New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 51 இரா.முருகன்

பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். சகோதரி.

ராதாகிருஷ்ண திராவிடப் பண்டிதர் தெரிசாவிடம் சொன்னார்.

அப்படி என்றால்? தெரிசா கேட்டாள்.

செய்த தவறுக்கு மாற்றாகச் செய்கிற செயல். ஏற்கனவே நிகழ்ந்ததற்காக அபராதம் செலுத்துகிறது போல் இருக்கலாம். அல்லது அதன் விளைவுகள் இனியும் அண்டாமல் அகற்றி நிறுத்துகிற சடங்குகளாக இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் உடல், மனம் என்று சகலமானதையும் தூய்மைப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கை தான் பிராயச்சித்தம்.

பிராயச்சித்தம் செய்வதற்கு முக்கியமானது, ஏற்கனவே தவறு செய்திருப்பது இல்லையா? தெரிசா அடுத்துக் கேட்டாள்.

ஆமாம். திராவிடப் பண்டிதர் சொன்னார்.

நான் என்ன தப்புச் செய்தேன் என்று பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்?

இங்கே வருவதற்கு முன்னால் எங்கே இருந்தீர்கள் சகோதரி?

ஏன், அம்பலப்புழையில். அதற்கு முன் யார்க்ஷயர் கால்டர்டேலில்.

இல்லை, நான் அதைக் கேட்கவில்லை. எந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தீர்கள்?

எல்லா மதமும் ஆண்டவன் பற்றி ஒரே நம்பிக்கை கொண்டது தானே..

சரி, நீங்கள் எந்த வழியில் ஆண்டவனை அடைந்தீர்கள் இது வரை?

கிறிஸ்து வழியில்.

இப்போது நீங்கள் சநாதன தர்மத்தின் வழியில் அடைய ஆசைப்படுகிறீர்கள். அதற்காகப் பிராயச்சித்தம் செய்யப்பட வேண்டும்.

ஒரே இலக்கை அடையும் ஒரு பாதையில் இருந்து வேறொன்றுக்கு மாறியதற்கு ஏன் அபராதம் செலுத்த வேண்டும்?

இல்லை, சகோதரி, நீங்கள் அபராதம் ஏதும் செலுத்த வேண்டாம். சில சடங்குகளை மட்டும் செய்வித்துப் பங்கு பெற்றால் போதும். உங்களைத் தூய்மைப் படுத்துகிறவை அவை.

வேறு மதங்கள் அசுத்தமானவையா?

அப்படி நான் சொல்லவில்லையே, சகோதரி. நீங்கள் உங்களோடு சேர்த்து, இங்கிருந்து அங்கே போன உங்கள் முன்னோர்களையும் தூய்மைப் படுத்துகிறீர்கள். அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதால் இது தேவையாகிறது.

பாவம் செய்வது என்றால்?

இந்த மதத்தின் கோட்பாடுகளுக்கும் வழிமுறைகளுக்கும் எதிரான செயல்கள் அவை. நல்லவை புண்ணியங்களாகவும் அல்லாதவை பாவங்களாகவும் கருதப்படும். நீங்கள் நம்பிக்கை வைத்து இங்கே வருவதால் இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

என்ன பாவம் என் முன்னோர்கள் செய்தார்கள்?

முப்பத்தெட்டு சிறு பாவங்கள் உண்டு. அவற்றில் முப்பத்தி நான்காவது சிறிய பாவம், வேறு மதத்துக்குப் போனது. உங்கள் மூதாதையர் அப்படிப் போனதால் பாவம் செய்தவர்கள் ஆகிறார்கள். அந்தப் பாவம் அவர்களை உடலாலும் மனதாலும் தூய்மை குறைந்தவர்கள் ஆக்கியது.

அவர்கள் எல்லோரும் எப்போதோ இறந்து போனார்கள். இறப்பை விட இருத்தலை தூய்மைப் படுத்தும் வேறேதும் உண்டோ? தெரிசா கேட்டாள்.

ஏன் இல்லை, நல்ல நினைவுகள் சதா நம்மைத் தூய்மைப் படுத்தும் அல்லவோ சகோதரி. அல்லாதவை கறைகளை மேலும் நம்மில் பதிக்கும்,

எந்த மாதிரியான கறைகள் அவை?

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்பட்ட அழுக்குகள்.

உடல் ரீதியாக எவை?

பசுவின் மாமிசத்தைப் புசித்தல்.

நான் பசுவின் மாமிசம் சாப்பிடுவதில்லை. விருப்பம் இல்லை, அதனால் தான். விரும்புகிறவர்கள் உண்பதை நான் தடுக்க மாட்டேன்.

நீங்கள் உங்களுக்கு மட்டும் இப்போது பேசுங்கள் சகோதரி. பசு இல்லாவிட்டால் எருமை, காளை இவற்றின் இறைச்சியை உண்டிருக்கலாம். அந்தக் கறையைத் தேகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

இல்லை நான் மீனும், உலர்ந்த மீனும், ஆட்டிறைச்சியும் வழக்கமாக உண்டிருக்கிறேன். அதுவும் கறைப்படுத்துமா?

இல்லை, நீங்கள் விரும்பினால் மாறி வந்த பிறகும் அவற்றை உண்ணலாம்.

நான் அவ்வப்போது ஜின்னும் டானிக்கும் பருகுவேன். அல்லது வெள்ளை ஒயின் அருந்துவேன். அதற்காகவும் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமா?

தேவையில்லை. மதுபானம் அந்தப் பட்டியலில் இல்லை. என்றாலும் பெண்கள் மது அருந்துவது உடன்பாடான செயல் இல்லை.

ஆண்கள் மது அருந்தினால் மட்டும் உடன்படுவீர்களா?

நான் மாட்டேன். இந்த அறிவார்த்தமான விவாதத்தை இத்தோடு முடித்துக் கொண்டு நாம் சடங்குகளைத் தொடங்கலாமா? பண்டிதர் கேட்டார்.

இந்தச் சடங்குகளைச் செய்வதால் கறை அனைத்தும் நீங்கும் என்று சொல்கிறீர்களா?

இல்லை, உங்களைப் புதுப்பித்துக் கொள்ள உதவும் சடங்குகள் இவை. புதுப்பித்துக் கொண்ட நம்பிக்கையும், வாழ்க்கை முறையும் பக்குவமடைவதை இன்னும் வேகப்படுத்தும், சீராக வழிப்படுத்துமல்லவா சகோதரி?

தெரிசா, அப்படியானால் சரி என்றாள்.

நீங்கள் இந்த மதத்தைப் பற்றி முழுக்க அறிந்திருக்கிறீர்களா?

இல்லை. இன்னும் அறியத் தொடங்கவில்லை. தெரிசா சொன்னாள்

எதற்காக மதம் மாறுகிறீர்கள்?

இங்கே வந்தபோது ஒரு திடமான நினைப்பாக திரும்பத் திரும்ப இந்த மண்ணில் என் மூதாதையர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி நானுமாகி இந்த மண்ணோடும் நீரோடும் காற்றோடும் தெய்வத்தோடும், மனுஷர்களுடனும் ஒன்றுபட வேண்டும் என்று மனதில் சுற்றிச் சுழன்று வந்தபடியே இருந்தது.

உங்கள் மூதாதையர்கள் எப்படி இங்கே இருந்தார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் சகோதரி?

என் உள்ளுணர்வு அதை எனக்குக் காட்டுகிறது. மரபணுக்களில் அவர்களின் ஒருமித்த நினைவாக எனக்குள் பதிந்திருப்பதை நான் கண்ணயரும் போது மனம் மிகச் சரியாக வாசித்து எனக்குச் சொல்கிறது.

அதில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்து மதத்துக்குப் போனதும் அது குறித்த மகிழ்ச்சியான அல்லது துயரமான நினைவுகளும் உண்டோ?

இல்லை. ஒரே ஒரு முறை என் முப்பாட்டன் அவருடைய முதுமைக் காலத்தில் நினைவு பிறழ்ந்த போது தான் இன்னும் இந்து என்று நினைத்து மற்றவர்களிடம் அதே மனநிலையில் உரையாடி, பின் நினைவு மீண்டதும் கழுத்தில் அணிந்திருந்த சிலுவையைப் பற்றிப் பிடித்தபடி உறைந்து போயிருந்தார் என்று வீட்டு வரலாற்றுத் தகவல்கள் மதிய நேரப் பேச்சுகளில் வெளிப்பட்டது உண்டு.

அவர் மதம் மாறியதற்காக மனம் நொந்து அழுதாரா?

அது எனக்குத் தெரியாது.

அந்த சூழலுக்குத் திரும்பிப் போக அந்த நிமிடம் நினைத்தாரா?

அதுவும் எனக்குத் தெரியாது. எல்லா மரபு நினைவுகளோடும் நான் திரும்பி வருகிறேன். நான் இந்தப் பாதையில் போக வேண்டும். அதுதான் மனதில் இருக்கிறது.

நாளையே வேறேதும் வழி இதனினும் சீரானதாகத் தோன்றினால் மறுபடியும் பாதை மாறுவீர்களா?

நாளை நான் பறக்கத் தொடங்கலாம். இந்த வழிகளை எல்லாம் விலக்கி, எண்ணமே சிறகாக நிலைத்த மனத்தையடைந்து, ஆன்ம விடுதலை தரும் ஆத்திகத்திலோ, பரவலான நம்பிக்கையால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்தையும் மறுப்பதில் உயிர்த்திருக்கும் நாத்திகத்திலேயோ என்னைக் கரைத்து பறந்து பறந்து இல்லாமல் போகலாம்.

இப்போது மன சமாதானத்தோடு செய்ய வேண்டிய சடங்குகளைத் தொடங்கலாமா?

நீண்ட நேரம் எடுக்குமா? தெரிசா கேட்டாள்.

நீங்கள் மனம் லயித்திருந்தால் ஒரு நிமிடத்திலும் நிறைவேறலாம். அல்லது மணிக் கணக்காக அவை நடக்கப் பங்கு பெற்று ஆற்று நீரோட்டத்தைப் பார்த்தபடி இருக்கலாம். அளவைகள் மனம் சார்ந்தவையன்றோ சகோதரி?

ராதாகிருஷ்ண திராவிடப் பண்டிதர் ஹரித்வார் ஹரி கி பாவ்ரி கங்கைத் துறையில் நிறுத்தியிருந்த வண்ண மயமான துணிக் குடைகளில் நிழலுக்கு நடந்தார்.

ஒரு குளிர் காற்று நதியோடு கூட நடந்து யுகங்களின் கதையைச் சொல்லிச் சென்றது. அது நிறைவடையாது இன்னும் இன்னும் என்று புதிது புதிதாகக் கூட்டிச் சேர்க்கும் வேகமும் அனுபவத்தின் நிதானமும் கொண்ட மகாப் பிரவாகமாக கங்கை பெருகி வந்து கொண்டிருந்தது.

இரவு மங்கும் போது அகல் விளக்குகளும், நீண்ட வெங்கல விளக்குகளும், கோல் விளக்குகளும், நின்று எரியும் தீப்பந்தங்களும், மெழுகில் வார்த்த சிறு தீபங்கள் எரிந்து கலக்கும் கனலுமாக மாறப் போவதை எதிர்பார்த்து ஆற்றின் கரைகள் மலர்ந்து கிடந்தன.

வெள்ளைக் காரர்களும், வேறே அந்நியர்களும், ஈமக் கிரியையும் முன்னோரைப் போற்றும் நினைவுச் சடங்குகளும் செய்து கடமை கழிக்க வந்த எல்லா வயது ஆண்களும், கூடவே நடந்து நடப்பித்துப் போகும் அவர்களின் அன்புக்குரிய பெண்டிரும், தில்லியில் இருந்து ராத்திரி யாத்திரை பஸ்ஸில் வந்து இன்று இரவு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அவசர அவசரமாக கங்கையையும் கரையையும் கோவிலையும் தெருவையும் முடிந்தவரை மனதிலும் கேமராவிலும் திணித்துக் கொள்ள முயன்றபடி அலைபாயும் வழிப்போக்கர்களுமாக கங்கைக் கரையில் மிதமான ஒலிகள் எழுந்து கொண்டிருந்தன.

இரவு இந்நதியை வழிபடும் போது இந்த இடமே சத்தக் கடலாக மாறிப் போகும் என்று அதைக் காணவும் கேட்கவும் கொடுத்து வைக்காத வழிப்போக்கர்களிடம் வழிகாட்டிகள் சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு மட்டும் மறுக்கப்பட்ட ஒரு பேறு என்ற குறைச்சல் முகத்தில் அழுத்தமாகத் தெரிய வந்தவர்கள் ஒரு நொடி கங்கையில் கால் நனைத்தும் கரையில் படுத்தெழுந்தும், படித்துறையில் ஓடி நடந்து கூவியும் தங்களுக்கும் இந்த வெளி உரிமையுடையது என்று யாரிடமோ நிலைநாட்டப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கங்கைக் கரையில் நான்கு பெரிய குடைகள் ஓங்கியெழுந்து நின்றன. அருகிலேயே நீலத் துணி விரித்த பரப்பில் தெரிசாவோடு வந்தவர்கள் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்கள். மதுரையில் இருந்து வந்து சேர்ந்த ஆதீனமிளகி வித்துவான் குடும்பமும், அம்பலப்புழை ஓட்டல் தொடங்கியதில் பரிச்சயமான சிலரும் இதில் அடக்கம். எம்ப்ராந்திரியும், தியாகராஜ சாஸ்திரிகளும் சிறு மர முக்காலிகளில் சிரமப்பட்டு அமர்ந்திருந்தார்கள். சர்க்கஸ் யானை மாதிரி இருக்கேனா என்று நொடிக்கொரு தடவை மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார் சாஸ்திரிகள். முக்காலியுமாச்சு எட்டுக்காலியுமாச்சு என்று சொல்லி அவருடைய அம்மா குடை நிழலில் ஓர் ஓரமாக தலைக்கடியில் தன் நார்மடிப் பட்டுப்புடவை முறுக்கித் துணித்த துணிப்பையைத் தலைக்கணையாக வைத்துப் கொண்டு அக்கடா என்று படுத்துவிட்டாள். தீபாரதனை நடக்கற போது எழுப்புங்கோடி என்று பொதுவான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து விட்டுச் சற்றே கண்ணயர்ந்தாள் அவள்.

காஞ்சிப் பட்டுப் புடவையும் தலையில் அகலமாகவும் அவசரமாகவும் தொடுத்த பூச்சரமுமாக தெரிசா அகல்யாவோடு நின்று கொண்டிருந்தாள். ரெண்டு கர்ப்பிணிப் பொண்ணுகள் நின்னு கஷ்டப்படறா, உங்களுக்கென்ன ஆசனம் என்று சாஸ்திரி மனைவி கேட்க, தியாகராஜ சாஸ்திரிகள் தான் இருந்த முக்காலியை ஒழித்துக் கொடுத்தார். தெரிசா அதில் உட்கார மாட்டேன் என்று நின்றபடி இருக்க, அகல்யா சங்கோஜத்தோடு அமர்ந்து கொண்டாள்.

திராவிடப் பண்டிதரும் அவர் மனைவியும் தெரிசாவோடும், எம்பிராந்திரி தம்பதிகளோடும், தியாகராஜ சாஸ்திரிகளோடும் அவருடைய மனைவியோடும் முதல் தடவை சந்தித்த மாத்திரத்திலேயே உற்ற சிநேகிதர்கள் ஆகிப் போனார்கள். இவர்களின் விலாசத்தைப் போன வருடம் இங்கே வந்து போன குழுவின் உறுப்பினர்களான வயோதிகர்களிடம் நடையாக நடந்து வாங்கி வந்தவர் தியாகராஜ சாஸ்திரிகள் தான். தெரிசாவுக்கு அவருடைய உதவி தேவைப் படுகிறது என்று குறைந்த பட்சம் புரிதலுக்கு வழிசெய்யும் லெட்டர் போட்டு இதை எல்லாமே பிள்ளையார் சுழியோடு தொடங்கி வைத்தவர் அவர்.

ஆலப்புழையில் ரயில் ஏறியதுமே தியாகராஜ சாஸ்திரிகளின் நட்பு வளையம் வேகமாக விரிந்து கொண்டிருந்தது. அவருடைய மனதில் எந்த வன்மமும் கோபமும் எரிச்சலும் சேராது கருணையும் கரிசனமுமாக அவர் மாறியிருந்தார். நகர்ந்து கொண்டிருப்பதும், நல்லதை எதிர்பார்த்து இருப்பதும், பச்சை விரித்த பெரிய நிலமாக, மரம் அடந்த கானகமாக, ஓங்கி உயர்ந்து சூழ்ந்து நீண்டு விரியும் மலைத் தொடராக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிவப்பு மணல் விரியும் தரிசாக, அங்கே பெய்யும் சாயந்திர மழையாக, கடல் தீரமாக, நகரச் சந்தடி மிகுந்த வீதிகளாக, அழகான குழந்தைகளாகச் சிரிக்கும் சின்னஞ்சிறு கிராமங்களாக ரயில் பெட்டியின் ஜன்னலுக்கு வெளியே சதா விரியும் வெளியும் இயக்கமும் அவரை மாற்றியிருந்தன. தேவையில்லாத ஜன்மப் பகை எல்லாம் போயொழிய சிரிப்பு முகத்தில் தாண்டவமாடியது. நேருவைக் கூட அவர் நேசிக்கத் துவங்கியிருந்தார்.

பாவம், அந்த நேருவும் தான் குடும்பத்தையும், பணம், காசு, பங்களாவையும் எல்லாம் துறந்து தேசத்துக்காக பாடுபட்டவர். ஜெயில்லே வேறே அந்த மனுஷரைப் போட்டு வதைச்சா. என்ன, பீடி சிகரெட் குடிக்கறது, பொம்மனாட்டிகளோடு உக்காந்து விருதாவா வம்பளக்கறதுன்னு சின்னச்சின்னதா சில பழக்கம்.. போறது. அதுக்காக அவரைப் பிடிக்காம போகணுமா? அவர் சொன்னதோட ஒத்துப் போகாம இருக்கலாம். அவர் மேலே எதுக்கு சேற்றை இரைக்கணும்? இன்னும் கொஞ்ச காலம் இருந்துட்டுப் போயிருக்கலாம் அந்த மனுஷரும்.

எம்பிராந்திரியிடம் சாஸ்திரிகள் சொன்னபோது எம்பிராந்திரி உறங்கியிருந்தார்.

தியாகராஜன் கண் கலங்கிய தருணமும் அந்த ரயில் யாத்திரையில் கிடைத்தது.

தெலுங்கு பேசும் பிரதேசத்தில் நாள் முழுக்க நின்று நின்று ரயில் ஊர்ந்து கொண்டிருக்க, தியாகராஜ சாஸ்திரிகளின் தாயாருக்கு கடுமையான நெஞ்சுவலியும், தலை சுற்றலும் கண்டது. நாக்கு உலர்ந்து கண் பஞ்சடைத்து இருந்த அந்த முதுபெண் ஹரித்துவார் போய்ச் சேருவதற்குள் இன்னும் பெரிய யாத்திரையாகி விடுவாள் என்று எல்லோரும் பயந்து போனார்கள்.

திலீப்பும், அகல்யாவும், தெரிசாவும் அடுத்த பெரிய ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது பக்கத்து ரயில் பெட்டிகளில் நுழைந்து டாக்டர் யாரும் உண்டென்றால் உடனே மருத்துவ உதவி தேவை என்று வேண்டிக் கொண்டார்கள். தெரிசா போன கம்பார்ட்மெண்டில் ஒரு லேடி டாக்டர் உடனே உதவ முன் வந்தார். அவர் சிஸ்டர் எலிசா கீவெர்கீஸ் என்ற சிரியன் கிறிஸ்துவ சர்ச்சைச் சேர்ந்த கன்யாஸ்த்ரி. பதனம்திட்ட பக்கம் மரமானில் வருடாந்திர மாநாடு முடித்து வந்து கொண்டிருந்த நடுவயது டாக்டர் அவர்.

இந்தப் பாட்டித் தள்ளைக்குத்தான் அசௌகரியம். அகல்யா டாக்டரிடம் சொன்னாள். டாக்டரைப் பார்த்ததும் பாட்டி கண்ணை இறுக மூடிக்கொண்டு அட்டைப் பூச்சியாக இன்னும் சுருண்டாள்.

மேல்ஜாதி பிராமண மூதாட்டியாகத் தெரிகிறார். புனித யாத்திரை வேறு போய்க் கொண்டிருக்கிறீர்கள். நான் அவரைத் தொட்டுப் பரிசோதிக்கலாமா?

அந்த கன்யாஸ்திரி சிறு தயக்கத்தோடு கேட்டார். தெரிசா இதற்கான பதில் தெரியாமல் தியாகராஜ சாஸ்திரிகளைப் பார்க்க, அவர் கேள்வி புரியாமல் விழித்தார். , உடனடியாக அகல்யா அதைத் தமிழாக்கினாள்.

டாக்டரம்மா நீங்க பராசக்தி ஸ்வரூபம். உசிரைக் காக்கணும். அதுக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை. எங்க பெரியவா சொன்னது.

மனசுக்கு அதெல்லாம் உண்டா என்று அகல்யா தெரிசாவிடம் முணுமுணுக்க, தெரியலே என்றாள் தெரிசா. அவளுக்கும் மனதில் ஓடிய கேள்வி அது

டாக்டர் எலிசா கையோடு கொண்டு வந்திருந்த மாத்திரைகளைப் பொடி செய்து தண்ணீரோடு விழுங்கத் தர, அந்த முதியவள் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு மீண்டு வந்தது. நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிறுநீர் கழிப்பது அவசியம் என்றும் டாக்டர் சொன்னார்.

ஆமா, ஆமா, உடம்பு உபாதையோடு என்னைக் கும்பிட வான்னு காசி விச்வநாதனே சொல்ல மாட்டான் என்றார் தியாகராஜ சாஸ்திரிகள். ஃபீஸ் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு அடுத்த ஸ்டேஷனில் டாக்டர் இறங்கித் தன் கம்பார்ட்மெண்டுக்குப் போக, தியாகராஜன் அவள் போன திசைக்குக் கை குவித்து சேவித்து நின்றார். அவர் கண்கள் நனைந்திருந்தன. .

தியாகராஜ சாஸ்திரிகள் முயற்சியால் எம்பிராந்திரி மனைவியான நாராயணி அந்தர்ஜனத்துக்கு ஒரு தீர்வு கிடைத்ததும் இந்தப் பிரயாணத்தில் தான்.

எம்பிராந்தரியிடம் நச்சரித்து பிரயாணத்துக்குக் கொண்டு வர ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ வாங்கியிருந்தாள் அவள். திருவனந்தபுரம் கடந்து போனால் ரேடியோவில் மலையாளம் மருந்துக்குக் கூட கிடைக்காது என்று திலீப்பும் எம்ப்ராந்தரியும் எடுத்துச் சொன்னாலும், அவள் கலங்கவில்லை.

மலையாளம் இல்லைன்னா என்ன, போகிற வழி தோறும் மனுஷர்கள் பேசுகிற மொழியில் இந்தப் பெட்டியும் பேசுமில்லையா, அது போதும் என்றாள் அவள். கூடவே, அந்தந்த மொழியில் பாட்டும் கேட்கும் என்றாள் தியாகராஜ சாஸ்திரிகள் வீட்டம்மா. சங்கீதத்துக்கு மொழி எதுக்கு என்று தெரிசா கேட்டது நல்ல கேள்வி என்று சாஸ்திரிகளின் தாயார் தவிர – காதில் விழாத காரணத்தால் – மற்றவர்கள் ஒத்துக் கொண்டாலும் அதற்கான பதில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இந்தப் பொண்ணரசி எதுக்கு போற இடத்துக்கெல்லாம் ச்ருதிப் பெட்டியக் கட்டித் தூக்கிண்டு வரா. ரயில்லே கச்சேரி பண்ணுவாளோ. நல்லதா நாலு பகவத்நாமா பாடினா வேண்டாம்னா சொல்லப் போறோம் என்றாள் அவள்.

விடிந்து கொண்டிருந்த போது மந்திராலயம் ரோடு ஸ்டேஷனில் அந்தம்மா பக்தி சிரத்தையோடு டிரான்சிஸ்டரை ஆன் செய்தார். இங்கே தெலுங்கும் கன்னடமும் தான் கேட்கும். அதுவும் இந்த விடிகாலையில் ஒண்ணும் வராது என்று எம்ப்ராந்திரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கணீர் என்ற குரலில் தமிழில் ராமாயணக் கதை சொல்கிறது கேட்டது.

ராமன் காட்டுக்குப் போயாக வேண்டும் என்று சிறிய தாயார், அவளை சிற்றவைன்னு சொல்றது வழக்கம், அவள் வரம் வாங்கி வந்தபடி ரகுராமன் புறப்பட்டான். நீ போய்த்தான் ஆகணுமான்னு கோவில் நந்தவனத்திலே நந்தியாவட்டைப் பூ எல்லாம் கேட்டது. போகணும் என்று அதுகளிடம் சொல்லி கொண்டு அடுத்து தாழம்பூ புதர் பக்கம் நின்று போய்ட்டு வரட்டா என்று கேட்டான் ராமச்சந்திர மூர்த்தி.

எழுந்து உட்கார்ந்த தியாகராஜனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இது அரசூர்லே ராமாயணப் பிரசங்கம்னா. இங்கே எப்படி கேட்கறது என்று வியப்போடு விசாரித்தார் அவர்.

அது சாயந்திர நேரத்தில் செய்யறதாச்சே என்றாள் அகல்யா. உனக்கு எப்படிம்மா தெரியும் என்று சாஸ்திரிகளின் மனைவி திகைப்போடு வினவினாள். டிரான்சிஸ்டரில் எப்படி வந்தது என்பது பற்றி அவளுக்கு அக்கறை சிறிதும் இல்லை.

அகல்யா தனக்கு அரசூரில் இருந்து கல்யாண ஆலோசனை வந்ததைச் சுருக்கமாகச் சொல்ல, ஆண் குரலில் வந்த ராமாயணத்தில், ராமன் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தான்.

மூணு நாள் இந்தப் பையன் தான் இனிமே. அந்தப் பொண்ணு தூரம் குளிச்சு வர்ற வரைக்கும்.

சாஸ்திரிகள் மனைவி சொல்ல, திலீப் இதை ஏதாவது ரேடியோ ஸ்டேஷன்லே வந்து பதிவு பண்ணிப் போய் ஒலிபரப்புவாங்களா இருக்கும் என்றான்.

இது என்னிக்கு சொன்ன கதை என்று டிரான்சிஸ்டரைக் கட்டித் தூக்கிக் கொண்டு கேட்டாள் எம்ப்ராந்திரியின் மனைவி.

நல்ல ஆங்கிலத்தில் வந்த இந்தக் கேள்விக்கு அதே படிக்கு, இதை அரசூர் சங்கரன் அண்டர் செக்ரட்டரி போன்றோரிடம் கேட்டால் தகுந்த பதில் கிடைக்கலாம் என்றாள் தெரிசா.

என்னிக்குச் சொன்ன கதையா இருந்தா என்ன, ராமன் இன்னும் ரெண்டு வருஷம் போய்ட்டு வரேன், போய்ட்டு வரேன்னு ஒருத்தர் விடாம, ஒரு பிராணி, செடி கொடி புல் பூண்டு விடாம சொல்லிண்டு அயோத்தியிலே தான் இருப்பான் என்றாள் தியாகராஜ சாஸ்திரிகளின் மனைவி. தான் ஒரு காலத்தில் தினசரி கதை கேட்கப் போனதாகவும், இப்போது அது சாத்தியமாகததால், அவ்வப்போது ஆழாக்கு அரிசியும், புடலங்காயும், ஒரு குத்து மாகாணிக்கிழங்குமாகத் தட்சணை எடுத்துப் போய் கதைக்கு உட்கார்ந்து ராமன் எந்தத் தெருவில் இருக்கிறான் என்று தகவல் கேட்டுக் கொள்வதாகவும் சொன்னாள்.

ரேடியோ பெட்டி வைத்திருக்கிறவர்கள் கவனத்துக்கு. நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு ரேடியோ பெட்டிக்கும் ஒரு லைசன்ஸ் எடுத்திருக்க வேண்டும். வருடா வருடம் செத்துப் போனவர்களுக்கு திவசம் செய்கிற மாதிரி, கல்லறைத் திருநாள் வழிபாடு போல, ரேடியோ பெட்டிகளுக்கு வருடாந்திர லைசன்ஸ் புதுப்பிக்கத் தேவை இருக்கிறது. லைசன்ஸ் இல்லாத பட்சத்தில் ரேடியோ பெட்டிகள் கைப்பற்றப் பட்டு உடைத்து எறியப் படும். எச்சரிக்கை.

அந்த டிரான்சிஸ்டர் ரேடியோவில் திடீரென்று கேட்ட குரலை தியாகராஜனும் எம்ப்ராந்தரியும் அடையாளம் கண்டு கொண்டார்கள். லைசன்ஸ் இல்லாத ரேடியோ பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உடைத்து நொறுக்கப் படும் என்று சாத்வீகமான குரலில் ரேடியோ இன்ஸ்பெக்டர் சாமுவேல் என்ற சாமிவேல் விடுக்கும் எச்சரிக்கை அது.

இந்த மனுஷன் எங்க மனையில் இருந்த பழைய பெட்டியை உடைச்சுப் போட்டுப் போனான், கழுவேறி. எம்ப்ராந்தரியின் மனைவி சொன்னாள்.

சாமுவேல் இப்போ எப்படி பேச முடியும்? நாங்க கிளம்பின தினத்தில் தான் அவர் முனிசிபல் ஆஸ்பத்திரியில் செத்துப் போனார்.

சாஸ்திரிகளின் மனைவி கேட்டாள். யாருக்கும் ஒண்ணும் புரியலை. ஆனால் மெதுவாகச் சொல்லப்பட்ட ராமாயணம் எம்பிராந்தரி மனைவிக்குப் பிடித்துப் போனது. அது தொடர்ந்து வந்த மணியமாக இருந்தது. கொஞ்சம் போல் உறங்கி ஓய்வெடுக்க அந்தம்மா நினைத்து, மதி என்று டிரான்சிஸ்டர் பெட்டியிடம் சொன்னாள். அதென்னமோ கேட்காமல் பிருபிருத்துக் கொண்டே இருந்தது. தியாகராஜ சாஸ்திரிகள் பெட்டியைக் கையில் எடுத்து அடிப்படை சம்ஸ்கிருத இலக்கணம் படிக்க வேத பாடசாலையில் பயன்படுத்தும் சொற்களோடு, அம்மொழியில், செல்லமான ஒரு வசவையும் சேர்த்து மொழிய பெட்டி அமைதியானது. பத்து நிமிடம் சென்று அது வானொலி நிலையங்களை ஒலிபரப்பலானது.

ஜபல்பூர் ஜங்ஷனில் ரயில் நின்றபோது எல்லோருக்கும் சாப்பிட ஆகாரம் வாங்கிவரப் பெரிய கித்தான் பைகளோடு கிளம்பிப் போனான் திலீப். அவன் தனியாக எல்லாம் சுமந்து வர முடியாது என்பதால் தானும் வருவதாக தியாகராஜ சாஸ்திரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டார்.

என்னமோ தோன்ற அகல்யா தானும் வருவதாக அவர்களோடு நடந்தாள் அகல்யா. என்ன மிரட்டியும் அவள் திரும்பி வருகிற வழியாக இல்லை.

பலகாரம் எல்லாம் ஸ்டேஷன் வி ஆர் ஆர் கேண்டீனில் அவசர அவசரமாக வாங்கி எடுத்துக் கொண்டு கிளம்பியபோது திலீப் அங்கே எண்ணெய்ச் சட்டி வைத்து பெரிசு பெரிசாக உருளைக்கிழங்கு உருட்டி கடலை மாவுப் பதார்த்தம் பொரித்து இறக்குவதைப் பார்த்தான்.

ஒண்ணே ஒண்ணு. எப்படி இருக்கும்னு டேஸ்ட் பார்க்கணும்.

அவன் தடுமாறி, தியாகராஜ சாஸ்திரிகளின் ஒத்துழைப்போடும், அகல்யாவின் எதிர்ப்போடும் மீண்டும் போய் வாங்கி ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்து ஊதி ஊதித் தின்கிற வரையில் ரயிலை நிறுத்தி வைக்க ரயில்வேக்காரர்களுக்கு பைத்தியமா என்ன? ஊதிவிட்டு நகர்ந்தது அது.

ஓடுகிற வண்டியைப் பிடிக்கக் கூடவே ஓடி வர வேண்டிப் போனது அவர்களுக்கு. அகல்யாவை ஓட வேண்டாம் என்று எச்சரித்தபடி திலீப்பும் அவன் பின்னால் நிற்கச் சொல்லு என்று கூவியபடி தியாகராஜ சாஸ்திரிகளும் ஓடி வர, அகல்யா ரயில் ஏறி விட்டாள்.

அடுத்து திலீப் ஏறி சாஸ்திரிகளைக் கையைப் பிடித்து உள்ளே இழுத்தான். கைப்பை மட்டும் கீழே ப்ளாட்பாரத்தில் விழ அவரும் ஏறினார்.

அதுலே ஆயிரம் ரூபாய் இருக்கு என்று அவர் அலற, ப்ளாட்பாரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ரயில்வே போர்ட்டர் ஒருத்தர் பையை எடுத்து கம்பார்ட்மெண்டோடு ஓடி வந்து உள்ளே எறிந்தார். சாஸ்திரிகளின் உயிர்த் தலத்தில் பலமாகத் தட்டியபடி பத்திரமாக வந்து சேர்ந்தது.

படவா, போண்டா திங்கறதுக்கா யாத்திரை வந்தே என்று அது பழித்துக் காட்டி தண்டனையும் கொடுத்ததாக அவர் சொல்ல, தெரிசா பெருஞ்சிரிப்பு சிரித்தாள்.

அந்த சிரிப்பும் மகிழ்ச்சியும் எல்லோரையும் பற்றிக் கொள்ள வாரணாசி வந்து சேர்ந்தது நேற்று பிற்பகலில் தான்.

ஹோமம் ஆரம்பமாறது. கலந்துக்க வேணும்.

திராவிடப் பண்டிதர் வேண்டுகோள் விட, எல்லோரும் அங்கே தான்.

எந்தக் கடவுளின் கருணையினால் நாமனைவரும் நலமாகவும் எந்தக் குறையுமின்றியும் உயிர்த்திருக்கிறோமோ அந்த க்ஷேத்ரபதியை வழிபடுகிறோம். நம்முடைய பசுக்களும் குதிரைகளும் நலம் பெற்று இருக்க, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வர, அவரைத் துதிக்கிறோம். இயற்கை அன்னையின் கருணை எம் பசுக்கள் சுரக்கும் பால் போல் பெருகி ஓட அருள்க.

நான்கு வட இந்திய புரோகிதர்கள் தெளிவான உச்சரிப்போடு ரிக்வேதத்தில் இருந்து பகுதிகளை ஓத சடங்குகள் தொடங்கினார்கள்.

தாவரங்கள் இனியவை ஆகுக. தண்ணீர் இனியதாகுக. ஆகாயம் இனியதாகுக. வெளி இனியதாகுக.

புருஷசூக்தம் சொல்றாளா என்று பாட்டியம்மா விசாரித்தாள்.

அம்மாவுக்கு வேதம் என்ன, கஜானனம் கூட ரெண்டாவது வரி சொல்லத் தெரியாது. ஆனாலும் புருஷசூக்தம்ங்கற பெயர்லே ஒரு ஈர்ப்பு.

தியாகராஜ சாஸ்திரிகள் சொன்னார்.

பாட்டியம்மா கேட்டுட்டாங்க இல்லே? புருஷசூக்தம் சொல்லச் சொல்றேன் பண்டாக்களை.

இன்னும் கொஞ்சம் தட்சணைக்காசு எடுத்துக் கொண்டு அவர் ஹோமம் செய்ய இருந்த புரோகிதர்கள் பக்கம் போனார். அவர்களின் ஒருமித்த குரலில் கம்பீரமாக வேத மந்திரங்கள் மேலெழுந்து வந்து கொண்டிருந்தன.

இந்த வரிகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இருந்து வருகிறவை. என்னோடு இவற்றைத் திரும்பவும் சொல்லுங்கள் சகோதரி.

திராவிடப் பண்டிதர் கனமும் கம்பீரமும் நிரம்பிய குரலில் சொல்லச் சொல்ல தெரிசா திரும்பச் சொன்னாள் –

யார் மகத்தான ஒளியாக இருக்கிறாரோ, யார் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறாரோ, யார் எங்கும் எதிலும் எவரிலும் நிலவும் தலையாய சத்தியமாக இருக்கிறாரோ, யார் தலை சிறந்த இலக்காக இருக்கிறாரோ, அந்த விஷ்ணுவை வணங்குவோம்.

துளசி இலை கலந்த சுத்தமான கங்கை நீர் அருந்தக் கிடைத்தது. மூன்று முறை உள்ளங்கையில் வாங்கி அருந்தி, தலையில் அந்நீரைக் கண்கள் மூடியிருக்க, ஹரி என்று உச்சரித்து உள்ளங்கையை உச்சிச் சிரசில் வைத்துப் பூசிக் கொண்டாள்.

மகாவிஷ்ணுவில் அனைத்தும் அடக்கம். மகாவிஷ்ணுவே அனைத்தாகவும் காணப்படுவார். அனைத்துயிர்களின் சாரமாக உணரப்படுவார். அவர் உலகைக் காக்கிறார். அவர் அழிவற்றவர். அவர் அனைத்தையும் அனைவரையும் ஆள்கிறவர். மூவுலகிலும் நிறைந்து நிலைத்திருக்கிறார் அவர். எல்லோருமானவர். எல்லாவற்றிலும் இருந்து இருத்தலின் பேரின்பம் நுகர்கிறார்.

பால், தேன், பழக்கூழ், தேங்காய், ஏலம் கலந்ததை ஹோமம் நடத்தியவர்கள் நிவேதனம் செய்து ஆராதித்துக் கொடுக்க, தெரிசாவின் வலது உள்ளங்கையில் சிறு உத்தரிணி கொண்டு அதை வார்த்தார் திராவிடப் பண்டிதர்.

இதை எச்சிலாக்காமல் வாயிலிட்டுச் சுவைத்து உண்ணுங்கள். நாராயணனைத் தித்திக்கத் தித்திக்க உங்களுக்குள் ஏற்று வாங்கிக் கொள்கிறீர்கள்.

கேசவா, நாராயண, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, சங்கர்ஷணா, வாசுதேவா, ப்ரத்யும்னா, அநிருத்தா, புருஷோத்தமா, அதோக்ஷாஜா, நரசிம்மா, அச்சுதா, ஜனார்த்தனா, உபேந்திரா, ஹரி, கிருஷ்ணா.

விஷ்ணுவின் இருபத்துநான்கு திருநாமங்களை ஒவ்வொன்றாக அந்த நாமத்தில் மனம் லயித்து திராவிடப் பண்டிதர் சொல்ல, கண் மூடியிருந்து தெரிசா அவற்றைத் திரும்ப உச்சரித்தாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.

பண்டிதர் எழுந்தார். கையில் பஞ்ச பாத்திரமும், உத்தரிணியுமாக, கங்கா தீரத்துக் கல் பாளங்களின் வெம்மையில் பாதம் தோய நடந்து ஆற்று நீரில் கால் அமிழ்த்தி நின்றார்.

இது சாமவேதம்.

அவர் நீண்ட சொற்களும் திரும்பித் திரும்பி ஒலிக்கும் குறுஞ்சொற்களும், உயர்ந்து உயர்ந்து மேலெழும் குரலுமாகச் சாம கானம் பாடத் தொடங்கினார்.

தண்ணீரே, நீ ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகிறாய். நாங்கள் சக்தி மேம்பட்டிருக்க, அது குறித்து மகிழ்ந்திருக்க எமக்கு உதவு. பனித்துளியை எங்களுக்குப் பங்கு வைத்து நீ கொடு நீரே.

அவர் கணீரென்று சொல்லியிருக்க, கால்டர்டேல் மசூதியில் தொழுவதற்கு அழைக்கும் மௌல்வியின் குரல் தெரிசாவின் நினைவில் வந்து போனது.

கடவுளை அழைக்கிற குரல்கள் ஒரு போலத்தான் இருக்கும்.

அவள் அகல்யாவிடம் சொல்ல, ஆமா, பாங்கு சொல்ற மாதிரி இல்லே என்றாள் அகல்யா. அவள் கையை இறுகப் பற்றித் தோழமை சொன்னாள் தெரிசா. திராவிடப் பண்டிதர் நிறுத்தி அர்த்தம் சொல்லித் தொடர்ந்து சாமவேதம் இசைத்தபடி சிறு துளிகளாக, கொண்டு வந்த நீரை கங்கைப் பிரவாகத்தில் கலக்க வைத்தார்.

மிகுந்த சுபமுடையதாக, அன்னையரின் இடையறாத அன்பும் தாய் முலைப் பாலும் போன்று தேடி வந்து விரைந்து பெருகி வெள்ளமென உயிர்ப்பித்துப் பிரவகிக்கும் தண்ணீரே, எமக்கு வலிமை அருள். எம் மாசு அனைத்தையும் நீக்கி எம்மைப் பரிசுத்தமானவர்கள் ஆக்குக நீரே.

முழுக்குப் போட்டுக் குளித்து புதுத் துணி தரித்து வரலாம். எல்லோருமே இதைச் செய்யலாம்.

சொல்லியபடி நடந்து ஊன்றியிருந்த வண்ணக் குடை நிழலுக்குத் திரும்பினார்.

இந்த நிமிடத்து வெள்ளப் பெருக்குக்கு, போன நொடியில் அனுபவப்பட்டுக் கடந்து போன நீர்ப்பெருக்குக்கு முற்றிலும் மாறுபட்டதாகத் தன்னை சதா புதுப்பித்துக் கொண்டு அமைதியாகப் பாய்ந்து முன் நகர்ந்து செல்லும் கங்கையின் இதமான குளிர்ச்சி மனதிலும் ஊடுருவி தண்மையும் அன்பும் இரக்கமுமாகச் சூழ்ந்திருக்க தெரிசா கங்கை வெள்ளத்தில் அமிழ்ந்து நின்றாள்.

கரையேற வேண்டுமா என்று மனதில் ஏக்கம்.

நானும் நீயும் சேர்ந்து கரை சேருவோம்.

அவள் வயிற்றினுள் அசைவு சொன்னது. மெய் சிலிர்த்துப் போனது தெரிசாவுக்கு. இதோ வந்தேன் என்று ஈரக் கல் படிகளில் கவனமாகக் கால் வைத்து நடந்து, கரைக்குத் திரும்பினாள் அவள்.

புதிய சேலையையும், நனைந்த உடல் துவட்ட டர்க்கி டவலுமாக யாரோ அவளுக்காகக் காத்திருந்தார்கள்.

தெரிசா, இது உனக்கு.

அவள் முன்னால் சிரித்தபடி நின்று அவள் கையைப் பற்றி அழுத்தியபடி சங்கரன் சொன்னான்.

அவளுக்கு கனவும் நினைவும் கலந்த கணங்களாக குழம்பிப் போயிருந்தது.

சங்கரன் இவாளுக்காக ஓடி வந்திருக்கான். மாமா வழியிலே மூணாம் தலைமுறை அம்மங்கா அத்தம்பி உறவாச்சே. நான் பேமிலி மரம் படம் பார்த்தேனே. ஸ்பஷ்டமா போட்டு இருந்தது.

தியாகராஜ சாஸ்திரிகள் எல்லோரிடமும் சொல்ல தெரிசாவின் கைகளை மெல்லப் பிடித்து குடைகளுக்குக் கீழே அன்போடு அழைத்துப் போனான் சங்கரன். சாஸ்திரிகள் மனைவி மட்டும் இது சரியில்லை என்ற முக பாவத்தில் இதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அப்புறம் முக்காலியில் வடக்கில் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டாள் அவள்.

ஷங்க்ஸ் ஷங்க்ஸ் ஷங்க்ஸ். என் பிரியமான ஷங்க்ஸ்.

அவன் தோளில் சாய்ந்து தெரிசா விம்மினாள். அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

எல்லாம் தெரியும். நான் இருக்கேன்.

அவன் சுருக்கமாகச் சொன்னான்.

வயற்றில் இந்த

தெரியும். பகவதிப் பாட்டி சொன்னா. நம்ம உறவுக்கு சாட்சி.

அவள் காதில் மெல்லச் சொல்லி அவளை நகர்த்தினான்.

ஆற்றங்கரைக் காற்றுக்குத் தடுப்பாக கிடுகுத் தட்டிகளும் தகர அரண்களும் தக்கபடி வைத்து மணலில் செங்கல் அடுக்கி நெய்யும் சமித்துகளும் ஒருமித்துக் கனன்று எரிய ஹோமத்தீ வளர்க்கப்பட்டது. சுற்றியிருந்து நான்கு புரோகிதர்களும் நெய் வார்க்க, நல்லதை நாடும் கணபதி ஹோமமும், இறப்பென்னும் பிணிக்கு எதிராக நீண்ட ஆயுளைத் தரும் மிருத்யுஞ்செய ஹோமமும் செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. காற்றில் வந்து கண்ணில் படிந்து சற்றே எரிச்சல் அளித்து கண்ணீர் சுரக்க வைத்த ஹோமப் புகையை அவர்கள் ஏற்று வாங்கி விழிகளை மூடியும் திறந்தும் நின்றிருந்தார்கள்.

ஏண்டா சங்கரா, வந்ததுதான் வந்தே, உன் ஆத்துக்காரியையும் கூட்டிண்டு வந்திருக்கலாமே.

தியாகராஜ சாஸ்திரிகள் சொல்ல, அவசரமாக சங்கரன் விளக்கினான் –

ஆபீஸ் வேலையா இங்கே வந்தேன், அப்படியே இங்கேயும் ஒரு நடை வந்துட்டுப் போறதா ப்ளான். ஆத்துக்காரி இதிலே எங்கே வர முடியும்?

எப்படியோ போ. காசி டூர் முடிச்சு டெல்லி தான் நானும் ஆத்துக்காரியும் அம்மாவும். நீ வேறே எங்கேயாவது படையெடுத்துடாதே.

ஒரு வினாடி தயங்கி ஏதோ சொல்ல உத்தேசித்து, அப்புறம் சிரித்து சங்கரன் எம்பிராந்திரியிடம் நலம் விசாரிக்க நகர்ந்தான்.

சங்கரன் யாரென்று ஒரு வழியாகப் புரிந்து கொண்ட சாஸ்திரிகளின் அம்மா சொன்னாள் –

புகையிலக்கடை சங்கரய்யர் பேரனா, நன்னா இரு. எங்க இவர் ஒரு விசை, நவராத்திரிக்கு பெண்டுகளுக்கு வச்சுக் கொடுக்கறதுக்கோசரம் கொட்டைப் பாக்கு உங்க கடையிலே தான், ஒரு வீசை வாங்கிண்டு வந்தார். ஆத்துக்கு வந்து பார்த்தா அதிலே நாலு பூச்சி அரிச்சிருந்தது. போறது. ஷேமமா இரு.

மாமி கவலையே படாதீங்க. நான் அதைத் திருப்பி எடுத்துண்டு பணமாகவோ கொட்டைப் பாக்காகவோ கொடுத்திடறேன். கொண்டு வந்திருக்கேளா?

சங்கரன் சிரிக்காமல் கேட்க, மற்றவர்கள் அடக்க முடியாமல் சிரித்தார்கள். திராவிடப் பண்டிதரும் ஒருவாறு புரிந்து கொண்டு சடங்குகளை நிர்வகிப்பதற்கு இடையே சிரித்து விட்டுத் தொடர்ந்தார்.

பகவத்கீதையின் பனிரெண்டாம் அத்தியாயம் இது. கூடவே சொல்லலாம் சகோதரி.

மனதை என்பால் நிறுத்து. மதியை என்னுள் புகுத்து. இனி என்னுள் உறைவாய். எதையும் எதிர்பார்த்தலின்றித் தூயவராக, திறமுடையவராக, பற்றுதல் அற்றவராக, கவலை நீங்கியவராக, எல்லா ஆடம்பரங்களையும் துறந்து என்னிடம் பக்தி செய்கிறவர்கள் எனக்கினியவர்கள்.

திராவிடப் பண்டிதர் சந்தனத்தையும் குங்குமத்தையும் சிறு சிமிழ்களில் நிறைத்து எம்பிராந்திரியின் மனைவியிடம் கொடுத்தார். எல்லோரும் அதற்குள் ஆற்று நீராடித் திரும்பி வந்திருந்தார்கள். எம்பிராந்தரியின் மனைவி நாணிக்குட்டி என்ற நாராயணி அந்தர்ஜனம், தெரிசா தொடங்கி அனைவருக்கும் அதை நெற்றியில் பூசி அம்மே நாராயணா என்று மந்திரம் முணுமுணுத்தாள். பாட்டியம்மாள் களைப்பு காரணமாக மீண்டும் ஓரமாகப் படுத்துக் கண் மூடியிருந்தாள்.

தெரிசா சந்தனமும் குங்குமமுமாகக் கை கூப்பி நிற்க, சங்கரன் தனக்குக் கொடுத்து தரித்து மிகுந்த குங்குமத்தை என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

தெரிசாவே எதிர்பார்க்காமல் நேரே அவளிடம் வந்து அவள் நெற்றியில் அதை அணிவித்தான். அவன் முகத்தில் ஒரு பரவச நிலை தட்டுப்பட்டது. தெரிசாவுக்கு அது மிகவும் வேண்டியிருந்தது. இந்த முகபாவமும் குரலும் உற்சாகமும் நாளை மாறலாம். ஆனால் இதெல்லாம் கூடி இருக்கிற இந்த வினாடியை வாழ்த்த ஒரு பிரார்த்தனை செய்யலாமன்றோ. அவள் நினைத்தபடி நிற்க ராதாகிருஷ்ண திராவிடப் பண்டிதர் அவளிடம் கூறியது –

சகோதரி, இன்றிலிருந்து நீங்கள் சாரதா என்று பெயர் பெறுவீர்கள். நான்கு தலைமுறை முன் வேற்று மதத்துக்குக் கடந்து போன கிட்டாவய்யனின் மூத்த மகளுக்கு இட்டிருந்த பெயர் அது. சகோதரியை எல்லோரும் அழைக்கலாம். சாரதா.

அவள் காதில் சங்கரன் குரல் முதலில் படிந்தது.

சாரதா

உம் என்றாள் இமைகள் அடைத்திருக்க.

சாரதா, நீ தேவதை மாதிரி இருக்கே.

கிசுகிசுத்து அவன் விலக, வெட்கத்தோடு தரை பார்த்திருந்தாள் சாரதா.

சாரதா சாரதா என்று ஒவ்வொருவரும் அவளை வாழ்த்தி அழைக்க, சாரதா தனக்கு ஒரு நாள் மூத்தவர் என்றாலும் அவர்கள் பாதங்களில் வணங்கி ஆசி பெற நடந்தாள்.

கங்கையன்னைக்கு முதல் நமஸ்காரம் செய்யலாமே என்றார் பண்டிதர். அவா ஃபேமிலி ஹைவே-யில் இருக்கா என்று அவரிடம் தியாகராஜ சாஸ்திரிகள் ஞாபகப் படுத்தினார்.

ஒரே ஒரு முறை எல்லோருக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்தால் போதும் என்று பண்டிதர் சலுகை காட்ட, தெரிசா சற்றே சிரமத்தோடு தரையில் மண்டியிட்டு வணங்கி எழுந்தாள்.

எம்பிராந்தரி தம்பதிகள் முதலில் அவளுக்கு ஆசியளித்தார்கள்.

ஹோமம் செய்து கொண்டிருந்த மறையவர்கள் சொன்னார்கள் – எல்லோரும் வரலாம். முடிஞ்சுண்டிருக்கு. இதுக்கு அப்புறம் கணபதி புனர்பூஜையும் கங்காமாதாவுக்கு புஷ்பாஞ்சலியும் தான்.

முடிச்சு மணக்க மணக்க தென்னிந்திய ஆகாரம் நம்ம வீட்டுலே. எல்லோரும் வந்து சாப்பிட்டு வாழ்த்திப் போகணும் என்றார் பண்டிதர்.

இல்லாட்டாலும் வேறே எங்கே சாப்பிடறதாம்? இங்கத்திய ஓட்டல்லே எல்லாம் வெண்ணையைக் குழைச்சு சப்பாத்திதான் நாள் முழுக்க தட்டிண்டிருக்கான் என்றார் சாஸ்திரிகள்.

இது சப்பாத்தி சாப்பாடு இல்லே, வடை, தோசை, பொங்கல், ரைஸ், தால் சாவல், சாம்பார் எல்லாம் உண்டு்

திராவிடப் பண்டிதர் விளக்கினார். தோசை என்று தோன்றினாலும் ஆர்வக் கோளாறால் அவர் சற்றே பிழையோடு அறிவித்ததாக எடுத்துக் கொண்டனர். சாம்பார் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் ஆறிப் போன தோசை நல்ல பக்க பலமாக இருக்கும் என்று சாஸ்திரி மனைவி சொல்ல எல்லோரும் ஆமா ஆமா என்றார்கள்.

இனி விரதம் மட்டும் என்றார் பண்டிதர்.

விரதம் எப்போவாவது எடுப்பேன்னு உறுதிமொழி எடுத்துக்கறது, இன்னிக்கே இருக்க வேண்டியதில்லை.

என்ன மாதிரியான விரதம் இது? எல்லோரும் எடுத்துக்கலாமோ? அகல்யா கேட்டாள்.

இரண்டு வாரத்துக்கு மட்டும் எடுத்தா போதும். குடலும் ரத்தமும் சுத்தப்படும் என்ற பண்டிதர் மந்திரம் சொல்லத் தொடங்கினார்.

பனிரெண்டு நாட்கள் பகலும் இரவும் பசுவின் பால் மட்டும் அருந்தி நானோ என்னைச் சார்ந்தவர்களோ, முன்னால் வந்தவர்களோ செய்த பாவம் நீங்கவும், பரிசுத்தம் மேம்பட்டு வரவுமான சந்த்ராயன விரதம் மேற்கொள்ள பிரதிக்ஞை செய்கிறேன். பரிசுத்தமான நினைவுகளோடு ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் சோதி வடிவமான நாயகனை வணங்குகிறேன்.

திரும்பச் சொல்லி, கிண்ணத்தில் அளிக்கப்பட்ட பாலை ஒரு மிடக்கு குடித்து விட்டுத் திரும்பக் கொடுத்து விட்டாள் தெரிசா.

வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்கு அந்தப் பால் போய்ச் சேரட்டும். அதற்கு எந்தப் பாவமும் என்றும் அண்டாது போகட்டும்.

உபநிடதத்திலிருந்து வரிகள் நிறுத்தி நிதானமாக ஓதப்பட்டன. தெரிசா என்ற சாரதா அவற்றைத் திருப்பிச் சொன்னாள். மறுமுறை ஓதப்பட்டன. மறுமுறை சொன்னாள். தட்டுத் தடுமாறித் தானே சொன்னாள். ராதாகிருஷ்ண திராவிடப் பண்டிதர் ஆதரவாகக் கையசைக்க, தடங்கலின்றி அவள் திரும்பவும் சொன்னாள். மனம் முழுக்க நிறைந்த அந்தச் சொற்கள் வெளி எங்கும் ததும்பி வழிய, சாரதா ஆற்றுப் பிரவாகத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.

வானில் அமைதி நிலவட்டும். நீரில் அமைதி நிலவட்டும். தாவரம் செழிக்கும் நிலத்தில் அமைதி நிலவட்டும். மரங்களில் அமைதி நிலவட்டும். கடவுளரில் அமைதி நிலவட்டும். பிரம்மத்தில் அமைதி நிலவட்டும். அனைவரிலும் அமைதி நிலவட்டும். அமைதியில் அமைதி நிலவட்டும். அருள் பெற்ற எனக்குள் அமைதி வளரட்டும்.

(நிறைந்தது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன