புது நாவல் : 1975 செண்டிமெண்டல் கதையில் செண்ட்ரல் கவர்மெண்ட் புகுந்திருந்தது.

எழுதிக் கொண்டிருக்கும் ‘1975’ நாவலில் இருந்து –

“எடிட் பண்ணி ஏதாவது கூடுதலா இருந்தா குறைச்சுக்குங்க. கதைப் போக்கை மாற்றிடாதீங்க”.

அந்த நாடக ஆசிரியர் படைப்பாளியின் கரிசனத்தோடு சொன்னார். படித்துப் பார்த்தேன். செண்டிமெண்டல் கதையில் செண்ட்ரல் கவர்மெண்ட் புகுந்திருந்தது.

பிள்ளையார் கோவில் பூசாரிக்குப் பெண் குழந்தை பிறந்து, கஷ்டப்பட்டுப் படிக்க இருபதம்சத் திட்டத்தில் பேங்க் உதவி கிடைத்து, வேலை கிடைக்கிறது. லஞ்சம் வாங்குகிற மேலதிகாரியை இருபதம்சத் திட்டத்தால் உத்வேகம் பெற்றுப் பிடித்துத் தருகிறாள். கணவன் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த இருபதம்சத் திட்டத்தில் கடன் பெற்று அங்கேயே தங்கி உழைக்கிறான். தொலைதூர உறவில் குழந்தை பிறக்கிறது. இந்திரா என்று பெயர் வைத்து இருபதம்சத் திட்டத்தில். போதும்.

வசனம் பல இடத்தில் இல்லை. வசனம் சேர்க்கவும் என்று அங்கெல்லாம் எழுதியிருந்தது. இருந்த இடத்தில் அடுக்குமொழி. ’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளொடு முன் தோன்றிய மூத்த குடி’ என்று கம்பவுண்டர் கார்பனேட் மிக்சர் கலக்கிக் கொடுத்துக் குடிக்கச் சொல்வது உதாரணம்.
— — —
சாயந்திரம் வேலை முடித்ததும் எதிர்பார்த்தபடியே மேனேஜர் ரதத்தை எடுக்கச் சொல்லிப் பின்னால் உட்கார்ந்தார். காளைப்பட்டி போய்ச் சேரும்போது இருட்டி இருந்தது.

இறங்கும்போது மேனேஜர் தனக்குத்தானே ஓவென்று சிரித்தார். பயந்து போனேன். காத்து கருப்பு அடிச்சு அலமலர்ந்து போகிற ஆள் இல்லையே அவர். எதற்கும் பாதுகாப்பாக அரை அடி இடைவெளி விட்டு நின்று ஸ்கூட்டர் பெட்டியில் எப்போதும் வைத்திருக்கும் பேட்டரி லைட்டை அடித்தேன்.

“ஒண்ணுமில்லே. அந்த கம்பவுண்டர் கிட்டே வயித்துப் போக்கோட ஒருத்தன் போறான். அவர் சொல்றாரு. பாதகமலம். இப்போ வரல்லேன்னா பாதகமலம் ஆகியிருக்கும்”.

அவர் மறுபடி சிரிக்க, அவருக்கு என்னமோ ஆகி விட்டது என்று உள்ளுணர்வு சொல்ல, வேறே பாட்டு நினைவு வராமல் “இருவிழி சிவந்து கனல்பொறி தெறிப்ப எடுத்தகை கதையினால் உருக்கி” என்று உருவிட ஆரம்பித்தேன். அது சீறாப்புராணம்.

“கொடுமையான வயத்துப் போக்கு. அது பாதக மலம். மருந்து கொடுத்து நிறுத்தலேன்னா, கடவுளோட பாத கமலம்.. நல்லா இருக்கா?”

அவர் மறுபடி சிரிக்க, நான் போக வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்து வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தினேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன