புது நாவல்:1975 நான் தாங்க அம்மா” என்றாள் அவள். யாருக்கு அம்மா என்று மேனேஜரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை

எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

கண்ணில் ஏகத்துக்கு மை ஈஷிக்கொண்டு வந்து கதவு திறந்த பெண்ணிடம், “உங்க அம்மாவைக் கூப்பிடு” என்றார் மேனேஜர். ”உள்ளே வாங்க, நான் தாங்க அம்மா” என்றாள் அவள். யாருக்கு அம்மா என்று மேனேஜரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.

“நாடகம் போடணும்” என்று மொட்டையாகச் சொன்னார் மேனேஜர். நான் அதை விரித்துச் சொல்ல ஏதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்டேன்.

”நாடகம் எல்லாம் நடத்திக் கொடுத்திடலாமுங்க. பாட்டெல்லாம் பாடிக் கொடுத்திடலாமுங்க. ஆட்டம் எல்லாம் ஆடிக் கொடுத்துடலாமுங்க. சிலம்பம் எல்லாம் சுத்திக் கொடுத்திடலாமுங்க” என்று வரிசையாக அந்த அம்மாள் அடுக்கினாளே தவிர எங்களைப் பேசவே விடவில்லை.

“ஆர்டிஸ்டை கொஞ்சம் கூப்பிடுங்க” என்றேன். “கூப்பிடறதெல்லாம் கூப்பிட்டுடலாமுங்கோ. பேப்பர் போடுங்க” என்றாள் அவள் விரலால் ஏதோ சைகை செய்து கொண்டு. கூர்ந்து கவனித்து விட்டு, “கரன்சி நோட்டு எண்ணற முத்ரை அது” என்று மேனேஜரிடம் ரகசியம் சொன்னேன், “அரக்கு சீல் மாதிரியா?” என்று புரியாமல் கேட்டார் அவர். “அட்வான்ஸ் வேணுமாம்”.

”அட்வான்ஸ் எல்லாம் கொடுத்திடலாமுங்க. லோன் மட்டும் கேக்காதீங்க” என்றார் மேனேஜர். அடுத்த பத்து நிமிடத்தில் அவரிடம் லோன் தவிர வேறெதுவும் கேட்க வேண்டாம் என்ற தகவல் பரிமாற்றம் தன்னிச்சையாக, பேச்சு எதுவுமின்றி நிகழ, “பேங்கு ஐயான்னு வந்ததுமே சொல்லியிருக்கலாமில்லே, அதென்ன தவிக்க விட்டுட்டுச் சொல்றது’ என்று செல்லமாகச் சொல்லியபடி அந்த முதுபெண் உதட்டை, ஏன் மூக்கையே எப்படியோ கடித்துக் கொண்டு மேனேஜரைப் பார்த்த காதல் பார்வையில் நான் பயந்து போனேன். இவரை பத்திரமாக வீட்டில் ஆச்சியிடம் கொண்டு போய்ச் சேர்த்தால் தான் நாளைக்கு என் ஸ்கூட்டருக்கு ஆபீஸ் வேலைக்காக பெட்ரோல் போட்ட பணத்துக்கு சார்ஜஸ் வவுச்சர் கையெழுத்துப் போட இவர் மாடி இறங்குவார்.

அந்தம்மா உள்ளே போய், மெலிந்து ஐந்தடி உயரமான ஒரு இளம் பெண்ணோடு திரும்பி வந்தாள். தூக்கத்தில் இருந்து எழுப்பி விடப்பட்ட சிடுசிடுப்பு முகத்தில் தெரிய வந்த இளம்பெண் நாற்காலியில் அமர்ந்து அட்டணக்கால் போட்டுக்கொண்டு விட்ட இடத்தில் இருந்து உட்கார்ந்தபடிக்கே தூங்க ஆரம்பித்தாள்.

“நாடகம் முழுக்க வர்ற கதாபாத்திரம் இவங்களுக்கு. ஹீரோயினான்னு கேட்டா ஆமான்னு சொல்லலாம். ஏன்னா போடப்போற எல்லா நாடகத்திலேயும் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் எல்லாம் இந்திரா காந்திதான்”. நான் சொல்லி நிறுத்தினேன்.

“ஒரு பாம்பு டான்ஸ் சீன் வைச்சுடுங்க தம்பி. பொளந்து கட்டிடுவா என் மக”. பூரிப்போடு தாய்த் தெய்வம் மகளை நோக்கியது. அந்தப் பெண் சட்டென்று கண் விழித்தாள். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே நடு ஹாலில் நின்று பாம்பு மாதிரி வளைந்து ஆட ஆரம்பித்தாள். நாக்கு வெளியே நீண்டு அடங்க அந்தப் பாம்பு மேனேஜர் அருகில் வர அவர் நடுநடுங்கிக் கண்ணை மூடிக் கொண்டார். நான் விழித்துப் பார்க்க அது என் பக்கம் வந்ததைப் பாதியில் வாபஸ் வாங்கி அந்த அம்மாள் பக்கமாக நகர்ந்தது. பரம்பரை பரம்பரையாக நாகப் பாம்பு வளர்க்கிற குடும்பத்தில் வந்ததுபோல அவள் நாட்டியப் பாம்பைத் தலைதடவி உச்சி முகர பாம்பு ஆடியபடி இருந்தது.

“சொர்ணமுகியை ஒண்ணும் இல்லாம ஆக்கிடுவா என் மக. இந்த பாம்பு டான்ஸை எப்படியாவது கதையிலே கொண்டு வந்துடுங்க” என்றாள் அம்மா.

”அம்மா, இது இருபது அம்சத் திட்ட நாடகம். மிஞ்சிப் போனா, பாட்டு இப்படி வரும்”, நான் பாடிக் காட்டினேன்

” பத்து வருடக் கணக்கை எடுத்துப்
பட்டியல் தீட்டுகிறோம் அதில்
எத்தனை எத்தனை சாதனை கண்டோம்
என்பதைக் காட்டுகிறோம்”

”இவ்வளவுதானே. பாம்பு டான்ஸ் ஆடற ஹீரோயின் ஊர் ஊரா இருபது அம்சத் திட்டத்தை பரப்ப போறான்னு வச்சுடுங்க. எங்க ஊருக்குக் கூட போன வாரம் ஒரு கோஷ்டி வந்து இருபதுசாமி கதைன்னு புதுசா வில்லுப்பாட்டு கட்டிப் பாடிட்டுப் போச்சு. எங்கே நாடகம்? நம்ம செக்கோடை பொட்டல்லே வளைச்சுக்கட்டி பந்தல் போட்டு உள்ளே நாலடி உயரத்திலே பெரிய மேடை போட்டுடுங்க. ஆடித் தள்ளிடுவா எங்க மேனகாரச்சனா” என்றாள் அம்மா. அது என்ன அப்படி ஒரு பெயர் என்று நான் யோசிக்கும் முன்னால் அவள் சொன்னாள் : “அதான், சஞ்சய் காந்தியோட வீட்டுக்காரம்மா வள்ளி தெய்வானை மாதிரி ரெண்டு பேரு உண்டே. அதைச் சேர்த்து வச்சுட்டேன்”. அவள் சொன்னபடிக்கு மேனகா சரிதான். ரச்சனா யார்? மேனேஜர் விழிக்க, அவர் காதில் ரக்ஷனா சுல்தானா என்றேன். ‘’அது அவர் வீட்டுக்கார அம்மா இல்லே’ என்பதையும் அவசரமாகச் சொன்னேன். “ஓ வேறே மாதிரியா?” மேனேஜர் கேட்டது எமர்ஜென்சிக் குளிர் தில்லியில் எதிரொலித்திருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன