தச்சர் முன்னால் வந்தார், பாதிரியாரும், கோவில்பிள்ளையும் அடுத்து வந்தார்கள்

நான் மொழிபெயர்த்து வரும், திரு என் எஸ் மாதவனின் மலையாள நாவல் – இன்று மொழியாக்கியதில் ஒரு சிறு பகுதி

“மட்டில்டா, நான் உன்னை பயமுறுத்திட்டேனா? நீயும் மத்தேவுஸும், மகளும் நிம்மதியா வாழ்க்கை நடத்திட்டிருக்கற போது திடீர்னு வந்து தொந்தரவு கொடுத்திட்டேனா? நம்ம சர்ச்சிலே திருப்பலியும், பிரார்த்தனையும் எல்லாம் லத்தீன் மொழியிலே இருந்தாலும், இறுதிக் கருணை செய்யறது மலையாளத்திலே தான். நாற்பது வருஷமா நான் மலையாளம் பேசவே இல்லை. ஆனா, அந்த நாற்பது வருஷமும் சொப்பனம் கண்டது மலையாளத்திலே தான். சொப்பனம் காணுற மொழியிலே இறுதிக் கருணையும் வாங்கிக்கிட்டு சுகமாக சாகலாம்னு தான் நான் இங்கே திரும்பி வந்தேன். உங்க தொண்டையிலே குத்தின மீன்முள்ளாவேன்னு நான் கொஞ்சமும் யோசிக்கலே. எஸ்.எஸ்.அனஸ்தாஸியா கப்பல் துறைமுகத்திலே இன்னும் நின்னு சங்கு ஒலிச்சிட்டிருக்கு. வந்த வழியிலேயே நான் திரும்பிப் போகறேன்”. பார்வையற்ற அப்பூப்பனின் கருப்புக் கண்ணாடிக்குக் கீழ் கண்ணீர் வழிந்தது. அவர் எழுந்து உள்ளே போக நடந்தபோது படியில் கால் பிசகி விழப் போனார். அம்மா அப்பூப்பனை வேகமாக இழுத்துப் பற்றி நிறுத்தினாள். அந்தப் பிடி அணைப்பாக அவரை அன்போடு இறுகக் கட்டிக் கொண்டாள். அம்மா அவரைத் திரும்ப நாற்காலியில் உட்கார வைத்தாள்.

”ஜெசிகாவை எதுக்காக எரணாகுளத்துக்கு அனுப்பறீங்க”? அப்பூப்பன் கேட்டார்,

“அங்கே செயிண்ட் தெரசாஸ் ஸ்கூல்லே ஹாஸ்டல்லே சேர்த்து படிக்க வைக்கத்தான், அப்பா”, அப்பன் சொன்னார்.

“இங்கே உள்ளூர் ஹைஸ்கூல்லே படிக்க வேண்டிய கிளாஸ் எல்லாம் படிச்சு முடிச்சுட்டாளா?”

“அப்படி இல்லே, இங்கே ஸ்கூல் ஹைஸ்கூல் ஆனது இப்பத்தான். அவளை எரணாகுளத்துக்கு அனுப்பி ஹாஸ்டல்லே தங்கிப் படிக்க வைக்கறது அவள் படிச்சு நல்லா ஆகணும்கறதுக்குத்தான், அப்பா”, அப்பன் சொன்னார்.

“நீ போகிற முன்னாடி உன்னை நான் ஒருதடவை தொட்டுப் பார்க்கறேன் குழந்தை”, அப்பூப்பன் சொன்னார். நான் அப்பூப்பன் முன்னால் போய் நின்றேன். என் தலைமுடியை விரலால் அளைந்தபடி அப்பூப்பன் சொன்னார் :”மரியகொரத்தி, உன் முடியை விட பட்டு மாதிரி மெத்துனு இருக்கு உன் மகன் மத்தேவுஸோட குட்டிப் பொண்ணு தலைமுடி. மரியே, உன் நெத்தி மாதிரியே பரந்த நெற்றி இந்தக் குட்டிக்கும். உன் மூக்கு மாதிரி கூர்மையான மூக்குதான் இவளுக்கு. கண்ணு இமையும் கூட உன்னை மாதிரி அடர்த்திதான். எல்லாத்திலேயும் உன்னைக் காப்பியடிச்சிருக்கா. இவ கழுத்து உன்னோட கொக்கு கழுத்து மாதிரி நீளம் தான்”.

அப்பூப்பன் என்னைத் திருப்பி நிறுத்தினார். என் தலைமுடியை முன்னால் போட்டார். பின்கழுத்தில் இருந்து கை தாழ்த்தினார். என் முதுகில் இருக்கும் சிவந்த மருவில் தொட்டபோது அவருடைய விரல்கள் வியப்போடு நின்றன. “அய்யோ, நான் எதைத் தொட்டுக்கிட்டிருக்கேன்? மரியகொரத்தி, உன் முதுகிலே இருக்கற சிவந்த மரு மாதிரி இந்தச் சின்னப் பொண்ணுக்கும் இருக்கே. அதுவும் சிவப்பு நிறம்தானா?” அப்பூப்பன் உரக்கக் கூவினார்.

“போ, ஜெசிகா, ஸ்கர்ட் மாத்திக்கிட்டு வா” என்றாள் விக்கி பெரியம்மா.

“நான் இங்கே இருக்கறபோது மரியாகொரத்தி எங்கேயும் போகமாட்டா. அவ என்கூடத்தான் இருப்பா” என்றார் அப்பூப்பன்.

“அப்பா, போஞ்ஞிக்கரை சர்ச்சிலே இருக்கற பிலாத்தோஸ் பாதிரியார் சொல்லித்தான் ஜெசிகாவை எரணாகுளத்துக்குப் படிக்க அனுப்பறோம். நீங்க தடுக்காதீங்க. அவ சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இங்கே வருவா”, அப்பன் சொன்னார்.

“பிலாத்தோஸ் பாதிரியாரா? அப்படியும் பெயர் வச்சுக்கிட்டு ஒரு பாதிரியார் இருக்காரா என்ன”? அப்பூப்பன் கேட்டார்.

”அவரோட நிஜப் பெயர் ஃபாதர் நோயல், எப்பவும் கை அலம்பிக்கிட்டே இருப்பாரா, பிலாத்தோஸ்னு பட்டப்பெயர் வச்சுட்டாங்க” எட்வின்சேட்டன் சொன்னார்.

”வேணாம், உங்க ஜெசிகா, என் மரியாகொரத்தி, எங்கேயும் அவ போகவேணாம்”.

“பிலாத்தோஸ் பாதிரியார் சொல்லித்தான் அவளை எரணாகுளத்துக்கு அனுப்பறோம். பாதிரியார் சொன்னதைக் கேட்காம..” எட்வின்சேட்டன் சொன்னார்.

“டாம் தி ப்ரீஸ்ட். அந்த பாதிரி நாசமாப் போகட்டும். அவரை அவரோட வேலையைப் பார்த்துக்கிட்டுப் போகச்சொல்லு. ஜெசிகா மரியாகொரத்தி இங்கே தான் இருப்பா”, அப்பூப்பன் சொன்னார். “இதை நான் தான் சொல்றேன், வலிய மார்க்கோஸ் ஆசாரியான நான் தான் சொல்றேன். கிறிஸ்தவத்துலே தச்சர் தான் முதல்லே வந்தது, அப்புறம்தான் வந்தாங்க பாதிரியாரும் கோவில்பிள்ளையும்”.