நானும் புத்தகங்களும்

 

நண்பர் எஸ்.ரா ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார்

http://www.sramakrishnan.com/?p=2233

இது தொடர்பான என் சிந்தனைகள்

எஸ்.ரா நன்றாக எழுதியிருக்கிறார். வெளிநாடு போய் வருடக் கணக்கில் தங்கியிருக்கும்போது என் வாசிப்பு அதிகமாவதை உணர்கிறேன். புத்தகக் கடைகள் அங்கே ஹாலிபாக்ஸ் போன்ற சிறு ந்கரில் கூட ஈர்ப்போடு காட்சி அளிக்கின்றன. வருடம் முழுக்க தள்ளுபடி விற்பனை, எழுத்தாளர் சந்திப்பு. எடின்பரோ புத்தகக்கடை Pebbles (கூழாங்கற்கள் – என்ன அழகான பெயர்) யில் நான் ஹெரால்ட் பைண்டர் மற்றும் ம்யூரல் ஸ்பார்க் புத்தகங்களை ஒவ்வொன்றாக வார இறுதியில் வாங்குவதைப் பார்த்து முழுத் தொகுதிகளையுமே எனக்காக சலுகை விலைக்குத் தர முன்வந்தபோது சந்தோஷமாக இருந்தது. லண்டன் க்ளஸ்டர் வீதியில் எழுத்தாளர் கிரகாம் க்ரீனின் மருமகன் வைத்திருக்கும் பழைய புத்தகக் கடையில் அவரோடு புத்தக அரட்டைக்கும் அவர் சிபாரிசு செய்கிற புத்தகங்களை வாங்கவுமே எவ்வளவோ முறை படியேறி இருக்கிறேன்.

சென்னை புத்தகக்கடைகள் பலவும் அந்நியமாக விலகியே இருக்கின்றன (புக்லேண்ட் பரவாயில்லை). வாசித்த பிறகு புத்தகத்தை மனதுக்குப் பிடித்த, ஒத்த ரசனை உள்ளவர்களுக்குக் கொடுத்து விடுவதில் எந்தத் தயக்கமும் எனக்கு ஏற்பட்டதில்லை. புத்தகங்களை ஒரு முறையோ, மறுமுறையோ வாசிக்காது வெறுமனே சேர்ந்த்து வைப்பது நமக்குள் இன்னும் ஒளிந்திருக்கும் பிரபுத்துவத்தின் எச்ச சொச்சம் என்றே தோன்றுகிறது.

எத்தனை பட்டியல் போட்டு படிக்க உட்கார்ந்தாலும் ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்ததும் அந்தத் திட்டமெல்லாம் தரைமட்டமாகி விடுகிறது. வயதாக வயதாக வனப்புக் கூடும் அசாத்தியமான தன்மை புத்தகங்களுக்கே உண்டு. வயசன்மார்களின் அபத்தமான பகடிக்கும், நோஸ்டால்ஜியாவுக்கும் மனம் விட்டுச் சிரித்தும் ரசித்தும் மகிழ்கிறது போல், 1938-ம் வருட தீபாவளி மலரின் அபத்தக் கதைகளும் சிரிப்புத்துணுக்கும் திகட்டவே இல்லை. பழுப்பான காகிதமும், யாரோ எப்போதோ சிந்திய காப்பி உலர்ந்த தடமும் பாதி படித்து அடையாளமாகச் செருகி வைத்த எட்டாக மடித்த பாவமன்னிப்பு நோட்டீஸும் கொடுக்கும் சுகானுபவத்தையும் புத்தக அனுபவத்தின் பகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலமாகச் சிபாரிசு செய்கிறேன்.

புத்தக வாசிப்பில் அலுப்படைய வைப்பவை ஒற்றுப் பிழைகள். ஒற்று வராமல் போனாலும் பரவாயில்லை (அவனை பார்த்தான்). ஒற்று தேவையில்லாமல் மிகுந்த சந்திப் பிழைகள் எரிச்சல் ஊட்டுகிறவை – ‘அடுத்தக் கட்டம்’ போல்.

வாசிக்கும் போதே உதிர்கிற பக்கங்கள் இன்னொரு தொந்தரவு. 70-80களில் என் ஆசிரியர் கவிஞர் மீராவின் சிவகங்கை அன்னம்-அகரம் பதிப்பகம் போல் அற்புதமான புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் வேறே யாரும் இல்லை. அந்த நூல்கள் போல் அடிக்கடி தரையைப் பெருக்கிப் பக்கத்தை எடுத்து பசை தடவி ஒட்ட வேண்டிய அவஸ்தையைக் கொடுத்த புத்தகங்களும் இப்போது இல்லை.

நேர்த்தியான அச்சு, கட்டமைப்பு என்றால் உடனடி நினைவுக்கு வருகிறவை வாசகர் வட்டம், மிர் பப்ளிகேஷன்ஸ். வாசகர் வட்டத்தின் ‘பள்ளிகொண்டபுரம்’ அழகோடு காலச்சுவடு பதிப்பை ஒப்பிட்டால்… பழைய புத்தகத்தின் உள் அட்டையில் நீல.பத்மநாபனின் இள வயது புகைப்படம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எனக்கு சோவியத் இலக்கியம் தால்ஸ்தாயிலும் தஸ்தவஸ்கியிலும் ஆரம்பிக்கவில்லை. யா.பெரல்மானின் ‘பொழுதுபோக்கு பௌதிக’த்தில் (ரெண்டு பாகம்) தொடங்குகிறது. அடுத்தது வேரா பனோவாவின் செர்யோஷா

புத்தகங்கள் பற்றி எத்தனை எழுதினாலும் அலுப்பதில்லை. கடைசியாக ஒன்று – நண்பர்கள் மனுஷ்யபுத்ரன், பத்ரி, கண்ணன் ஏற்பார்களோ என்னமோ – கெட்டி அட்டை போடாத வகைப் புத்தகங்களில் (paperback) தமிழ்ப் புத்தகங்களை விட மலையாளப் புத்தகங்கள் அச்சிலும் அமைப்பிலும் நேர்த்தியானவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன