புதிய சிறுகதை : இசக்கி

இசக்கி என்பது ஒரு பெண்பெயர். இருபத்தைந்து வயதான, நல்ல உயரமான, களையான, கருத்துத் திரண்ட அந்தப் பெண் எங்கள் கம்ப்யூட்டர் கம்பெனி நான்காம் மாடியில் தனியார் நடத்தும் கேண்டீனில் காப்பி கலந்து தருகிறாள். ஆம்லெட் போடுகிறாள். தோசை சுடுகிறாள். போன வருடம் மிரள மிரள விழித்துக் கொண்டு வேலைக்கு வந்தவள் இசக்கி.

‘காப்பி கலக்கத் தெரியாதா?’ என்று சுதந்திரநாதன் வீராஸ் கேட்டார் அவளை. ‘காப்பி தெரியும், மிஷின் தான் தெரியாது’ என்றாள் இசக்கி. அது சமையலுக்கு வைத்திருந்த எலக்ட்ரிக் ஸ்டவ் சம்பந்தப்பட்ட அனுபவமின்மை. ’இது கூடத் தெரியாமல் என்ன செய்யப் போறே இங்கே?’ என்று அவளை இன்னும் பயமுறுத்திய கேண்டீன் சமையல்காரர் வீராஸ் பாண்டிச்சேரியில் அவருடைய கல்லறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். பழுப்பும் நீலமும் பச்சை, மஞ்சளும், சிவப்புமாகப் பூக்கும் செடிகள் மண்டிய கல்லறை அது.

இது வீராஸ் பற்றி இல்லை. இசக்கி பற்றி. அவள் ஒரே மாதத்தில் இண்டக்ஷன் ஸ்டவ்வை உபயோகிக்க மட்டுமில்லை, மைக்ரோ அவன், ப்ளெண்டர், முட்டை அடிக்கும் கருவி என்று சகலமான எலக்ட்ரானிக் சமையலறை உபகரணங்களையும் கையாளத் திறமை பெற்றாள். கையாள மட்டுமில்லை, அவ்வப்போது ஏதாவது மக்கர் பண்ணினால், பிரித்துப் போட்டு சர்க்யூட் படத்தை வைத்துக் கொண்டு குடைந்து சரியாக்கவும் அவளுக்குத் திறமை வந்து சேர்ந்தது. கேண்டீனில் பில் போட வைத்திருந்த பழைய மிஷினைக் கூட அவள் பிரித்துப் போட்டு மாட்டி, வேகமாகச் செயல்பட வைத்து விட்டாள்.

இசக்கி கேண்டீன் ஸ்டார் ஆகி விட்டாள். இது சகல தரப்பிலும் கிட்டிய அங்கீகாரத்தோடு கூட நடந்த ஒன்று. வருடா வருடம் ஆபீஸ் தினம் கொண்டாடும்போது, வால் நட்சத்திர ப்ரொகிராமர், குழுத் தலைமை அவநம்பிக்கை நட்சத்திரம், இடிச்சபுளி ப்ராஜக்ட் மேனேஜர், மாம்பலம் கொசு டெஸ்டர் இப்படி அந்த ஆண்டுக்கான பிரபலங்கள் ஆபீஸில் அனைவரும் ரகசிய வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுக்கு ஒரு காபி மக் பரிசு வழங்குவது, பெறுவது வாடிக்கை. இந்த வருடம் கேண்டீன் ஸ்ரீ என்று புதுப் பட்டத்தையும் அறிமுகப்படுத்தி, மிகப் பெரும் மெஜாரிட்டியில் இசக்கியைத் தேர்ந்தெடுத்தார்கள். காபியிலே பிறந்து காபியிலே நீந்தி வளர்ந்து காபியையே சுவாசிக்கிறாள் அவள் என்பதால் காபிக் கோப்பை பரிசு தராமல், செண்டர் ஹெட் மாபெருந்தலைவர் வரதா ஹாங்காங்கில் சல்லிசு விலையில் வாங்கிய கைக்கடக்கமான வீடியோ ப்ளேயர் பரிசாக வழங்கப்பட்டது. இசக்கி பெருமை அடுத்த ஆபீஸ்களுக்கும் அடுத்த கட்டிட உத்தியோக வாசிகளுக்கும் போய்ச் சேர்ந்து அவளைப் பார்க்கவே கூட்டம் கூட்டமாக லஞ்ச் நேரத்தில் வந்து போனார்கள். எங்கள் ஆபீஸ் வளாகத்தில் எட்டு கட்டிடம். நாலு நாலு மாடி. எல்லாவற்றிலும் கம்ப்யூட்டர் கம்பெனிகள்.

இசக்கியைப் பற்றி யார் என்ன சொன்னாலும், நாலு வார்த்தை பாராட்டினாலும், அவள் காப்பி கலந்து கொடுக்கப் பொறுமையோடு க்யூவில் காத்திருந்தாலும், கிரண் மட்டும் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கு ரோஷ்ணி தவிர எதிலும் சுவாரசியம் கிடையாது. ஆபீஸில் ஜன்னல் சீட் அவனது. அங்கே உட்கார்ந்து பழைய அசெம்ப்ளர் கோடைப் படித்துப் புரிந்து கொண்டு, புதுசாக ஜாவாவில் அதை எல்லாம் மாற்றி எழுதுவது அவன் வேலை. அந்தப் பக்கம் பழைய பைஜாமாவும் ஜிப்பாவுமாக தாத்தா காலத்து அசம்ப்ளர் நிரல், இந்தப் பக்கம் ஜீன்ஸ், டீஷர்ட்டோடு புது ஜாவா கோடு என்று இரண்டு டிஸ்ப்ளே திரைகளில் அவன் மூழ்கி முத்தெடுக்கும்போது ஜன்னலுக்கு வெளியே யானை பறந்ததைக் கூட அவன் லட்சியம் செய்யவில்லை. போன மாதம் ஒரு யானையும் அதைத் தொடர்ந்து ஒரு காண்டாமிருகமும் அப்படிப் பறந்தபோது நாங்கள் ஐந்து நிமிடம் வேலையை நிறுத்தி செல்பி எல்லாம் எடுத்துக் கொண்டோம். ஆனால் அவன், அந்த ஜஸ்பீர் சிங் கிரண், தலைப்பாவைக் கூட அசைக்கவில்லை, தன் வளமான தாடிக்குள்ளேயே வாயசைத்து அங்கே இல்லாத அல்லது இருந்து அவனுக்கு மட்டும் புலப்பட்ட ரோஷ்ணியோடு பேசிக்கொண்டு ஐம்பது வரி நிரல் பகுதியை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப்போட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். ரோஷ்ணி லண்டனில் இருக்கும் அவன் டீம் டிசைனர்.

அதே நேரத்தில், கேண்டீனில் காப்பி கோப்பைகளையும், காலையில் தோசை சுட்டு எடுத்த இரும்புத் தட்டுகளையும் மதியம் பிரியாணி பொங்கிய குக்கர்களையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் இசக்கி. நான்காவது மாடியில் கேண்டீன் கட்டிட முகப்பை அடுத்து இருப்பதால் வெளியே ஒருத்தர் தரையில் நடந்தபடி தும்மினாலும் சத்தம் ஏனோ பெரிசாகி வந்து கேண்டீனில் கேட்கும். வெளியே பார்த்த கண்ணாடி ஜன்னல் இசக்கி பாத்திரம் கழுவும் இடத்தின் பக்கத்தில் தான். அவளும் யானையைப் பார்க்கவோ காண்டாமிருகத்தை நோக்கி நிற்கவோ சிரத்தை காட்டவில்லை.

இசக்கி பாத்திரம் துலக்கும் வேலை முடித்து, ஆப்ரனில் கையைத் துடைத்தபடி நேரே வந்தது கிரண் இருந்த கீகடமான தடுப்புக்குத்தான். உள்ளே நுழைந்து, அவன் மேஜையின் ஓரமாகக் கையை முட்டி தெரிய மடக்கி மெல்லத் தட்டினாள் அவள். சர்தார்ஜி என்ன என்று பார்வையால் கேட்டபடி வேலையைத் தொடர, அவள் சொன்னாள்: “குரு, சோறு வடிக்கற எலக்ட்ரிக் அடுப்பிலே சப்பாத்தி செய்ய முடியுமா? மதராஸி சாப்பாடு யாருக்கு வேணும், புது அடுப்பு வாங்கி ரொட்டி சுடுன்னு கேட்டீங்களே. இனிமேல் அதே அடுப்பிலே சோறும் பொங்குவேன். ரொட்டியும் சுடுவேன்”.

”எங்கே, சுட்டுக் காட்டு”, சர்தார்ஜி சிலிர்த்துக் கொண்டு எழுந்து அவளோடு கேண்டீனுக்குப் போனான். மீதி ஆபீஸ் எல்லாம் ஜன்னலுக்கு வெளியே பறந்த யானையைப் பற்றி சமூக ஊடகங்களில் மாய்ந்து மாய்ந்து நாலு வரி எழுதி போட்டோ போட்டுக் கொண்டிருக்க, இந்த இருவரும் கேண்டீன் அடுப்பில் ரொட்டி சுடுவதைப் பார்க்கப் போனார்கள். ஏனோ யாருமே காண்டாமிருகத்தைப் பற்றிப் பேசவில்லை.

கிரண் கேண்டீனுக்குப் போனபோது அங்கே கடப்பைக்கல் பாவிய சமையல் முற்றத்தில் நடுநாயகமாக எலக்ட்ரிக் அடுப்பும் அதை அடுத்து மெல்லிய தகடாக ஒரு ஜோடி வட்டத் தட்டையும் கண்டான். இசக்கி வட்டத் தட்டு அடுக்கை எடுத்து ஸ்க்ரூக்களை முடுக்கி, அடுப்பின் மேல் பொருத்த அது ஆட்சேபிக்காது அமர்ந்து கொண்டது. அவள் படு அலட்சியமாக சுவிட்சைப் போட, அடுப்பு சிரிக்கிற மாதிரி இடுக்குகளில் சிவப்பு ஒளியோடு மிளிர்ந்தது.

இசக்கி அதோடு நிறுத்தவில்லை. குனிந்து கீழே இருந்து சின்ன சைஸ் கிலட்டீன் மாதிரி எதையோ எடுத்து அடுப்புக்கு தொண்ணூறு டிகிரியில் அதை நிறுத்தி வைத்து இன்னொரு சுவிட்சைப் போட, கரகரவென்று இம்மியும் மாறாத வட்டமாக ஒரு ரொட்டி சுடத் தயாராக அடுப்புமேல் தட்டில் விழுந்தது. எண்ணி பதினைந்து வினாடி, கீக்கென்று குஷியாகக் கூப்பிட்டபடி அந்தத் தட்டு புரண்டு படுக்க, ரொட்டி கீழ்த் தட்டில் தலை குப்புற விழுந்து, இன்னொரு பக்கமும் சுடத் தயாரானது.

இந்தக் கேண்டீன் எலக்ட்ரானிக் புரட்சியை எடிசனோ, டெஸ்லாவோ இன்ன பிற பெருமக்களோ கண்டிருந்தால் களித்துக் கைதட்டிக் கொண்டாடியிருப்பார்கள். கிரண் ஒரு துண்டு சப்பாத்தியை வாயில் போட்டுச் சுவைத்து விட்டு, ’சரியா வேகலை’ என்று மட்டும் சொல்லிப் போனான்.

அடுத்து வந்த நாட்களில் அதிக யானைகள் ஜன்னலுக்கு வெளியே பறந்தன. அவை பறக்கும் தினங்கள் ஒருநாள் விட்டு ஒருநாளாக இருந்தது. சனிக்கிழமைகளில் மட்டும் யானைகளோடு நீர்யானைகளும் காட்டுக் குதிரைகளும் பறந்து வந்ததை அந்த வளாகத்தில் யாரும் பார்க்காமல் போகக் காரணம் அது வார விடுமுறை என்பதே. ஆனாலும் அந்தத் தினங்களிலும் இசக்கி ஆபீஸ் வந்து கொண்டிருந்தாள். காண்டீன் சமையலறையில் சோல்டரிங் அயர்னும், வயர்ச் சுருளும், விதவிதமான சின்னஞ்சிறு மோட்டார்களும், இண்டக்ரேட்டட் சிப் பலகைகளுமாகப் பரத்தி வைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்க்கவும் யாருமில்லை. இது அப்படியான ஒரு சனிக்கிழமை.

காப்பி கலந்து கொடுக்கிற வேலை இல்லாததால், எலக்ட்ரானிக் வேலைக்கு நடுவே ஜன்னலுக்கு வெளியே பறந்து போன யானை, நீர்யானை, காட்டுக் குதிரை என்று எல்லாவற்றையும் ஒவ்வொரு நிமிடம் பார்த்தாள் இசக்கி. ஒரு பசுமாடு கூட கடைசியாகப் பறந்து போனது. இது போதும் பார்த்தது என்று தீர்மானம் பண்ணி அவள் சர்க்யூட் போர்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு எலக்ட்ரானிக் சாதன வேலையைத் தொடர்ந்தாள்.

அவள் மட்டும் அப்போது ஆபீசில் வேலை பார்க்கவில்லை. முன்னோர் மொழியான அசம்ப்ளர் கோடு நிரலில் புரியாமல் இழுத்துக் கொண்டிருந்த பகுதியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த கிரண் கூட அன்றைக்குப் பார்த்து ஆபீஸ் வந்திருந்தான். முந்தைய ராத்திரி தூக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். முட்டைக்கடை வைத்திருக்கும் ஒரு மதராஸி அந்த அசம்ப்ளர் கோட்டைப் பிரித்து மேய்ந்து இது தான் இது என்று சொல்லிக் கொடுக்க, கிரணுக்கு அறிவுத் தெளிவு உறக்கத்தில் பிறந்தது. அந்த அறிவொளி மங்காமல் ஆபீசுக்கும் விடுமுறை என்றாலும் வந்துவிட்டான் அவன். அவன் வந்தபோது தான் சகலமானதும் ஜன்னலுக்கு வெளியே பறந்து போனது. ஒரு யானையைக் கண்டேன் என்று ட்விட்டரில் ஒரு செய்தி பதிந்து விட்டுப் புது நிரல் வேகமாக எழுதலானான் அவன்.

அந்த நேரத்தில் தான் உள்ளே இருந்து தீனமாக அலறும் குரல் கேட்டது. அது பெண் குரலாக இருந்தது. கிரண் அடைத்திருந்த கதவுகளைப் பார்த்தான். அவற்றுக்குப் பின்னால் யாராவது விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பார்களோ. தலையைக் குலுக்கிக் கொண்டான் அவன். அங்கே ஏர் கண்டிஷனர் தொகுதிகள் தான் வரிசையாக ஒரு பெரிய அறை முழுக்க. ராப்பகலாக இயங்கும் அவற்றுக்கு நடுவே ஆபரேட்டர்கள் எல்லா ப்யூஸ்களையும் பிடுங்கி, மின்சாரம் வராமல் தடை செய்து விட்டுத்தான் எப்போதாவது அபூர்வமாக நடமாடுவார்கள். அவர்களில் பெண் ஏசி ஆபரேட்டர்களோ, பெண்குரலில் பேசும் கலைஞர்களோ யாருமில்லை.

அலறல் சத்தம் உச்சத்தை அடைந்தபோதுதான் குரல் மேற்கே கேண்டீனிலிருந்து வந்தது என்று கிரணுக்குப் புலப்பட்டது. அங்கே யாரோ ப்ளாஸ்மா டெலிவிஷனை, ஆள் வராத நாள் என்பதால் உரக்க வைத்து சீரியல் பார்க்கிறார்கள். அவர்களை அடக்கி விட்டு வரவேண்டும். இப்படிக் கருதித்தான் கிரண் கேண்டீனுக்குப் புறப்பட்டான்.

அவன் பாதி தூரம் வரும்போது சட்டைப் பையில் வைத்திருந்த மொபைல் டெலிபோன் அழைத்தது. ரோஷ்ணியாக இருக்குமோ என்று நினைத்தபடி ஃபோனை எடுத்தான். அவளே தான்.

ரோஷ்ணி கிடக்கட்டும். கேண்டீனில் இருந்து வந்த அலறல் கூடுகிறதல்லாமல் குறையவில்லை. அது டெலிவிஷனில் இருந்தோ வேறே எலக்ட்ரானிக் பொழுதுபோக்கு சாதனத்திலிருந்தோ வருவதாகத் தோன்றவில்லை. ஒரு அசல் பெண் அங்கே அலறிக் கொண்டிருக்கிறாள்.

மொபைல் நின்று மறுபடி அழைக்க ஆரம்பிக்கவே, கிரண் எடுத்து ஹலோ என்றபடி காண்டீனில் நுழைந்தான். அங்கே தரையில் உட்கார்ந்து, கிச்சன் ப்ளேட் அடுப்பில் இரண்டு கையையும் சத்தியம் செய்கிற மாதிரி வைத்தபடி அலறிக் கொண்டிருந்த இசக்கியைப் பார்த்தான்.

“என் வீட்டுக்காரன் டிவர்ஸ் கொடுக்க ரெடியா இருக்காண்டா கிரு. நீ உடனே லண்டன் வா. நம்ம திட்டப்படி கலிபோர்னியா போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அப்புறம் லண்டன் வர்றதெல்லாம் வேலைக்கு ஆகாது”.

ரோஷ்ணி அவனிடம் தீர்மானமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுடைய காலேஜ் மேட், கூடவே சக ஊழியக்காரி. அவனோடு மீதி வாழ்க்கையும் படுக்கையும் பகிர நினைக்கிறவள். லண்டனில் ப்ராஜெக்ட் டெஸ்டிங்க் முடித்துவிட்டு வீட்டுக்காரனை அங்கேயே தலை முழுகத் திட்டம்.

“நான் இப்போ வரமுடியாது. இங்கே கோட்”. அவன் முடிக்கும் முன் தரையில் இருந்து இன்னும் பலமாக இசக்கி அலறுகிறாள். அவனைப் பார்த்துத்தான் அவள் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

“நீ வரல்லேன்னா நான் எப்படி எண்ட் கோட் எனக்கு எழுதிப்பேன்னு உனக்கு சொல்லியிருக்கேன். இனியும் அவனோடு இருக்க முடியாது. இன்செக்ட்”.

இசக்கி கால்கள் சுண்டி இழுக்க இன்னும் அலறுகிறாள்.”அப்படியே இரு, வந்தாச்சு” என்று உரக்கச் சொல்லியபடி கிரண் மெயின் சுவிட்சை ஆஃப் செய்கிறான். தரையில் விழுந்ததில் ஏதோ சோப்புக் கரைசல் மூக்கில் குத்துகிறது. பலவீனமான எலக்ட்ரிக் ஷாக் அடித்து அடுப்பைப் பிடித்தபடி இருந்த இசக்கியின் தோள்களை இறுகப் பற்றி அவளை இழுத்து அப்புறம் தள்ளுகிறான். அவள் கைகள் அவன் புஜத்தைப் பற்றித் தழுவ அவள் கண்களை மூடித் திறக்கிறாள். அவன் அவள் மேல் விழுந்து பரவுகிறான். பசுக்களும் காளை ஒன்றும் ஜன்னலுக்கு வெளியே பறந்து போவதைப் பார்த்தபடி இரண்டு பேரும் ஒருசேரப் பறக்கத் தொடங்குகிறார்கள்.

கிரணும் அவன் மனைவி இசக்கியும் இப்போது லண்டனில் நிரந்தரமாக வசிக்கிறார்கள். அவள் எலக்ட்ரானிக் விஷமங்களைத் தலை முழுகி விட்டாள். கிரணுக்காக பஞ்சாபி கற்றுக் கொள்கிறாள். கார் ஓட்டுகிறாள். புளி உப்புமா தின்ன கிரணைப் பழக்கினாள். அவன் பழைய கோட் வாசித்து, அது புரிய முட்டைக்காரர்கள் வரும் கனவுகளை இன்னும் எதிர்பார்த்து இருக்கிறான்.

இங்கே ஆபீஸில் அவனுடைய சீட்டில் ரோஷ்ணி அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். தனியாக இருக்கிறாள் அவள். கடல்நாரை ஜன்னலுக்கு வெளியே பறந்து போகிறது என்று ட்விட்டரில் தகவல் பதிந்து கொண்டிருக்கிறாள். யானைகள் பறந்து எத்தனையோ காலமாகிறது.

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன