New : வாழ்ந்து போதீரே நாவலும் கிரேசி மோகனும்

அரசூர் வம்சம் தவிர்த்த என் அரசூர் நாவல்களான விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இந்த மூன்றிலும் ஏதாவது ஒரு அத்தியாயத்தில் ஒரு பாடல் வரும்.

விஸ்வரூபத்தில், ஜான் கிட்டாவய்யன் மரணத் தறுவாயில் இயற்றும் கிறிஸ்துவ கீர்த்தனம் –

சிற்றின்பம் உண்டென்றால்
பேரின்பம் உண்டென்று
சற்றேனும் பார்மனமே – சிந்தித்து
உற்றதொரு பானை அரிசி
பதமென்று அறிந்திட
பற்றுவை கிறிஸ்துவில்
உற்றவர்தானே அவர்

அச்சுதம் கேசவம் நாவலில், அமேயர் பாதிரியார் படகில் செல்லும் போது பாடுவது

எறிந்ததோர் அம்பும் எழுதிய பாட்டும்
மறைந்து மறந்தது அந்தோ -திரும்ப
மரத்தினில் அம்பும் மறந்த தோழன்
சிரத்தினில் பாட்டும் இருக்கு

வாழ்ந்து போதீரே நாவலில் தெரிசா தன் முப்பாட்டனான கிட்டாவய்யனின் கீர்த்தனைகளைப் புத்தகமாக வெளியிடும்போது, அவற்றில் ஒன்றை நித்யகல்யாணி இசையமைத்துப் பாடுவது

வாகனம் தெய்வம் வழித்துணை கர்த்தன்,
போகும்நம் பாதை பரமபிதா -நீகனம்,
தன்செயலென் றெண்ணிச் சிலுவை சுமந்திட்டாய்
என்செயல் ஆனால் இறகு

இந்த மூன்று பாக்களும் நான் அந்தந்த அத்தியாயத்தை எழுதும்போது எழுதி உரைநடையினூடே இணைத்துக் கொள்ளப்பட்டவை. அந்த அத்தியாயத்தின் கதையோட்டத்துக்குப் பொருத்தமாக அமைந்தவை

இந்த மூன்றும் நான் எழுதாத பாக்கள்.

நண்பர் கிரேசி மோகன் எழுதியவை மூன்றுமே.

அத்தியாயத்தை எழுதும் தினத்திலோ அதற்கு ஒரு தினம் முன்போ மோகனின் தினசரி வெண்பாப் பொழிவில் இடம் பெற்றிருக்கும். பிரவகிக்கும் அந்தக் கவி வெள்ளத்தில் இருந்து உரிமையோடு எடுத்துச் சற்றே மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டவை.

மோகனுக்கு நன்றி சொல்லப் போவதில்லை. அடுத்த நாவலுக்கும் அவர் வெண்பா அளிக்க உரிமையோடு கோருகிறேன்.
(எழுதிடறேன் என்றார். வெற்றிகரமான அமெரிக்கப் பயணம் முடித்து இன்று காலை தான் நாடு திரும்பியிருக்கிறார் அவர்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன