New : On writing my latest novel Vaaznthu POthiirE

Writing the concluding chapter of Vaznthu POthiirE was tough. I wrote 2 versions and promptly discarded them as I felt they in their tone and flow did not mesh with the body of the narrative per se.

The final version I evolved is a three-part narration, starting with a detailed discussion on conversion that gives way to the episodal narration which reaches a grand finale through the description of the conversion rites.

An excerpt from the first section – discussion about conversion
(Pandit Radhakrishna Dravid was introduced in the Haridwar chapter of the previous novel Achutham Kesavam)

பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். சகோதரி.

ராதாகிருஷ்ண திராவிடப் பண்டிதர் கொச்சு தெரிசாவிடம் சொன்னார்.

அப்படி என்றால்? கொச்சு தெரிசா கேட்டாள்.

செய்த தவறுக்கு மாற்றாகச் செய்கிற செயல். ஏற்கனவே நிகழ்ந்ததற்காக அபராதம் செலுத்துகிறது போல் இருக்கலாம். அல்லது அதன் விளைவுகள் இனியும் அண்டாமல் அகற்றி நிறுத்துகிற சடங்குகளாக இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் உடல், மனம் என்று சகலமானதையும் தூய்மைப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கை தான் பிராயச்சித்தம்.

பிராயச்சித்தம் செய்வதற்கு முக்கியமானது, ஏற்கனவே தவறு செய்திருப்பது இல்லையா? கொச்சு தெரிசா அடுத்துக் கேட்டாள்.

ஆமாம். திராவிடப் பண்டிதர் சொன்னார்.

நான் என்ன தப்புச் செய்தேன் என்று பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்?

இங்கே வருவதற்கு முன்னால் எங்கே இருந்தீர்கள் சகோதரி?

ஏன், அம்பலப்புழையில். அதற்கு முன் யார்க்ஷயர் கால்டர்டேலில்.

இல்லை, நான் அதைக் கேட்கவில்லை. எந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தீர்கள்?

எல்லா மதமும் ஆண்டவன் பற்றி ஒரே நம்பிக்கை கொண்டது தானே.

சரி, நீங்கள் எந்த வழியில் ஆண்டவனை அடைந்தீர்கள் இது வரை?

கிறிஸ்து வழியில்.

இப்போது நீங்கள் சநாதன தர்மத்தின் வழியில் அடைய ஆசைப்படுகிறீர்கள். அதற்காகப் பிராயச்சித்தம் செய்யப்பட வேண்டும்.

ஒரே இலக்கை அடையும் ஒரு பாதையில் இருந்து வேறொன்றுக்கு மாறியதற்கு ஏன் அபராதம் செலுத்த வேண்டும்?

இல்லை, சகோதரி, நீங்கள் அபராதம் ஏதும் செலுத்த வேண்டாம். சில சடங்குகளை மட்டும் செய்வித்துப் பங்கு பெற்றால் போதும். உங்களைத் தூய்மைப் படுத்துகிறவை அவை.

வேறு மதங்கள் அசுத்தமானவையா?

அப்படி நான் சொல்லவில்லையே, சகோதரி. நீங்கள் உங்களோடு சேர்த்து, இங்கிருந்து அங்கே போன உங்கள் முன்னோர்களையும் தூய்மைப் படுத்துகிறீர்கள். அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதால் இது தேவையாகிறது.
பாவம் செய்வது என்றால்?

இந்த மதத்தின் கோட்பாடுகளுக்கும் வழிமுறைகளுக்கும் எதிரான செயல்கள் அவை. நல்லவை புண்ணியங்களாகவும் அல்லாதவை பாவங்களாகவும் கருதப்படும். நீங்கள் நம்பிக்கை வைத்து இங்கே வருவதால் இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

என் முன்னோர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

முப்பத்தெட்டு சிறு பாவங்கள் உண்டு. அவற்றில் முப்பத்தி நான்காவது சிறிய பாவம், வேறு மதத்துக்குப் போனது. உங்கள் மூதாதையர் அப்படிப் போனதால் பாவம் செய்தவர்கள் ஆகிறார்கள். அந்தப் பாவம் அவர்களை உடலாலும் மனதாலும் தூய்மை குறைந்தவர்கள் ஆக்கியது.

அவர்கள் எல்லோரும் எப்போதோ இறந்து போனார்கள். இறப்பை விட இருத்தலை தூய்மைப் படுத்தும் வேறேதும் உண்டோ? தெரிசா கேட்டாள்.

ஏன் இல்லை, நல்ல நினைவுகள் சதா நம்மைத் தூய்மைப் படுத்தும் அல்லவோ சகோதரி. அல்லாதவை கறைகளை மேலும் நம்மில் பதிக்கும்,

எந்த மாதிரியான கறைகள் அவை?

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்பட்ட அழுக்குகள்.

உடல் ரீதியாக எவை?

பசுவின் மாமிசத்தைப் புசித்தல்.

நான் பசுவின் மாமிசம் சாப்பிடுவதில்லை. விருப்பம் இல்லை, அதனால் தான். விரும்புகிறவர்கள் உண்பதை நான் தடுக்க மாட்டேன்.

நீங்கள் உங்களுக்கு மட்டும் இப்போது பேசுங்கள் சகோதரி. பசு இல்லாவிட்டால் எருமை, காளை இவற்றின் இறைச்சியை உண்டிருக்கலாம். அந்தக் கறையைத் தேகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

இல்லை நான் மீனும், உலர்ந்த மீனும், ஆட்டிறைச்சியும் வழக்கமாக உண்டிருக்கிறேன். அதுவும் கறைப்படுத்துமா?

கறைப் படுத்தாது. நீங்கள் விரும்பினால், மாறி வந்த பிறகும் அவற்றை உண்ணலாம்.

நான் அவ்வப்போது ஜின்னும் டானிக்கும் பருகுவேன். அல்லது வெள்ளை ஒயின் அருந்துவேன். அதற்காகவும் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமா?

தேவையில்லை. மதுபானம் அந்தப் பட்டியலில் இல்லை. என்றாலும் பெண்கள் மது அருந்துவது உடன்பாடான செயல் இல்லை.
ஆண்கள் மது அருந்தினால் மட்டும் உடன்படுவீர்களா?

நான் மாட்டேன். இந்த அறிவார்த்தமான விவாதத்தை இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொண்டு நாம் சடங்குகளைத் தொடங்கலாமா? பண்டிதர் கேட்டார்.

இந்தச் சடங்குகளைச் செய்வதால் கறை அனைத்தும் நீங்கும் என்று சொல்கிறீர்களா?

இல்லை, உங்களைப் புதுப்பித்துக் கொள்ள உதவும் சடங்குகள் இவை. புதுப்பித்துக் கொண்ட நம்பிக்கையும், புது வாழ்க்கை முறையும் நாம் பக்குவமடைவதை இன்னும் வேகப்படுத்தும், சீராக வழிப்படுத்துமல்லவா சகோதரி?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன