மட்டன் பஸந்தும், விமோசன சமரமும், பாட்ரிக் லுமும்பாவும், சவிட்டுநாடகமும், கே.ஜெ. ஏசுதாசும்

இன்றைக்கு மொழியாக்கியதிலிருந்து ஒரு சிறு பகுதி

துறைமுகம் வந்ததும், இந்தியா வந்ததும், கேரளம் ஏற்பட்டதும், எரணாகுளம் ஜில்லா ஏற்பட்டதும் , லந்தன் பத்தேரியில் உயர் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆனதும் ரூபாய், அணா, பைசாவுக்குப் பதில் நயாபைசா வந்ததும் எல்லாம் எப்படி என்று நான் அப்பூப்பனுக்கு எடுத்துச் சொன்னேன். மின்சாரம் வந்ததும், ரேடியோ வந்ததும், மசாலா தோசை வந்ததும், போஞ்ஞிக்கரை சர்ச்சில் முழங்கிய பழைய மணி போய்ப் புதியது வந்ததும், ‘ஜீவித நௌகா’ படத்தில் தொடங்கி, ஒன்றிரண்டு வருடங்களுக்கும் நின்று போய் ’உம்மா’ என்ற படத்தொடு மீண்டும் தொடங்கிய மலையாள சினிமா படங்கள் பற்றியும் அம்மா அப்பூப்பனுக்குச் சொன்னாள். சவிட்டுநாடகம் நசித்துப் போனதும், இப்போது கதை முழுவதும் நடிக்காமல், ‘காறல்மான்’ நாடகத்திலோ, ‘வீரகுமார்’ நாடகத்திலோ இருந்து சில காட்சிகள் மட்டும் சவிட்டுநாடகமாக நடிக்கப்படுவதும் குறித்து சந்தியாகு அப்பூப்பனுக்கு விவரமாகச் சொன்னார். குந்தன்லால் சைகலை, போர்ட் கொச்சி பாடகர் மெஹ்பூப்பை, பினாகா கீத்மாலா நடத்தும் அமீன் சயானியைப் பற்றியும், அண்மையில் திரைக்கு வந்த ‘கால்பாடுகள்’ படத்தில் பின்னணி கானம் பாடிய, ஃபோர்ட் கொச்சி அகஸ்டின் ஜோசப் பாகவதரின் மகன் கே.ஜே. ஏசுதாஸ் பற்றியும் குந்தன் ம்யூசிக் க்ளப்பின் நிறுவனர் கில்பர்ட் அப்பூப்பனுக்கு விளக்கினார். கில்பர்ட்டோடு கூட வந்த ஜப் தின் பீட்டர் நரொஞ்ஞ சைகலின் ‘ஜப் தில் ஹி டூட் கயா’ என்ற பாடலை அப்பூப்பனுக்காகப் பாடினார். வேம்பநாட்டுக் காயலில் துடுப்புப் படகுகள் இல்லாமல் போவதையும், இயந்திரப் படகுகளின் எண்ணிக்கை கூடியதையும், எரணாகுளத்தில் எண்ணெய்க் கப்பல்களுக்கான தனித்துறை அமைப்பதையும், வில்லிங்க்டன் தீவில் இந்தியக் கடற்படைத் தளத்துக்கு அருகே கடற்படையின் போர்க்கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்பதையும் பற்றி அப்பன் அப்பூப்பனுக்கு விவரமாக எடுத்துச் சொன்னார்.

கேரளத்தில் கம்யூனிஸம் வந்ததும், முதாலாளித்துவம் முடிந்து சமத்துவம் வளர்ந்ததும் குறித்து லந்தன்பத்தேரி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகச் செயலாளர் ஜோசப் அப்பூப்பனிடம் தெரிவித்தார். அப்பூப்பனிடம் கேள்விகள் கேட்ட முதல் நபரும் ஜோசப் தான். நைஜீரியாவில் கம்யூனிசம் வேர்விட்டுக் கிளைத்திருக்கிறதா என்றும் அண்மையில் ஏகாதிபத்திய சக்திகள் படுகொலை செய்த கானா நாட்டுத் தலைவர் பாட்ரிஸ் லுமும்பாவின் உயிர்த் தியாகம் ஆப்பிரிக்காவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியைக் கிளர்ந்தெழச் செய்திருக்கிறதா என்றும் ஜோசப் வினவினார். அப்பூப்பனுக்கு அந்தக் கேள்விகள் புரியாததால் அவசரமாக அம்மாவை இரண்டு கோப்பை சாயா கொண்டு வரச்சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்ததும், கத்தோலிக்கத் திருச்சபையைத் தகர்க்க அவர்கள் முயற்சி செய்ததும் தோல்வியில் முடிந்ததும், விமோசன சமரம் மூலம் கம்யூனிஸ்ட் சர்க்காரை வெளியேற்றியதும் பற்றி பிலாத்தோஸ் பாதிரியார் அப்பூப்பனுக்குச் சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு பிரிவினை ஏற்பட்டு வளர்வதாகவும், கீழை மார்க்சீயர்களின் தலைவனான மா சே துங், ரஷ்யாவின் தன்முனைப்பை விரும்பவில்லை என்றும், கட்சியில் பிளவு ஏற்பட்டு அது சிதறுண்டு போகும் என்று ஒரு வதந்தி நிலவுவதாகவும் பிலாத்தோஸ் பாதிரியார் கூறினார். நைஜீரியாவில் பள்ளி ஆசிரியையாக வேலை கிடைக்குமா என்று பி.டி பட்டம் வாங்கியிருந்த ரோஸிசேச்சி அப்பூப்பனைக் கேட்டாள். 1955-ல் தகழி சிவசங்கரன் பிள்ளை என்ற எழுத்தாளர் மீனவர்களைப் பற்றி எழுதிய ‘செம்மீன்’ என்ற நாவல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளத்தின் பெருமை கூடியது என்று ராகவன்மாஸ்டர் அப்பூப்பனுக்குத் தெரிவித்தார்.

ஆறாம் வகுப்பு இறுதியில் வந்த கோடை விடுமுறையின்போது அப்பூப்பனுடைய பழைய சிநேகிதர்களுக்காக எங்கள் வீட்டில் இரவு விருந்து நடந்தது. எட்வின்சேட்டன் அதுவரை யாரும் கேட்டிருக்காத மட்டன் பசந்த் என்ற பெயருள்ள ஒரு இறைச்சிக் கறி சமைத்தார். அவர் சொன்னார் : “இது பலமான பல்லு இல்லாத நிஜாம் நவாப்புகளுக்காக கண்டுபிடிச்ச ஐட்டம். இறைச்சியிலே இருந்து முதல்லே எலும்பை எல்லாம் எடுத்துத் தூரப் போடணும். அப்புறம் இறைச்சியை ஒண்ணரை இஞ்ச் நீளத் துண்டுகள் ஆக்கணும். கத்தியோட மொண்ணையான பகுதியாலே சகசகன்னு அந்தத் துண்டுகளைத் தட்டையாக்கணும். விரல் நகம் கனத்துலே தான் அதெல்லாம் இருக்கணும். இதுக்குப் பெயர்தான் பசந்த். இறைச்சியை மெத்துனு ஆக்க என் கிட்டே இன்னொரு டெக்னிக் கூட இருக்கு. பாதி பப்பாளிக்காயை அரச்சு இறைச்சியோடு சேர்ப்பேன். நம்ம பெர்ணாந்துசேட்டன் வாயிலேயும், அப்பூப்பனோட வாயிலேயும் இறைச்சி ஐஸ்ப்ரூட் மாதிரி வழுக்கிக்கிட்டு உள்ளே போகப் போறது. பார்த்துக்கிட்டிருங்க”.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன