மின்சாரக் கண்ணா

 

கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி (29)

புதுமைப் பெண்ணுக்கு வெகு முன்னாடியே தோன்றியது ஈல் மீன். தொட்டால் எக்கச்சக்கமாக ஷாக் அடிக்கும். கொஞ்ச நஞ்சமில்லை. அறுநூறு வோல்ட். நெருங்கி வந்தவர்களை உடனடியாக வைகுந்த பதவி அடைய வைக்கும் ஹை வோல்டேஜ் மின்சாரத்தை ஈலுக்குத் தருவது இயற்கை அன்னை. ஈல் மீனுடைய உடலின் மூல ஆதாரமான நுண்ணிய செல்களில் உற்பத்தியாவது இந்த மீன்சாரம்.

எலக்ட்ரோசைட் என்ற இப்படியான சிறப்பு செல்கள் ஆயிரக் கணக்கில் ஈல் மீன் உடலில் உண்டு. தான் போகும் பாதையில் ஆபத்து என்று உணர்ந்ததுமே, ரசாயன சமிக்ஞை ஒன்றை ஈல் மீனின் உடம்பு பிறப்பிக்கும். உடனே ஒருசில எலக்ட்ரோசைட் செல்களின் சவ்வுப் பரப்பில் அமைந்த நுணுக்கமான வாய்க்கால்கள் திறக்கப்படும். சோடியம் அணுத் துகள்கள் வெளியே பயணமாக, பொட்டாசியம் துகள்கள் வாய்க்கால் வழி பாய்ந்து உள்ளே வரும். இந்த எதிரெதிர் திசைப் பயணங்களால் உருவாவதே மின்சக்தி. இப்படிப் பிறக்கும் மின்சாரம் அடுத்தடுத்து அமைந்த மற்ற எலக்ட்ரோசைட் செல்களில் இன்னும் அதிகம் வாய்க்கால்களைத் திறக்க, மின்சக்தியின் அளவும் அழுத்தமும் அதிகரிக்கும்.

ஈல் மீனின் எலக்ட்ரோசைட் செல்களில் குறைந்தது ஏழு விதமான வாய்க்கால்கள் உண்டு. இவை மின் உற்பத்தியை சக்தி வாய்ந்ததாக, நீண்ட நேரம் நிலைத்திருக்கும்படி உருவாக்க உதவுவதால், பவர் கட் போன்ற பிரச்சனைக்கே இடமில்லை. மீனுக்கு மின்சாரம் வழங்கும் அற்புதமான எலக்ட்ரோசைட்களை ஆராய்ந்த அறிவியல் வல்லுனர்களின் மூளையில் பல்ப் போட்டது போல் ஒரு யோசனை. மனித உடம்பில் இப்படியான செல்களை உருவாக்கினால் என்ன? வீட்டில் கரண்ட் போனால் உடனே விரல் நுனியில் விளக்கு எரிய வைக்கலாம் என்ற ஐடியா எல்லாம் இல்லை. உடலுக்குள் பதித்த சின்னஞ்சிறு நானோ கருவிகளை சீராக இயக்க செல் மின்சாரம் உதவும் என்பதே முக்கிய நோக்கம்.

நானோ கருவிகள் உடல் உறுப்புகளின் பணியை நேர்த்தியாகச் செய்யக் கூடியவை. உதாரணமாக, நானோ விழித்திரை (nano retina). நம்முடைய கண் எப்படிப் பார்க்கிறது? நம் எதிரில் தட்டுப்படும் எந்த உருவத்திலிருந்தும் சிதறும் ஒளியானது நம் விழிப்படலத்தில் புகுந்து விழித்திரையில் பிம்பமாகப் படிகிறது. விழித்திரையில் அமைந்திருப்பவை ராடுகள் மற்றும் கோன்கள் என்ற லட்சக்கணக்கான செல்கள். இந்த இரண்டு வகை செல்கள் ஏற்று வாங்கிய பிம்பம், அதே விழித்திரையில் உள்ள காங்க்லியன் செல்கள் மூலம் தகவலாக உருமாறுகிறது. பார்வை நரம்புகள் மூலம் அந்தத் தகவல் மூளைக்குப் போய்ச் சேர்கிறது. அதை அலசி ஆராய்ந்த மூளை, நம் கண் முன்னால் பார்ப்பது திருப்பதிக் குடையா அல்லது த்ரிஷாவா என்று உடனே புரிய வைக்கிறது.

வயோதிகத்தாலோ, கண் நோய்கள் காரணமாகவோ விழித்திரை பாதிக்கப்படும் போது, செயற்கை விழித்திரையைப் பொருத்த அறிவியலும் தொழில்நுட்பமும் வழிசெய்திருக்கின்றன. இந்தத் திரை சிலிக்கன் கொண்டு உருவாக்கிய ஒரு மைக்ரோ சில்லுதான். இதில் உள்ள கிட்டத்தட்ட 3500 செல்கள் எதிரில் உள்ள பொருட்களில் இருந்து சிதறும் ஒளியை வாங்கித் தகவலாக்கும் பணியைச் சிறப்பாகச் செய்யக் கூடியவை. பாதிக்கப்பட்ட விழியின் வெண்பரப்பில் ஊசிமுனை அளவுக்குக் கீறி அறுவை சிகிச்சை நடக்கும். பழுதடைந்த விழித்திரையோடு இசைவாக இருக்கும்படி நெருக்கமாக இந்த மைக்ரோசிப் சிலிக்கன் திரை கண்ணில் பொருத்தப்படும்போது பார்வை திரும்பக் கிடைக்கும்.

எல்லா மைக்ரோ சில்லையும் போல், இந்த சிலிக்கன் விழித்திரை இயங்கவும் கொஞ்சம் போல் மின்சாரம் தேவை. தூங்காத நேரம் எல்லாம் பார்க்க வேண்டியிருப்பதால் செயற்கை விழித்திரைக்கு எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வேண்டியிருக்கும். கண்ணுக்குள் கரண்ட் வைப்பது எப்படி?

ஏற்கனவே பார்த்த ஈல் மீன் பற்றிய ஆராய்ச்சியின் பயனாக அண்மையில் செயற்கை எலக்ட்ரோசைட் செல்லை உருவாக்கியிருக்கிறார்கள். மீனின் உடலில் உள்ள இயற்கை செல்லை விட 40 சதவிகிதம் அதிகம் மின்சக்தி உற்பத்தி செய்யக்கூடிய விதத்தில் இதில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படியான செல்களை வரிசையாக அடுக்கிய தொகுதி பயோ பேட்டரி (bio battery) எனப்படும். நாலு சதுர மில்லிமீட்டருக்கு மேல் இடம் தேவைப்படாத ஒரு பயோ பாட்டரி முன்னூறு மைக்ரோவாட் மின்சாரத்தை தொடர்ந்து வழங்கக் கூடியது. நானோ கருவியை இயக்கத் தேவையான மின்சக்தி இவ்வளவே.

ஆற்காட்டார் தயவின்றி ஆயுசு முழுவதும் மின்சாரம் கிடைக்க, சிலிக்கன் விழித்திரையோடு பயோ பேட்டரியையும் உடம்பில் பொருத்தி விட்டால் போதும். தீர்க்க தரிசனம் வாய்ந்த கூட்டணி வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்து விடும்.

(கடந்த வாரம் கல்கியில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன