஷம் உயிர் சிநேகிதர்கள் போல அந்த இரண்டு முதியவர்களோடு பேசி விட்டு பட்டா என் பக்கம் ஓடி வருகிறான். இப்போது அவனைத் துரத்தியபடி பத்திரிகைக்காரர்கள்.

நான் அவனை வாசல்பக்கம் வரும்படி சைகை காட்டிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.வாசலில் நிறுத்திய ஸ்கூட்டரில் நானும் பட்டாவும் கிளம்பிப் போக பின்னால் சத்தம் ஓயவில்லை.

லோதி எஸ்டேட் கன்னடா ஸ்கூல் கேண்டீன் பள்ளி விடுமுறை என்பதாலோ என்னவோ வெளியாட்களுக்குத் திறந்திருந்தது. இட்லி தோசை அடியார்க்கு அடியார்கள் தில்லியில் வாய்க்கு ருசியாக ஏதாவது ஊர்ப் பக்குவத்தில் கிடைக்காதா என்று அலைந்து திரிந்து அல்லல் படுவதைக் கொஞ்சமாவது குறைக்க கேண்டீன்காரர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார்கள்.

”மூணு உலகப் பெருந்தலைவர்களும் என்ன பேசிட்டிருந்தீங்க?”

தோசை தின்றுகொண்டே பட்டாவை விசாரித்தேன்.

”ஜனாதிபதி என்மேலே மனவருத்தமா இருக்கார். தப்பு என்பேர்லே தான். அவருக்கு கடிதாசு போட்டுட்டேன் அப்படி ஆரம்பிச்சு என் தலை உருள்ற பிரச்சனை பற்றி ரெண்டு பேர் கிட்டேயும் சுருக்கமா சொன்னேன். ஏதாவது சகாயம் செய்யமுடியுமான்னு கேட்டேன். ரெண்டு பேரும் நாங்க பாத்துக்கறோம்னாங்க. ஏங்க, ஒருத்தர் எதிர்க்கட்சி, ஜெயில்லே இருந்து வந்திருக்கீங்க போல இருக்கு. இன்னொருத்தர் இந்திராம்மா போட்ட கோட்டைத் தாணடாதவங்க. எப்படி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்வீங்கன்னு கேட்டேன். நாங்க சேர்ந்தாச்சுன்னு ரெண்டு பேரும் சொன்னாங்க. காலைத் தொட்டு அந்தப் பெரிசுங்களைக் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டேன்”.

பேங்க் வாசலில் வந்து நின்ற பத்திரிகைக்காரர்கள் பட்டாவிடம் விசாரிக்க அவன் அமைதியாக நடந்து போய்ப் பின்கதைச் சுருக்கம் சொன்னான். சீஃப் மேனேஜர் அவசரமாக வந்து அவர்களிடம் ரகசியமாகப் பேசி ’பட்டா சொல்வது எதையும் ரொம்ப நம்ப வேண்டாம், அவன் கொஞ்சம் நெர்வஸ் ஆக இருக்கிறான்’ என்று முன்கதைச் சுருக்கம் சொன்னார்.

அன்று சாயந்திரம் இந்திரா லோக்சபாவைக் கலைத்ததை அறிவித்தார். இரண்டே நாளில் புதியதாக ஒரு கட்சி, ஜனதா தளம் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது. அதில் சரண்சிங்க் இருந்தார்.

அடுத்த நாள் பாபு ஜகஜீவன்ராம் மந்திரிசபையில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் ராஜினாமா செய்து காங்கிரஸ் ஃபார் டெமாக்ரசி என்ற கட்சி தொடங்கி, ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

செய்திகளை முந்தித் தந்த பட்டாவின் பெயரோ புகைப்படமோ எந்தப் பத்திரிகையிலும் வராமல் எமெர்ஜன்சி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன