காசு வாங்கறது தண்ணிக்கு இல்லே, தோண்டற கிணத்துக்குத்தான்

நான் மொழிபெயர்த்து வரும், திரு என் எஸ் மாதவனின் மலையாள நாவல் – இன்று மொழியாக்கியதில் ஒரு சிறு பகுதி :

1961-ல் லந்தன்பத்தேரியில் முதல் குழாய்க்கிணறை கோமஸ் வீட்டில் தோண்டினார்கள். முக்காலியும், மண்ணில் துளையிட்டுத் தோண்டும் யந்திரங்களும் எடுத்துக்கொண்டு எரணாகுளத்திலிருந்து வந்து சேர்ந்த கிணறு தோண்டுகிறவர்களைப் பார்க்க அண்டை அயலார்கள் கோமஸின் வீட்டு வராந்தாவிலும் முற்றத்திலும் கூடி நின்றார்கள். நான் கோமஸ் வீட்டிற்குள், ரோஸிசேச்சியோடும், டெய்ஸியோடும், நடாஷாவோடும் கூட, ஜன்னல் கம்பிகளில் முகத்தை வைத்துப் பார்த்தபடி நின்றேன். குழாய்க்கிணறு தோண்டுகிறவர்கள் முற்றத்தில் முக்காலி வடிவ இணைப்பைப் பொருத்தினார்கள். கம்பி மூலம் உயர்த்திய இரும்புப் பாளத்தின் கூர்மையான முனை தரையைத் துளைத்து மண்ணைத் தோண்டத் துவங்கியது.

“மேஸ்திரி, இதுக்கு என்ன மாதிரி கியாரண்டி தர்றீங்க?” சந்தியாகுசேட்டன் உரக்க விசாரித்தது கேட்டது.

“என்ன கியாரண்டி?” குழாய்க்கிணறு தோண்டும் குழுவின் தலைவர் கேட்டார்.

“நீங்க குழிக்கப்போற கிணத்துலே இருந்து நல்ல தண்ணி கிடைக்கும்னு நிச்சயமாத் தெரியுமா? உப்புத் தண்ணி வந்துதுனா இந்த பாவப்பட்ட கோமஸ் கிணறு தோண்ட செலவழிக்கற பணம் எல்லாம் தண்ணியோட போயிடுமில்லையா?”, சந்தியாகு சொன்னார்.

“அந்த கியாரண்டி எல்லாம் தர முடியாதுங்க. நான் முஸ்லீம். இன்ஷா அல்லான்னு மட்டும் சொல்லுவேன்”.

“உப்புத் தண்ணி வந்துச்சுன்னா கிணறு தோண்டக் காசு வாங்குவீங்களா?” சந்தியாகுசேட்டன் கேட்டார்.

குழாய்க்கிணறு தோண்டும் குழுவின் தலைவர் வேலையை நிறுத்தி எல்லோரையும் பார்த்துச் சொன்னார் : “காசு வாங்கறது தண்ணிக்கு இல்லே, கிணத்துக்குத்தான். தரைக்குக் கீழே தண்ணி இருக்கு. அது தரைக்கு மேலே இருக்கப்பட்டவங்க கிஸ்மத்தைப் பொருத்து இருக்கும். அதிர்ஷ்டக்காரங்க வீட்டுலே தோண்டினபோதெல்லாம் நல்ல தண்ணி தான் கிடைச்சிருக்கு”

“நல்ல தண்ணி கிடைக்கறதும் கிடைக்காததும் எங்க தலையெழுத்தைப் பொறுத்ததுன்னு சொல்லிடாதீங்க”, என்றார் கோம்ஸ்சேட்டன்.

மேல்மட்டத்துக் கருப்பு மண்ணுக்குக் கீழே பளீரென்று வெளுத்த சிப்பிகளும் நத்தையோடுகளும் கடல் பிராணிகளின் மிச்ச்சொச்சங்களும் கலந்த ஈரமண் தட்டுப்பட்டது. கிணறு தோண்டுகிறவர்கள் குழிக்குள் குழாயை இறக்கினார்கள். அதற்கு அப்புறம் குழாய்க்கு உள்ளேதான் தோண்டப்பட்டது. உள்மண்ணைத் தோண்டி வெளியே எடுத்துப் போட்டதில் ஒரு மனித மண்டையோட்டின் தாடை எலும்பின் சிறிய துண்டு கலந்து வந்தது. அதில் வெள்ளை வெளேரென்று ஒரு பல் இருந்தது. கூடியிருந்தவர்கள் உடனே வெளியே போனார்கள். “அய்யோ, இதென்ன கல்லறை வைச்ச இடமா?”, கிணறு தோண்டுகிறவர்களின் தலைவர் கூவினார்.

“கோமஸ், நீ கோல் அடிச்சுட்டே” சந்தியாகுசேட்டன் சொன்னார். “என்ன வெளுப்பான பல்லு, பார்த்தியா? அது ஒரு ஆப்பிரிக்கக் கருப்பனோட பல்லு. பழைய காலத்து கொச்சியிலே ஆப்பிரிக்கக் கருப்பர்கள் சிலபேர் இருந்தாங்க. பரங்கி போர்த்துகீஸ்காரங்க தங்களோட அடிமைகளாக ஆப்பிரிக்காவிலே இருந்து கருப்பா, வாட்டசாட்டமா இருக்கற கருப்பர்களைக் கொண்டு வந்திருந்தாங்க. டச்சுக்காரங்க வந்து பரங்கிகளை கொச்சியிலிருந்து விரட்டினபோது அவங்க வச்சிருந்த தங்க நகை, தங்கக் காசு, ரத்தினம் இப்படியானதை எல்லாம் பெரிய பெரிய செப்புக் குடங்கள்லே போட்டு சீல் வச்சு மண்ணைத் தோண்டி புதைச்சு வச்சுட்டாங்க. அதுக்கு காவல் இருக்க, ஆப்பிரிக்கக் கருப்பு அடிமைகளையும் குழிக்குள்ளே வச்சு மூடிட்டுப் போனாங்க. அந்தப் பரங்கிகள் சொன்னாங்க, எங்க பிள்ளைங்களோட பிள்ளைங்களோட பிள்ளைங்க வரும்போது இந்த நிதியை எல்லாம் பத்திரமா திருப்பிக் கொடுத்திடுங்க கருப்பு சாமிகளே. கோமஸே, அந்த நிதிதான் உனக்குக் கிடைக்கப் போகுது. கோல் அடிச்சுட்டே”.

“நிதியெல்லாம் வேணாம். நல்ல தண்ணி கிடைச்சா மதி” கோமஸ்சேட்டன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன