New Novel : வாழ்ந்து போதீரே – பின்கதை இரா.முருகன்

வாழ்ந்து போதீரே

பின் கதை

பின் கதைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் ஏற்றெடுத்த பாதையில் சகலமான சந்தோஷம், துக்கம், அன்பு, காதல், விரோதம், நட்பு, பரவசம், ஆனந்தம் என்று தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், நிறைவடைந்தது என்று எழுதி, அரை இடம் தள்ளி எடுத்துப் போய் முடிப்பது சம்பிரதாயமும் சுவாரசியமும் என்பதால், இவர்கள் இதன் பிறகு –

வைத்தாஸ் மூன்று வருடம் பிரிட்டனில் தூதராக இருந்தபின் பிரான்சுக்கு அனுப்பப் பட்டான். அங்கே இருக்கும் போது அவன் நாட்டில் புரட்சி திரும்ப வெடித்தது. கடவுளின் மூத்த சகோதரியும், ஆடும் பறவை நிறைந்திருக்கும் முன்றில் கொண்ட மாளிகையில் வசிப்பவருமான நாட்டின் அதிபருக்கு எதிரான புரட்சி அது. அவளுடைய வளர்ப்பு மகள் எமிலி சில ராணுவத் தலைவர்களின் உதவியோடு நடத்திய அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்தது. இது அரசாங்க அறிவிப்பாகும். பதினெட்டே வயது நிரம்பிய எமிலியும் அவளுடைய கூட்டாளிகளும் வரிசையாக அணிவகுத்த பீரங்கிகளுக்கு முன் நிறுத்தப்பட்டு, அவை ஒரு சேர வெடித்து மரணமடைய விதிக்கப் பட்டார்கள். பீரங்கிக் குண்டுகள் வெடிக்கும் முன் எமிலி தன் மந்திரவாதத்தைப் பயன்படுத்தி வெறுங்கையில் இருந்து ரோஜாப் பூக்களை உதிர்த்து ஒவ்வொரு பீரங்கி மேலும் அவற்றை அழகுற வைக்கும்படி நிர்ப்பந்திக்கப் பட்டாள். ரத்தச் சிவப்பு நிறத்தில் அவள் உதிர்த்த ரோஜா மலர்களை பீரங்கிகளின் மேல் வைக்க அவளுடைய உயரம் குறைவாக இருந்ததால், அவற்றை இயக்கியவர்கள் அவற்றைப் பெற்று பீரங்கிச் சக்கரத்தின் மேல் வைத்து குண்டு எறிந்தார்கள். எமிலி இறந்த பின் அவளுடைய திறந்த வலது கையில் இருந்து இதய வடிவத்திலான சிறு சாக்லெட்கள் உதிர்ந்தபடி இருந்ததாகப் புதியதாக எழுந்த நாட்டுப் பாடல்கள் சொல்கின்றன.

வைத்தாஸ் அந்தப் புரட்சி நேரத்தில் அரசு எதிர்ப்பாளராக இனம் காணப்பட்டான். அவன் மேல் வழக்கு தொடுக்கப் பட்டு, அவன் நேரில் வராமலேயே மரண தண்டனை அறிவிக்கப் பட்டது. நான் ஏற்கனவே இறந்து போன படியால் இந்தத் தண்டனையை நிராகரிக்கிறேன் என்று அறிவித்தான் வைத்தாஸ். நந்தினி அதிபர் பதவிக்கான விலக்கல் உரிமையைப் பயன்படுத்தி அந்தத் தண்டனையை ரத்து செய்தாலும், அரசியல் அடைக்கலம் பெற்று பிரான்ஸில் தான் இன்னும் வசிக்கிறான் அவன். வைத்தாஸ் எழுதிய நாவல் சக எழுத்தாளார்களாலும் விமர்சகர்களாலும் ஜாக்கிரதையாகக் கண்டு கொள்ளாமல் விடப்படது. அவன் அடுத்த நாவல் எழுதவில்லை. பிரஞ்சில் இருந்து நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறான். இந்த நாவலை, பிரஞ்சில் இருந்து மொழிபெயர்த்தது என்று மறுமுறை வெளியிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறான். வயதானவர்களுக்கு வரும் நோய்களும் வெகுமதிகளும் அவனுக்கும் வந்து கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளிலும் அவனுக்கு நெருக்கமான சிநேகிதிகள் இருக்கிறார்கள். அவன் நாட்டில் ஆட்சி அவ்வப்போது மாற, அதற்கிடையே வந்த ஒரு அரசு அவன் எழுதாத ஒரு நாவலுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல் விருதை அளித்தது. எழுதாத கதைகள் வசீகரமானவை என்கிறான் வைத்தாஸ்.

ஃபோர்ட் பவுண்டேஷன் நிதியோடு சியாமளாவின் பாரம்பரியக் கலை ஆய்வு மைய அமைப்பு வருடா வருடம் ஸ்பான்ஸர்ஷிப் வாங்கி வண்ண மயமான அழைப்புகளோடு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடத்தி இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அதிபர்களிடம் இணக்கமாக உள்ளது. அரசுக் காரியம் ஏதும் சாதிக்கத் தகுந்த இணைப்பை உருவாக்குவதையும் சென்னைக்குக் குடிபெயர்ந்த அந்த நிறுவனம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மறைந்த அமைச்சரின் மனைவியான டாக்டர் சியாமளாவுக்கு அரசியலிலும் கலைத்துறையிலும் சர்வதேச அளவில் நண்பர்கள் உண்டு. அவள் வைத்தாஸை ஏதென்ஸில் திருமணம் செய்து கொண்டதாக ஊர்ஜிதம் ஆகாத செய்திகள் சொல்கின்றன. அவர்கள் எடின்பரோ விளிம்புக் கலைவிழா நேரத்தில் கைகோர்த்தபடி சுற்றி அலைந்ததைக் கண்டதாக அவள் மகள் ஜனனியிடம் சில நண்பர்கள் சொல்ல, யார் கை வலது, யாருடையது இடது என்று தெரியாமல் கருத்துச் சொல்ல முடியாது என்று அவள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டாள். ஜனனி, போலந்து நாட்டுத் தலைநகர் வார்ஸாவில் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருக்கிறாள்.

கற்பகம் தன் நூற்று மூன்றாம் வயதில் சென்னையில் காலமானார். அவர்களுடைய பரம்பரை வீட்டில் தான் சியாமளாவின் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்சி மையம் செயல்பட்டு வருகிறது. வீடு திலீப் மற்றும் ஜனனி பெயர்களில் உரிமை மாற்றப்பட்டுள்ளது.

சங்கரன் தன் தோழியான பிடார் ஜெயம்மா மூலம் தனக்கும் சாரதா என்ற தெரிசாவுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மனைவி வசந்தியிடம் வெளிப்படுத்த முடிவு செய்திருக்கிறான். இது எண்பத்திரெண்டாவது தடவையாக அவன் அப்படி எடுத்த முடிவு. ஜெயம்மா எப்படி இதை எடுத்துக் கொள்வாள் என்ற தயக்கத்திலேயே இதற்கு முந்தைய முடிவுக் கெடு அனைத்தும் கைக்கொள்ளாமல் போனது. அவன் வசந்திக்கு நல்ல கணவனாகவும் பகவதிக்குப் பிரியமான தந்தையாகவும் இருக்கிறான். சாரதா, மருதையனுக்கு உயிரான தாயாக இருக்கிறாள். மூன்று மாதத்துக்கு ஒருமுறை சங்கரன் கேரளம் வரும்போது சாரதா அவனை அப்பா என்றே மருதையனுக்குச் சுட்டுகிறாள். எனினும் மருதையன் அப்படிக் கூப்பிடுவதில்லை. மருதையனும் பகவதியும் சிறந்த பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

அகல்யா ஆலப்புழை மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறாள். திலீப் இரண்டு வருடம் சாரதாவின் கிட்டாவய்யன் ரெஸ்ட்ராண்டில் நிர்வாகியாக இருந்தபின், ஆலப்புழையில் சுய முதலீட்டில் ஓட்டல் நடத்தி வருகிறான். மலையாளத்தின் சுவாசிக்கும் குடும்பம் அவர்களது.

நடாஷா வாசிலிவிஸ்கி எப்போதாவது திரும்பி வந்து கேரள அச்சுக்கலை வரலாறு பற்றிய தன் ஆய்வைத் தொடர்வாள் என்ற நம்பிக்கையோடு அவளுடைய காகிதங்கள், ஒலிப்பதிவு நாடாக்கள் எல்லாவற்றையும் பத்திரமாகக் கள்ளியம்பெட்டியில் பாதுகாத்து வைத்திருக்கிறான் திலீப். உடைந்து சிதறிய சோவியத் யூனியனின் எந்தப் பகுதியில் அவள் இருக்கிறாள், என்ன செய்கிறாள் எனத் தெரியவில்லை.

முசாபர் கால்டர்டெல் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று துணை மேயராக ஒரு வருடம் இருந்தான். புது வருட வாழ்த்துகளை சாரதாவோடும் மருதையனோடும் தவறாது பரிமாறி வருகிறான் அவன்.

அமேயர் பாதிரியார் வாடிகனில் போப்பரசரின் பணியில் இருக்கும் போது ஆவி பிரிந்து ஏசுவில் உறங்கத் தொடங்கியது ஒரு ஈஸ்டர் தினத்தில். தெக்கே பரம்பில் பாதிரியார் அப்போது அவர் பக்கத்தில் இருந்தார். லெ தான்ஸ் தெ பான் என்பது அமேயர் பாதிரியார் இறுதியாக சொல்லியது. அது பிரஞ்சு மொழியில் இருந்தது. மயில் ஆடுகிறது என்பது அதன் பொருளாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன