New : Era Mu writes 1 : கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் தொகுப்பைப் பலர் பல விதமாக நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்குக் கணையாழியில் கட்டுரையாக வந்தபோது உட்புகுந்து புத்தகத்திலும் (முதல் தொகுப்பில்) ஏறிய அச்சுப் பிழைகளாக நினைவு நிலைத்திருக்கிறது.

பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே என்ற சிவவாக்கியர் பாடல் வரியை சுஜாதா ஒரு தடவை மேற்கோள் காட்ட அது பச்சை மாலும் ஈசலும் பரந்ததே சிவாயமே என்று அச்சில் வந்திருந்தது. ஈசனை ஈசல் ஆக்கிய அச்சு இயந்திரத்தின் திருவிளையாடலைப் பற்றி அடுத்த மாதம் அவர் கடைசிப் பக்கத்தில் விதந்தோதியிருந்தார்.

தாகம் படத்தில் கண்பார்வை இழந்த கதாநாயகனாக வரும் முத்துராமன் தெருவைக் கடக்கும் காட்சி பார்வையாளர்கள் குறுக்கீடு இல்லாமல் படமாக்கப்பட்டதை சுஜாதா கடைசிப் பக்கத்தில் சிலாகித்திருந்தார். Zoom முறையில் படமாக்கப் பட்டதால் அந்தக் காட்சி இயல்பாக அமைந்ததாகக் குறிப்பிடுவார் அப்போது.

கணையாழி கம்பாசிட்டராக இருந்த முதியவர் வைதீஸ்வரன் கவிதையில் காகித சேதியாகத் திரும்பி வருவார் என்று ராணுவ வீரரின் மரணத்தைப் பாடியதை காகித சோதியாகத் திரும்பி வருவார் என்று கவிதைக்குள் கம்பாசிட்டர் கவிதை எழுதியவர். அவர் ZOOM என்பதில் M என்ற இறுதி எழுத்தை நீக்கி, மிச்சமான ZOO-வை 200 என்று எண்ணாக்கி விட, சுஜாதா 200 முறையில் படமாக்கப் பட்ட காட்சியைப் பாராட்டியதாகப் பதிவாகி இருந்தது.

புத்தகத்திலும் (நாகையில் ஒரு பதிப்பகம் வெளியிட்ட முதல் பதிப்பு அது) பச்சை மாலும், ஈசலும், 200 முறையில் படமாக்குதலும் அப்படியே வந்திருந்தது. அடுத்த பதிப்புகளில் பிழை மரபு காக்கக் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

இரா.முருகன்
18.4.2017
(தினசரி தொடரக் கூடும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன