New: Era Mu writes 4 : அருண் கொலட்கர் – மறு பார்வையில்

அருண் கொலட்கர் ஆங்கிலம் மற்றும் மராட்டியில் கவிதை எழுதிய இருமொழிக் கவிஞர். அவருடைய அனைத்து ஆங்கிலக் கவிதைகளையும், கவிஞரும், இலக்கிய விமர்சகருமான அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா தொகுத்து Arun Kolatkar Collected Poems in English என்ற புத்தகமாக்கியிருக்கிறார். இங்கிலாந்து (நார்த் அம்பர்லேண்ட்) பதிப்பு இது.

அருண் கொலட்கரின் இந்த மொத்தத் தொகுப்பைப் படிக்கும் போது அவருடைய கவிதைப் பெருவெளியும், இலக்கியத் தேடலும், கவிதையும் வாழ்க்கையும் பாதித்து வழி நடத்திப் போன அகப் பயணத்தின் சுவடுகளும் புலனாகின்றன.

வாழ்ந்த நாட்களில் பாதிக்கு மேலாக உத்தியோகம் இல்லாமல் இருந்திருக்கிறார் அந்தக் கவிஞர். நல்ல ஓவியரும் கூட அவர். 1956-ல் வேலை தேடி மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து, ஓராண்டு தங்கியிருக்கிறார். தாம்பரம் Ground Training School, Air Force Station மத்திய அரசு அலுவலகத்தில், இளம்நிலை ஓவியராகப் பணியில் சேரும் எதிர்பார்ப்போடு சென்னை வந்தவருக்கு அந்தப் பணி கிடைக்கவில்லை. எனினும் மனம் தளராமல் மோர்ஸ்கோட் (தொலைத் தொடர்பு -தந்தி மூலம் தகவல் அனுப்புவதற்கான குறியூட்டு மொழி) கற்று அஞ்சல் துறையில் தந்தியாளர் (telegraphist) ஆகப் பணி கிட்டுமா என்று முயன்றிருக்கிறார். அதுவும் கிடைக்கவில்லை. மண்பானை மேல் ஓவியம் வரைந்து விற்க முயன்றிருக்கிறார். தோல்வி. சென்னையில் அந்தக் காலகட்டத்தில் அவர் பிறமொழிக் கவிஞர்களைச் சந்தித்துக் கலந்து பழகியிருக்கிறார். ஆனாலும் ஆச்சரியம், இவர்களில் ஒரு தமிழ்க் கவிஞர் கூட இல்லை. ஸ்ரீ ஸ்ரீ, ஆருத்ரா, பைராகி, கோரா சாஸ்திரி என்று அவர்கள் அனைவரும் தெலுங்குக் கவிஞர்கள்!

மும்பை திரும்பி நிலையில்லாத உத்தியோகங்களில் இருந்து, விலகி, மற்றொன்றில் சேர்ந்து வாழ்க்கை நடந்திருக்கிறது. பெப்டிக் அல்சரும், குடிப் பழக்கமும் கூடவே தொடர்ந்திருக்கிறது.

இத்தனைக்கும் இடையே ஜெஜூரி கவிதைகள் தொடங்கி வைக்க அவருடைய ஆங்கிலக் கவிதைப் பயணம் 1960-களில் தொடங்கி இருக்கிறது. 1974-ல் வெளிவந்த அந்தக் கவிதைத் தொகுப்பால் வெகுவான, ஆங்கில இலக்கியப் பெரும் பரப்பு சார்ந்த அடையாளம் காணலும், அங்கீகாரமும் கிடைக்கப் பெறுகிறார். தாய்மொழியில்லாத ஆனால் இயல்பாகப் புழங்கும் ஒரு மொழியில், புதுக் கவிதை என்ற புது மரபாக எழுந்து வரும் இலக்கிய வடிவத்தில், புதியவர்களுக்கே உரிய உற்சாகத்தோடு எழுதப்பட்ட கவிதைகள் அவை. காண்டோபா எனும் வேடர் தெய்வம் உறையும் ஜெஜூரி தலத்துக்கு அருண் கொலட்கர் தன் சகோதரரோடு போன யாத்திரை என்ற நிகழ்வை அடிநாதமாகக் கொண்டு, அங்கதமும், மரியாதையின்மையும், பாசாங்கற்ற தன்மையும், வடிவச் செறிவுமாக பல தளங்களில் வெற்றி பெற்ற தொகுப்பு ஜெஜூரி.

ஜெஜூரியில் 1960-களில் தொடங்கிய கொலட்கரின் ஆங்கிலக் கவிதை யாத்திரை, உரைநடைக்கு வெகு அருகில் வரும் மொழிதல், உருவ அமைப்பு கொண்டு அதே நேரத்தில் அந்த நெகிழ்வுக்குள் புதைந்திருக்கும் ஒழுங்கமைதி பலமான பின்புலன் அமைக்க, 2004-ல் வெளிவந்த காலாகோடா கவிதைகளோடு நிறைவு பெறுகிறது. காலாகோடா கவிதைகளின் அசாதாரணமான உரையாடல் தொனி, வாசகனோடு கவிஞருக்கு கவிதையின் முதல் வரியிலேயே ஏற்படும் இணக்கம் (bonding) ஆகியவை கைவரப் பெற்ற கவிஞர்கள் அபூர்வம்.

ஜெஜூரிக்கும் காலாகோடா கவிதைகளுக்கும் இடைப்பட்ட நெடிய காலகட்டத்தில் அவர் ஆங்கிலக் கவிதை உருவத்தில் நிறையச் சோதனைகள் செய்து பார்த்திருக்கிறார். கவிதை மொழியை வலிந்து மிகவும் நெகிழ்த்தி, வேண்டுமென்றே கூறியது மீண்டும் கூறி, சொற்கோவையில் தாளக் கலைஞர் போல விதவிதமாகச் சேர்த்துப் பிரித்து மீண்டும் வேறொன்றாகப் புனைந்து பார்த்திருக்கிறார். இவற்றில் பெரும்பான்மையும் வெற்றி பெற்றவையோ என்னமோ, ரசிக்கத் தகுந்தவை. மாதிரிக்கு இது.

விருதுகளுக்குப் பல பயன்கள் உண்டு
————————————-

விருதுகளுக்குப் பல பயன்கள் உண்டு
அவை விமர்சகர்கள் வாயை அடைக்கும்
அறிவிலிகளை நம்ப வைக்கும்
சிலர் உங்கள் மீது கொண்ட நம்பிக்கையை
உறுதிப் படுத்தும்
உன்னதத்தைத் தேடும் புரவலர்களின்
முழுமுனைப்பை அடிக்கோடிடும்

விருதோடு வரும் பணம்
எப்போதும் கைச்செலவுக்காகும்
காசு வரவு இல்லாமல்
தத்தளித்துத் தடுமாறும் கவிஞர்களுக்கு
எதிர்பாராத நிம்மதியைக் கொண்டு வரும்

விருதுகள் கவிஞர்களின் சவப்பெட்டி மேல்
அடித்த வெள்ளி ஆணிகளும் கூட

விரைவாக விடைபெற்றுப் போகாமல்
பல காலமாகப் பிடிவாதமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்த
கவிஞர்களைப் புதைக்க
விருதுகள் நேர்த்தியாக வழிவகுக்கும்

இன்னொரு கோணத்தில் பார்த்தால்
புதைக்கப் பட்டாகி விட்டது என்பதாலேயே
எழுதுவதை நிறுத்தி விட
எந்தக் கவிஞனுக்கும் கடப்பாடு இல்லை

என் சவச் சடங்கு நிர்வாகிகளுக்கும்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கும்
விருதுக் குழு தேர்வாளர்களும்
என் மனமார்ந்த நன்றி
எனினும் அவர்களை எச்சரிக்கிறேன்
என் சிறந்த படைப்பை நான் இன்னும் எழுதவில்லை

என் சமாதிக்குள்
நிறைய எழுது பொருட்களை நான்
என்னோடு புதைத்திருக்கிறேன்
இனி வரும் காலம் முழுக்க எழுத
அவை போதும்

திரு அக்பர் பதம்ஸி
மற்ற என் இதர சக சமாதியாளர்கள் எல்லோருமே
இப்படியான முன்னேற்பாடோடு இருக்கிறார்கள்

அனைவருக்கும்
நன்றி

(ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியாக்கம் – இரா.முருகன்)

(1999 பேங்க் ஆஃப் இந்தியா இலக்கிய விருது அருண் கொலட்கருக்கு அளிக்கப் பட்டது. அக்பர் பதம்ஸி ஓவிய விருது பெற்றார்)

இரா.முருகன்
22.4.2017

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன