இன்று

 

24.09.09 21:08 மணி

கோவிந்த் நிஹலானி அவர்களின் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறேன். கமல் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு திரையுலக மேதையோடு பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியது மகிழ்ச்சியான விஷய்ம.

நான் ஐந்து வருடம் தில்லியிலும், இரண்டாண்டு மும்பையிலும் குப்பை கொட்டி இந்தியை மாநில வேறுபாடுகளோடு இயல்பாகப் பேச, எழுதத் தெரிந்தாலும், தமிழ் அல்லது மலையாளம் போல் சுபாவமாக வர இந்திக்காரனாகப் பிறந்திருக்க வேண்டும். நமக்கு ஆங்கிலமே மதி.

கோவிந்த் கமல் மாதிரி இன்னொரு டாஸ்க் மாஸ்டர். க்தை / காட்சி சரியாக வரும்வரை விடமாட்டார். சதா மூளைக்கு வேலை கொடுக்கும் இப்படியான நண்பர்களோடு சேர்ந்து பணியாற்ற சுவாரசியமாக இருக்கிறது.கதை? ரொம்பவே சவால் ஆன விஷயம். எழுதிப் பார்க்கலாம்.

88888888888888888888888888888888888888888

சத்தம் போடாமல் ‘லண்டன் டயரி’யை மிக அழகான பதிப்பாக வெளியிட்டிருக்கும் நண்பர்கள் கிழக்கு பதிப்பகம் பத்ரி, ராகவனுக்கும் குழுவுக்கும் நன்றி. முக்கியமாக இளைஞர் முகிலுக்கு. உழைத்து, அனுபவித்துச் செய்திருக்கிறார். லண்டன் வரலாறு, பயணக்கதை இரண்டையும் நான் தனித்தனியாக எழுதிக் கொடுத்ததை (முந்தையது, தினமணி கதிரில் வெளியானது) சரி விகிதத்தில் கலந்து நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்கிறார். வாழ்க.

————————————————————————————-

நண்பர் ‘நேசமுடன்’ வெங்கடேஷ் மடல் : –

நீங்கள் வசனம் எழுதிய முதல் திரைப்படமான உன்னைப் போல் ஒருவன், வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த நேரத்தில், உங்களுடைய ஒரு மினி பேட்டியை என் நேசமுடன் இதழில் சேர்க்க ஆவல். கேள்விகள் இவை:

1. நீங்கள் எழுதிய வசனங்கள் கண்ணெதிரே உயிரோட்டத்துடன் விரியத் தொடங்கியபோது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
2. நீங்கள் வசனம் எழுதியபோது, இது கமல் பேசும் வசனங்கள் என்பதற்காக சிறப்புக் கவனம் ஏதேனும் எடுத்துக்கொண்டீர்களா?
3. வசனம் எழுதியபோது, The Stupid Common Manஐ உள்ளூர நீங்கள் உணர்ந்தீர்களா?
4. உங்களுடைய இத்தனை ஆண்டுகால நவீன இலக்கிய பரிச்சயம், பயிற்சி ஆகியவை வசனம் எழுத எப்படிப் பயன்பட்டன?
5. உங்கள் எழுத்தில் உள்ள தனித்தன்மையை, வசனங்களில் கொண்டுவர முடிந்ததா?

என் பதில் (நிறைய நேரம் எடுத்து யோசித்த பிறகு)

இப்போது வேண்டாமே வெங்கடேஷ். படம் பெருவெற்றி பெற்றிருக்கிறது. இணைய நண்பர்கள் பலரும், திரு இ.பா, ஜெயமோகன், பா.ரா, பெண்ணேஸ்வரன் என (விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) சக எழுத்தாளர்களும், சுதீஷ் காமத் போன்ற விமர்சர்கர்களும், பெருவாரியான ரசிகர்களும் படத்தின் மற்ற பல நல்ல அம்சங்களோடு கூட உரையாடலையும் ரசித்திருக்கிறார்கள். மற்றவர்களும் படம் பார்க்கட்டும்.

தவிர, அங்கங்கே சில இடங்களில் ஜெலூசில் வியாபாரம் திடீரென்று அதிகமானதாகத் தெரிகிறது. அந்த மருந்துக் கடைகளுக்கும் வருமானம் வரட்டும்.

சாவகாசமாக வெங்கடேஷ் கேள்விகளுக்குப் பதில் தருகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன