புது நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 48 இரா.முருகன்


நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் கலந்து கொடுக்கும் உதவியாளர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலை அரசு பண்ணையின் தலைவர் சிறப்புத் தூதர் மூலம் கொடுத்து அனுப்பியிருந்தாரா? அது நேரத்துக்கு வந்ததா? தேயிலையைப் பாலில் கொதிக்க வைத்து நீங்கள் விதித்த வெப்ப அளவுக்குக் காய்ச்சப் பட்டதா? நீங்கள் விரும்பியபடி வெண்மை குறைந்த சர்க்கரை சரியான அளவில் சேர்க்கப் பட்டுத் தேநீர் அருந்தக் கிடைத்ததா?

நந்தினி பேசி நிறுத்தினாள். மூச்சு வாங்கியது. கோப்பை கழுவுவதைப் பற்றி விட்டுப் போனதே என்று ஒரு எண்ணம் வந்து நழுவியது. இன்னொரு தடவை அதையும் சேர்த்து முழுவதுமாகச் சொல்லி விசாரிக்கலாமா?

புதிய ராணுவத் தலைவர் எல்லா மரியாதையும் தொனிக்க, சற்றே முன் சாய்ந்து நந்தினி தொடுத்த கேள்விச் சரங்களைச் செவிப்படுத்தி நின்று கொண்டிருந்தார். கேள்விகளின் மழை ஓய்ந்ததும் அதே மரியாதையோடு பதில் சொல்வார் என்று நந்தினிக்குத் தெரியும்.

கடவுளின் சகோதரி மகிழ்ச்சியாக இருப்பதையும் நகைச்சுவையாகப் பேசுவதையும் எங்களின் பாக்கியமாகக் கருதுகிறோம். இந்த மகிழ்ச்சி நாடு முழுவதும் இப்போது எதிரொலிக்கும். ஆடும் பறவைகள் வீட்டு முன்னறையில் சிறகு விரித்து ஆடி வாழ்த்தும் உங்களுடைய புனிதமான குரலைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். நாட்டு வானொலியில் இன்று ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் அது ஒலிபரப்பாக உத்தரவு செய்கிறேன். இந்த ஒலிபரப்பைக் கேட்பது எல்லோருக்கும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. பள்ளிகளிலும் ரேடியோக்கள் கொடுத்திருப்பதால் உங்கள் குரல் கேட்ட பிஞ்சு நெஞ்சங்களில் நல்ல சிந்தனைகள் மேலெழுந்து வரும். சர்க்கரைத் தொழிற்சாலைகளிலும், உணவு விடுதிகளிலும், மின்சார மயானங்களிலும், போக்குவரத்து வாகனங்களிலும், ஐஸ்க்ரீம் உருவாக்கும் தொழில் நிறுவனங்களிலும், கசாப்புக் கடைகளிலும் இந்த நல்ல அதிர்வுகள் பரவி நினைப்பும் செயலும் மேம்படட்டும்.

உடல் வளைந்து நின்று பேசும்போது தொப்பி கீழே விழாமல் ஜாக்கிரதையாக ஒரு கையால் பற்றியபடி ராணுவத் தலைவர் பேச, நந்தினிக்கு முதல் தடவையாகச் சிரிப்பு வந்தது.

இந்த மாதிரித் தானே மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது.

வைத்தாஸ் இருக்கும் இடத்தில் அந்த ஒலிபரப்பு போய்ச் சேரலாம். மற்ற நாடுகளில் இது ஒற்றர்களாலும், அரசாங்கப் பிரதிநிதிகளாலும், அமைச்சர், நிர்வாக அதிகாரிகளாலும் மறைபொருள் தேடிக் கவனமாகக் கேட்கப் படலாம். இந்த நாட்டின் தற்போதைய நிலை பற்றிய கவலைகளோ, மகிழ்ச்சியோ பரவலாக எழுந்திருக்கலாம். நந்தினி பேசி அதெல்லாம் ஏற்பட வேணுமா?

நேரே விஷயத்துக்கு வந்து விட்டாள் நந்தினி.

நான் போக வேண்டி இருக்கிறது. இனியும் இங்கே தங்கியிருக்க விரும்பவில்லை. வைத்தாஸோடு இருக்க, என் குடும்பத்தோடு இருக்க. எனக்கு உடனே புறப்பட வேணும். எல்லையில் விட்டால் நானே போய் விடுவேன். ஒரு துணையும் வேண்டாம். காசு பணமும் மற்றதும் வேண்டாம்.

அதிகாரி நம்ப முடியாத சொற்களைக் கேட்க நேர்ந்தவரின் முக பாவத்தையும் பதறும் உடல் மொழியையும் கொண்டவராக ஒரு வினாடி தலை குனிந்து நின்றார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கியது மூன்று முறையும் மேலே நகராமலேயே நின்று விட்டது.

இன்னும் கடுமையாகச் சொல்லலாமா என்று நினைத்தாள் நந்தினி. வேண்டாம். உயிருக்கும் மானத்துக்கும் இங்கே பாதுகாப்பு கிடைக்கிறது. இருக்க இடமும் தின்னச் சோறும் சகல வித மரியாதையோடு கிடைக்கிறது. உடுதுணி புதிதாக வேண்டும் என்று கழிப்பறைச் சுவருக்கு முன் நின்று முணுமுணுத்தாலும் இருபத்து நாலு மணி நேரத்தில் நாட்டுத் தலைவர் தன் முக்கியமான அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கிறார். மாறி மாறி வரும் அரசாங்கத் தலைமையை மனதில் கொள்ளாமல் எல்லாமும் எல்லோரும் எல்லா ஆட்சியும் ஒன்றே தான் என்றும், தானே கடவுளின் சகோதரி என்றும் பார்க்கப் பழகி விட்டால் இந்த வாழ்க்கையும் இனியதாகவே இறுதிவரை போய் ஓயலாம். இடுப்புக்குக் கீழே மரத்துப் போய் வெளியே நடக்க முடியாமல் கட்டைக் கால்களோடு அருள் பாலிக்கும் முது பெண்மணி. வைத்தாஸ் இல்லாத உலகம் அதன் நியதிகளோடும் எதிர்பார்ப்புகளோடும் இயங்கும். இதைக் கடந்து பழைய அனுபவங்களை நோக்கிப் போக முற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். தானே அதைத் தருவித்துக் கொள்ள வேண்டுமா?

நந்தினி கண் மூடி இருந்த நிலை மாற்றி மெல்ல எழுந்து நின்றாள்.

கவலை வேண்டாம். மயில் ஆடிக் கொண்டிருக்கும் வரை நான் இங்கே இருப்பேன். எனக்கான விதிப்பு அது என்பதை அறிவேன். நட்டாற்றில் விட்டு விட்டுப் போக மாட்டேன். ஆயாசம் சற்றே ஏற்படும்போது இதை எல்லாம் விலக்கி நடந்து விடலாமா என்று தோன்றுகிறது. நொடி நேரம் தான். மனம் மறுபடி தெளிவு பெறுகிறது.

வ்ரவழைத்துக் கொண்ட குளிர்ந்த குரலில் அவள் அலுப்பை மறைத்தபடி சொன்னாள்.

நந்தினியின் காலடிகளை நோக்கி நீட்டிய கைகளைத் தன் இரு கண்ணிலும் வைத்துக் கொண்டார் தலைவர். இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று முன் அறையில் இருந்தவர்களோடு சொல்லியபடி கார் ஏறிப் போனார்.

அவ்ர் போய் வெகு நேரம் சென்றும் அவரிட்ம் கேட்க நினைத்ததும் பொங்கிப் பொங்கி வந்து அடங்கும் ஆத்திரமும் மனதிலேயே தங்கி அலையடித்து இருக்க படுக்கையில் உட்கார்ந்திருந்தாள் நந்தினி.

வைத்தாஸ் எங்கே இருக்கான்? அவன் கிட்டே நான் எப்போ போக முடியும்?. சொல்லேண்டா படுபாவி. களவாணித் தேவிடியா மகனே. நான் இங்கே என்ன புடுங்கணும்னு கூழைக் கும்பிடு போடறே?. கடவுள் விளையாட்டுக்கு நான் இல்லே. நீ ஆட்சிக்கு வா. அல்லெங்கில் புழுத்துச் செத்துப் போ. என்னை விடுடா. நான் போகறேன். டிராயிங் ரூம் மயில் படத்தை எடுத்து உன் ஆசன வாயில் செருகிக்க. அங்கே அது ஆடட்டும். எனக்கு ஒரு விரோதமில்லே.

வேலைக்கு நிற்கிற பெண் கதவைத் தட்டி விட்டு எட்டிப் பார்த்தாள். உதடு அசையாமல் ஜாக்கிரதையாக வாயை இழுத்து மூடிக் கொண்டு நந்தினி அவளை நோக்கினாள். உள்ளே ஓடி வந்து, தரையில் உருண்டிருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டுத் திருமப வெளியே ஓடி வாசல் கதவைத் தட்டினாள் அந்தப் பெண்.

நந்தினி சிறு புன்னகையோடு அவளை உள்ளே அழைப்பதற்கு முன் பொதியாக இருட்டு மேலே விழுந்து கவிந்ததாக ஒரு பிரமை. ஆசுவாசமாக இருந்தது. இந்த வினாடி உறங்கி எல்லாத் துயரும் களையலாம் என்று தோன்றியது. இருட்டில் நடந்து கடக்க முடியாமல் போகும் பாதை முன்னே நீண்டு பயமுறுத்தியது. அந்தப் பாதையின் தொடக்கத்தில் பெரிய வீடு ஒன்று. கரண்ட் போன ராத்திரி நேரத்தில் படிகளில் இயக்கம் மிகுந்து சப்த ரூபமாக விரியும் இருப்பிடம் அது. தோளில் செத்த மயிலைச் சுமந்து போகிற வாளிப்பான பெண்ணின் கண்கள் காம மயக்கத்தில் லகரி ஏறிக் கிடக்கின்றன. அவளுடைய வெப்ப மூச்சு நந்தினியைத் தகிக்கிறது.

வீராவாலி தானே நீ?

நந்தினி கேட்க மௌனமாகத் தலையசைக்கிறாள். அவளுக்குப் பின்னால் வைத்தாஸ் இப்போது வருவான்.

உறுதியான தோல் செருப்புகள் தரையில் அழுந்தப் பதிந்து ஒலிக்கும் காலடிச் சத்தம். வைத்தாஸ் தான். இவன் எழுத்தில் இருந்து வ்ருகிறவன். வைத்தாஸ் இவனை எழுதியபடி காமத்தோடு இருக்கிறவன். என்றென்றைக்கும்.

வீராவாலியை இணை விழைந்து குறி விரைத்து வரும் மிருகமாகத் தனக்கு முன்னால் படிக்கட்டுகளில் ஏறிப் போகும் அவளுடைய பிருஷ்டம் நோக்கி முன்னேறி நடக்கிறவனை வழி மறிக்கிறாள் நந்தினி.

நான் இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கணும்? நந்தினி கேட்கிறாள்.

அவன் முன்னால் நகர்ந்து வீராவாலியின் வாடை பிடித்துப் போவதில் மும்முரமாக இருக்கிறான். நந்தினியின் பிடி தளர அவள் படிக்கட்டில் சரிகிறாள்.

நான் வைத்தாஸ் இல்லை. அவன் நாவலில் இருந்து இறங்கியவன். வீராவாலியைப் புணர்வதல்லாமல் எனக்கு வேறேதும் அனுபவப்பட எழுதிப் போகிறவன் அனுமதிக்கவில்லை.

வீராவாலி நின்று திரும்பிப் பார்த்து நாம் இடம் மாற்றிக் கொள்ளலாமா என்று நந்தினியைக் கேட்கிறாள். அப்படி என்றால்?

நீ செத்த மயிலைச் சுமந்து வைராஸோடு போகம் செய்யப் படி ஏறி நட. நான் நீயாக ஆடும் மயிலின் ஓவியத்தோடு புனிதம் சுமந்து உன் இடத்தில் வந்து விடுகிறேன். எனக்கு இந்த உபசாரங்கள் எல்லாம் வேண்டும் –

நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் செய்து கொடுக்கும் பெண் ஊழியர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலை.

அவள் நிறுத்தி நிதானமாகச் சொல்ல, பதறிப் போய்க் கைகாட்டி நிறுத்தினாள் நந்தினி. அடுத்த ராணுவத் தலைவர் ஆட்சியைப் பிடிக்க, வீராவாலியை நந்தினி இடத்தில் வைத்துத் தொழத் தொடங்குவார்கள். நந்தினி தப்பி ஓடி, வீராவாலியாக மயிலின் சவம் சுமந்து, வைத்தாஸ் பின்னால் தொடர்ந்து வந்து கூடுவான் என்று எதிர்பார்த்து நடக்கிற மாடிப்படிகள் அந்தரத்தில் நிற்கக் கூடும்.

நந்தினியை அப்போது ஈவிரக்கமில்லாமல், தெரு நாய் போல, புழுத்த தெருநாய் போல, கருக் கொண்ட சொறிநாய் போல, மலம் தின்ன ஓடும் பட்டி போல நக்னமாக்கி மேலே உமிழ்ந்து முகத்தை நனைத்து, நாறும் குறிகள் கொண்டு நெம்பித் திறந்த வாயில் மூத்திரமும் விந்தும் நிறைத்து விழுங்க வைத்து காலால் வயிற்றுக்குக் கீழே உதைத்து சுற்றி நின்று சுட்டுத் தள்ளிக் கொன்று போடுவார்கள்.

அப்படித்தான் அப்படித்தான்.

இருட்டில் லாந்தரைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு படி இறங்கி வந்த யாரோ சொல்லியபடி காத்திரமான நிழல்களைச் சுவர்களில் பதித்துப் போகிறார்கள்.

படகு நீள முழக்கி அழைத்தபடி காயலில் மிதந்து வரும் சத்தம் அருகில் கேட்கிறது. அடர்ந்த திரையாக மழை வழி மறைக்கும் வேம்பநாட்டுக் காயல்.

படகுத் துறையில் குடையோடு நிற்கிற சாமு சொல்கிறான் –

தம்புராட்டி, வரூ. மேல்சாந்தி மனையில் கவடி நிறத்துப் பார்கலாம். நீங்க எப்போ வைத்தாஸ் சேட்டனோடு திரும்பச் சேரலாம்னு உடனே தெரியும்.

நான் நந்தினியா வீராவாலியா?

மாடிப்படி வளைந்து இருட்டில் திரும்பும் வளைவில் நந்தினி நிற்க, கண் தெளிவடைந்து வந்தது. மேசையில் இருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை எடுத்துத் திரும்ப அங்கேயே வைத்து விட்டு வாசலுக்கு ஓடிய பெண் கதவைத் தட்டியபடி நின்றாள்.

நான் உள்ளே வரலாமா?

வா. ஆனா, நான் யார், அதைச் சொல்லு முதல்லே.

நந்தினி கேட்டாள்.

கடவுளின் சகோதரி.

புதிதாக ஆட்சிக்கு வந்த ராணுவத் தலைவர் அறிவித்தபடி உள்ளே நுழைந்தார்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன