புதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி

நாவல் : 1975 ஆசிரியர் இரா.முருகன் பதிப்பாளர் : கிழக்கு பதிப்பகம்

நாவலின் ஓர் அத்தியாயம் இது

அத்தியாயம் 18 டிசம்பர் 1976

சவுந்தரம்மா ரெயில் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கியது மற்றவர்கள் எல்லோரும் வெளியே வந்ததற்கு அப்புறம் தான்.

மொத்தம் பத்து பேர். நடக்க ஆரம்பித்த சிறு குழந்தையும், துறுதுறுவென்று ஓடிக் கொண்டே இருக்கிற ஐந்து வயதுச் சிறுவனும் அதில் உண்டு.

நான் சவுந்தரம்மா இறங்கக் கைகொடுத்து பத்திரமாகத் தரையில் சேர்ப்பித்து, கம்பார்ட்மெண்டுக்குள் மறுபடி நுழைந்து ஏதாவது இறக்க விட்டுப் போயிருக்கிறதா என்று பார்த்தேன். சீட்டில் பாதி தின்ற ஒரு வேர்க்கடலைப் பருப்பு பொட்டலம் மட்டும் ஓரமாகக் கிடந்தது. எடுத்து வெளியே போட்டுவிட்டு நானும் இறங்கினேன்.

சவுந்தரம்மா இடுப்பில் முடித்து வைத்த சுருக்குப்பையிலிருந்து புகையிலையை உருட்டி எடுத்தாள்.

”ஆத்தி, இதான் டெல்லிப் பட்டணமா?”

அந்த செம்மண் பூமிக்கிழவி அழகாக ஆச்சரியப்பட்டு, தில்லி ரயில்வே ஜங்ஷனில் எங்கள் ஊரை சிருஷ்டித்தாள்.

“இதேதான். நல்லா பாத்துக்குங்க அப்புறம் பார்க்கலேன்னு சொல்லிடக்கூடாது”, என்றேன்.

”அதென்ன பார்க்காமலா போகப் போறோம்?”

சவுந்தரம்மா பரபரவென்று குனிந்து லக்கேஜில் அவசரமாகத் தேடி எடுத்து நீட்டினாள் –

“இந்தா பிடி ஓலைக்கொட்டான் கருப்பட்டி. பிரியமா திம்பியே”.

”ஏன் ஆத்தா, வீட்டுக்குப் போய்த்தான் கொடுக்கறது அதை”.

நான் வாங்கியபடி சொன்னேன்.

“மறந்து போயிடுமே ராசா மகனே”, சவுந்தரம்மா புகையிலையை அதக்கிக்கொண்டு சிரித்தாள். எங்கள் ஊர் பேங்க் கிளையில் ஸ்வீப்பர் சவுந்தரம்மா. லட்சாதிபதி சவுந்தரம்மா.

போன வாரம் எனக்கு ஒரு இண்லண்ட் லெட்டர் வந்தது.

”கோட்டை மாரியம்மன் துணை. தாமரைக்குளம் ஐயனார் துணை. வேம்புலிநாதர் துணை. திரௌபதி அம்மன் துணை. பிள்ளைவயல்காளி துணை. கொட்டகுடி கருப்பாயி துணை. தம்பியாபிள்ளை போத்தி சௌகரியம் பற்றி தக்கவரை வைத்து எழுதச் செய்ய வேண்டியது. வேளாவேளைக்கு நல்லபடி சாப்பிட்டு நல்லா ராத்தூங்கி எழுந்து சுகமாக இருக்கும் விவரம் தெரிவிக்க வேண்டியது. சைக்கிள் இதர துவிசக்கர வண்டி வாகனாதிகளை ஜாக்கிரதையாக ஓட்டிப்போக வேண்டியது. நானும் எங்க பொம்பளை சவுந்தரத்தம்மாளும் சின்னப்பிள்ளையில் தம்பி உங்களுக்கு விதைக்கொட்டை வீங்கினது சொஸ்தப்படுத்தினதை ஞாபகம் வைத்து இதமாப்பதமாக நடக்கிற தாக்கல் அனுப்பச் சொல்ல வேண்டியது. ஊரில் மழையும் வெள்ளாமையும் கோட்டை கருப்பையன் புண்ணியத்தில் நடக்கிறதாகத் தம்பியாபிள்ளை அறிய வேண்டியது. நான் கோவிலில் தவில் வாசிப்பதை நடக்கும் நள வருஷம் புரட்டாசி மாசம் 1உ தேதியிலிருந்து நிறுத்திவிட்டேன். வாத்தியத்தை கட்டித் தூக்கிப் போகமுடியாமல் வயசான காலத்து பலகீனம். வேறே தவில்காரப் பையனை திருக்கோஷ்டியூரிலிருந்து வரச்சொல்லி ஏற்பாடு பண்ணி அவனும் முந்தாநாள் வந்து சேர்ந்து சுமாராக வாசிக்கிறான். சாதகம் தேவை. அங்குவிலாஸ் புகையிலை அங்கே கிடைக்கும் விவரம் எழுதச் சொன்னால் சௌகரியமாக இருக்கும். சவுந்தரத்தம்மாள் சொல்லி இதை எழுதினது அவங்களோட புருஷன் கருப்பச்சாமி என்கிற தவில் கருப்பையா பிள்ளை. நாங்கள் அடுத்த ஞாயித்துக்கிழமை உச்சயினி வீரமாகாளி துணையாக தில்லி வருகிறோம். சவுந்தரத்தம்மாளுக்கு லாட்டரி சீட்டில் லட்ச ரூபா போல பணம் வரக்கூடுமாக இருப்பதை தம்பி தயவு செய்து யாரிடமும் சொல்ல வேண்டாம். நேரே பார்க்கும்போது மைத்த தாக்கல் எல்லாம் விவரமாகக் கேட்டுக்கொள்ள வேண்டியது. தல்லாகுளம் மாரியம்மன் துணை. செல்லூர் கருப்பணசாமி துணை.

எல்லா சாமியும் துணையிருக்க வேண்டும் வழக்கமான இன்லண்ட் லெட்டர் என்று ஆபீஸ் அவசரத்தில் மேலோட்டமாகப் படித்து அனுமானம் செய்து சட்டைப்பையில் போட்டு வைத்திருந்தேன்.

வாரக் கடைசியில் வேறே வழியே இல்லாமல் ஆறு நாள் போட்டிருந்த துணி எல்லாம் சோப்புநுரையில் அமிழ்த்தி அலசிக் காயப்போடும் நேரம்.

போடுவதற்கு முன் சோதித்துப் பார்க்கச் சட்டையில் இருந்து எடுத்தது ரெண்டாக மடித்த இந்த இண்லண்ட் லெட்டரை. பாத்ரூமில் உட்கார்ந்து நிதானமாகப் படிக்க ஆச்சரியகரமாகப் புலப்பட்ட இரண்டு தகவல்கள் –

சவுந்தரம்மாவுக்கு ஏதோ லாட்டரியில் லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது. அவள் ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்றோ, அடுத்த வாரம் இதே நாளோ இங்கே வரப் போகிறாள். இன்றைக்கு இருந்தால்?

அடித்துப் பிடித்து ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடியது நல்லதாகப் போக, இதோ சவுந்தரம்மா விஜயம் ஆரம்பமாகி விட்டது.

ஆட்டோ ரிக்ஷா பிடிக்க வெளியே வந்தோம். சவுந்தரம்மாவும் அவள் வீட்டுக்காரர் தவில் வித்வான் கருப்பச்சாமி பிள்ளையும் மட்டும் வருகிறார்கள் என்று நான் எதிர்பார்த்தது தவறு. இஷ்ட மித்திர பந்துக்களோடு அவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

”ஏன் ஆத்தா, ஒரு ட்ரங்க் கால் போட்டு தாக்கல் சொல்லியிருக்கலாமில்லே?”

சவுந்தரம்மாவைக் கேட்க அவளோடு வந்த, மிக இளையவராக இருந்தவர் பதில் சொன்னார் –

“சார், உங்க மேனேஜரும், ரவீந்தரன் சாரும் ரெண்டு நாள் முயற்சி எடுத்தாங்க. சாயந்திரம் நெம்பர் கிடைக்கும்னு போட்டா ஹலோஹலோவுக்கு மேலே கேக்கறதில்லையாம் போல”.

என் மாப்பிள்ளை என்று அவரைக் காட்டிச் சொன்னவர் சவுந்தரம்மாவின் கணவர் கருப்பச்சாமி தவில்காரர். அந்தக் காலத்து மனுஷர். கோவில் ஐயர் போல நரைத்த முடியில் சின்னதாகக் குடுமி கட்டி இருந்தார் அவர்.

குழுவின் இதர உறுப்பினர்கள் சவுந்தரம்மாவின் தங்கச்சி மகள், மகள், மகள் வயிற்றுப் பேரன், பேத்தி, தங்கச்சி, தங்கச்சி மகள் வீட்டுக்காரர், மகள் வீட்டுக்காரர், தங்கச்சி வீட்டுக்காரர் என்று நின்ற வரிசையில் அறிமுகப்படுத்தபட, எல்லோருக்குமாக ஒரு வணக்கம் சொன்னேன்.

“உங்க ஆபீஸ்லே போன் மாறிடுச்சா?”

தங்கை மகள் வீட்டுக்காரர் கேட்டார்.

”இல்லையே”.

சாயந்திரம் கால் வந்ததுதான். ரெண்டு ஹலோ ஹலோவுக்கு மேல் கேட்கவில்லை. அப்புறம் வேலை மும்முரத்திலும், முடித்து ஷட்டரை இறக்குவதிலும் மறந்து போய் விட்டது. ஏழு மணிக்கு வந்த கால் எல்லாம் தாகசாந்திக்குப் போகிற மும்முரத்தில் கவனிக்கப்படாது போகும்.

எப்படியோ, ஒரு பத்து நபர் குழுவை, எத்தனை நாள் என்று தெரியவில்லை, நான் இங்கே என் வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டும். அவர்களுக்கு தில்லியில் ஆகவேண்டியது நடந்து முடிய ஒத்துழைக்க வேண்டும்.

இதோடு ஆபீசுக்கும் தினசரி போய் வரவேண்டும். சாயந்திரம் – ராத்திரி விஸ்கி விழாவை வேணுமானால் ஒரு வாரம் தள்ளிப் போடலாம். மற்றவை நடந்தேற வேண்டியவை.

முதலில் இவர்கள் எல்லோருக்கும் ஆகாரம். ஒரு ஜனதா ஸ்டவ் மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பாக்கெட் பால், இன்ஸ்டண்ட் காபி பவுடர் என்று சமாளித்திக் கொண்டிருப்பது இப்போது நடக்காது. என்ன செய்யலாம்?

மூணு ஆட்டோ போதுமென்றார்கள் சவுந்தரம்மா குடும்பத்து பெண்கள். எடுக்கறது தான் எடுக்கறோம், நாலாக எடுத்தா கொஞ்சம் சவுகரியமா உட்கார்ந்து போகலாமே என்றார்கள் ஆண்கள். நாலு ஆட்டோ ஏற்பாடானது.

“தம்பி நீங்க ஒரு பைசா செலவு பண்ணக்கூடாது. இதெல்லாம் எங்க வகை”, என்றார் தவில்காரர். ஒரு சின்ன நிம்மதி நிஜமாக எட்டிப் பார்த்தது.

எல்லோருமே நல்ல கம்பளி ஸ்வெட்டர் போட்டு, மப்ளர், சால்வை என்று வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

“எங்க குடும்பத்துலே எட்டு பேர் ஆர்மியிலே இருக்காங்க. வரும்போதெல்லாம் கம்பளித்துணியை விட்டுட்டுப் போயிடுவாங்க. பத்திரமா எடுத்து வச்சிருந்தோம் என்னிக்காவது வேண்டியிருக்கும்னு. இப்போ பாருஙக”. கூட்டத்தில் யாரோ சொன்னார்கள். பெரிய கூட்டுக் குடும்பமாக அவர்கள் இருக்கக்கூடும்.

நான் என் பழைய காஷ்மிலான் ஸ்வெட்டரைப் பார்த்துக் கொண்டேன். இந்த வாரமாவது புது ஸ்வெட்டர் வாங்கிப் போட்டுப் போகாவிட்டால் பாயல் அஹுஜா மதிக்க மாட்டாள். அவள் மதித்தாலும் கூடிக் கொண்டே போகும் குளிர் மதிக்காது.

பாயல் என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது? ஞாயிற்றுக்கிழமை காலை இங்கே பெண்கள் சாவதானமாக உடம்பில் கடுகு எண்ணெய் புரட்டி வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்து அரட்டை அடித்து, காய்கறி வண்டிக்காரன் வர, கூட்டு பேரமாக வெங்காயம் வாங்கிவிட்டுத் தலைகுளித்து ஆறவைத்துக் கொண்டிருப்பது வழக்கம். பாயலும் வெய்யில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பாள். கடுகு எண்ணெய் வாடை பிடிக்க மனசு ஏங்கியது. நாளைக்கு அவள் வரும்போது மிச்சமிருக்கும்.

பாயலை இறக்கிவிட்டு, நான் ஸ்கூட்டரைக் கிளப்பினேன். ஒன்றன் பின் ஒன்றாக அந்த நான்கு ஆட்டோக்களும் என்னைப் பின்பற்றி வந்தன.

லாஜ்பத் நகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே சி பிளாக்கும் ஐ பிளாக்கும் சந்திக்கிற இடத்தில் வீடு. அடுத்த வீடு வரை ஐ பிளாக் ஆக இருப்பது ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு என் வீட்டில் தொடங்கி சி பிளாக் ஆகிவிடும். அதற்கு அடுத்து தெரு வளைந்து திரும்பி பி பிளாக். தபால்காரர் இடம் தெரியவில்லை என்று தபால் கொடுக்காமல் போக இந்த அட்ரஸ் குழப்பம் தான் காரணம்.

இங்கேயே இருக்கப்பட்டவர்களுக்கே குழப்பம் ஏற்படுவதால், யாராவது வருவதாகச் சொன்னால் நானே நேரே ரெண்டு கிலோமீட்டர் முன்னே டிபன்ஸ் காலனிக்கோ ரயில்வே கேட் கடந்து ஜங்க்புராவுக்கோ போய் எதிர்கொண்டு கூட்டி வருவதை கடைப்பிடிக்கிறேன்.

சவுந்தரம்மா அண்ட் கம்பெனிக்கு மொழிப் பிரச்சனையும் உண்டு என்பதால் புதுதில்லி ரயில்வே ஜங்க்ஷனுக்கே பஹாட்கஞ்ச் கடந்து போகவேண்டிப் போனது.

அப்புறம் சவுந்தரம்மாவுக்குப் பாதுகாப்பு வேறே வேண்டியிருக்கிறது. ஆட்டோவில் இருந்தபடி என்ன பரிசு, எப்போது எங்கே கிடைக்கும் என்றெல்லாம் கேட்க முடியாது. வீட்டுக்குப் போகும்வரை பொறுமை தேவை. வீடு வந்து விட்டது.

பத்து பேர் என்னோடு படியேறி முதல் மாடி அபார்ட்மெண்டுக்குப் போவதை கீழ்த்தளத்தில் வீட்டு சொந்தக்காரர் போஜ்ராஜ் வாஸ்வானி, அவர் மனைவி, செல்ல நாய் ஆகியோர் கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேலே மொட்டைமாடியில் அஸ்பெஸ்டாஸ் கூரை அடைத்த இரட்டை அறை குடியிருப்பான பர்சாதி. வெளியே ஏர் போர்ஸ் ரமன் கன்னா நாற்காலி போட்டு உட்கார்ந்து, ஹூக்காவைக் கொளுத்திப் புகை விட்டபடி எனக்குக் கையாட்டினான்.

ஞாயிற்றுக்கிழமை காலைநேரம் இட்லி தோசை சாப்பிட நான் போவேன் என்று கன்னாவுக்குத் தெரியும். கரோல்பாக் நடராஜன் மெஸ்ஸோ, லோதி எஸ்டேட்டில் கன்னடா ஸ்கூல் மெஸ்ஸோ, என்னோடு போனால் உத்தமமான மதராஸி சிற்றுண்டியும் ஃபில்டர் காப்பியும் கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும். ’நானும் வரேன், சாம்பாரும் இட்லியும் சாப்பிடலாம்’ என்று கூடவே கிளம்பி விடுவான்.

கன்னா கூடச் சாப்பிடப் போவதில் ஒரு சந்தோஷம் அவனுடைய காரில் போகலாம். தினசரி ஆபீசிலும், முடித்து தண்ணி பார்ட்டிக்காக வீட்டிலும் பார்க்கும் அதே முகங்களை ஞாயிறன்றாவது தவிர்க்கலாம்.

ரமன் கன்னா முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. இப்படி ஒரு கூட்டம் சொந்த பந்தத்தை வீட்டில் வைத்துக் கொண்டு இட்லி தோசை சாப்பிட நான் வரப்போவதில்லை என்பதைத் தெரிந்ததால் ஏற்பட்டது அது.

“போத்தி சாப்ஜி”.

வாஸ்வானி சத்தமாகக் கூப்பிட்டார். ஏறிக் கொண்டிருந்த படியில் நின்றபடி கேட்டேன், என்ன சார்?

“வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்காங்க போலிருக்கு”.

இதை ஜாக்கிரதையான ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு, சிந்தி பாஷைக்கு இந்தி வேஷம் போட்டுவிட்ட மிக்சர் மொழிக்குத் தாவினார். இது எனக்கும் இங்க்லீஷ் தெரியும் என்று நிலைநிறுத்தி, சொந்த பாஷையில் புகார் சொல்ல.

என்ன சொல்வார் என்று தெரியும். நான் வரும் முன் ரஜோரி கார்டன் கிளையில் இருந்த ஒரு நாயர் இங்கே குடும்பத்தோடு குடி இருந்திருக்கிறார். தினசரி தேங்காய் உடைக்க சமையலறை மேடைமேல் கல்லையும், அரிவாளையும் வைத்துத் தட்டி வீட்டை உடைத்து விட்டார் என்று ஓயாத சண்டை அவரோடு வாஸ்வானி போட்டிருக்கிறார்.

நாயர் தலைச்சேரிக்கு மாற்றலாக, தேங்காய் யுத்தங்கள் ஓய்ந்து, சாத்வீகமான போத்திக்கு ப்ளாட் கைமாறியதில் வாஸ்வானிக்கு சந்தோஷம்.

கல்யாணமாகாத பையன். வீடு தங்குவது அபூர்வம். தண்ணீர்ச் செலவு, மொட்டைமாடியில் துணி உலர்த்த இடம் இப்படி எதுவும் தேவை இருக்காது என்பதால் வாஸ்வானி குடும்பத்துக்கே எல்லா வளமும்.

ஸ்கூட்டர் நிறுத்தக் கூட வீட்டு காம்பவுண்டில் இடம் ஒதுக்காது வெளியில் விடச் சொல்லிவிடலாம் என்று கணக்குப் போட்டோ என்னவோ, என்னை வரவேற்றுக் குடிவைத்திருந்தார் அவர்.

வாஸ்வானியின் நம்பிக்கை பொய்யாக வீட்டில் குடிக்க முடியாத என் சகாக்களான ஆபீசர், மேனேஜர் வகையறாவும், பிரம்மச்சாரி குடியிருப்பு என்பதால் இங்கே படை எடுத்து விட்டார்கள். தேங்காய் உடைக்கவில்லை தான். பியர் பாட்டில் உடைபடும் சத்தம் ரகளையாகக் கேட்டபடி இருக்கிறது.

வாஸ்வானியும், அவர் மனைவியும், இரண்டு மகள்களும் கீழ்ப் போர்ஷனில் இருக்கிறார்கள். நானும் என் தலைக்கு மேல் ரமன் கன்னாவும் இருந்து கொடுக்கிற வாடகையில் தான் அவருடைய வீட்டுச் செலவு முழுவதும்.

”நல்ல மனுஷர். ஆனால், முதல்லே சாத்தான் பத்து நிமிஷம் வாயிலே வருவான். அவன் போனதும் தெய்வம் வரும். அவர் வீட்டம்மாவும் அதேபடிதான்” என்று லட்சுமண் கௌடா சொல்லியிருக்கிறான்.

விளக்கை அணைத்து விட்டு ஆபீஸ் போ, கக்கூஸில் இன்னும் தண்ணீர் விடு, ஜன்னலை எல்லாம் வாரம் ஒரு முறை துடை, தரை அதிர நடக்காதே, சமையல்கட்டில் அவ்வப்போது ஃப்ளிட் அடித்து கொசு, கரப்பான் பூச்சி இல்லாமல் ஆக்கு, ஜட்டியை வெளியே காயப்போடாதே என்று சில்லறை உபதேசங்களை தினசரி பைஜாமா போட்ட கிருஷ்ண பகவானாக எனக்கு அருள்வார். நான் கேட்டுவிட்டு அச்சா என்று தலையாட்டிவிட்டு நகர்ந்துவிடுவேன். மற்றப்படி துவைத்துப் போட்ட அண்டர்வேரைப் பார்த்து என்மேல் தெருவோடு போகும் மகளிர் மையலுறுவார்கள் என்று நம்பத் தயாரில்லை.

இன்றைக்கு பெரிய குறையாக ஏதோ சொல்லப் போகிறார் போல. சாத்தான் வரும் அறிகுறிகள். தேவனும் சீக்கிரம் வரட்டும்.

நான் இறங்கிப் போனேன்.

“சாய் குடிக்கிறியா? அத்ரக் தட்டிப் போட்டது”.

இஞ்சி தட்டிப்போட்ட டீ, இந்தப் பஞ்சாபிகள் அப்பாவி மதராஸிகளை வீழ்த்தும் அஸ்திரம். குடித்துவிட்டு கூறுகெட்ட மதராஸிகள், இஞ்சி தின்ற குரங்காகச் சொன்னபடி கேட்டு ஆடுவார்கள் என்று இவர்களுக்கு ஐதீகம் போல. தேநீர் உபசாரத்தை மரியாதையோடு, வேணாம் என்று மறுத்தேன்.

மிசஸ் வாஸ்வானியின் இந்திரா காந்தி ஸ்டைல் தலைமுடி அவளைப் பார்க்கப் பயங்கரமானவளாக்கி இருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கதர்ப் புடவை அணிந்து, வாஸ்வானி கீழ்ப்படிதலுள்ள டிரைவராக ஜாக்கிரதையாகக் கார் ஓட்ட, அவள் வெளியே போய்வருவதைப் பார்த்திருக்கிறேன். இப்போதும் கதர்ப் புடவை. வெளியே போகத் தயாராக இருக்கிறாள்.

அவளோடு கூட ஒரு நடுவயதுப் பெண். அடுத்த தெரு. அவர் மஹிளா சமூக சேவை அமைப்பு உபதலைவர் என்று அவளை என்னிடம் ஒருமுறை அறிமுகப்படுத்தினாள் மிசிஸ் வாஸ்வானி.

”உன் உதவி வேணும், ஆபீசிலே, உங்க கஸ்டமர்லே குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்க யாராவது ரெடின்னா சொல்லு”, என்று என்னிடம் ஆள் பிடிக்கச் சொல்லியிருக்கிறார் அந்தத் தோழி அம்மாள்.

அப்படி கூட்டி வரும் ஒவ்வொருத்தருக்கும் ஐநூறு ரூபாய் அந்த மனுஷருக்கும், கூட்டி வந்தவருக்கு இருநூறும் உடனடியாக விநியோகிக்கப் படுமாம்.. ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்க உசிதமான வழி என்றாள் அவள்.

”எங்க திராவிட வேதம், குடும்பக்கட்டுப்பாடு செய்யச் சொல்றவங்க எல்லாம் ஐயோன்னு மென்னி முறிஞ்சு, ரத்தம் கக்கிச் சாவாங்கன்னு சொல்றது”, என்றேன் அவளிடம். இப்போதெல்லாம் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறாள்.

அவள் இப்போது வந்திருக்கிறாள். அந்தம்மா என்னைக் காலி செய்ய வைத்து விரட்ட வாஸ்வானிகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பாளோ.

”இன்னிக்கு தண்ணி கம்மியாத்தான் வருது டெல்லி கார்பரேஷன் பைப்பிலே”

மிசிஸ் வாஸ்வானிதான் ஆரம்பித்தாள். அது முழுப் பொய். ஜமுனா நதியில் கரைபுரண்டு குளிர்கால வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது. தில்லி நகரம் கார்ப்பரேஷன் குழாயில் எவ்வளவு விநியோகித்துச் செலவழித்தாலும் இங்கே தண்ணீர்ப் பஞ்சம் வந்து, மாநகரம் தெற்கத்தி தரிசு போல் காய்ந்து போகப் போவதில்லை. செலவழிப்பதால் நதியில் பிரவாகம் கட்டுக்குள் இருக்க உதவ முடியும். அடுத்த மாதம் இமயமலையில் பனிப்பாறைகள் உருக, கங்கையிலும் யமுனையிலும் வெள்ளம் கரைகடந்து பொங்கும்.

நான் விளக்குவதற்குள் வாஸ்வானி அவர் வீட்டை வாடகைக்கு விடப் போட்ட காண்ட்ராக்டோடு வந்துவிட்டார்.

“ஒரு குடும்பம் வசிக்கத்தான் ஒப்பந்தம். பத்து இருபது பேர் ஒரே நேரத்தில் வந்து தங்க இது சத்திரம் சாவடி இல்லை”.

”இருபது பேர் உன் கூட வந்திருக்காங்க. அவங்க குளிக்க, துணி துவைக்க, மற்ற உபயோகத்துக்குன்னு இந்தத் தெருவிலே செலவழிக்கிற தண்ணி முக்கால் பாகம் நம்ம வீட்டுலே தான் செலவாகும். கார்பரேஷன் மட்டுமில்லே, பக்கத்து வீட்டுக் காரங்க கூட திட்டுறாங்க”. இது மிசிஸ் வாஸ்வானி.

”எமர்ஜென்சி நேரமா இல்லேன்னா உங்க எல்லோரையும் பத்து நிமிஷத்திலே வெளியே நிறுத்தியிருப்போம். பேங்க், ஆபீசர், இதெல்லாம் அப்புறம். மதராஸ்லே இருந்து வந்தோமா இருந்தோமா மூணு நாலு வருஷம் கழிச்சு திரும்பிப் போனோமான்னு இருக்கணும். இது உங்க ஊர் இல்லே”.

எனக்கு சுரீர் என்று வந்தது.

“இது உங்க ஊரும் இல்லே வாஸ்வானி சாப். 1947-லே தேசப் பிரிவினை வந்தபோது இப்போ பாகிஸ்தான் சிந்து மாகாணமா இருக்கற இடத்திலே இருந்து துரத்தப்பட்டு அகதிகளா வந்தவங்க நீங்க. நேரு சர்க்கார் உங்களிலே ஒருத்தரைக் கூடக் கைவிடாம, இருக்க பட்டா போட்டு லாஜ்பத் நகர்லேயும் ஜங்புராவிலேயும் இடமும், தொழில் செய்ய பண உதவியும் செஞ்சு கொடுத்தாங்க. நான் வந்தேறின்னா நீங்களும் அதேதான்”.

சொல்ல முடியும். வரலாறு. சொல்ல முடியாது. எமர்ஜென்சி நேரத்தில் அரசுடமையாக்கப்பட்ட பேங்க் ஆபீசர் என்ன பேசினால் அரசு விரோதம் ஆகும்? அதுவும் தலைநகரத்தில்? தெரியாது.

”ஏதோ வந்துட்டாங்க. இருந்து குளிச்சு சாப்பிட்டு இன்னிக்கு ராத்திரிக்குள்ளே கிளம்பச் சொல்லு. இல்லேன்னா உங்க சீஃப் மேனேஜர் கிட்டே பேச வேண்டி இருக்கும்”.

வாஸ்வானி சொல்லியபடி உள்ளே போக நான் ஏதும் பேசமால் வெளியே வந்தேன்.

“என்ன தம்பி, உதவி என்ன வேணும்னாலும் கேளு, தரேன்னு சொல்றாங்களா?”. சவுந்தரம்மா கேட்டாள். சிரித்து வைத்தேன்.

“எம்மேலே தான் குத்தம். சொல்லிட்டு வந்திருக்கணும். நான் கிளம்பறேன்னு கேட்டு தங்கச்சி குடும்பமும், எங்க ஆளுங்களும் சேர்ந்துக்கிட்டாங்க. கையிலே பெருந்தொகைக்கு சீட்டு இருக்கே. பத்திரமாக் கொண்டு சேர்த்து காசாக்க வேணுமேன்னு எல்லோருக்கும் பதைபதைப்பு”.

அவள் அங்கலாய்த்தாள். இவர்களை எங்கே அனுப்ப? இவர்களுக்கு இங்கே, என்னை விட்டால் யாரைத் தெரியும்?

அரைமணி நேரம் கழித்து மினு வாஸ்வானி படியேறி வந்தாள். வாஸ்வானியின் மூத்த மகள். ஜவஹர்லால் நேரு யூனிவர்சிட்டியில் தில்லியின் வரலாற்றை ஆய்வு செய்துகொண்டிருக்கிறாள்.

கூடவே அவளுடைய தங்கை பிரியம்வதா. அடுத்த வருடம் காலேஜ் போகப் போகிறவள். இரண்டு பேரும் கையில் ஸ்டெயின்லெஸ் பாத்திரங்களோடு வந்தார்கள்.

”பாய் சாகப்”.

என்னைத்தான் கூப்பிடுகிறார்கள். அண்ணா என்ற அந்த அழைப்பில் நான் கரைந்து போனேன். பாசாங்கு இல்லாத பாசம் அது.

”அப்பா அம்மா ஏதோ அவசரத்திலே பேசிட்டாங்க. அவங்க கிட்டே ஒரு வார்த்தை முன்கூட்டியே நீங்க சொல்லிட்டு, இப்படி இவங்க எல்லோரும் வந்திருந்தா ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டாங்க”.

நான் சொல்லியிருக்கலாம் தான். விழுத்துப்போட்ட சட்டையை ஒரு நாள் முன்னால் துவைத்திருந்தால் கூட தவில் கருப்பசாமி பிள்ளை எல்லா தெய்வங்களையும் துணைக்கு அழைத்து, அங்குவிலாஸ் புகையிலை கிடைக்கிற விவரம் கேட்டு, தில்லி பயணம் பற்றி ஒரு வரி போனால் போகிறது என்று எழுதி அனுப்பிய லிகிதம் முழுக்கப் படிக்கக் கிடைத்திருக்கும். முன்கூட்டியே படித்திருப்பேன்.

இது என்னம்மா? அவர்கள் கையில் வைத்திருந்ததைப் பார்த்துக் கேட்டேன்.

”குழந்தைகளுக்கு பால். இது ஆப்பிள், ஆரஞ்ச், வாழை. இது நேற்று செய்து வச்சிருந்த ரொட்டியை சூடு பண்ணி எடுத்து வந்திருக்கேன். ஆம்லெட்டும் போட்டு எடுத்து வந்திருக்கேன்”.

மனது நிறைந்து விட்டது. என்றாலும்..

“பெரியவங்க கோவிச்சுக்கப் போறாங்கம்மா, நீங்க எடுத்து வந்திருக்கீங்களே”.

”யாரு, அம்மாவா? அவங்க கிச்சன்லே இன்னும் ரொட்டி பண்ணிட்டு இருக்காங்க. போதுமோ போதாதோன்னு. டாடி காலு கடையிலே பால் வாங்கிட்டு வரக் கிளம்பிப் போயிருக்கார். சின்னப் பிள்ளைங்க. ரயில்லே என்ன சாப்பிடக் கிடச்சுதோன்னு சொல்லிக்கிட்டிருந்தார்”.

தேவன் வந்துவிட்டதாகத் திடமாகத் தெரிந்த நிமிடம் அது.

வார்த்தையை நான் விட்டிருந்தால் எவ்வளவு அனர்த்தமாகி இருக்கும். கீழே இருந்து எல்லாம் போதுமா என்று சத்தம். வாஸ்வானி சாப் தான். நான் நின்றபடிக்கு இருகரம் குவித்து மனம் ஒப்பி வணங்கினேன்.

எல்லோருக்கும் நல்ல பசி. பிகு பண்ணிக் கொள்ள டவுன் ஆட்கள் இல்லை யாரும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை வயிறு நிறையச் சாப்பிட்டார்கள். ரொம்ப நாள் கழித்து எனக்கும் மனமும் வயிறும் நிறைய ஒரு ஞாயிற்றுக்கிழமை விடிந்திருக்கிறது.

பத்தே நிமிஷத்தில் அவர்களுடைய பயணத் திட்டம் புரிய வந்தது.

சவுந்தரம்மா மதுரையில் சாதிசனம் வீட்டுப் பெண் சடங்கான போது பஸ் பிடித்துப் போய் சருவப்பானை அன்பளிப்பு கொடுத்து, கோழி அடித்துப் போட்ட விருந்து சாப்பிட்டு வந்திருக்கிறாள். மதுரை பஸ் ஸ்டாண்டில் டிக்கட்டுக்கு சரியான சில்லரை இல்லாமல், பத்து ரூபாயை உடைக்க பஞ்சாப் லாட்டரி டிக்கெட் வாங்கச் சொன்னது சவுந்தரம்மா வீட்டுக்காரர்.

‘நூறு டிக்கெட்டை காட்டினான். ஆனா நான் அசரலியே. எதை எடுத்தா பணம் விளும்னு கண்ணாத்தா சொல்லிட்டே இருந்தா. நான் அதை எடுத்து”

சவுந்தரம்மா புனைகதை சொல்லிக் கொண்டிருந்தாள். மகள் இடையில் புகுந்தாள்.

“வேணாம் ஆத்தா, முழுக்கதை சொன்னா ரெண்டு இண்டெர்வெல் விட வேண்டியிருக்கும். கதைச் சுருக்கம் போத்தி அண்ணே, இதான். அந்த டிக்கெட்டுக்கு ஒரு பெரிய லகரம் ப்ரைஸ், இங்கே தில்லியிலே மெயின் டீலர் கிட்டே சீட்டைக் கொடுத்திட்டா கையோடு வாங்கிட்டு போகலாமாம். அதுவரைக்கும் இங்கே பக்கத்திலே ஊர் எல்லாம் பாத்துட்டு, முக்கியமா தாஜ் மகால் பார்த்துட்டு, ஊருக்கு அடுத்த ஞாயிறு பயணம் வச்சிருக்கோம். டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணியாச்சு”.

”குளிச்சுட்டு கிளம்புங்க. உள்ளூர்லே பாக்க வேண்டியதை பாத்து முடிச்சுடலாம்”. அந்த அவசரமாகக் கூடிய அவையைக் கலைத்தேன்.

மிசஸ் வாஸ்வானி, வென்னீருக்கு கீழே கீஸர் போட்டிருந்ததால், குழாயைத் திறக்க இதமான சூட்டில் தண்ணீர் வந்து விழுந்தது. சரசரவென்று ஆளுக்கு ஐந்து நிமிடத்துக்கு மேலே எடுத்துக் கொள்ளாமல் குளிக்க, குழந்தைகளைக் குளிப்பாட்டி உடுப்பு போட, சலவைத் துணி அணிய என்று அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லோரும் வெளியே போகத் தயாராகி விட்டார்கள். நான் தான் கடைசியில் குளிக்கப் போய் நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டேன்.

”பஸ்ஸிலேயே போயிடலாம். லாஜ்பத் நகர் பஸ் ஸ்டாண்ட் கூப்பிடற தூரம்தான்”.

நான் உற்சாகமாக நடக்க, புது ஊரைச் சுற்றிப் பார்க்கும் ஆர்வத்தோடு அந்தக் கூட்டம் என்னோடு நடந்து வந்தது.

லோதி கார்டன், இந்தியா கேட், கன்னாட் ப்ளேஸ் என்று வழமையாக டூரிஸ்டுகள் சென்று பார்க்கும் சுற்றுலாத் தலங்கள் இருக்கட்டும் என்று விலக்கி வைத்து சவுந்தரம்மா இஷ்டப்பட்டது கோவில்.

“தம்பி இங்கே முருகன் கோவில் வந்திருக்குன்னு சொன்னாங்களே. போய் பழனியாண்டியை பாத்துட்டு வந்துடுவோமே. ஊர்லே இருந்து அவதி அவதியா கிளம்பி வந்துட்டேன். குன்னக்குடி கூட போக முடியலே”.

லாஜ்பத்ராய் வீதி, ஹவுஸ்காஸ் வழியாக ஆர்.கே.புரத்துக்கு பஸ் எடுத்துப் போய்ச்சேர கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமானது. நானும் அந்தக் கோவிலைப் பார்த்ததில்லை. மூன்று வருடம் முன்பு கும்பாபிஷேகம் நடந்து ஜேஜே என்று தமிழ், மலையாள, ஆந்திர, கன்னட சுவடுகளாக விரியும் திராவிடப் பக்த கும்பலோடு கம்பீரமாக நிற்கும் கோவில். சவுந்தரம்மா ரகசியம் பேசுகிற குரலில் கூப்பிட்டாள் :

“போத்தி தம்பி”.

”என்ன ஆத்தா? காவடி எடுக்கணுமா? குன்னக்குடி போகலேன்னு கொறைப்பட்டுக்கிட்டீகளே?”.

”அட போ தம்பி, காவடி என்ன பால்குடமே எடுத்துடலாம், ஆனா அதுக்கு முதல்லே வேண்டிக்கணும். இப்போ வேண்டிக்கிட்டா அடுத்த முறை வரும்போது பூர்த்தி பண்ணிடணும். அடுத்த தடவை இங்கிட்டு வருவேன்னு நினைக்கறே?”

“ஏன் ஆத்தா, நீ நூறு வருஷம் புகையிலைக் கட்டை அதக்கிக்கிட்டு ஊர் உலகம் எல்லாம் சுத்திட்டு இருக்கப் போறே பார். நாந்தான் கிழவனா ஒரு மூலையிலே உக்காந்திருப்பேன்”, என்றேன்.

அதற்குள் சவுந்தரம்மா கொண்டு வந்திருந்த துணிப்பையில் இருந்து இன்னொரு சணல் பையை எடுத்து, அதற்குள் இருந்து ஒரு சுருக்குப் பையை திறந்து, உள்ளே நீளவாட்டில் இருக்கும் லெதர் பர்ஸை எடுத்து அதையும் திறக்க அம்மாடி என்றேன்.

பின்னே இல்லையா? விட்டலாச்சார்யா படத்தில் ஏழு கடல், ஏழு மலை தாண்டி பாம்பும், கழுகும் சுற்றி இருக்க நடுவே இருக்கும் தீவுக்குக் காந்தாராவ் போய்க் கைப்பற்றும் மந்திர மோதிரம் மாதிரி அத்தனை பாதுகாப்போடு பரிசு பெற்ற லாட்டரி சீட்டு அங்கே இருந்தது.

தீபாரனைத் தட்டில் வைத்து முருகன் காலடியில் சேர்த்து ஆசி வாங்கிக் கொள்ளலாம் என்ற சவுந்தரம்மாவின் கோரிக்கையை உடனே நிராகரித்தேன். நடுவில் எங்கேயாவது சீட்டு காணாமல் போனாலோ, அல்லது தீபாராதனைத் தட்டில் தீநாளம் தீண்டிப் பார்த்தாலோ பிரச்சனை.

“இங்கே இருந்தே சீட்டை அவருக்குக் காட்டி கண்ணுலே ஒத்திக்கிட்டு திரும்ப வச்சுடுங்க. தேங்கா, பழம் வச்சு நைவேத்தியம் செஞ்சு கும்புட்டுக்குங்க”.

”போத்தி தம்பி சொன்னா சரியாத்தான் இருக்கும். அவங்க மலையாள பூமியிலே ஒரு கோவில் விடாம குருக்களய்யா ஆச்சே”.

அந்தக் கூட்டமே என்னைக் கையெடுத்துக் கும்பிட கூசிப் போனது. சார்மினார் சிகரெட் ஊதிக்கொண்டு, ராத்திரியில் விஸ்கியும் பியருமாக மிதந்து, அமிழ்ந்து, கல்யாணமான பாயல் அஹுஜாவோடு மனசில் தகாத காரியம் பார்க்கும் போத்திக்கு இதெல்லாம் ரொம்பவே அதிக பட்ச மரியாதை. கும்புட்டு முடித்து வெளியே வந்தோம்.

”தம்பி, ஒரு விசயம்”.

சவுந்தரம்மா தயங்கினார்.

“சொல்லுங்க ஆத்தா”.

“ஒண்ணுமில்லே. நாங்க இப்படி படை பட்டாளமா வந்து உன்னை தொந்தரவு படுத்தக்கூடாதுன்னு தான் நினச்சோம். ஆனா வந்து கால் ஊணி ஒரு வாய் காப்பித்தண்ணி குடிக்க, குளிச்சு தெளிக்க, பிள்ளைங்களுக்கு பால் காய வச்சுக் கொடுக்க, உன்னை விட்டா யாரு இருக்கா நான் போக?”.

அவளோடு சேர்ந்து நானும் கண் கலங்கினேன்.

“அது பரவாயில்லே ஆத்தா”.

“என்ன பரவாயில்லே. கல்யாணம் ஆகி குடும்பத்தோட இருந்தா பரவாயில்லே தான். நீ ஆபீசுக்கு போவியா, எங்களைக் கவனிப்பியா? அதான் சந்தானம் டாக்டர் கிட்டே கேட்டு இதோ பாரு வாங்கியாந்திருக்கேன்”.

இன்னொரு சீட்டை பைக்குள் பைக்குள் திரும்பத் தேடி எடுத்து நீட்டினாள். இதுவும் லாட்டரி சீட்டா?

“எனக்கு வேணாம் ஆத்தா”.

நான் கிண்டல் செய்தபடி அந்தச் சீட்டைப் பார்க்க ஒரு விலாசம். பிர்லா மந்திர் பக்கம்.

”இவங்க தங்கியிருக்க குறைவான காசு வாங்கிட்டு இடம் தர்றாங்களாம். போய்ப் பார்க்கச் சொன்னார் டாக்டரு. கொஞ்சம் முடிச்சுக் கொடுத்திடேன்”.

சவுந்தரம்மா கெஞ்சினாள். அதற்குள் குழந்தைகள் அழவே, பக்கத்தில் ஒரு ஆந்திரா மெஸ்ஸில் நுழைந்து, கொண்டு வந்த பாலோடு இன்னும் கொஞ்சம் வாங்கி கொடுக்க திட்டம்.

“நல்லா கொழைய வடிச்ச சாதம் இருக்கு. பப்பு போட்டு பில்லல தினனிவண்டி”.

வயதான பெரியவர் நாமத்தோடு உட்கார்ந்து சொன்னார். பிள்ளைகளுக்கு பருப்பு சாதம் மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் நல்ல காரமான ஆந்திரா சாப்பாடு கிடைத்தது அங்கே. நான் போக வேண்டிய சாப்பாட்டுக்கடை பட்டியலில் அந்த இடத்தையும் சேர்த்துக் கொண்டேன்.

தடதடதடவென்று பெரிய மோட்டார்சைக்கிள் போல நகர்ந்து, பிரம்மாண்டமான ஒரு சர்தார்ஜி ஓட்டிப் போக நகர்ந்து வந்த வாகனத்தில் நான் இதுவரை ஏறியதில்லை. அதில் இரண்டு இறக்கையிலும் கூரை கட்டி, பலகை வைத்து பயணிகள் உட்கார்ந்து இன்றைக்கு முழுக்க ஊரும் பொறுமை ஆச்சரியகராமானது. ஆனால் பஸ் கிடைக்காத இந்த நேரத்தில் அது சரிப்படுமா தெரியவில்லை.

“பாயிசாப், எங்கே கிளம்பிட்டீங்க?”

வண்டி ஓட்டிவந்த சர்தார்ஜி விசாரித்தார் தலைப்பாகையில் செருகிய குண்டூசியை எடுத்து புறங்கையில் குத்திக் கொண்டபடி.

இந்து மஹா சபா என்றேன். அவர் சிறு ஆச்சரியத்தோடு பார்த்தார். அப்படித்தான் நினைத்தேன்.

மலைமந்திரில் கிளம்பி சர்தார் படேல் ரோடில் இறங்கினோம். நல்ல வேளையாக மூன்று ஆட்டோக்கள் சிரமமின்றிக் கிடைக்க, பூங்கா தெரு வழியே மந்திர் மார்க்.

கம்பீரமான கட்டடம். பிர்லா மந்திர் கோவிலுக்கு அருகே இன்னொரு கோவில் மாதிரி ஒரு பார்வைக்குத் தெரிந்தது. நீண்டு உயரும் படிகள். உள்ளே நீரூற்றும், மரங்களும், செடிகொடிகளுமாக ரம்மியமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் தோளில் குறுக்காக ஜோல்னா துணிப்பை மாட்டியபடி அங்குமிங்குமாகப் பலர் நடந்து கொண்டிருந்தார்கள்.

உள்ளே உச்ச சத்தத்தில் ஆசிரியர் சொல்ல, பிள்ளைகள், அல்லது பெண்கள் சேர்ந்து திரும்பச் சொல்ல, ஏதோ வகுப்பு நடந்து கொண்டிருந்தது.

ஷெல் ப்ரேம் மூக்குக் கண்ணாடியோடு மேஜைக்கு முன் அமர்ந்திருந்த பெரியவர் முன்னால் இரண்டு பேர் நிற்க பஞ்சாயத்து.

மரம், செடிகளுக்கு காலையில் தண்ணீர் ஊற்றியானதா இல்லையா என்று விசாரணை. நான் போய் நின்றதும், அது உடனடியாக முடிவுக்கு வந்தது.

ராம்ராம் என்று விசாரணை நீதிபதி சொல்ல, முன்னால் நின்றவர்கள் தலையில் குல்லாவை திரும்ப வைத்தபடி ராம்ராம் சொல்லி அப்பால் போனார்கள்.

நான் கொஞ்சம் முன்னால் போக, அதற்குள் திடுமென்று பழைய புராணப் படத்தில் கடவுள் பிரத்தியட்சமாவது போல் சடாமுடியும் மழுங்கச் சிரைத்த முகமுமாக ஒரு பஞ்சகச்ச வேஷ்டிக்காரர் வந்து, வகுப்பில் நிறையப் பேர் வந்திருப்பதால் அடுத்த அறையில் பூட்டி வைத்திருக்கிற ப்ளாஸ்டிக் நாற்காலிகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கோரினார்.

நோஞ்சானாக ஒரு அம்மா, தலையைப் போர்த்தியபடி, ஒரு வார்த்தை, ஒரு ராம்ராம் என்று கலந்து சொல்லியதன் சாரம்சம் – புத்தகக் கடையில் துளசிதாசரின் ராமசரிதமானஸ் மூலமும் உரையும் கேட்டு யாரோ காத்திருக்கிறார்கள். மாடியில் இருந்து எடுத்து அனுப்ப வேண்டும்.

டெலிபோன் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. வயசான சந்நியாசி ஒருத்தர் ”மண்டைவலி தலையையே பிளக்கிறது. கோடாப்ரின் வேண்டியிருக்கு”, என்று முறையிட்டபடி ஓரமாக நின்றார்.

இத்தனை வேலைக்கு நடுவே எங்களுக்கு அறை வாடகைக்கு வேணும் என்று அவரிடம் எப்படிச் சொல்வது? அந்த இடத்தின் சூழ்நிலையைப் பார்த்தால் போர்டிங் அண்ட் லாட்ஜிங் உலகம் மாதிரித் தெரியவில்லை. சாரி, அடுத்த கட்டடத்துக்குப் போங்க என்று எந்த வினாடியும் அவர் துரத்தி விடுவார்.

மேஜை டிராயரைத் திறந்து சன்னியாசிக்கு கோடாப்ரின் எடுத்துக் கொடுத்து, சமையலறையில் வென்னீர் வாங்கி அதோடு கூட முழுங்கச் சொல்லி விட்டு, மற்றவர்களை இருக்கச் சொல்லிக் கையசைத்து, அப்புறம் என்னைப் பார்த்தார்.

”என்ன விஷயமாக வந்திருக்கீங்க? இவங்க எல்லாம் யார்?”, அவர் எங்கள் குழுவைப் பார்த்துக் கேட்டார்.

சுருக்கமாக யார் என்று விவரம் சொன்னேன். சபாவில் இரண்டு மூன்று நாள் தங்க அறை வாடகைக்குக் கிடைக்கும் என்று எங்களுக்கு வேறு யாரோ வழிகாட்டியது தப்பாக இருக்கலாம் என நான் உடனடியாக வருந்தத் தொடங்கினேன். அவர் கால் செண்டிமீட்டர் சிரித்தபடி சொன்னார் –

“அதுவும் உண்டுதான். பின்னால் எட்டு ரூம் வெளியூர், முக்கியமா வெளி மாநிலத்தில் இருந்து யாத்திரை வருகிறவங்களுக்காக இருக்கு. இது இந்து மகாசபாங்கறதாலே இந்துவா இருக்கணும் இங்கே தங்க வர்றவங்க. பணம் பெருத்தவங்களுக்கு இடம் இல்லே. ஏழைப்பட்டவங்களுக்குத்தான் அது. ஒரு நாள் முப்பது ரூபா வாடகை. சாப்பாடு, டீ, காப்பி எதுவும் எதிர்பார்க்கக் கூடாது. மூணு ரூம் தரச் சொல்றேன். அதுக்கு மேலே முடியாது”.

எல்லாவற்றுக்கும் தலையாட்டினேன்.

“வெளியே இறங்கி வலது பக்கமா நேரே பின்னாலே போனா, சின்னதா ஒரு கட்டிடம் இருக்கும். அங்கே மாதவ் அதிகாரின்னு ஒருத்தர் இருப்பார். ஆமா, பெயர்லேயே அதிகாரி. கோபால் கோட்ஸே அனுப்பினதா சொல்லுங்க. ஆமா, அந்த கோட்ஸே என் தம்பிதான்”.

நான் ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து பார்த்தேன். சாரி என்றேன். ஏன் என்று தெரியவில்லை.

“ரொம்பப் பேர் நான் யார்னு சொன்னதும் இப்படித்தான் ஆச்சரியப்படறாங்க. நாதுராமை நாம் யாரும் மறக்கக் கூடாதுங்கறதுக்காக அவன் பெயரை தினமும் பத்து தடவையாவது சொல்றேன்”.

”ஓகே சார். ரைட் சார்”. இந்த எதிர்வினை போதாது என்று பட, ”சாரி, உங்களை தொந்தரவு படுத்தறோம். இப்போ இருக்கற அரசியல் நிலைமையிலே ஏற்கனவே உங்களுக்கு கஷ்டம் வந்திருக்கும். நான் வேறே கும்பலை கூட்டி வந்து…”.

புத்தகக் கடையில் வைக்க ராமாயணம் கேட்டு வந்த பெண்மணி உள்ளே புகுந்து சொன்னார் –

“நோ நோ நோ. கவர்மெண்ட் மூலம் எந்த கஷ்டமும் இல்லை. எங்க சர்க்கார் தானே அது. நாங்க செய்ய வேண்டியதை அது செய்யுது. விரசா செய்யுது. விரிவா நடக்குது அதெல்லாம். இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கு”.

நான் சும்மா இருந்தேன். சரியும் தப்பும் சுட்டுக்காட்டிக் கட்சிகட்ட நான் யார்?

”சரி, அவங்க காத்திருக்காங்க”.

அந்தப் பெரியவர் மற்றவர்களைக் காட்ட, ”பணம் எவ்வளவு கட்டணும் சார்?” என்று கேட்டேன்

”ரெண்டு நாள் வாடகை அட்வான்ஸ். அதை இப்போ கட்டிட்டு போயிடுங்க. சாயந்திரத்துக்குள்ளே வந்துடணும்”.

நான் நன்றி சொல்லிக் கிளம்பினேன். தவில் கருப்பசாமி பிள்ளையிடமும் சவுந்தரம்மாவிடமும் விஷயத்தைச் சொன்னேன். இடம் நல்லா இருக்கு என்று அவளுடைய தங்கை மாப்பிள்ளை சிலாகித்தார்.

“குளிருக்கு அடக்கமா பெரிய கல்லுக் கட்டிடம். வாசல்லே வேர்க்கடலை வறுத்து விக்கற வாசனை அடேயப்பா”.

எல்லோரும் சிலாகித்து தங்குமிடப் பிரச்சனை தீர்ந்ததாக நிம்மதி மூச்சு விட, சவுந்தரம்மா என்னை ஓரமாகக் கூப்பிட்டாள்.

”போத்தி தம்பி அந்தப் பெரியவுக ஏதோ சொன்னாங்களே”.

“ஆமா, சாதா ஆளுங்களுக்குத்தான் ரூம் தருவாங்களாம். நீங்க லட்சாதிபதின்னு அவர் கிட்டே சொல்லலே”.

“போ தம்பி கையிலே வர்ற வரைக்கும் அதெல்லாம் நிச்சயம் இல்லே. அதைச் சொல்லலே”.

“வேறே எதைச் சொல்றீங்க?”.

“பெயரு சொன்ன மாதிரி இருந்துச்சே”.

“ஆமா, அதிகாரின்னு ஒருத்தரை பாத்து பணம் கட்டணும். நான் பேங்கிலே அதிகாரி மாதிரி அவர் இங்கே போல. பெயரே அப்படி அமைஞ்சு போச்சு”.

“அதைச் சொல்லலே தம்பி”.

“பின்னே வேறே எதை ஆத்தா?”

“அந்த மகாபாவி பெயரை சொன்ன மாதிரி இருந்துச்சே”.

“எந்த மகாபாவி?”

“என் வாயாலே வேறே அதைச் சொல்லணுமா. அந்த மகராசன், சத்தியவான் காந்தியாரை கொன்னானே அந்தப் பயதான்”.

“யாரு கோட்ஸேயா?”

”ஆமா, போய் கோலிசோடா வாங்கி வாயை கொப்பளிச்சுட்டு வா. அந்தப் பேரைச் சொல்லக்கூட கூடாது”.

“ஆத்தா அது ஒரு குடும்பப் பெயரு. அதை பல பேர் வச்சிருப்பாங்க”.

“என்னமோ போ எனக்கு வேணாம்”.

“வேணாம்னா நீங்க வச்சுக்காதீங்க. நொரநாட்டியம் பண்றீங்களே ”

“அந்தப் பெரியவரு கொலைகாரன் பேரை ஏன் சொன்னாப்பல…”

”ஆமா, அவரோட சொந்தத் தம்பி தான் நாதுராம் கோட்ஸே. காந்தித் தாத்தாவை போட்டுத் தள்ளின ஆளு”.

“நெனச்சேன். அந்த மூஞ்சை எப்பவோ தினத்தந்தியிலே பார்த்திருக்கேன். இது மாதிரித்தானிருக்கும்”.

“இப்ப என்ன செய்யணுங்கறே ஆத்தா?”, நான் சிரித்தபடி கேட்டேன்.

”இங்கே இன்னும் ஒருநிமிஷம் கூட இருக்கக் கூடாது தம்பி. வாங்க, போகலாம்”.

சவுந்தரம்மா குரலில் உறுதி தெரிந்தது. அவளை வற்புறுத்த விரும்பவில்லை. மூத்த கோட்ஸேயிடம் அப்புறம் வருவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வரமாட்டோம் என்று அவருக்குத் தெரிந்திருக்கும்.

யாரும் எதுவும் பேசாமல் வெளியே வந்தோம். திரும்பி அந்த முன்வாசலைப் பார்த்தேன். அங்கே யாருமில்லை.

“இப்போ பகல் நாலு மணி. ஆறு மணிக்கு இருட்டிப் போயிடும். அதுக்குள்ளே காந்தி சமாதி, ராஷ்ட்ரபதி மாளிகை பாத்துடலாமா? காந்தி சமாதி இந்த ஆத்தாவுக்கு ஸ்பெஷலா போறது”.

சிரிப்பை விதைக்க முயன்றேன். யாரும் சிரிக்கவில்லை.

“நாளைக்கு பாத்துக்கறோமே தம்பி. எப்படியாவது நாங்களே இடம் பார்த்து போயிடறோம். இப்பதிக்கு கொஞ்சம் கிறுகிறுன்னு வருது. தலை சாச்சு படுக்க இப்போதைக்கு உங்க வீடுதாம்பா இருக்கு”.

அவள் வேண்டுதலோடு சொல்ல, எங்கேயும் நீங்க போக வேண்டாம். என் வீட்டிலேயே இருங்க. ஏற்பாடு செஞ்சுடலாம் என்றேன். வாஸ்வானி குடும்பம் நிச்சயம் உதவுவார்கள். ஆனால் நாளை பரிசுச் சீட்டை பஞ்சாப் அரசாங்க பிரதிநிதியிடம் ஒப்படைப்பது, அதற்கான நடவடிக்கைகள்…. லீவு போட விடுவார்களா பேங்கில்?

யோசித்தபடி அவர்களை ஜங்க்புரா போக வந்து நின்ற பஸ்ஸில் ஏற்றி நானும் ஏறிக் கொண்டேன். லாஜ்பத் நகர் வரும் போது சாயந்திரம் ஐந்து மணி. சவுந்தரம்மா மட்டுமில்லை, எல்லோருமே உறங்கி விட்டார்கள். அசதிதான்.

ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தாபாவுக்குப் போய் பத்து பேர் சாப்பிட ரொட்டி, உருளைக்கிழங்கு சப்ஜி, கத்தரிக்காய் கூட்டு ஆர்டர் கொடுத்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆளனுப்பி டெலிவரி செய்கிறேன் என்று அனுப்பி வைத்தார் தாபாக்கார பஞ்சாபி.

தமிழ்க்காரர் வைத்திருக்கும் ஆல் பர்பஸ் கடையில் மிக்சர், காராசேவு, ராணி, குமுதம், கடலை மிட்டாய் என்று கலந்து கட்டியாக வாங்கிக் கொண்டேன். பால் வாங்கிவர மறந்து போக, பொடிநடையாக ஏ ப்ளாக் போய் மிட்டாய்க்கடையில் காய்ச்சிய பால் வாங்கி வந்தேன். வெற்றிலை பாக்கும் வாங்கியிருக்கலாமோ.

கீழே வாஸ்வானி வீட்டில் சாயந்திரம் டெலிவிஷனைப் போட்டிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் டெலிவிஷனில் சினிமா பாட்டு போடுவார்கள். நாலு பாட்டு முடிந்து ஒரு பழைய இந்தி சினிமாப்படம் வரும். எமர்ஜென்சியை கொண்டு வருவதற்கு சற்று முன்னால், தில்லி போட் கிளப்பில் ஜெயப்ரகாஷ் நாராயண் பேசும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்துக்கு மக்கள் போகாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக இந்திரா அரசாங்கம் முயற்சி எடுத்து, டெலிவிஷனில் புத்தம்புது சினிமாப்படமான பாபி திரையிடப்பட்டது. அந்த ஒரு தடவை தான் டிவியில் புது சினிமா வந்தது.

இப்போது, டெலிவிஷனில், இந்தியில் நீளமாகப் பேசிய பிறகு அறுதப்பழசு இந்தி சினிமா பாட்டு ஒலித்தது. டாக்சி ட்ரைவர் படத்தில் குரல் நடுங்க தலத் மொகம்மது பாடிய ஜாயெது ஜாயே கஹாங். அது முடிந்து பேச்சு.

சட்டென்று தமிழ்ப் பாட்டு – அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.

கீழே இருந்து வாஸ்வானியின் மூத்த மகள் மினு ஓடி வந்தாள். ”போத்தி, சீக்கிரம் வா. மதராஸி பாட்டு.அயிராம் படம். அயிராம் தில் ஒருவான்”.

ஆயிரத்தில் ஒருவன் என்றபடி நான் கீழே போக பாட்டு கிட்டத்தட்ட முடிந்திருந்தது.

“உன் விருந்தாளிகளுக்கு என்ன திட்டம் வச்சிருக்கே?” வாஸ்வானி கேட்டார். திரும்ப வந்த சாத்தானா?

மங்கிய விளக்கு வெளிச்சத்தில் சிட் அவுட்டில் பழைய மோடாவில் உட்கார்ந்து முழுக் கதையும் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன். சவுந்தரம்மாவுக்கு லாட்டரி விழுந்த செய்தியை மட்டும் மறைத்து விட்டேன். சொன்னால் நாளைக் காலை லாஜ்பத் நகர் முழுக்கத் தெரிந்திருக்கும் அது.

ரூம் ஹீட்டர் ஒன்றை பெட்ரூமிலிருந்து எடுத்து என்னிடம் கொடுத்தார் அம்மா வாஸ்வானி.

”உன் ஹீட்டர் போதாது. இதை ஹால்லே போட்டுக்கோ”.

வாங்கிக் கொண்டு படி ஏறும்போது நாளைக்கு வேறே இடம் பார்த்துக் கொள்வார்கள் என்றேன். நல்லது என்றார் வாஸ்வானி. எங்கே? தெரியாது.

ஒன்பது மணிவரை சாப்பிட்டு விட்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தோம்.

நான் புறப்பட்டு வந்து இந்த இரண்டு மாதத்தில் ஒன்றும் மாறவில்லை என்று தோன்றியது. நிறைய மாறியிருக்கிறது ஊர் என்றும் பட்டது. காரணம் கண்டுபிடிக்க சிரமம் இல்லை. போத்தியின் உலகமும் சவுந்தரம்மா உலகமும் வேறுவேறானவை. அவ்வப்போது அவை சந்தித்துக் கொள்ளும். இயல்பான சந்திப்போ அல்லது இதுபோல் லாட்டரி சீட்டு ஏற்படுத்திக் கொடுப்பதோ.

பேசிக் கொண்டிருக்கும்போதே சவுந்தரம்மா தங்கை மாப்பிள்ளை நெளிந்தார். என்ன சார், டாய்லெட்டா என்று விசாரித்தேன்.

”அது இல்லே தம்பி”. பின்னே வேறே என்ன?

“வெத்திலை தீர்ந்து போச்சு. சீவலும் இல்லே. போய் இந்தப் பக்கம் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கறேன். வாக்கிங் போன மாதிரியும் இருக்கும்”.

குளிருமே என்றேன் உடனே.

“பரவாயில்லே, தம்பி. இந்த ஸ்வட்டர் இங்க்லாண்ட்லே இருந்து பெரியப்பாரு மகன் கொண்டு வந்தது. அங்கே எப்படி வந்ததுன்னா காஷ்மீர்லே இருந்து இறக்குமதியாம். பாருங்க அங்கே இங்கே சுத்தி நம்ம ஊர் சரக்கு நம்ம கிட்டே வந்துடுது” என்று சிரித்தார் அவர்.

அவருக்கு இந்தக் குளிர் தாங்கக்கூடியது என்றால் போத்திக்கு என்ன போச்சு?

”இங்கனக்குள்ளே கடைகண்ணி ஏதாவது இருக்குமா?”

“என்ன மாதிரி?”

“நம்ம பொருள் வாங்கறதா.. வெத்திலை, சீவல், வாசனை சுண்ணாம்பு..”

எனக்குத் தெரிந்திருக்கும் என்று அவர் நிச்சயமாக நினைக்கிறார். யோசித்துவிட்டுச் சொன்னேன் –

“இங்கே ரயில்வே கேட் பக்கம் பொறம்போக்குலே குடிசை போட்டு சில தமிழ்க்காரங்க இருக்காங்க. முந்தியெல்லாம் சேலம் பக்கம் இருந்துதான் இப்படி புறப்பட்டு வருவாங்க. இப்போ தெற்கிலே எங்கெல்லாமோ இருந்து வர்றவங்க.. முக்கியமா பொம்பளை ஆளுங்க வீட்டு வேலை செய்வாங்க, ஆம்பிளைங்க ரயில்வே கேங்க் கூலி, இல்லே சின்னச் சின்னதா உதிரி வேலை. இந்தி சரளமா பேசுவாங்க. வந்து ஒரு வருஷத்திலே பேசக் கத்துக்கிடுவாங்க. கையிலே பணம் அதிகம் புழங்கினா, செலவும் அதிகம் தான். சென்ட்ரல் மார்க்கெட் ஓட்டல்லே இருபது ரூபாய் கொடுத்து மசாலா தோசை வாங்கித் தின்ன நாம யோசிப்போம். பக்கத்துலே உக்காந்து அவங்க சர்வ சாதாரணமா சாப்பிட்டு பார்சலும் வீட்டுக்கு வாங்கிப் போவாங்க. அவங்க இடத்துலே தெருவிலேயே காடா விளக்கு வச்சு நம்மூர் சீவல் பாக்கு வித்திட்டிருக்கறதை பார்த்திருக்கேன் என்றேன்.

அங்கே கடா மார்க் சாராயமும் ரொம்ப தெரிந்தவர்கள் என்றால் உள்ளே இருந்து எடுத்துக் கொடுப்பார்கள் என்று நண்பன் சாமிநாதன் சொல்லியிருக்கும் விஷயம் நினைவு வந்தது. அதை இவரிடம் சொல்லவேண்டாம் என்று தீர்மானம் செய்திருந்தேன்.

பேச்சு தொடர்ந்து கொண்டிருக்க, அவர் லுங்கியும் செருப்பும், மேலே யாரோ யாருக்கோ எப்போதோ போர்த்திக் களைந்த பொன்னாடையுமாக படி இறங்கிப் போனதைப் பார்த்தேன்.

பேண்ட் போட்டுப் போகச் சொல்லலாமா? லுங்கியை மட்டமாகப் பார்க்கும் ஊர் இது. வேண்டாம். பக்கத்தில் தானே, கூப்பிடு தூரத்தில் லாஜ்பத் நகர் கிழக்கு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்து ரயில் கேட்டுக்குத்தான் போகிறார். கடந்து போனாலும் ஈராஸ் தியேட்டர். அதுக்கு மேலே ஞாயிற்றுக்கிழமை ராத்திரி குளிரில் பார்க்க என்ன இருக்கிறது? மிஞ்சிப் போனால் பதினைந்து நிமிடத்தில் திரும்பி விடப் போகிறார்.

சுவர்க்கோழிகள் கிரீச்சிடும் பனிக்கால இரவில் நடந்து போனவர் திரும்பி வரவில்லை.

பதினைந்து நிமிடம் அரை மணியாகி, அது ஒரு மணி நேரமாக நீண்டு கழிந்து போனது. வழி தப்பிப் போய் எங்கேயாவது அலைந்து கொண்டிருக்கிறாரா?

நான் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் மார்க்கெட், மூல்சந்த், ஜங்க்புரா, ஹஸ்ரத் நிஜாமுதீன் என்று சுற்றுவட்டாரம் முழுக்கப் போய் வந்தேன். மிக நிதானமாக வண்டி ஓட்டிப் போய் தெருவில் நடந்து போகிற எல்லோரையும் நின்று நின்று பார்த்துப் போனேன். அவரைக் காணோம்.

ஒரு மணி நேரத்தில் வீடே வேறே மாதிரி ஆகிவிட்டது. சவுந்தரம்மா பெரிதாக அழ ஆரம்பித்து அடக்கிக் கொண்டு விசும்பினாள். வீட்டில் இருந்த மற்றப் பெண்கள் ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்து பாதியில் விசித்தழத் தொடங்கினார்கள். குழந்தைகள் நிறுத்தாமல் உச்சத்தில் குரலெடுத்தன.

கருப்புசாமி பிள்ளை எங்கள் சீப் மேனேஜரிடம் சொல்லி ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அவர் வீட்டு போன் நம்பர் எங்கள் யாருக்கும் தெரியாது. கீழே வாஸ்வானியிடம் உதவி கேட்கலாம் என்று போய் வாசல் அழைப்பு மணியை ஒலித்தேன். அது வேலை செய்யவில்லை. நடு ராத்திரியில் கதவைத் தட்ட மனம் இல்லாமல் திரும்பி வந்தேன்.

எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தெருவில் சுஷ்மா சர்மா என்ற, அரசியலில் ஈடுபடும் சுப்ரீம் கோர்ட் வக்கீலும் மாணவர் இயக்கமான வித்யார்த்தி பரிஷத்தில் முக்கிய ஆளுமையான அவருடைய கணவரும் இருப்பதாக ஜஸ்பீர் ஒரு குடிமும்முர ராத்திரியில் சொன்ன நினைவு. எமர்ஜென்சியில் அவர்கள் வீடு காலி செய்து கொண்டு வேறெங்கோ போய்விட்டதாகவும் கேட்ட நினைவு.

கிட்டத்தட்ட ராத்திரி ஒரு மணிக்கு வீட்டு வாசலில் நாலைந்து பேர் நின்று தமிழில் கூப்பிட்டார்கள்.

“போத்தி சாருங்களா?”

நான் விடுவிடுவென்று கீழே ஓட, சேலம் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் நாலுபேர் கூடவே மலங்க மலங்க முழித்தபடி சவுந்தரம்மா தங்கை மாப்பிள்ளை.

”மூல்சந்த் கிட்டே போலீஸ் வேனில் நாலைஞ்சு பேரோடு உக்காந்திருந்தார். அது அறுத்துக்க ஆளை கட்டாயப்படுத்தி கூட்டிப் போற கூட்டம். அதிலே எப்படி போனார்னு தெரியலே. இவர் தமிழ்லே வீட்டுக்கு போகணும் லாஜ்பத் நகர்னு புலம்பிட்டிருந்தாரா, நின்னு பார்த்தோம். நம்ம ஆளுன்னு புரிஞ்சுது”.

அவர் சேலத்துக்கார ஆள்தான் என்று போலீஸிடம் சொல்லி அவரை விடுவித்துக் கூட்டி வந்திருக்கிறார்கள் அவர்கள் இருப்பிடத்துக்கு. வீடு எங்கே என்று கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. நல்ல வேளை, லாஜ்பத் நகர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே, போத்தி … இப்படி சில துப்புகளை வைத்து கூட்டி வந்து விட்டார்கள்.

முழு நூறு ரூபாயை அவர்களுக்கு எடுத்து நீட்டி நன்றி சொல்லிவிட்டு தொலைந்து போய் வந்தவரோடு வீட்டுக்குள் நுழைந்தேன்.

ஆரத்தி எடுக்காத குறைதான். அப்புறம் வெகுநேரம் அவரிடம் ஏதோ எல்லோரும் கேட்க, தயங்கித் தயங்கி ஒரே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஏத்தி விட்டாங்க .. ஏத்தி விட்டாங்க.”.

நான் எப்போது உறங்கினேனோ தெரியாது.

காலையில் அவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவையான பால், சாப்பாடுக்கு வாஸ்வானி குடும்பத்தின் காலில் கும்பிட்டு விழாத குறையாக வேண்டப் போனேன். அதற்குத் தேவை இல்லாமல் அவர்களே மனமுவந்து உதவி செய்தார்கள். ஆபீஸுக்கு அரை மணி நேரம் தாமதமாகப் போனேன்.

அட்டெண்டன்ஸ் சீஃப் மேனேஜர் கேபினுக்குப் போய்விட்டது அதற்குள். மற்ற நாட்களில் தாமதமாக வருவது, எச்சரிக்கை செய்து இனி மறுபடி நேராமல் உறுதி எடுக்க வேண்டிய தவறு. எமர்ஜென்சியில் இதற்கே இன்க்ரிமெண்ட், ப்ரோமோஷன் எல்லாம் இல்லாமல் போகலாம். உடனடியாக ட்ரான்ஸ்பர் ஆகலாம். சீஃப் மேனேஜர் அறைக்கு விரைந்து, தாமதமாக வந்த காரணத்தை விவரமாகச் சொன்னேன்.

”இதுக்கா கஷ்டப் படறே?”

அகர்வால் சாப் துச்சமாகச் சிரித்தார்.

“நம்ம ஆபீஸ் ஸ்டாஃப் தானே அந்தப் பாட்டியம்மா? லாட்டரி பணத்தை நம்ம பேங்குலே, அட, உங்க ஊர்லே தாம்ப்பா, போடுவாங்களா?” கேட்டார் அவர்.

”வேறே எங்கே சார் போட? இதுக்கு ஸ்டாப் இண்ட்ரெஸ்ட் ஒரு பெர்செண்ட் அதிகமா வருமே”.

சீஃப் மேனேஜருக்கு வேண்டிய கரோல்பாக் விடுதிக்காரரிடம் சொல்லி உடனடியாக – காலைச் சாப்பாடு முடிந்த கையோடு – சவுந்திரம்மாள் குடும்பம் அங்கே குடிபெயர்ந்தது.

அடுத்த நாள் பரம்வீர் நேகி என்கிற இமாசல பிரதேசத்திலிருந்து குடியேறிய சீனியர் கிளார்க் ஒருவரை அனுப்பி லாட்டரி சீட்டை பஞ்சாப் அரசிடம் ஒப்படைத்து ரசீது வாங்கி வந்தானது. இரண்டு நாள் சென்று நேகி திரும்பப் போய் அந்தப் பணத்துக்கு ட்ராப்ட் வாங்கி வந்து டெலக்ராபிக் ட்ரான்ஸ்பரில் ஊரில் சவுந்தரம்மா கணக்குக்கு வரவு வைக்க அனுப்பியானது. லட்ச ரூபாய் இல்லை, எழுபதாயிரம் மட்டும். வரி போக அவ்வளவுதான்.

நேகி, ட்ராப்ட் சுணங்காமல் வர அங்கே இங்கே கொஞ்சம் சாய்பானி சாப்பிடக் கூப்பிட்டு உபசரித்த வகையில் செலவழித்த நாற்பது ரூபாயை நான் அவனுக்குக் கொடுத்தேன்.

வேண்டாம் என்றான் முதலில். இது என் வகை மனுஷர்களுக்கான செலவு. நான் போயிருக்க வேண்டியது. போனாலும் முடிந்திருக்குமோ தெரியாது. சீராக நடத்திக் கொடுத்ததற்கு அவனுக்கு நன்றி சொல்ல, அந்த மலையின் மைந்தன் ஊருக்கு வித்தியாசமாக, எமர்ஜென்சிக்கு நன்றி சொல்லச் சொன்னான் என்னை. முன்னொரு காலத்தில், லாட்டரி விழுந்த பரிசுச் சீட்டுக்குப் பணம் வாங்க நாலாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம்.

சவுந்தரம்மா பேங்க் ஊழியர் என்று கேள்விப்பட்டு எங்கள் பிராஞ்சில், கரோல்பாக்கில் இருக்கும் பெண் ஊழியர்கள் எல்லோரும் அந்தக் குடும்பத்தை அவ்வப்போது போய்ப் பார்த்து அடுத்த நாலு நாள் அன்போடு கவனித்துக்கொண்டார்கள். ஆண் ஊழியர்களும் அப்படியே.

“போத்தி தம்பி, நான் டில்லிக்கு வந்தபோது உன்னை மட்டும்தான் தெரியும், இப்போ எனக்கு இருபது தம்பி, தங்கச்சி, பேத்தியா இருக்குதுங்க. தெரிஞ்சிருந்த ஓலைக்கொட்டான் கருப்பட்டி இன்னும் கொஞ்சம் வாங்கியாந்திருப்பேன். நம்ம புள்ளைங்க ஆசை ஆசையா திங்கும்” .

சவுந்திரம்மாள் உணர்ச்சிவசப்பட்டாள். பணிக்கர் ட்ராவல்ஸில் தம்பி தங்கச்சிகள் ஏற்பாடு செய்து கொடுக்க, சவுந்தரம்மா குடும்பம் நானே இன்னும் பார்க்காத ஹரித்வார், ரிஷிகேஷ், மதுரா, ஆக்ரா என்று அட்டகாசமாக டூர் அடித்து வந்து ஊர் திரும்பியது.

தங்கச்சி மாப்பிள்ளை மட்டும் அடுத்து நாலு மாதம் தனியாக எங்கும் போகப் பயந்து போய் இருந்ததாக போஸ்ட் கார்டில் தவில் கருப்புசாமி பிள்ளை தாக்கல் தெரிவித்தார்.

கொல்லங்குடி காளிக்கு பிரார்த்தனை செய்து அவருக்கு சொஸ்தமானதாகவும் அதற்காக ஆடு வெட்டியதாகவும் எழுதியிருந்தார் அவர். எழுபதாயிரம் ரூபாயை என்ன செய்தார்கள்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன