New: Era.Mu writes – 2 : உரைக்கு ஓர் உரை

வாசகசாலை நடத்திய சுஜாதா தினக் கூட்டத்தில் நான் சொல்ல முற்பட்டது சரியாகப் போய்ச் சேரவில்லை என்று தெரிகிறது.

என் உரையின் சாரம்

1) வாசிப்பது போல பாடுவது, பாடுவது போல் வாசிப்பது என்று ஒரு படைப்பாக்க வடிவத்தின் தனித் தன்மைகளை மற்றொன்றில் பொருத்திப் பார்ப்பது மரபிசையில் வெற்றி பெறலாம். கவிதை போல் கதை எழுத முற்படாதீர்கள் (கணையாழியின் கடைசிப் பக்கம் பத்தியில் என் முதல் சிறுகதைத் தொகுப்பு தேர் குறித்து சுஜாதா எழுதியது)

2)ஜம்ப் கட் உத்தியை அத்தி பூத்தாற்போல் கையாண்டால் போதும். நான்கைந்து இழையாக ஒலி – ஒளி – எண்ணம் என்று சிதறல்களை அடுக்கிப் போகும்போது எதை / யாரை track செய்வது -பின் தொடர்வது என்று வாசகருக்குக் குழப்பம் ஏற்படலாம். (தனி உரையாடலில் சுஜாதா எனக்குச் சொன்னது – தேர் தொகுதியை முன்வைத்து.

3) கதை முடிந்த பிறகு தொடர வேண்டாம் (என் ஆதம்பூர்க்காரர்கள் சிறுகதைத் தொகுப்புக்கு சுபமங்களாவில் மதிப்புரை எழுதியபோது சுஜாதா குறிப்பிட்டது). இது பழக்கத்தில் தான் கைவரும். எனவே எழுதிப் பழகுக.

4) லேசான போன்ற பிரயோகங்களைக் கூடிய மட்டும் தவிர்க்கலாம். சீரான அனுபவப் பகிர்வுக்கு இந்த லேசான என்ற பதம் இடையூறாக நிற்க வாய்ப்பு உண்டு. கூடியவரை quantify செய்யவோ, உதாரணம் காட்டிப் போகவோ முயற்சி செய்யலாம் (என் ‘முதல் ஆட்டம்’ சிறுகதைத் தொகுதி பற்றி குமுதத்தின் சுஜாதா எழுதிய சிறு மதிப்புரை மற்றும் தனி உரையாடலில் அவர் குறிப்பிட்டது)

5) தனித்துவமாகத் தொடங்கும் கதைகள் வெற்றியடைய வாய்ப்பு உண்டு (என் ‘உத்தராயணம்’ சிறுகதையைத் தனக்குப் பிடித்த 10/20 சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டதற்கு, தனி உரையாடலில் அவர் சொன்ன காரணம்)

6) தமிழ் உரைநடையில் மரபுத் தொடர்ச்சி உண்டு. முந்திய தலைமுறை எழுத்தாளர்களின் பாதிப்பு இயல்பாக அமைந்து அதன் மேல் புது உரைநடையை எடுத்துச் செல்ல வேண்டும் (என் நாவல் அரசூர் வம்சம் குறித்து குமுதத்தில் அவர் எழுதியது)

7) இதெல்லாம் உருவம், உத்தி பற்றிய குறிப்புகள். உள்ளடக்கம் பற்றியதில்லை.

இரா.முருகன்
19.4.2017

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன