New : Era.Mu writes – 3 விலாஸ் சாரங்க் சிறுகதைகள்

உங்களுக்கு அரசூர் வம்சம் நாவல்களின் மேஜிகல் ரியலிசம் பிடித்திருந்தால், விலாஸ் சாரங் எழுதிய ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பான The Women in Cages கட்டாயம் பிடிக்கும்.

ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு வாசிப்பனுபவம் உண்டென்றால் விலாஸின் கதைகளில் அமிழ்ந்து அதே வாசக அனுபவம் காண்பீர்கள்.

ரோமன் போலன்ஸ்கியின் தி ரெபல்ஷன் திரைப்படத்தை ரசித்தவர்கள், இந்திய இலக்கியத்திலும் மரபார்ந்த நாட்டிய வகைகளிலும் மிக அபூர்வமாகக் காணக் கிடைக்கும் பீபஸ்த ரசம் என்ற அருவறுப்பு ஒரு படைப்பாக்கக் கூறு என்று கருதுகிறவர்கள் என்றால் இந்தப் புத்தகம் கையில் கிடைத்தால், படித்து விட்டுத்தான் கீழே வைப்பீர்கள்.

இரண்டு தலைமுறைக்கு முந்திய தமிழ்ச் சமுதாயம் மராத்தி எழுத்தாளர் வி.எஸ்.காண்டேகரின் புதினங்களை வாயோயாது பாராட்டிக் கொண்டிருக்க, மராட்டி கலை-இலக்கியம் புலிப் பாய்ச்சலாக முன்னே சாடி, வீரியமிக்க தலித் எழுத்தாகவும், விஜய் டெண்டுல்கர், மகேஷ் எல்குஞ்ச்வர் போன்றோரின் மேடை மரபைப் புரட்டிப் போட்ட நாடகங்களாகவும், அருண் கொலட்கர், திலீப் சித்ரே, குஸுமகராஜ் போன்றோரின் புத்தலைக் கவிதைகளாகவும் உருவெடுத்துப் பிரவகித்திருக்கிறது. கவிதை, கதை, நாடகம் என்று பன்முகப் படைப்பாற்றலோடு பல மராட்டிப் படைப்பாளிகள் உண்டு. முக்கியமாக விலாஸ் சாரங்க். மிக வித்தியாசமான எழுத்தாளர்.

அவருடைய கதைகள் எல்லாவற்றிலும் ஒரு பொதுவான பாத்திரம் உண்டு. எல்லாப் பருவ காலங்களிலும், பகலிலும், இரவிலும் உயிர்த்தும், மடிந்தும், உறங்கியும், பாதி விழித்தும் இருக்கும் மாநகரமான மும்பாய் தான் அது.

அசாதாரணமான கதைக் களன்கள் அடுத்தடுத்து வந்து வாசகரை ஆட்கொள்வது விலாஸ் சாரங்க் கதைகளில் சர்வ சகஜமானது. சிவாஜி பூங்காவை அடுத்த கடற்கரைப் பகுதிக்குக் காதலியுடன் போகும், மூத்திரம் போக நேரமில்லாமல் அடக்கிக் கொண்டு போகும் கதாநாயகன், அதே போல கதாநாயகி, காதலர்கள் இந்தப் பக்கம் ஒதுங்க, நீண்ட சுவருக்கு அப்புறம் மயானத்தில் எரியூட்டக் கொண்டு வந்த பிணம், அங்கே கூட்டமாக வந்து, சுவரோரம் சிறுநீர் கழிக்க வருகிறவன், இவனை அடையாளம் கண்டு, ‘என் அம்மா இறந்து போனாள். அவளை தகனம் செய்ய வந்திருக்கோம்’ என்று அற்ப சங்கை தீர்த்து வந்தவன் பேசுவது என்று ஒரு கதை நடக்கும்.

பார்சி இனத்தவர் இறந்தவர் உடல்களைக் கழுகுகள் உண்ண ஏற்றி வைத்திருக்கும் அமைதிக் கோபுரம், அதன் பக்கத்து நடைபாதையில் வசிக்கும் பிச்சைக்காரன், அவனோடு நட்புக் கொண்டு புது மாமிசம் (எங்கிருந்து என்று சொல்ல வேண்டியதில்லை) அவ்வப்போது அவனுக்குக் கொண்டு வந்து போடும் காக்கை, கூடலின் போது மலம் கழித்து, காசு கொடுத்து வந்தவனால் தாக்கப் படும் வயதான வேசி, இலக்கியப் பத்திரிகைகளில் நூல் விமர்சனம் எழுதி, உப தொழிலாகப் பிச்சைக்காரர்களைத் துரத்திச் சென்று பிச்சை எடுக்க அனுமதி தரும் சிண்டிகேட்டின் சார்பில் தினசரி கமிஷன் வசூலித்து அந்த அமைப்பின் தலைவருக்குத் தவறாமல் செலுத்தும் இலக்கிய விமர்சக – பிச்சைக் கமிஷன் ஏஜெண்ட் என்று பாத்திரங்கள்.

ஒரு விநாயக சதுர்த்திக் கதையில், விநாயக சதுர்த்தி முடிந்து கடலில் கரைக்கப் பிரம்மாண்டமான ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பிள்ளையார்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ரதங்களில் இருந்து சாடிக் குதித்து ஓடிப் போகிறார்கள்.

காந்தி ஜெயந்தி முற்பகலில் காமதிபுரப் பெண் ஒருத்தி வாடிக்கையாளர் தேடி நிற்க, அவளைத் தேடி வரும் பத்திரிகைக்காரன் ஊர் விஷயம் உலக விஷயம் பேசுகிறான். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒரு ஐரோப்பிய எழுத்தாளர் தன் புத்தகத்தை ஐரோப்பிய விபச்சாரிகளுக்குக் காணிக்கை ஆக்கியது பற்றித் தான் எழுதியதாகச் சொல்கிறான். ‘அந்த ஆளு இங்கே வந்தா நான் அவருக்கு ஃப்ரீ சர்வீஸ் தருவேன்’ என்கிறாள் அவள்.

நேப்பாளத்தில் இருந்து வந்த இன்னொரு காம்திபுரப் பெண் தனக்குத் தெரிந்த யோகி ஒருத்தரை இமாலயத்தில் இருந்து வரவழைத்து மந்திர தந்திரம் செய்து உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட அந்தரங்க உறுப்புகள் முளைத்து வர வழி செய்கிறாள். இடுப்புக்கு மேல் அடுக்கப்பட்ட உபரி உடல் பாகங்கள் அவை. எல்லாவற்றுக்கும் கஸ்டமர்கள் வருகிறார்கள். நின்றபடியே சேவை தர, வந்தவர்கள் உபயோகத்துக்காக உயரமான மர ஸ்டூல்கள்… காசு கொட்டுகிறது இவளுக்கு. அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் போல் ஆண்மையற்றுப் போக, வாணிபம் முடிகிறது. தேவேந்திரன் அவள் மேல் இரக்கம் கொண்டு கடைசி கஸ்டமராக வர, அவனிடம் வரம் கேட்கிறாள் – பெண்ணுறுப்புகளுக்களை எல்லாம் கண்களாக மாற்றி விடு என்கிறாள். வருகிறவர்கள் போகிறவர்களை குற்றம் புரிந்தவர்களாக உணர வைத்தபடி அந்தக் கண்கள் விழித்தபடி இருக்கின்றன.

விலாஸ் சாரங்க் அவசியம் படிக்கப்பட வேண்டிய படைப்பாளி.

இரா.முருகன் 20.4.2017 வியாழக்கிழமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன