வரவிருக்கும் ‘குளம்பியகக் குறிப்புகள்’ நூலில் இருந்து (சிறு கட்டுரைகள்)

எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் ஒரு ரெபரன்ஸுக்காக நிக்கொலாய் ஆஸ்ட்ரொவெஸ்கியின் ‘How the steel was tempered’ சோவியத் சோஷலிச யதார்த்த நாவல் பிரதி தேவைப்பட்டது.

அமேசன் மற்ற இணையக் கடைகள் எல்லாம் கண்டிப்பாக டாலர், ரூபாய் விலை (250 ரூ) சொல்ல, இலவச பி.டி.எப் ஒன்று கிட்டியது – ஆச்சரியகரமாக, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி இணையத் தளத்தில் (அங்கே கட்சி இருப்பதே முதல் ஆச்சரியம்).

தரவிறக்கி, கடைசி பக்கம் வரை வந்திருக்கிறதா என்று சரி பார்க்க, கடைசி பக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு –
Some of the English words and phrases used are
now archaic, or the meaning of the words have
changed An appropriate modern equivalent has
been substituted. Thus “His horny hand” has
become “His gnarled hand”

வார்த்தை வழக்கொழிந்து போனால் பரவாயில்லை. பொருள் மாறினால் தான் கஷ்டம்.

பழைய பிபிசி நகைச்சுவை சீரியல் ‘Are you being served’ பார்த்திருக்கிறீர்களா? பிரிட்டீஷ் இங்கிலீஷ் அமெரிக்க இங்கிலீஷை நகல் எடுக்க ஆரம்பித்த காலம் – பூனைக்குட்டிக்கான பழைய ஆங்கிலச் சொல் கெட்ட வார்த்தை ஆகிக் கொண்டிருந்த நேரம்.. சீரியலில் வரும் ஒரு பாட்டியம்மாள் கேரக்டர் – மிசிஸ் ஸ்லோகோம்ப் – தான் வளர்க்கிற பூனைக்குட்டி பற்றி கவலைப்படுவது யு டியூபில் கிடைக்கும்.. பாருங்கள். இப்படியும் சிரிக்க வைக்க பிபிசி ஏன் மெனக்கெட்டது என்று கூட தோன்றும்.
——————————————————————————————-

நண்பர் சொக்கன் ஆற்றுப் படுத்த, இணையத்தில் தரவிறக்கிக் கொண்ட நல்ல சிறுநூல், ‘தமிழிற் தரிப்புக்குறிகளின் பயன்பாடு’. ஒரே மூச்சில் படித்து முடித்து விடலாம். திரு. சி.சிவசேகரம் எழுதி பிரான்ஸில் 1994-ல் வெளியான அச்சாக்கத்தின் மின்பதிப்பு இது.

அவ்வளவு சரளமான நடை. முழுக்கத் தற்கால உரைநடையில் punctuation marks (தரிப்புக்குறிகள்) பயன்படுத்துவது பற்றியது என்பதால் எழுத்தாளர்களுக்கும், எடிட்டர்களுக்கும் இன்றியமையாதது.

நூலில் வரும் எடுத்துக்காட்டுகள் சுவாரசியமானவை

தரிப்புக்குறிகள் தமிழுக்குத் தந்துள்ள புதிய சாத்தியப்பாடுகள் பற்றிச் சொல்லும்போது, குறுந்தரிப்பு (comma) குறித்து வந்த உதாரணம் –

இந்தியப் படைகள் வந்தன, ஒட்டுண்ணிகளும்.

இங்கே விசையைத் தட்டினார், அங்கே குண்டு விழுந்தது.

விளக்கக் குறி ( colon 🙂 பற்றிச் சொல்லும்போது :
இன ஒடுக்கலுக்கெதிராகப் போராடப் புறப்பட்டோம் : ஏன் போராடுகிறோம் என்று இப்போது மறந்து விட்டோம்.

படியுங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன