வாரம் – 13 செப்டம்பர் 2009 ஞாயிறு

 

வாரக் கடைசி நாட்கள் எழுதவும் படிக்கவுமானவை என்ற வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுப் போய்க் கொண்டிருப்பது மனதை அலைக்கழிக்கிறது. நாவல் பகாசுரனாக வளர்ந்து இன்னும் முப்பது அத்தியாயம் கேட்கிறது. எழுத அதைவிட விஷயகனமும் உண்டு. நேரம் தான் பிரச்சனை. பத்திரிகை பத்தி, கேட்டு நினைவு படுத்தும் சிறுகதை இப்படி எத்தனையோ முடித்துத்தர முடியாமல் பின்வாங்கும்போது வருத்தத்தோடு நினைத்துக் கொள்வது – இந்த சினிமாவைக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறோம்?

எனக்குச் சட்டென்று தோன்றுகிற முதல் (பாசிட்டிவ்?) அம்சம் – நெட்வொர்க்கிங். டைரக்டர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகை என்று சளைக்காமல் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ளப்படுகிறபோது அவர்களில் நான் எழுதிய எதையும் படிக்காதவர்கள் தான் அதிகம் என்பது புலனாகிறது. ஆனாலும் என்ன? ‘கமல் சார் படத்திலே கதை வசனம் எழுதறார். மேடையிலே கூப்பிட்டு அவரே பூச்செண்டு கொடுத்தார்’. அது போதும் அவர்களுக்கு.

சில ஆழ்ந்த படிப்பாளிகளும் இல்லாமல் இல்லை.

இன்றைக்குக் காலையில் நண்பர் வசந்த் தூர்தர்ஷனுக்காக இயக்கிய ‘விசாரணை கமிஷன்’ (சா.கந்தசாமி அவர்களின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்) படத்தின் ப்ரிவ்யூவுக்காகப் போனபோது ஒளிப்பதிவாளர் செழியன் என் முதல் சிறுகதைத் தொகுப்பு தேரை நினைவு கூர்ந்தார். அதற்கு அசோகமித்ரனின் முன்னுரையையும்.நானும் சிவகங்கைக்காரன் தான்.

அவர் சொன்னார். ரெண்டு பேருக்கும் தெரிந்த நண்பர்கள் எல்லோரும் பேராசிரியர்கள். அந்த ஊர் ஒரு காலத்தில் அறிவாளிகளின் ஊராக இருந்தது.

40, ரெட்டைத் தெருவின் சில பகுதிகள் குறும்படமாகிறதைச் செழியனிடம் தெரிவித்தேன். வீடுதான் இல்லை. படம் எடுக்க வீதி போதாதா என்ன?

வசந்த் அரசூர் வம்சத்தை முழுக்கப் படித்து திரைக்கதையாக்க முயன்றதை கிழக்கு பதிப்பகம் பத்ரி சொல்லியிருந்தார். வசந்த் போன சந்திப்பில் அதைக் குறிப்பிட்டார்.

அரசூர் வம்சத்தைத் தமிழில் எடுக்க நிறைய தைரியம் வேண்டும். பெட்ரோ ஆல்மடோவரோ, ஜாபர் பனாஹியோ சம்மதித்தால் ‘கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர்’ ஆங்கில மொழிபெயர்ப்பை ஸ்பானிஷ், ஈரானியப் படமாக்கிவிடலாம்.

விசாரணை கமிஷன் படம் – சா.கந்தசாமியின் நாவல் திரைக்கதையாக்க அசாத்திய ஆற்றல் ப்ளஸ் பொறுமை தேவை. ஒரு பஸ் கண்டக்டரின் வாழ்க்கையில் ஒரு தினத்தை எடுத்துக் கொண்டு நிறைய பின்னால் போய் திரும்பி வந்து திரும்பவும் பின்னால் போய்.. மற்ற சானலை வெறுத்து ஒதுக்கி, தூர்தர்ஷனை விடாப்பிடியாகப் பார்க்கிறவர்கள் ரசிப்பார்கள். அப்புறம் ட்விட்டரில் ரிமைண்டர் கொடுத்து லோக்சபா டிவியில் சனிக்கிழமை ராத்திரி படம் பார்க்கும் ரசிகர்கள் (நண்பர் சுரேஷ்கண்ணன் வாழ்க).

படத்தின் முடிவில் நமநமவென்று மனதில் அழுத்தும் அந்தத் தனிமனிதன் தொடர்பான, நம்மையும் ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில் பாதிக்கக் கூடிய ஒரு அசாத்திய வலி ஏற்படும். டிவி சீரியலாக இதைப் பார்க்கும்போது (‘இன்னொரு சப்பாத்தி போடும்மா. குருமாவிலே உப்பு அதிகம். எலுமிச்சம்பழம் பிழிஞ்சுடேன். டேய், சானலை மாத்தாதே. கார்ட்டூன் நெட் ஒர்க் அப்புறம் பாத்துக்கலாம்…’) அதை நம் வீட்டு வரவேற்பறை –சாப்பாட்டு மேஜையில் கொண்டு வருவது சிரமம் தான். வசந்த் வெற்றி பெற வாழ்த்துகள்.

விசாரணை கமிஷன் படம் முழுக்க ஒற்றை வயலின் தான் இசை. வீணை சிட்டிபாபு ‘திக்கற்ற பார்வதி’க்கு இசையமைத்தபோது கூட போனால் போகிறதென்று இன்னும் நாலைந்து வீணை, வயலின், மிருதங்கம் என்று கூடவே கூட்டிக் கொண்டு வந்தார். தற்போதைய தூர்தர்ஷன் பட்ஜெட்டில் வயலின் தந்திக்கும் கணக்குப் பார்த்துக் கம்மியாகச் செலவழிக்கச் சொல்லிக் காசு கொடுப்பார்கள் போல.

மனுஷ்யபுத்ரன், எக்ஸ்னோரா நிர்மல் (ஓவர்சீஸ் வங்கியில் என் பழைய அதிகாரி நண்பர்), சா.கந்தசாமி என்று குறிப்பிட்ட சிலர் வந்திருந்தார்கள். நிர்மல் சார் மட்டும் படத்தில் வந்து போகும் ரூட் நெம்பர் 88 குன்றத்தூர் – வடபழனி பஸ்ஸைக் காட்டி, ‘எங்க ஊர் அதான். சேக்கிழார் ஊர்’ என்றார். ஆக அவர் வடபழனிக் காரர் இல்லை. எக்ஸ்னோரா குன்றத்தூரில் ஆரம்பித்திருக்கிறாரா தெரியவில்லை.

888888888888888888888888888888888888888888888888888

போன ஞாயிறு பரபரப்பாக காலை 9 மணிக்கு சத்யம் தியேட்டருக்குப் போவதில் தொடங்கியது. ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆடியோ வெளியீட்டு விழா. ஸ்ருதி கமல்ஹாசன் தான் அன்றைய விழா நாயகி. மனுஷ்யபுத்ரன் பாட்டை கடைசியில் ஒலிபரப்பினாலும் காதில் அது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாம்பே ஜெயஸ்ரீ – கமல் குரல்களில் ‘நிலை வருமா’ அடுத்த இடத்தைப் பிடிக்கும் பாடல் என்று கொக்கு சுடுவது போல் முழங்கையை நீட்டிக் கொண்டு காம்பியர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் இப்போது.

இயக்குனர், வசனகர்த்தா, பாடலாசிரியர் இவர்களையும் மேடையில் ஏறவைத்து கமல் பூச்செண்டு கொடுத்து கவுரவித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. இதை மற்ற தயாரிப்பாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

ஓணத்தன்று புதுப்படக் கதை சொல்ல வந்த தயாரிப்பாளர் ஒன்றரைக் கிலோ கத்திரிக்காய் விலை என்று ரொம்பச் சின்ன அளவில் சப்ஜாட் ரேட் பேச ஆரம்பித்தபோது இது புரிந்தது. அவர்களுக்கு திரைக்கதை ஒரு செலவினம் மட்டும். ஐட்டம் நம்பருக்கு ஆகிற காசில் நூறில் ஒரு பங்குக்கு எழுத ஆள் கிடைத்தால் சந்தோஷம் தான். அதுக்கும் ஒரு கோஷ்டி இருக்கிறது.

போன ஞாயிறு பிற்பகல் கல்கியில் கிரேசி மோகன் கேள்வி பதில் 100 வாரம் கொண்டாடிய நிகழ்ச்சி. கல்கியிலோ அல்லது வேறே எந்தப் பத்திரிகையிலுமோ 26, மிஞ்சிப் போனால் 30 வாரம் மேல் காலம் எழுத இடம் தர மாட்டார்கள். (விகடனில் நான் ரெண்டரை வருஷம் இண்டர்நெட் காலம் எழுதியது பத்து வருடப் பழஞ் கஞ்சி). கிரேசிக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அவர் எழுத எழுத காலம் நீளும்.

அவர் கேள்வி பதில் எழுதியதும் அதை லொட்டு லொட்டென்று முழுக்க எஸ்.எம்.எஸ்ஸில் தட்டி எனக்கும் எங்கள் பரஸ்பர நண்பர் சு.ரவிக்கும் அனுப்புவார். முதல் ரசிகர்கள். நண்பர்கள் என்ற உரிமையில் அது சொத்தை இது சொள்ளை இது ஓகே என்றெல்லாம் கமெண்ட் அனுப்பினாலும் மனுஷர் அசர மாட்டார் (உண்மையிலேயே அவருடைய பதில் எல்லாமே முதல் தடவையே சரியாகத் தான் வந்திருக்கும். சும்மா கலாட்டாவுக்குத்தான் என் பதில் எஸ்.எம்.எஸ்). உடனே மாற்றி இன்னொரு பதில். இந்தக் கேள்வி பதிலில் கிரேஸியின் இலக்கிய, தத்துவ, ஆன்மீக முகம் எல்லாம் நகைச்சுவைப் பொலிவோடு வந்திருப்பதைக் காணலாம். அவருடைய ஓவிய முகம் தான் இதுவரை அங்கே வரவில்லை.

8888888888888888888888888888888888888888

போன வாரத்துக்கு முந்திய சனிக்கிழமை விஜய் டிவி அழைப்பில் மதுரை பயணம். ‘கமலும் தமிழும்’ கலந்துரையாடல். ‘பஸ்ஸிலே டெக்னீஷியன், காமிராவோட நீங்களும் வந்துடுங்க’. வேணாம் என்று மறுத்துவிட்டு விமானம் ஏறினேன்.

திருமலை நாயக்கர் மஹாலில் மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி தொடங்கியது ராத்திரி பத்தரைக்கு. எஸ்.ரா, மனுஷ்யபுத்ரன், பேராசிரியர் ஞானசம்பந்தன், இந்துமதி என்று எனக்கு அண்மையில் இஷ்ட மித்ர பந்துக்கள். அந்தப் பக்கம் இயக்குனர்களில் சேரனை மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது.

இதை நீங்கள் படிக்கும்போது நிகழ்ச்சி சானலில் ஒளிபரப்பாகி இருக்கலாம். நான் பாதியில் இருந்துதான் கலந்து கொண்டேன். இவர்கள் தாமதப் படுத்தியதில் ஒரு தூக்கம் போட்டு எழுந்திருப்பதற்குள் மற்றவர்கள் நிறையப் பேசி முடித்திருந்தார்கள்.

888888888888888888888888888888888888888888888888

‘இந்தப் படத்தில் கதை வசனம் எழுதினது குறித்து உங்க அனுபவம்’ – கேமிராவும் மைக்குமாகக் கேட்கிறவர்களைத் தவிர்த்து விடுகிறேன். கீ கொடுத்த பொம்மை போல் ஒரே விஷயத்தை எத்தனை தடவை சொல்வது?

இதுவரை எனக்கு முன்னால் மைக்கை நீட்டி காமிராவைப் பார்த்துப் பேசச் சொன்ன அன்பர்கள் அதையெல்லாம் சின்னத் திரையில் ஒளிபரப்பினார்களா என்று தக்க ஆதாரத்துடன் தெரிவித்தால் அடுத்த மைக்குக்குக் கையை நீட்டுகிறேன்.

888888888888888888888888888888888888888888888888

கோவிந்த் நிகலானியோடு ஒத்துழைத்து ஒரு படம் செய்கிறேன். உற்சாகமாக இருக்கிறது. ஆர்ட் பிலிம் டைரக்டர்கள் எல்லாம் முகத்தை மூணு முழம் நீட்டி வைத்துக் கொண்டு வார்த்தையை அளந்து பேசுவது மலையாளத்துக்கு வேணுமானால் சரியாக இருக்கலாம்.

கோவிந்த் சொன்னாரே என்று ‘எ மேன் எண்டர்ஸ் எ பார்’ ரக ஜோக் புத்தகங்களைத் தேடி லாண்ட்மார்க் கடைக்குப் போக, அங்கே ஹ்யூமர் பகுதியில் முதலில் கண்ணில் பட்ட புத்தகம் திபங்கர் சட்டோபாத்யாயா எழுதிய மிருணாள் சென்னின் வாழ்க்கை வரலாறு.

மிருணாள் சென்னுக்கு அவர் வாழ்க்கை சென்னை லாண்ட் மார்க்கில் சிரிப்பாகச் சிரிப்பது தெரியாது. கோவிந்துக்குச் சொன்னேன். அவர் உடனே மும்பையில் ஜோக் புத்தகத்தை வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888

இரண்டு முக்கிய வெண்பாக்கள்

நான்

காபி குடித்தபடி காலையில் ஹிந்துவிலென்
ஆபிச் சுவரியை ஆங்காங்கே – பாதி
விழிவருடி பாத்ரூம்போய் வீரியமாய் முக்கக்
க்ழிவில் கலக்கும் இறப்பு
.

மோகன்

இன்னார் இறப்பென்று இந்துவில் கண்டநான்
அன்னாரைக் காண அகம்சென்றேன் -சொன்னார்கள்
முக்கனி சாப்பிட்டால் முக்கநீ வேண்டாமாம்
முக்காமல் ஆயாச்சு மூச்சு….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன