என்னைப் படித்து வாழும் தலைமுறை

நீள் பட்டியல்களும், குறும் பட்டியல்களும் பட்டியலாளரின் போலியான வாசக அனுபவ விரிவைக் கேட்பவர்களுக்கு உணர்த்தவே தொடுக்கப் பட்டவை. பட்டியலில் இடம் பெறும் நூல்களின் ஆசிரியர்கள் முக்கியமில்லை. எண்ணங்களும் கற்பனையும் பெருவெளியில் மிதந்து கொண்டிருப்பவை. மனதை உயர்த்தி அவற்றைக் கைகொண்டு இன்னொரு எழுத்தாளர் இதே படைப்பை இதனினும் உன்னதமாக உருவாக்கியிருக்க முடியும். பட்டியல்கள் நிலையானவை அல்ல. தொடுக்கும்போதே மாறுவதே நல்ல பட்டியல். Catalogues are never the ultimate. They are always transient.

இல்லாத எழுத்தாளர்களின் எழுதாத புத்தகங்கள் வசீகரமானவை. நான் அவற்றை எனக்குப் பிடித்தவற்றின் பட்டியலில் கடந்த ஐந்து வருடமாகச் சேர்த்து வருகிறேன். அந்த நூல்களின் தேர்வு பலரையும் திருப்தியடையச் செய்கிறதை மகிழ்ச்சியோடு கவனிக்கிறேன். இலக்கியம் ஏற்படுத்தும் களிபேருவகையைப் புறக்கணிக்க வேண்டியதில்லை.

எல்லாப் பட்டியல்களிலும் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெகுளித்தனமானது. இல்லாத பெயர்கள் இன்னொரு பட்டியலில் ஏறட்டும். ஆயிரமும் அதற்கு மேலும் பட்டியல்கள் மலரட்டும்.

உங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உங்கள் படைப்புகள் இருக்க வேண்டும் என்பதால், நாலு நாவலாவது எழுதிவிட்டு பட்டியல் போட வாருங்கள். மூன்று போதும் என்று நீங்கள் நினைத்தாலும் சரியே.

மரண இரங்கல் கட்டுரை துக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பது. இன்னார் பிறந்து இத்தனை நாள் இருந்தார் என்பதை அறிந்து கொள்ளும் துன்பமும் அவர் இப்போது இல்லை என்பதில் எழும் பெருத்த சந்தோஷமும் ஆகும் அது.

எழுத்தாளர்கள் நிரந்தரமாக இறந்து போவதில்லை. காலமான படைப்பாளிகள் தேவைப்படாத போது எழுப்பி நிற்க வைக்கப்பட்டு, கல் எறிந்து மூக்கும் முகமும் சிதைக்கப்பட்டு திரும்பப் புதைக்கப் படுவது வாடிக்கை.

யோகம் ஒரு மன நிலை. போகம் இன்னொரு மன நிலை. யோகத்துக்குள் போகம் உணர்ச்சிப் பெருக்கு மேவுதலால் அதீதமானது. போகத்துக்குள் யோகம் பெரும் ஞானிகளுக்கு வாய்க்கலாம். என் கதாபாத்திரங்களுக்கு அது சித்தியாகும். எனக்கு இல்லை.

நீங்கள் உதாசீனப்படுத்தினாலும், இப்படி ஒருவன் எழுத வரவே இல்லை என்று பாவனை காட்டி என் இருப்பை நிராகரித்தாலும் நான் எழுதிக் கொண்டே தான் இருப்பேன். உங்கள் சந்ததி உங்களைப் படிக்காது. என்னைப் படித்து வாழும்.

சிறந்த பத்து உலக எழுத்தாளர்கள், சிறந்த ஏழு இந்திய சமையல்காரர்கள், சிறந்த எட்டு ஐஸ்லாந்து ஓவியர்கள், சிறந்த ஒன்பது ஆஸ்திரேலியா பட்டியல்காரர்கள், சிறந்த ஆறு கொலம்பிய சவ அடக்க நிர்வாகிகள் இன்ன பிற. கிளி ஜோசியக்காரன் கூண்டு திறந்து வெளிவிடும் கிளி கொத்த எடுக்க வேண்டிய ஏடுகளின் வரிசை இல்லை இதெல்லாம்.

பழைய தில்லியில் மொகலாய வாடை இன்னும் நீங்காத இருட்டுத் தெருக்களில் ஓர் ஆப்பிரிக்க இந்திய எழுத்தாளர் தன் ஒற்றை இரவுத் துணையைத் தேடினார். ஏன் என்ற கேள்வியும், இதற்காகத்தான் என்ற பதிலும் அவரிடம் இல்லை. அறைக்குள் மர அலமாரியில் தன் கைக்கடியாரத்தைப் பாதுகாப்பாகப் பூட்டிய பின்னரே அவர் படி இறங்கிப் போனார். இணை விழைச்சலும் இந்திய நாவலும் என்ற தலைப்பில் அடுத்த சர்வதேச இலக்கிய அரங்கில் பேசத் தயாரான தீவிரம் அவருடைய இயக்கத்தில் தெரிந்தது.

இயக்கம் நிலைத்தல் மீண்டும் துவங்க. துவங்குவது மீண்டும் நிலைக்க. இயக்கமும் இயங்க முற்படுவதும் வாழ்க்கை. கேளிக்கைகள் அவற்றின் முடிவையே எப்போதும் நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன. விழைவு வாழ்க்கையாகிறது. விழைவு வாழ்வின் ஒற்றை நோக்கமாகிறது. விழைவு எண்ணமாகிறது. விழைவு தவிர்த்த உலகில் வெறுமை அடர்ந்து நிற்கிறது.

உழைப்பு, ஆயுள், நேரம், எண்ணம், ஆசை, விழிநீர், உணவு, நீர் என அனைத்தும் விரயமாகும் சூழலில் நான் தனியாகப் பயணம் செய்கிறேன். என் திசைகளை வகுத்ததும் எல்லைக் கற்களை நாட்டியதும் நான் தான். பயணத்தின் ஊடாகத் திசைகளை மாற்றுகிறேன். எல்லைக் கற்களையும் திசைகாட்டிப் பலகைகளையும் பறித்து வீசுகிறேன். போவது மட்டும் முக்கியம். திசைகளும் எல்லைகளும் அல்ல.

(வைத்தாஸ் இக்வானோ ரெட்டி – அச்சுதம் கேசவம் நாவலில்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன