எமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா

வரவிருக்கும் என் நாவல் ‘1975’-இல் இருந்து

சிந்துபாத் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. பத்திரிகையில் தீபாவளி, பொங்கல், சாவு, பிறப்பு என்று சகலமானதுக்கும் பாட்டு எழுதும் கவிஞர்கள் இருபதம்சத் திட்டத்தையும், இந்திரா, சஞ்சய், பக்ருதீன் அகமதை, வினோபா பாவேயை, இன்னும் எமர்ஜென்சி ஆதரவாளர்களையும் குளிரக் குளிர வாழ்த்தியிருந்தார்கள். ஆளும் கட்சித் தலைவர் தேவகாந்த் பரூவாவைக்கூட ஒரு கவிஞர் செல்லமாக பரூவா நல்ல படூவா என்று பாராட்டியிருந்தார். பரவலாகப் படிக்கப்படும் புதுக் கவிதைகள் இனியவளே, மனக் குமைச்சல், உன் கண்களால் கைதாக்கி, அவசம், ஆயாசம், ஓ காதலனே என்று போய்க் கொண்டிருந்தன. சினிமா நட்சத்திரம் எழுதும் கவிதை என்று புருடா விட்டு பத்திரிகை ஆபீசிலேயே ஆள் வைத்து எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கச் சிறுகதை, அரைப் பக்கச் சின்னஞ்சிறுகதை, சினிமாக் கதை, சிரிப்பு வராத ஜோக்குகள், பின்- அப் படம் என்று கலந்து கட்டியாக இருந்த பத்திரிகை அது. ஆபீஸில் டெஸ்பாட்ச் கிளார்க் கலையரசி ‘வேதனை எப்போ தீரும்’ என்று எட்டு வரியில் ஒரு புதுக்கவிதை – புலம்பல் கவிதை எழுதி அனுப்ப உடனே பிரசுரமாகி வந்தது மட்டுமில்லாமல் ஆசிரியரே பேங்குக்கு வரும்போது ஒரு பிரதி கொண்டு வந்து கலையரசிக்குக் கொடுத்து விட்டுப் போனார்.

இரண்டு இதழ் சிந்துபாத் வந்த பிறகு அடுத்த திங்கள்கிழமை நாதன்ஸ் கஃபே பக்கத்து நாராயணன் கடையில் கேட்க, இன்னும் வரல்லே சார். அதே கதை தான் அடுத்த நாளும். பத்திரிகைக்கு ஃபோன் செய்து கேட்டேன். பத்திரிகை சென்சாரில் ஒரு கட்டுரையை கிளியர் செய்ய மாட்டேன் என்று பிடித்து வைத்திருக்கிறார்களாம். மலையாள நடிகர் ஒருத்தர் பேட்டியில் இந்திராவைப் பெயர் சொல்லாமல் விமர்சனம் செய்திருக்கிறார் என்று சென்சார் சொல்கிறார்களாம். அதை விட்டுட்டு மற்றதை க்ளியர் பண்ணச் சொல்லியிருக்கேன் என்றார் எடிட்டர் அடுத்து வந்தபோது.

”இங்கே சென்சார்ஷிப் அவ்வளவு கடுமை இல்லே. வடக்கிலே ஒரு வரிகூட அவங்க பாஸ் பண்ணாம அச்சுப் போடக்கூடாதாம்”, என்றார் கணேசன் சாப்பாட்டு மேஜையில்.

”இங்கே தைரியமா எதிர்க்கிறாங்க. சோ மாதிரி இருக்கணும். பாருங்க, அட்டை முழுக்க கருப்பு அடிச்சு துக்ளக் கொண்டு வந்துட்டார். நூறு பக்கம் எழுதினா கூட இதுக்கு மேலே பவர்ஃபுல்லாக எமர்ஜென்சியை எதிர்த்து அழுத்தமாக எழுத முடியாது”.

நான் சொல்ல, எதுக்கு நமக்கு அரசியல் என்று யார்யாரோ அவசரமாகக் கையைக் கழுவ எழுந்து போனார்கள். கணேசன் மட்டும் கூட இருந்தார்.

அடுத்த நாள் தில்லி ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு மின்சாரம், தண்ணீர் தராமல் நிறுத்தி எமர்ஜென்சி பற்றி ஆதரவாக எழுதச் சொல்லி நிர்பந்திக்கும் செய்தி பிபிசி மூலம் கேள்விப் பட்டேன். குடும்பக் கட்டுபாட்டுக்குக் கட்டாயப்படுத்திக் கூட்டிப் போவது பற்றி சூசகமாகக் குறிப்பிட்டிருந்ததாம் அந்தப் பத்திரிகை. வேறு எந்தப் பத்திரிகையிலும் அது வரவில்லை.

சிந்துபாத் இருவார இதழ், ‘நாட்டு நலனைக் கருதி நெருக்கடி காலத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றி மக்களுக்கு சினிமாவும், வானொலியும், பத்திரிகைகளும் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். இன்னும் நூறு வருடம் நெருக்கடி நிலைமை நிலவி நாடு வல்லரசாக வேண்டும்’ என்று மொண்ணையாக ஒரு தலையங்கம் எழுதியது.

அடுத்த இதழில் கவிஞர்கள் அன்னைக்கு ஒரு நூறு, அவர்தம் பிள்ளைக்கும் ஒருநூறு என்று கணக்குப் போட்டு அளந்து கவிதை வடித்திருந்தார்கள். பத்திரிகை சென்சார் கொட்டாவி விட்டுக்கொண்டே க்ளியர் பண்ணியிருப்பார்கள். .

சிந்துபாத் எடிட்டர், நம் தொழிற்சங்க மாஜி தலைவர் சார் தொலைபேசி என்னைக் கூப்பிட்டார்.

“சார், உங்க ப்ரண்ட் ஒரு ப்ரூப் ரீடர் இருக்கார்னு சொன்னீங்களே. கொஞ்சம் வரச் சொல்லுங்க. எங்க ஆளுங்க செய்யற எழுத்துப் பிழை எங்களை சென்சார் போர்ட் முன்னாடி மண்டி போட வச்சிடும் போல இருக்கு” என்றார். இப்போ எப்படி போறீங்க என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன்.

”வீடு தோறும் மரம் வளர்ப்போம்னு ஐந்து அம்சத் திட்ட பபிள் போட்டு காமிக் ஸ்ட்ரிப் போட்டதுலே மறம்னு பெரிய ற வந்துடுச்சு. சென்சார்லே அதிகாரி கூடவே ஒரு காது கேட்காத ரிடையர்ட் தமிழ் வித்வானையும் உக்கார வச்சிருந்தாங்க. மறம்னா வன்முறை. வீடுவீடா வன்முறை சொல்லித் தரப் போகறீங்களான்னு அவர் கேட்டுக் கொடுத்த காசுக்கு கூவி அக்கப்போர் பண்ணி, போன வாரம் பத்திரிகை தொடருமான்னே சந்தேகமாப் போச்சு. நல்ல வேளை, ஓவியர் தெலுங்கர், தமிழ் ஒரு எழுத்து தப்பாயிடுச்சுன்னு சமாளிச்சேன். இனி அது முடியாது போல இருக்கு. ப்ரூப் ரீடர் அவசியம் வேணும்” என்றார் அவர்.

எமர்ஜென்சி என்ற தும்பை விட்டு எழுத்துப் பிழை என்ற வாலைப் பிடிக்கும், சகலமானதற்கும் சர்க்காரோடு ஒத்துப்போகும் ரிடையர்ட் அறிஞர்களின் எமர்ஜென்சி வருமானம் என்னவாக இருக்கும்?

சனிக்கிழ்மை சாயந்திரம். ஞாயிற்றுக்கிழமை அடுத்து வரும் வழக்கமான மகிழ்ச்சியைக் கொண்டாட விஸ்வநாதனின் அறையில் நிறைய பியர் சாப்பிட்டோம். அவன் கவிழ்ந்து படுத்துத் தூங்கத் தொடங்கி விட்டான்.

“ஏதாவது பரோட்டா, பிரியாணின்னு வாங்கிட்டு வாடா” என்று சொல்லி விட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டான் அவன்.

நாங்கள் திருவல்லிக்கேணி போய் உலகில் இது தவிர வேறே எதைப் பற்றியும் நினைக்க வேண்டாம் என்பது போல் சோற்றை விழுங்கினோம்.

மற்றவர்களை அனுப்பி வைத்துவிட்டு, ஜம்ஜம் ஸ்டாலில் பரோட்டா வாங்கிக்கொண்டு நான் பஸ் பிடிக்க நடந்தேன். பக்கத்தில் தான் குருநாதனின் மாடிக் குடியிருப்பு. அங்கே போனால் யாருமில்லை.

உடனடியாக சிந்துபாத் பத்திரிகை அலுவலகம் போகச் சொல்லி குருநாதனுக்கு ஒரு காகிதத்தில் குறிப்பு எழுதி கதவு இடுக்கு வழியாக உள்ளே போட்டுவிட்டு வந்தேன். அடுத்த வாரம் அவர் சிந்துபாத் பத்திரிகையில் சேர்ந்து விட்ட தகவல் கிடைத்தது.

அரசியல் சட்ட திருத்தம் 38, 39,40,41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்றியமைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் மக்களாட்சியின் சாதனை என்று வானொலி சொல்ல, கவிஞர்கள் சளைக்காமல் வாழ்த்துக் கவிதை எழுதித்தர, சேர்ந்த இசை என்று ஆகாசவாணியில் நடுப்பகலில் கூட்டமாகப் பாடப்பட்டது.

எதிர்க்கட்சிக்காரர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதானதையோ, தலைமறைவானதையோ மறந்தும் வானொலி சொல்லவில்லை. பத்திரிகைகளில் அந்த சாதாரண செய்தி ஏதும் வராமல் இட்லிக்கு அரைத்த மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், ஜலதோஷத்துக்கு பாட்டி வைத்திய மருந்து எது என்று உபயோகமான விஷயங்கள் பிரசுரிக்கப்பட்டு வந்தன.

சிந்துபாத், ஊர்ப்பேச்சு இந்தப் பத்திரிகைகளில் பிரமுகர்கள் தொடர்ந்து பாலாறு தேனாறு பாரதத் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுவதைக் களிப்போடு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் சினிமா, எமர்ஜென்சி பக்கமே போகாமல் ’ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்று அபூர்வ ராகங்களை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தது. ”அத்தை வெந்துடுவாங்க” என்று புதிதாக ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர் சினிமா ‘இதயக்கனி’யில் ஹீரோயின் ராதா சலூஜா பேசிய தமிழை ரசித்து கொஞ்சம் ஏ-த்தனமாக பேச்சு நீண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன