பாம்பு மொழி

 

Kungumam Column அற்ப விஷயம் -13
அரச கட்டளை பிறப்பித்துக் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக் கட்டாயப்படுத்தாமல் இருந்தால், எந்த மொழியையும் கொஞ்சம்போல தெரிந்து கொள்ளலாம் தான். அதில் ஒரு சுவாரசியம் உண்டு. இந்தக் ‘கொஞ்சம் போல்’ விருப்பத்தை நிறைவேற்ற எத்தனை வழிகள். க்ராஷ் கோர்ஸ் என்ற அவசர வகுப்பு இதில் ஒன்று. உலகத்தில் பேசப்படும் முக்காலே மூணுவீசம் மொழிகளைப் படிக்க நல்ல மனசுக்காரர்களால் இந்த வகுப்புகள் அங்கங்கே நடத்தப்பட்டு, அவர்கள் மாதாந்திர வருமானத்தைக் கணிசமாகக் கூட்ட ஒத்தாசை செய்கின்றன.

நாலு வருஷம் சீனாவில் போய்க் குப்பை கொட்டும்படி ஒரு இளம் பொறியாளருக்குக் கம்பெனி உத்தரவு போட்டது. பொட்டி தட்டுகிற உத்தியோகத்தில் இருக்கப்பட்டவர் அந்த இளைஞர். அதான், மாஞ்சு மாஞ்சு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் எழுதித் தள்ளற வேலை. உள்ளூர் முழுக்க இரண்டு விஷயங்களைத் தேடியலைந்தார் அவர். முதலாவது சீனத் தலைநகர் பீஜிங்கில் எங்கே இட்லி-சாம்பார் கிடைக்கும் என்ற உயிர் வாழத் தேவையான விடயம். அடுத்தது இங்கே சீனமொழி சொல்லிக் கொடுப்பது யார் யார் என்ற தகவல். தேடல்கள் பூர்த்தியாகி அவர் சைனாவுக்குப் பறந்தபோது, சட்டைப் பையில் நாலைந்து சீன இட்லிக்கடை விலாசம். அப்புறம் அவர் கையைப் பிடித்தபடி மினிமம் மூக்கு முழியும் மேக்சிமம் அழகுமாக ஒரு சீன மங்கையும் உண்டு.

‘இந்தப் பொண்ணுதான் சீன மொழி கற்றுக் கொடுக்கறதிலே கில்லாடின்னு சொன்னாங்க. போய்ப் பார்க்க வேறே ஏதோ ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அவசர அவசரமா பதிவுத் திருமணம். சைனீஸ் மொழி சாவகாசமாகக் கத்துக்கலாம் இனிமேல்’. மன நிறைவோடு புது மனைவி சகிதம் புறப்பட்டுப்போன அவர் ஒரு வருடம் கழித்து விடுமுறையில் வந்திருந்தபோது அந்தம்மா நல்லாத் தமிழ் பேசினார். அருமையாக இட்லி சாம்பாரும் செய்யத் தெரியும் என்றார். நம்ம ஆள், வீட்டுக்காரம்மா படபடவென்று சீன மொழியில் அவரிடம் பேசும்போது திரும்பத் திரும்ப ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லியபடி இருந்தார். சரி சரி என்று அர்த்தமாம். கல்யாணமானவர்களுக்கு இந்த ஒரு வார்த்தை தெரிந்தாலே போதும். நாடு, இனம், மொழி கடந்து நிம்மதியாகக் காலத்தை ஓட்டிவிடலாம்.

கல்யாணம் செய்துகொண்டு புது மொழி கற்க முடியாதவர்கள் உண்டு. ஏற்கனவே கல்யாணம் ஆன இந்த பாவப்பட்ட ஆத்மாக்களுக்காகவே ‘முப்பது நாளில் ஜெர்மன் மொழி கற்றுக் கொள்ளுங்கள்’ போன்ற புத்தகங்கள் ரயில்வே ஸ்டேஷன் தோறும் கிடைக்கும். ‘தினசரி உரையாடலில் பயன்படுத்தும் சொற்றொடர்கள் மூலம் புது மொழியை எளிதாகக் கற்கலாம்’ என்று பின் அட்டையில் அச்சடித்து ஆசைகாட்டும் இதில் ஒன்றை சமீபத்தில் புரட்டிப் பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.

வரிசையாக வாக்கியங்கள். உங்க பெயர் என்ன? வெளியே மழை அடிக்குது. நான் குடை வச்சிருக்கேன். உங்க வீட்டுலே சுவர்க் கடியாரம் இருக்கா? ரேணிகுண்டாவுக்கு எந்த ரயில் போகும்? எனக்கு இனிப்பு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். நீங்க காலையிலே உடல் பயிற்சி செய்வீங்களா? நாளைக்கு என்ன கிழமை? சாப்பிட்ட உடனே தூங்கக் கூடாது. பசுமாடு பால் தரும். போய் வரேன்.

எந்த நாட்டில் யாரோடு இதைப் பேசப் போகிறேன்? இந்த வாக்கிய வரிசைக்கு லாஜிக் என்ன? எதிரிலே இருக்கிறவரின் பெயரை விசாரித்ததும் அவர் பதிலைக் காதில் வாங்க வேணாமா? திடீரென அவரிடம் ஏன் வெளியே மழை பெய்யறதுன்னு சொல்லணும்? அவரும் பார்த்திருப்பாரே. அவங்க வீட்டில் சுவர்க் கடியாரம் இருந்தா என்ன, இல்லாட்ட என்ன? அதுக்கும் ரேணிகுண்டா ரயிலுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஸ்வீட் பிடிச்சாலோ ஜலதோஷம் பிடிச்சாலோ அவருக்கு என்ன போச்சு? நான் இனிப்பு சாப்பிட்டு அவர் எக்சர்சைஸ் செய்தால் எனக்கு எடை போடாதா? இதுக்கெல்லாம் நடுவே பசுமாடு எங்கே இருந்து வந்தது?

அரசியல், மதத் தலைவர் என்றால் மொழி ஒரு பிரச்சனையே இல்லை. தேவைப்படும் போது மொழிபெயர்ப்பாளர்கள் கூடவே இருப்பதால் வார்த்தைக்கு வார்த்தை அடுத்தவருக்கு அர்த்தமாகும்படி சொல்லலாம். எதிராளி சொல்வது புரிந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி புன்னகைக்கலாம். இதிலே நம்ம பக்கத்து மதத் தலைவர் ஒருத்தர் விசேஷமானவர். தமிழ் நல்லாத் தெரிந்தாலும் வாரத்தில் ஒரு நாள் ‘நீச பாஷை’ பேச மாட்டேன்னு விரதம். அவரிடம் ‘பக்கத்துலே பாம்பு போகுது’ என்று சொல்ல நினைத்தாலும் அதைத் ‘தேவ பாடை’யில் மாற்றி மொழிபெயர்ப்பாளர் மூலம் தான் சொல்ல வேணுமாம். கேட்டதும் அவர் ‘ஐயோ’ என்று தமிழில் சொல்லிக் காலை நகர்த்துவாரா அல்லது வேற்று மொழியில் பதறுவாரா? உலகத்தில் இப்பவும் எப்பவும் யாருமே பேசாத அந்த மொழியில் காவியங்கள் நிறைய உண்டு. பாம்பு கடிக்காமல் இருந்தால் படிக்கலாம். இதைக் கொஞ்சம் மொழிபெயர்த்துச் சொல்லுங்க சார் அவரிடம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன