புது நாவல் : 1975 : உங்களுக்கு 20 அம்சம். எனக்கு மூணு தான். பிதா,சுதன்,பரிசுத்த ஆவி

இடைக்காட்டத்தூர் சர்ச் ரோஜாப்பூ வாசனையில் அமிழ்ந்திருந்தது. சாமந்திப் பூ தூவிய பாதை சர்ச்சுக்குள் பிரார்த்தனை மேடை வரை அழகாகக் கோலம் போட்டு வைத்திருந்தார்கள். பாருக்குட்டி வேலை அது என்று சொல்லாமலேயே புரிந்துகொண்டோம். அவளுக்கும் அவள் அச்சனுக்கும் நோட்டீஸ் வைக்க காந்தி வாத்தியார் மறக்கவில்லை தான்.

சர்ச் நிறைந்து இருந்தது. மணவாளனின் நண்பர்கள் என்ற தகுதியில் எங்கள் குழுவுக்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு உட்கார சர்ச்க்குள் பிரார்த்தனைக் கூடத்தை ஒட்டி, நடைபாதையோடு சேர்த்து இடம் ஏற்படுத்தி இருந்தார்கள். அங்கே நாங்கள் எல்லோரும் அமர்ந்த பிறகு மீதி இடம் ஆகக் கொஞ்சமாகத் தோன்றியது. வயதான பெண்களும், குழந்தைகளும் நின்று கொண்டிருக்க நாங்கள் அங்கே உட்கார வேண்டாம் என்று நாற்காலிகளை வெளியே கொண்டு வந்தோம். நின்று பேசியபடி உள்ளே கூட்டுப் பிரார்த்தனையும் விவாகமும் நடைபெறக் காத்திருந்தபோது, பாதிரியாரும், உதவியாளர்களும் சைக்கிள்களில் வந்து இறங்கினார்கள்.

“பாதிரியார்கள் ஸ்கூட்டர் வாங்க பேங்குலே லோன் எதுவும் தர மாட்டீங்களா?”

இன்னாசி பாதிரியார் மேனேஜரைக் கேட்டார்.

“இருபது அம்சத் திட்டத்திலே வர்ற மாதிரி நீங்க தொழில் செய்யலியே ஃபாதர்” என்றார் போட்டி பேங்க் மேனேஜர். இர்ண்டு மேனேஜர்களும் மொய்ப் பணத்தை டிபாசிட் போட வாங்க என்று இல்லாமல் நட்புக்காக கௌரவ பாத்திரங்களாக அந்த எளிய திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.

“உங்களுக்கு இருபது, எனக்கு மூணு தான்” என்றார் இன்னாசி பாதிரியார். “ஆமா, பிதா, சுதன், பரிசுத்த ஆவி, புனிதமான இந்த மூவரும் நிக்கவும், நடக்கவும், ஓடவும், ஓடி நிலைக்கவும் எப்பவும் போல எல்லோருக்கும் கிருபை செய்யட்டும்”. சின்னஞ்சிறு பிரார்த்தனையை எங்கள் அனைவருக்காகவும் காற்றில் ஏற்றி அனுப்பியபடி உள்ளே போனார் அவர்.

கீதம் என்று அறிவிக்கப்பட, நாங்களும் உள்ளே போனோம். எல்லோரோடும் சேர்ந்து மண்டியிட்டு இருக்க, பைபிளைத் திறந்து பாதிரியார் படித்தார் – “பாடம் 21 – நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்”.

பிள்ளைகள் “என் தேவனே உம்மோடு” பாடினார்கள். அடுத்து கல்யாணம் அறிவிப்பு. காந்தியும் மணப்பெண்ணும் நடந்து வந்து பாதிரியார் முன் மண்டியிட, இருவரிடமும் கல்யாணத்திற்கு சம்மதம் தானா என்று கேள்வியும் ஆம் என்று பதிலும். மோதிரம் மாற்று. கல்யாணம் நிறைவு.

சர்ச் வளாகத்துக்குள் கார் கடந்து வந்து நிற்கிற சத்தம். என்னைத் தவிர எல்லோரும் அங்கே பார்த்தார்கள்.

கலெக்டர் மோகனகிருஷ்ணன் ஒரு பெரிய பூச்செண்டோடு சர்ச்சுக்குள் வந்தார். செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு வரவேண்டுமா, செருப்புக் காலோடு நுழையலாமா என்று ஒரு தயக்கம் ஒரு வினாடி. அவர் செருப்புகளை வெளியே விட்டு விட்டு வந்ததை மகிழ்ச்சியோடு பார்த்தேன். நானும் வெளியே தான் வைத்திருந்தேன். என் வழிபாடும் அவற்றைக் களையத்தான் சொன்னது. மற்றவர்கள் காலணியோடு கடவுளிடம் போகலாம். எனக்கு அது விதிக்கப் பட்டதில்லை. கலெக்டருக்கும்.

ஒவ்வொருத்தராக தம்பதிகளை வாழ்த்தினோம். கலெட்கரும் வரிசைக் கடைசியில் நின்று வாழ்த்தும்போது காந்தி வாத்தியார் காதில் ஏதோ சொன்னார். நூறு வாட்ஸ் பல்ப் போட்ட மாதிரி உடனே காந்தி வாத்தியார் முகம் மலர்ந்தது.

சர்ச் வளாகத்திலேயே சாப்பாடு சமைத்துப் பரிமாற வகை செய்திருந்தார்கள். ஒரு பொங்கல், கேசரி, வடை. சின்னக் குழந்தைகள் இன்னும் ஒரு கை கேசரி சாப்பிட்ட இனிப்பை முகத்தில் காட்டி இருக்க, நாங்கள் ஓரமாக நின்றபடி சாப்பிட்டு முடித்தோம். கலெக்டரும் ஒரு ஸ்பூன் பொங்கலும் ஒரு விள்ளல் வடையும் சாப்பிட்டு விடை பெற்றுப் போகும்போது என்னைப் பார்த்துச் சிரித்தார். சரிதானேடா? அவர் தன்னையும் அறியாமல் ஒருமைக்கு மாற நானும் மனம் திறந்து சிரித்தேன். ஊருக்குத் தானே கலெக்டர் அவன், எனக்குக் கல்லூரி சிநேகிதன் தானே.

சார், கேசரி சாப்பிடுங்க, கலர் சொல்லட்டா. இப்படி அடுத்து வந்த உபசரிப்புகளைப் புன்சிரிப்போடு கடந்தேன். “உங்க சிநேகிதர் கிட்டே சொல்லி, சர்ச் இடிஞ்சு கிடக்கிறதை கட்ட சர்க்கார் உதவி செய்யச் சொல்லுங்க. கர்த்தர் ஆசீர்வாதம் அவருக்கும் உங்களுக்கும் எப்பவும் உண்டு”. பாதிரியார் சொன்னதற்கு மட்டும் தட்டமுடியாமல் சரி என்றேன். மோகனகிருஷ்ணன் அங்கமாலியிடம் கட்டாயம் சொல்ல வேண்டும்

(நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’-இல் இருந்து ஒரு சிறு பகுதி இது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன