அப்பூப்பனின் இடது கண்ணில் பார்வை குறைந்து வர, அவர் சிறிய மரச் சிலுவைகள் மட்டும் செய்து கொடுக்கத் தொடங்கினார்

கடலில் படகு கவிழ்ந்ததும் அப்பூப்பனுக்கு தன் படைப்பாற்றல் பற்றிய கர்வம் அகன்றது. நைஜீரியாவில் அப்பூப்பன் படகு ஏதும் கட்டவில்லை. கிழக்கு ஆற்றின் அக்கரையிலுள்ள வடுதலையில் இருக்கும் தச்சர்கள் போல மேஜை, நாற்காலி போன்ற வீட்டு உபயோகத்துக்கான பொருள்களை ஈபோ இனத்தவர்களுக்காகச் செய்து கொடுத்தார். அப்பூப்பனின் இடது கண்ணில் பார்வை குறைந்து வர, அவர் சிறிய மரச் சிலுவைகள் மட்டும் செய்து கொடுக்கத் தொடங்கினார். பார்வை முழுக்க இழந்தபோது அவரை ஏசுசபைக்காரர்கள் முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். அங்கே இருந்துகொண்டு, மலையாளம் பேசும் ஒரு பாதிரியார் மூலம் இறுதி நற்கருணை பெற்று அங்கேயே இறக்க அவர் விருப்பம் தெரிவித்தார். மூன்று மாதம் கழித்து எஸ்.எஸ். அனஸ்தாசியா கப்பல் கொச்சிக்குப் புறப்பட்டபோது ஏசுசபையினர் அவரை அந்தக் கப்பலில் ஏற்றி அனுப்பினார்கள்.

”மரியாகொரேத்தி, இந்த நாற்பது வருஷமா தினமும் நான் காலையிலே எழுந்திரிச்சது ஒரே ஒரு நினைப்போட தான் – லந்தன்பத்தேரியிலெ என் பெண்டாட்டி சாகப் தேர்ந்தெடுத்த நாள் இன்னிக்குத்தானா? என்னோட அதே ரத்தம் ஓடுற எங்க அப்பன் லூயி ஆசாரியையும், என் மகன் மத்தேவுஸையும் நான் கொஞ்ச நேரம் நினச்சுப் பார்ப்பேன். மீதி நேரம் எல்லாம் உன் நினைப்புதான்.

”மரியாகொரேத்தி, நீ யாரு? வல்லார்பாடத்திலே பொறந்தவ. சின்னப்பிள்ளையா, நூல் கட்டின சின்ன சப்பரத்தை இழுத்துக்கிட்டு திரிஞ்சே. அந்த சப்பரத்துக்கு சக்கரம், தென்னங்குருத்து தான். சதா ஐஞ்சுகல் விளையாடிட்டிருந்தே. கடல் கரையிலே வெளிக்கு போகக் குத்தவச்சே. நீ வளர்ந்தது இப்படித்தான். சண்டே ஸ்கூல்லே நீ நம்ம மதப் புஸ்தகமெல்லாம் படிச்சே. நீ அப்பப்ப, உன் எதிர்காலத்திலே என்ன என்ன நடக்கப் போவுதுன்னு யோசிச்சிருப்பே. அது இருட்டா தெரிஞ்சிருக்கும் உனக்கு. நீ நினைச்சிருப்பே, இதையெல்லாம் விட்டுட்டி இந்த மரியாகொரேத்தி எங்கே போவா? என்னை யாரு கல்யாணம் கட்டிக்கப் போறாங்க? ராத்திரி குடிச்சுட்டு வந்து என்மேலே ஏறிப் புரளப் போறவன் யாரா இருக்கும்? கர்த்தரே, எனக்கு விழப் போற லாட்டரி எது?

”அப்போ தான் வல்லார்பாடம் சர்ச் பாதிரியார் உங்கப்பன் கிட்டே சொன்னார், லந்தன்பத்தேரி கணக்கு களவாடிய வீட்டு லூயி ஆசாரி அவரோட ஒரே மகன் கல்யாணத்துக்கு சம்பந்தம் தேடிட்டிருக்கார்னு. அப்போ எனக்கு வயசு இருப்பத்தஞ்சு. உனக்கு நம்ம கல்யாணம் ஞாபகம் இருக்கா? நாங்க லந்தன்பத்தேரியிலே இருந்து வல்லார்பாடத்துக்கு வந்தது, எரணாகுளத்திலே வாடகைக்கு எடுத்த, குருத்தோலையும் தோரணமும் கட்டியிருந்த, கூரை மூடின நாலு படகுலே. திரும்ப் வரும்போது நீ, வெட்கப்பட்டுக்கிட்டிருக்கற கல்யாணப் பொண்ணு, படகுலே உக்கார்ந்து முழங்கால்லே தலை வச்சு விசும்பிட்டிருந்தே. திடீர்னு வேம்பநாட்டுக்காயல் முழுக்க எதிரொலிக்கற மாதிரி உரக்க கூச்சல் போட்டே, நினைவு இருக்கா? படகோட இடப்பக்கம், இருபது அடி நீளமா ஒரு முதலை, வெள்ளத்திலே நீஞ்சி வந்து உன்னைப் பார்த்துக்கிட்டிருந்தது. இப்போ ஆற்றிலே முதலையும் கிடையாது, கூரை போட்ட படகும் கிடையாது. ரெண்டும் இல்லாமப் போச்சு என் மரியாளே.

“கல்யாணம் கட்டி கொஞ்ச காலம் நாம புருஷன், பெண்டாட்டியா வாழ்ந்துட்டிருந்தோம். கர்த்தர் நம்மை இணைச்சு வச்சார். கூட்டிச் சேர்த்ததால் வந்த சந்தோஷத்துக்கு நாம கர்த்தருக்கு நன்றி சொன்னோம். ஆனா, அன்னிக்கு நீ யாரா இருந்தே? ஒரு வல்லார்பாடத்துப் பொண்ணு. நல்ல பொண்ணு. லூயி ஆசாரி சாயந்திர நேரம் கள்ளுக்குடிக்கற போது, பீங்கான் தட்டுலே சரியா நாலாக வெட்டின எலுமிச்சங்காய் ஊறுகாய் கொண்டுவந்து வைக்கற பொண்ணு. என் அம்மா எப்போவும் கர்த்தரை ஜபித்துக்கிட்டே ராத்திரி முழுக்க தூங்காம சங்கீர்த்தனம் எல்லாம் வாசிச்சுட்டிருந்ததுனாலே தெய்வத்து மேலே கிறுக்கு பிடிச்சுப் போனது. வேளாவேளை அவளுக்கு நீ சோறு போட்டே.

”ஆனா அந்தக் காலத்துலே நான் உன்னைப் பத்தி நினைச்சேனா, மரியாகொரேத்தியே? உண்மையைச் சொல்லட்டுமா? இல்லே. நான் படகு கட்ட மரம் எங்கேன்னு திரிஞ்சுக்கிட்டிருந்தேன். இந்த ஆஞ்சிலி மரக் கட்டை நல்லா இருக்கு. இந்த பர்மா தேக்கு பர்ஸ்ட் க்ளாஸ், இந்த கருங்காலி மரத்தோட வயலெட் நிறம் பிரமாதம். என் அம்மாவுக்கு கர்த்தர் மேல பைத்தியம். எனக்கு மரத்து மேலே பைத்தியம். லந்தன்பத்தேரியிலே முதல் கட்டுமரம் கட்டினது, தோ பாரு, நான் தான். ஆனா, ராத்திரியிலே உன்னை நினைப்பேன். உன் முதுகிலே மருவையும் நினச்சுப்பேன். நமக்கு மத்தேவூஸ் பிறந்தபோது நீ என்னை மறந்தே போயிட்டே. குழந்தைக்கு சோறு ஊட்டி, விளையாட்டு காட்டி, நீ எங்களை எல்லாம் மறந்துட்டு இருந்தே.

”மரியாகொரேத்தியே, நான் ஆப்பிரிக்காவிலே நான் என்ன பண்ணினேன்? எனக்கு வயசாச்சு. தினமும் காலையிலே எழுந்தா கூடுதல் வயசாகும். நான் தனியாள். போதாக்குறைக்கு குருடன். மரியாளே, உனக்குத் தெரியுமா இந்த குருட்டுப்பயலுக்கு அதிகம் தேவையானது எதுன்னு? சத்தம். சத்தம் தான் கண்ணு தெரியாதவங்களுக்கு வெளிச்சம். நான் காதை கூராக்கிக்கிட்டு கயத்துக் கட்டில்லே கிடப்பேன். ஒரு சின்ன சத்தம் கூட கேட்காது. அப்போ நான் விரல்லே சொடுக்கு போட்டு சத்தம் உண்டாக்குவேன். கையைத் தட்டி சத்தம் உண்டாக்குவேன். என் உடம்பு உண்டாக்கற சத்தம் மட்டும் கேக்கும். ஒரு சில்வண்டோட சத்தம் கூட கேட்காம, எனக்கு பைத்தியம் பிடிச்சமாதிரி வரும்.

(A snippet of my translation done today from the Malayalam novel Lanthan Batheriyile Luthiniyakal by Mr.N.S.Madhavan)

Aiming to complete the translation by next week end

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன