Random musings

 

க்ரேஸி குழுவின் முக்கிய நடிகராக இருந்த வெங்கடேஷ் நேற்று காலமானார். தி.நகர் நானா தெருவில் அவர் வீட்டுக்குக் காலையில் போனபோது க்ரேஸி, பாலாஜி, அப்பா ரமேஷ் இன்னும் நிறைய நண்பர்கள். மௌலியோடு அவசர அறிமுகம் செய்து கொண்டபடி வீட்டுக்குள் நுழைந்தேன் மோகனோடு.

வெங்கட் ஆறு அடி உயர நெடியமால். அவரை இனி எப்போதும் எழுந்திருக்க முடியாத படுத்த கோலத்தில் பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. க்ரேஸி குழுவினர் எல்லோரிடமும் அலாதியான டைமிங் சென்ஸ் உண்டு. வெங்கட்டிடம் இது கொஞ்சம் அதிகம். வங்கியில் விருப்ப ஓய்வு வாங்கி ஒரு ரவுண்ட் சினிமாவில் கலக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தவரோடு விதி விளையாடிய பலன் – இரண்டு ஆண்டாகப் படுத்த படுக்கை. மைக்கேல் மதன காமராஜனைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்திருக்க வேண்டிய வெற்றி ஏனோ விலகிப் போய்விட்டது.

கமல் சார் காலையில் தொலைபேசியபோது வெங்கட் பற்றிச் சொன்னேன். அவர் நேற்றைக்கு சேதி தெரிந்ததுமே போய் வந்ததாகச் சொன்னார். சக கலைஞரை மதிப்பதில் அவருக்கு இருக்கும் அக்கறை தனியானது.
————————————————

உன்னைப் போல் ஒருவன் பட போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. அவ்வப்போது படத்தைப் பகுதி பகுதியாக எடிட்டரோடும் ஒலியமைப்பாளரோடும் (நண்பர் ஆனந்த் – இவர் சதி லீலாவதியில் கமலின் மகனாக நடித்தவர். உன்னைப் போல் ஒருவனிலும் நல்ல ஒரு பாத்திரம் இவருக்கு) சேர்ந்து உட்கார்ந்து பார்க்கும்போது மனதுக்கு நினைவாக உள்ளது.

நண்பர் மனுஷ்யபுத்ரன் எழுதிய பாடல் கமல் அவர்கள் குரலில் மிக அற்புதமாக வந்திருக்க்கிறது. இந்தப் பாடல் பேசப்படும்.

———————————————————————————–

விஸ்வரூபம் நாவல் கிட்டத்தட்ட இறுதிக் கட்டங்களுக்கு நக்ர்ந்து கொண்டிருக்கிறது. ஆய்வில் அதிக நேரம் செலவாவதால் மற்ற பத்திரிகை பத்தி எழுத்தை நிறுத்தி வைத்திருக்கிறேன். செப்டம்பர் இறுதிக்குள் நாவல் எழுதி முடித்து விட்டு அடுத்து மூன்று விரல் நாவலின் தொடர்ச்சியை எழுதத் திட்டம்.

க்ரேஸியோடும் கோவிந்த் நிஹலானியோடும் புதிதாக சில முயற்சிகளில் ஈடுபட ஆயத்த நிலையில் உள்ளேன். நாவல் முடிந்து இதையெல்லாம் மும்முரமாகத் தொடரவேண்டி இருக்கும்,

இன்னொரு முக்கிய முயற்சி – மய்யம் பத்திரிகை திரும்பத் தொடங்குவது. வெகு விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

கணையாழியை மீட்டெடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது. கயிற்றைக் கட்டி மலையை இழுத்துக் கொண்டிருக்கிறோம். ..

————————————————————

மோகனின் கிருஷ்ணஜெயந்தி ஓவியம், வெண்பா குறித்து ஓர் அவசர வெண்பா

கருப்பனுக்கு வெண்ணெய்க் களவு அலுத்தால்
இருகுடம் தாங்கும் இடைச்சி – மருவுவான்.
வேகம் மனதிலக் கள்ளன் நிறைந்திட
மோகன் வரைந்த படம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன