New Posting : Asokamithran’s foreword for my first book (1989)என் முதல் நூல் ‘தேர்’ சிறுகதைத் தொகுப்பு- அசோகமித்திரன் முன்னுரை

 

 

 

 

 

என் முதல் நூலான ‘தேர்’ சிறுகதைத் தொகுப்புக்கு திரு அசோகமித்திரன் வழங்கிய முன்னுரை. எழுதிய தினம் நவம்பர் 24, 1989

முருகனின் சிறுகதைகள்

ஐம்பதாண்டு காலத் தமிழ்ப் புனைகதைப் போக்கைத் திரும்பிப் பார்க்கும்போது ஓர் உண்மை தெரிகிறது. நாவல்களை விடச் சிறுகதைகள் தற்கால வாழ்க்கையின் பல அம்சங்களைப் பரிசீலித்திருக்கின்றன. ஆரம்ப நாட்களிலேயே மிக நல்ல கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன. சிறுகதை அநேகமாக நூற்றுக்கு நூறு பத்திரிகைப் பிரசுரத்தைச் சார்ந்தது. இன்று பத்திரிகைகள் ஏராளமாகப் பெருகியிருப்பதால் சிறுகதைகளும் எண்ணிக்கையில் ஏராளமாகப் பெருகி இருக்கின்றன. சிறுகதை எழுதுவதில் ஒரு தொழில்முறைத் தேர்ச்சி வலுவாகவே ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சிறந்த சிறுகதைகள் என்று கூறக் கூடியவை எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ஐம்பதாண்டுகள் முன்பிருந்ததை விட அதிகமாகப் போனதாகத் தெரியவில்லை.

எந்தக் கலையை எடுத்துக் கொண்டாலும் ஒரே காலகட்டத்தில் இரு மேதைகள் இருக்க முடியாது என்கிறார்கள். சிறந்த கதைகள் விஷயத்திலும் இது பொருந்துமா/

ஆனால் நல்ல கதைகள் நிறையவே எழுதப்படுகின்றன. ஒரு காலத்தில் இவை எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோது எல்லா நல்ல கதைகளுமே சிறந்த கதைகளாக நினைக்கும் சூழ்நிலை இருந்தது. ஐம்பதாண்டுகள் முன்பு எழுதிய எழுத்தாளர்கள் பற்றிக் கூறும்போது அவர்கள் எப்போதுமே சிறந்ததாகவே எழுதியது போன்று நினைக்கப்படும் போக்கும் இன்றும் நிலைக்கிறது. ஆனால் அவர்களும் சில சிறந்த கதைகளுக்கு நடுவில் நல்ல கதைகளும் சுமாரான கதைகளும் மோசமான கதைகளும் எழுதியிருக்கிறார்கள். அம்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரு பெரிய வேறுபாடு அவர்களுடைய படைப்பிலக்கியத்தின் பின்னணியில் அயல் இலக்கியங்களின் பரிச்சயத்தை உணர முடியும், இன்றையப் படைப்பாளிகளின் கதைகளில் இத்தகைய பின்னணி இல்லவே இல்லை என்றுகூடக் கூறி விடலாம்.

இது பற்றி இவ்வளவு கூறிவிட்டு முருகனின் சிறுகதைகளிலும் அயல் பின்னணி இல்லை என்று எடுத்துச் சொல்வதற்குக் காரணம் அவருடைய சிறுகதைகளில் காணப்படும் வடிவமும் நடையும்,

தமிழ்ப் புனைகதைகளின் பரிணாமத்தில் அவற்றில் இன்று காணப்படும் உள்ளடக்க வளத்திற்கு இணையாக வடிவம் மற்றும் நடையில் வளமேற்படவில்லை என்று தான் கூற வேண்டும். நாற்பதுகளில் நிகழ்ந்த வடிவ மற்றும் நடைப் பரிசோதனைகள் கதைகளின் எண்ணிக்கை பெருகி இருக்கும் இன்று தொடரப்படவில்லை. பரிசோதனைகள் என்பவை வெற்றிகரமாக முடியும் போதுதான் எடுத்துக்காட்டுக்குப் பயன்படுகின்றன. இன்றைய நல்ல மற்றும் சிறந்த கதைகள் முப்பது நாற்பது ஆண்டுகள் முன்பு நிகழ்த்திய வெற்றிகரமான வடிவ மற்றும் நடைப் பரிசோதனைகளைத்தான் அடித்தளமாகக் கொண்டிருக்கின்றன.

முருகனின் சிறுகதைகள் வடிவ மற்றும் நடை ஆகிய அம்சங்களில் வெகு இயல்பான பரிசோதனைகளைக் கொண்டிருக்கின்றன. காலம், களம் இரண்டும் அவருடைய படைப்பில் மனித மனம் போலவே எப்போதும் சலசலத்துக் கொண்டிருப்பவை. மனித மனச் சலசலப்பை இதற்கு முன் பல தமிழ் எழுத்தாளர்கள் எழுத்தில் வடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். என் மனதுக்கெட்டிய வரையில் இதில் பெரிய வெற்றியடைந்தவர்கள் என்று என்னால் யாரையும் அழுத்தமாக எடுத்துக் கூற முடியவில்லை. இது கதையின் உட்பொருளைப் பற்றியது அல்ல. வடிவம். முருகன் இதில் அடைந்திருக்கும் வெற்றி, பரிணாமத்தில் வந்தது என்று கூறலாம். திரைப்படங்களில் ஆரம்ப காலத்தில் ஒரு நடிகரையோ நடிகையையோ முகம் மட்டுமோ அல்லது உடலின் ஒரு பகுதி மட்டுமோ காட்டவில்லை. அப்படித் தப்பித் தவறி வந்தபோது அதை ஒரு உத்தியாகப் பார்வையாளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று ‘ஜம்ப் கட்’ என்னும் உத்தி மிக எளிய பார்வையாளர்கலால் கூடச் சிரமமின்றி மனதில் வாங்கிக் கொள்ள முடிகிறது.

முருகனின் உரைநடையில் இந்த ‘ஜம்ப் கட்’ உத்தி வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். இது நனவோடை அல்ல. ஆனால், திட்டமிட்ட, எத்தகவலும் அனாவசியமாகப் பயன்படுத்தாத சேர்க்கை கொண்ட நடை. ஒரு காலத்தில் இந்த நடை அனைவரும் சகஜமாக ஏற்று ரசிக்கக் கூடியதாக ஆகிவிடலாம். ஆனால் இன்று இது சினிமாவில் பழகி விட்ட அளவுக்கு வாசிப்பில் ஏற்படவில்லை. முருகன் இந்த நடையை அவருடைய படைப்புகள் அனைத்திலும் விடாது பயன்படுத்தியிருப்பது அவருடைய இலக்கிய நம்பிக்கையின் உறுதியைக் காட்டுகிறது.

ஒரு சிறப்பான, கடினமான உத்தி மட்டும் சிறந்த இலக்கியத்துக்கு உறுதிமொழியில்லை. பல தருணங்களில் படைப்பாளிகள் உத்திகளில் கவனம் செலுத்துவதே அவர்களுடைய வாழ்க்கைப் பார்வையின் குறைபட்ட தன்மையை ஈடுகட்டுவதற்காகவோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஈடுகட்டுவது என்பதுகூட சரியாகாது. எந்தப் படைப்பாளியும் வாழ்க்கை தரிசனத்தைத் தவிர்த்துவிட்டு வேறு பண்புகளால் இலக்கியச் சிறப்பு பெற்றுவிட முடியாது. வெகுஜன எழுத்து பரபரப்பு மிகுந்ததாக இருந்தும் குறுகிய காலத்தில் அது அடங்கி மறைந்து விடுவது அப்படைப்பாளிக்கு உண்மையான வாழ்க்கைப் பார்வை முக்கியமில்லாமல் போய்விடுவதால் தான். முருகனுடைய கதைகள் அவருடைய உத்தி இல்லாது போனால்கூட மனதைத் தொடத் தவறாது. அவருடைய கதைமாந்தர் அசலானவர். நிகழ்ச்சிகள் உண்மை பொதிந்தவை. கதை மாந்தரில்தான் எவ்வளவு விதவிதமானவர்களை அவர் சித்தரித்திருக்கிறார்! நுணுக்கமான தகவல்களும் அனுபவங்களும் கொண்டு அவர் படைப்புக்குத் திடமூட்டும் விதம் மிகவும் சிறப்பானது. இத்தொகுப்பிலுள்ள ஒரு கதையும் தவறிப் போனதில்லை. மிகவும் தேர்ச்சி பெற்ற படைப்பாளனுக்கே இது சாத்தியம்.

சென்னை 24/11/1989 அசோகமித்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன