New Bio-fiction: தியூப்ளே வீதி – அத்தியாயம் 18 இரா.முருகன்


’நாளைக்கு ஹால் டிக்கெட் வருது’.

ஒரு மாறுதலுக்காக ருழே பொண்ணு பிரஞ்சில் சொன்னதைத் தமிழ்ப் படுத்தாமல் அமேலி நேரடியாக அறிவித்தாள்.

படிக்க வேண்டும். இது பிசிக்ஸையும், கணிதத்தையும், கெமிஸ்ட்ரியையும் பற்றி இல்லை. அதெல்லாம் குறித்து அடுத்த வருஷம் கவலைப் பட்டால் போதும். இப்போதைக்கு ரெண்டு பேப்பர் தமிழிலும், இன்னும் ரெண்டு இங்கிலீஷிலும் எழுதி நாலும் ஜெயிக்க வேண்டும்.

’எழுதணும்னு ஒண்ணும் இல்லே’.

வைத்தே பரீட்சையைச் சந்திக்காமலே வெற்றி கொள்ள வழி சொல்கிற நிபுணன் போல் காப்பிக் கோப்பையை மெல்லச் சுழற்றிச் சூடாற்றிக் கொண்டு தெரிவித்தான். லெச்சு அவனை ஆதரவோடு பார்த்தான்.

’ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணும்’.

அந்த்வான் அந்தக் கருத்தை வெட்டியோ ஒட்டியோ ஏதோ பேச ஆரம்பிக்க, காபி ஹவுஸ் சர்வர் சவரிராயன் வந்து நின்று ராத்திரி கடை அடைக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று என்று சந்தோஷ சமாசாரம் தெரிவித்தார்.

’அஞ்சே நிமிஷம். தலை போகிற விஷயம்’.

லெச்சு கருணை மனு போட அதை நிராகரித்த சவரிராயன் பக்கத்தில் காலியாக இருந்த நாலு நாற்காலிகளை அடுத்த மேஜை மேல் அலங்காரமாகத் தூக்கி நிறுத்தினார்.

’தெ லெஸ்ஸி அலெ’ என்று கைப்பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய ருழேயைத் தொடர்ந்து நாங்கள் வெளியேற ஷட்டர் விழுந்தது.

எல்லோரும் புறப்பட்டுப் போக, ருழே தன் மோட்டார்பைக்கை ஸ்டார்ட் செய்தபடி என்னைக் கேட்டாள் –

’பெடியா, வர்றியா’?

’ஏன் நீ அமேலியைக் கூட்டிப் போக மாட்டியா’? ஆச்சரியத்தோடு கேட்டேன்.

’நான் போகுது ரூ வின்செண்ட் தெ பால். செ பூப்பே.. குட்டி’ அமேலி பக்கம் கை காட்டினாள் ருழே.

குட்டியை ஏற இறங்கப் பார்க்கத் அவள் தலை குனிந்து கொண்டாள்.

’ரெண்டு பிசாசும் ஒரே புளியமரம் .. ஒரே ஹாஸ்டல் தானே’

நான் கேட்டு முடிப்பதற்கு: ருழே அவள் மோட்டார் சைக்கிளால் என் ராலேயின் முன் சக்கரத்தில் மோதினாள்.

’ஒலி ஒலி’

அவள் சொல்லியபடி நகர, ’சனியனே அது ஒழி என்று நேரம் கெட்ட நேரத்தில் நல்ல தமிழ் கற்றுக் கொடுத்தேன்.

நானும் அமேலியும் மட்டும் அடைத்த கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம்.

’நீ எங்கே போகணும் மோனாஷ்’?

கயல் சொல்லிக் கொடுத்த வார்த்தை. ’என் தேவதையே’ என்று அர்த்தமாம்.இந்த நிமிடம் பிரான்சில் முப்பத்தைந்தாயிரத்து முன்னூற்று நாற்பத்தெட்டுக் காதலர்கள் காதலிக்குச் சொல்லி முத்தம் கொடுக்க நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் சிநேகிதர்கள் சிநேகிதளோடு மேலும் நெருக்கமாகத் துடித்து இப்படி விளிக்கிறார்கள்.

அமேலி ஏதும் சொல்லவில்ல. மௌனம் சம்மதமா இல்லையா?

’நேத்து பிரஞ்ச் ஃபெயரி டேல்ஸ் படிச்சது.. தேவதைக் கதை’.. ஒரு வேகத்திலே’.
எதற்கும் இருக்கட்டும் என்று கொஞ்சம் பின் வாங்கினேன். அமேலி ஒரு வினாடி என்னைப் பார்த்தாள்

’திசொலி’. சாரி சொல்லிச் சரணாகதி அடைந்தேன் அவளிடம்.

உஷ் என்று உதட்டில் கை வைத்து அமைதி காக்கச் சொன்னாள்.

’திசொலி மோன் ஆஷ்’.

குறுகுறு என்று அமைதியாகப் புன்னகைத்தபடி, கை கட்டி வாய் பொத்தச் சொன்னாள் அமேலி. செய்தேன். இப்படிக் கட்டிப் போட்டால் இந்த ராத்திரி முழுக்க இங்கேயே நின்று கொண்டிருப்பேன்.

’இதென்ன தண்டனையா இல்லே சன்மானம் கொடுக்கப் போறியா’?

அவள் கைப்பையில் இருந்து தேடி ஒரு புத்தகத்தை எடுத்தாள்.

‘இந்தா ஒழுங்கா பிரஞ்சு படி. ஒண்ணு ரெண்டு வார்த்தை படிச்சுட்டு இஷ்டத்துக்கு அடிச்சு விடாதே’.

மெர்சி சொல்லியபடி நின்றேன். ’வாங்கிக்கயேன்’. கையைக் கட்டிட்டு எப்படி வாங்கறது? அவள் சிரித்தபடி அருகில் வந்து என் கையைப் பறித்து புத்தகத்தை வைத்து திரும்பக் கை மடக்க, அவள் பக்கம் திரும்பி நான்.

எதுக்கு? கயல் காதில் விழுந்தால் வேறே வினையே வேண்டாம்.

’ஒரு சின்ன உதவி. புத்தகம் கொடுத்துட்டு உடனே ஹெல்ப் கேக்கறேன்னு நினச்சுக்காதே’. அமேலி என் சைக்கிள் ஹேண்ட்பாரைப் பிடித்தபடி நின்றாள்

புத்தகத்தைப் பார்த்தேன். உலகில் இருக்கும் அழகான பெண்கள் எல்லோரிடமும் பிதற்ற அதில் போதுமான வார்த்தைகள் இருக்காது என்று தோன்றியது.

’என்னை லலி தொலெந்தால் தெருவிலே கொண்டு போய் விடுவியா? சிரமம்னா வேணாம்’, என்றாள் அமேலி.

’ஒரு சிரமமுமில்லை அமீ. தொலெந்தால் தெருவிலே என்ன விசேஷம்’? என்று விசாரித்தேன்.

’அப்பா ஃப்ரண்ட் வீடு இருக்கு. அங்கே இன்னிலேருந்து பேயிங் கெஸ்ட்டா தங்க வச்சுட்டார். எக்ஸாம் வர்றது இல்லே. படிக்கற நேரத்துலே கவனிச்சுக்க ஆள் வேணுமாம்’.

படிக்க வேணும். அடுத்த மாதம் அந்த நாலு பேப்பரும் பாஸ் ஆகியே தீர வேண்டும். இல்லையென்றால் அரியர்ஸ் என்ற பெரும்பழி என்னோடு ஒட்டிக் கொள்ளும். அதைச் சுமந்து கொண்டு ஜோசபினோடு சின்ன சந்தோஷங்களையும் இதமான வருடலையும், கயலோடு எச்சில் பண்ணிய ஷொகொலாவையும் வினாடி நேர அணைப்பையும் பகிர்ந்து கொள்ள முடியாது.

’என்னோடு பகிர்ந்துக்க எதுவும் இல்லையா? பரவாயில்லே, அவுட் ஆஃப் சைட், அவுட் ஆஃப் மைண்ட்’..

மேகலா தெற்றுப்பல் தெரியாமல் வாயை இறுக மூடி கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றபடி காணாமல் போனாள். மேகலா, ஏய், நீ நீ நீ.

’என்ன நீ நீ நீன்னு.. எதாவது சொல்லணுமா’?.

சைக்கிளில் எனக்கு முன்னால் பாரில் உட்கார்ந்து வந்த அமேலி கேட்டாள், பின்னால் உட்காரச் சொன்னால், குதித்து முன்னே உட்கார்ந்து விட்டாள். விழுந்து விடாமல் இருக்க அவளை ரெண்டு கையாலும் வளைத்துப் பிடித்து வண்டி ஓட்டிப் போக வேண்டியிருக்கிறது. சுகமான சுமை. கயலோ ஜோசபினோ வராத வீதியாக இருக்கட்டும் இது.

அப்படியே ஆனது. லலி தொலெந்தால் தெருவும் ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவும் சந்திக்கும் முனையில் இறங்கிக் கொண்டாள் அமேலி.

வீட்டுக்கு வர்றியா என்று உபசாரத்துக்குக் கூப்பிட்டாள். அவளுக்கே புதிய சூழ்நிலை. பழகிய பிறகு பார்க்கலாம் என்றேன். ’எப்படியும் அப்பப்போ யாராவது ஊர்லே இருந்து வந்தா இந்தத் தர்மராஜா தெருவிலே பாரதியார் இருந்த வீட்டைக் காட்ட கூட்டி வருவேன். அப்போ ஹலோ சொல்றேன்’.

அமேலி நின்று திரும்பிக் கை காட்டினாள். திரும்ப கை கட்டி வாய்ப் பொத்தணுமா என்ன?

‘நாளைக்கு சாயந்திரம் காலேஜ்லே இருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வரலாமா’?

ஓ எஸ் என்றேன். என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்பேனா என்ன?

மனசுக்குள் ஜில் என்று உற்சாகம் பொங்கி வந்தது. தப்பு தான் என்று எல்லா நியாயமும் சொல்ல, எல்லாமே நட்பு தான் இதிலே தப்பு எது சரி எது என்று அதே மனம் கட்சி கட்டியது.

’எங்கேன்னு சொல்லலியே’. அமேலி ஞாபகப்படுத்தினாள்.

’காப்பி ஹவுஸ் தானே’ என்று வேண்டுமென்றே விட்டேத்தியாகப் பதில் சொன்னேன்.

’ம ஷெரி, நான் கேட்டது புக்ஸ்டாலுக்கு. நோட்ஸ் வாங்கப் போகலாமான்னு’..

ராத்திரி பூரா உறங்காத நாட்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த இரவும் அப்படித்தான்.

காலேஜில் கயலைப் பார்த்த உடனே கேட்டேன்.

’ஷெரின்னா என்ன கயல்’?

சீ போ என்று நாணத்தோடு சிரித்தாள். காலங்கார்த்தாலே இதானா? எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி உச்சரித்தபடி கடந்து போக நான் அவசரமாகக் குறுக்கே போனேன்

‘சகுனமே சரியில்லே.. நரி வலம் போகுது.. பூனை குறுக்கே வர்றது’ மை எழுதிய கண்ணழகி சீண்டினாள்.

’குட்டிக் குரங்கே, சொல்லிட்டுப் போய்த் தொலையேன்’.

சுற்றுமுற்றும் பார்த்து விட்டுச் சொன்னாள்-

’மை டார்லிங்’.

என் முகத்தைக் கூர்ந்து பார்த்து, சந்தோஷம் தானே என்று சிரித்தாள்.

ரெட்டைச் சந்தோஷம் என்று சொல்லலாமா? வேணாம்.

’அப்புறம், சொல்ல மறந்துடுச்சு.. அம்மா இன்னிக்கு சாயந்திரம் உன்னைக் கூட்டி வரச் சொன்னாங்க. வரலட்சுமி நோன்பு பலகாரம் தரணுமாம். உனக்கு மிஞ்சினா மாட்டுக்குப் போட்டுடலாம்’.

சின்னப் பொண்ணு வாயைக் கிண்டி வேடிக்கை பார்க்கிறாள். மற்ற நாளாக இருந்தால், ஐந்து பத்து நிமிஷம் வகுப்புக்கு தாமதமாகப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டால் கூட பரவாயில்லை என்று விஸ்தாரமாகக் கடலை போட்டிருப்பேன்.

’கயல், சாரிடா, இன்னிக்கு நான் நோட்ஸ் வாங்க போய்க்கிட்டிருக்கேன். இங்கிலீஷ், தமிழ் ரெண்டும். உனக்கும் வாங்கி வந்துடட்டா’?

’சாப்பிட்டுட்டு போய் வாங்கேன்’. ஆசையோடு கூறினாள் கயல்.

’ரொம்ப டயம் ஆயிடும்’

’யாரெல்லாம் போறீங்க’?

யாரெல்லாம்? அமேலியோடு என்று உண்மையைச் சொல்லி விடலாமா? அப்புறம் வரும் கடற்கோளையும், நில நடுக்கத்தையும் யார் சமாளிப்பது? லெச்சுவோடு, அந்துவானோடு என்று பொய்? ராட்சசி அவர்களையே நேரே குறுக்கு விசாரணை செய்து விடுவாள்.

’நானும் ஜோசபினும் போறோம்’..

ஏற இறங்க என்னை ஒரு வினாடி பார்த்து விட்டுப் போய்விட்டாள் கயல்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் தேடி வந்து விட்டாள். சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது. உட்காரேன் என்றேன். லெச்சுவும், அந்துவானும் அவ்வண்ணமே சொன்னார்கள். வேணாம் என்றபடி என்னைக் கண் காட்டி எழுந்திருக்கச் சொன்னாள். எல்லாவற்றையும் எடுத்துக் கூடையில் திணித்து விட்டு எச்சில் கையோடு நாய்க்குட்டி போல கயல் பின்னால் போனேன்.

கேண்டீனில் கோரமாக நறுக்கிய பெங்களூர்க் கத்தரிக்காய் கூட்டும், பீர்க்கங்காய்ப் பொறியலுமாகப் பரிதாபமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹாஸ்டல் சிநேகிதர்களைக் கடந்து ஓரமாக ஆளில்லாத மேஜைக்கு வந்தோம்.

’கயல், கை கழுவிட்டு வந்துடட்டா’?

அவள் உருட்டி விழித்தாள். ’எனக்கு நேரம் இல்லே..போனேன் வந்தேன்னு வா’ என்று உறுமினாள். போய்த் திரும்பி வந்தேன். அவள் நான் இருந்த நாற்காலியைப் பார்த்து தீவிழித்தபடி இருந்தாள்.

’வந்துட்டேன் கண்ணு’. ஈரக் கையால் அவளுடைய கண்ணாடி வளைகளை நீவக் கை நீட்டினேன். விலக்கிக் கண்டிப்பாகச் சொன்னாள் – ’கட் பண்ணு… செல்லம் கொஞ்சறதெல்லாம் என் கிட்டே வேணாம்’.

’கோவிச்சுக்காதேடா பொம்முக்குட்டி’

’ஏய் வேணாம்னு சொன்னேனில்லே’

கைகட்டி வாய் பொத்தினேன். அமேலி நினைவு வந்தாள். சாயந்திரம் அவளோடு தனியாக.

’என்ன ஜோசபினோட கனவுப் பாடலா’?

கயல் எகத்தாளமாகச் சிரித்தாள்.

’ஏன்பா அந்தப் பொண்ணை வம்புக்கிழுக்கறே’ என்றேன் ஆதூரத்தோடு.

’அந்தப் பொண்ணா? அந்த அக்கான்னு சொல்லணும். உன்னை விட நாலு வயசு பெரிசு இல்லே’ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாள் கயல்.

‘நாலு வயசு பெரியவளா இருந்தால என்ன. எங்க ஊர்ப் பக்கம் முறைப் பெண், இளந்தாரிப் பையனை விட வயசுலே பெரியவளாக இருந்தா, எத்தனை வயது பெரியவளோ அத்தனை நெல்லை வெல்லத்தில் வச்சு பையன் முழுங்கினால் வயசு வித்தியாசம் போயிடுமாம். ஜோசபினுக்காக நாலு நெல் என்ன, நாலு கிலோ அரிசியே முழுங்க ரெடி’ என்றேன். சும்மா.

‘முழுங்கு, அரிசி மூட்டையையே முழுங்கு. கட்டிக்கிட்டு கை கால் பிடிச்சு விடு’. கயல் கிண்டலாகப் பார்த்துச் சிரித்தபடி சொன்னாள்.

’நான் போறேன். என் சிநேகிதி பற்றி அவமரியாதையாப் பேச உனக்கு உரிமை இல்லே’.. என் குரல் உயர்ந்தது எனக்கே தெரிந்தது. ஆறுவது சினம். ஆற் மாட்டேன். ரௌத்திரம் பழகு. யார் மேலே? இந்தப் பூ மேலேயா?

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் கூட காலேஜ் புக் வாங்க ஷாப்பிங் போகறீங்களாக்கும் . எப்பவும் அவங்க தான் இதெல்லாம் வாங்கித் தருவாங்க போலே.. சொல்லவே இல்லியே’, கிண்டல் தொடர்ந்தது.

‘போகவும் வரவும் உன் கிட்டே பெர்மிஷன் வாங்கணுமா என்ன’?

’நர்ஸ் எல்லாம் டிகிரி படிக்கற சின்னப் பசங்களை வளைச்சுப் போட வந்துட்டா, ஆஸ்பத்திரியிலே ஊசி போட, டெம்பரேச்சர் பாக்க எல்லாம் யாரு போவாங்க? ஸ்கூல் டீச்சரம்மாவா’?

நான் அவளை வாயை மூடச் சொன்னேன். இன்னும் பேசினால் பொது இடம் என்று பார்க்காமல் அறைந்து விடுவேன் என்றபடி இறங்கி வந்துவிட்டேன்.

சாயந்திரம் சீக்கிரம் அமேலியோடு கிளம்ப வேண்டும் என்பதால் சைக்கிள் எடுத்து வரவில்லை. கூட்டமான மொஃபசல் பஸ்ஸில் அடுத்தடுத்து அமர்ந்து வந்தோம். கயலோடு வஞ்சம் தீர்க்க அமேலியின் துப்பட்டா மறைத்த நீள விரல்களை மெதுவாக வருடிக் கொண்டிருந்தேன். கயலோடு பழி தீர்க்க அமேலியின் பெர்ப்யூம் வாசனை போல் இதுவரை சொர்க்கத்தை முகர்ந்ததில்லை என்று அவள் காதில் சொன்னேன். கயலை மட்டம் தட்டுவதற்காக அமேலி போன்ற பேரழகி இந்தக் கல்லூரியில் வேறு யாருமே இல்லை என்றேன். இந்தியா காஃபி ஹவுஸ் இருட்டு மூலையில், கயலுக்குப் பாடம் புகட்ட, அமேலியின் உதடுகளில்.. ’வேணாம், பயமா இருக்கு’ என்று அமேலி எழுந்தாள். ’இரு, ஆரஞ்ச் ஸ்க்வாஷ் சொல்லியிருக்கேன்.. சாப்பிட்டுப் போகலாம்’ என்றேன்.

சவரிராயன் ஒரு கிளாஸ் டம்ளர் ஜூசோடு வந்தார். ’இது மட்டும் தான் பாக்கி இருக்கு’ என்றார்.

ரெண்டு ஸ்ட்ரா கேட்டு வாங்கி அமேலியோடு ஒரே கிளாஸில் ஆரஞ்ச் ஸ்க்வாஷ் பருகினேன். இது கயலைப் பழிவாங்க இல்லை. என் சந்தோஷத்துக்காக.

’அமேலியோடு சந்தோஷமா இருக்க இதையெல்லாம் செஞ்சிட்டு கயலை வச்சு நியாயப் படுத்திக்கப் பார்க்கறே? நீ நல்லா இருக்க மாட்டேடா’.

இன்னொரு தடவை பேசினால் உன்னையும் தூக்கிப் போட்டு விடுவேன் என்று மேகலாவிடம் சொல்ல அவள் விசித்து அழுதபடி மனதில் கரைந்தாள்.

’ஹேய், சீக்கிரமே காலேஜ் முடிஞ்சு வந்தாச்சா’?

திரும்பவில்லை. யாரென்று தெரியும்.

ஜோசபின்.

அந்த யுதிகோலன் வாசனைக்கு வானத்தில் இருந்து தேவதைகளும் இறங்கி வந்து அவளுக்குப் பணி செய்யும். ஏலம் மணக்கும் அவள் மூச்சுக் காற்றை நான் உள்ளிழுத்து சுவாசிப்பேன். அவள் கூந்தலில் முகம் புதைத்து நான் அவளில் கரைவேன். உலகம் எனக்கு ஜோசபினால் ஆனது. ஜோசபினால் மட்டும் ஆனது.

ஜோசபின். என் உயிர் ஜோசபின்.

ஜோசபின் முன்னால் வந்து, ‘கயல்?’ என்றாள் அமேலிக்குக் கை கொடுத்தபடி.

நிலைமையின் அபத்தம் அப்போதுதான் புலப்பட்டது. தலையில் தலை இடிக்க, உதடுகள் வெகு அருகே நீர்ப் பூச்சோடு மினுமினுக்க நெருங்கி இருந்து நானும் அமேலியும் ஒரே குவளையில் பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்.. அவள் கயல் என்று நினைத்து விட்டாள் ஜோசபின்.

என்னையும் கயலையும் சேர்த்துப் பார்த்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஆர்வத்தோடு கை நீட்டிய ஜோசபினைக் கலவரத்தோடு பார்த்தாள் அமேலி. குழந்தை விழிகளில் பயம் தெரிய அவள் சற்றே எழுந்து கையில் எடுத்த ஸ்ட்ராவோடு குழறினாள் –

’மேம், நான் நான் அமேலி’.

’ஓ ஓ…. சந்தோஷம் அன்ஷாந்தெ’.

ஜோசபின் சற்றே ஏமாற்றத்தைக் காட்டும் சிரிப்போடு பின் வாங்கினாள். ’திசொலி .. ஐயம் சாரி’. ஜாக்கிரதையாக என்னைத் தவிர்த்து அமேலியிடம் மட்டும் மன்னிப்புக் கோரினாள். அவள் வேகமாக இறங்கிப் போக, அமேலி கேட்டாள் – யாரு அவங்க?

வேறு சொல் நினைவு வராமல், ‘என் பெதித் அமி’ என்றேன் பெருமையோடு.

கம் ஸெ ’ழாண்டி .. comme c’est gentil என்ன க்ரேஸ்புல்லா இருக்காங்க. இப்படி ஒரு அழகான கேர்ள் ப்ரண்டை வச்சுட்டா எனக்கு ரூட் போடறே?’.

அமேலி ரெண்டு ஸ்ட்ராவையும் ஒட்டிப் பிடித்துச் சிரித்தபடி காலி க்ளாஸில் இட்டாள்.

‘ஏய் அது வேறே. இது.. சொல்லத் தெரியலே.’ சமாதானம் சொன்னேன்.

ஜோசபின் என்ன நினைத்துப் போனாளோ தெரியவில்லை. கண்ணில் படுகிற பெண்களை எல்லாம் காமம் மீதூறப் பார்த்துக் கருத்தழிகிற கயவன்? ஊஹும். அவ்வளவு இலக்கண சுத்தமாக எதுகை மோனையோடு நினைக்கத் தெரியாது அவளுக்கு. பொறுக்கி என்று பிரஞ்சில் நினைத்திருப்பாள்.

அமேலி என் சைக்கிள் பாரில் பூத்தாற்போல் உட்கார அவள் விழுந்து விடாமல் நேற்று இருந்ததை விட அதிக கரிசனத்தோடு நெருக்கி அணைத்து ஓட்டிப் போனேன். கயலைப் பழிக்கிற சாக்கு எல்லாம் வேணாம். எனக்கே அமேலியின் அண்மை வேண்டி இருந்தது. அமேலிக்கு? தெரியாது. என்றாலும், நேற்று இருந்த கள்ளமற்ற சந்தோஷம் போய் முகத்தில் கொஞ்சம் குழப்பமும் மிரட்சியும் தெரிந்தன.

அரவிந்தோ வீதி, புஸ்ஸே தெரு, ரூ லா போர்துன்னே என்று தெருத் தெருவாகப் புத்தகக் கடை தேடிப் போய் ஏகப்பட்ட புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, தேவையான நோட்ஸ் எல்லாம் வாங்கினோம். நான் கயலுக்கும் ஒரு செட் வாங்கிக் கொண்டேன். அடித்தாலும் பிடித்தாலும் அவளில்லாமல் இனி நானில்லை என்று அசரீரியாக சீர்காழி கோவிந்தராஜன் பாடுகிற சத்தம் கயலுக்கும் கேட்டிருக்கும். கூடவே ஒரு இந்திரஜால் காமிக்ஸ் முகமூடி கதைப் புத்தகமும் வாங்கினேன். படிப்பியா என்று கேட்டாள் அமேலி. இது ஜோசபினுக்கு என்று சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டேன்.

ராத்திரி எதிர்பார்த்தது போல் பேங்க் தொலைபேசியில் அழைப்பு வந்தது. அப்பேல் வந்திருக்கு என்று மேலே பார்த்து கூச்சல் போட்டார் வாட்ச்மேன் வின்செண்ட் நடராஜன். மேலே டிரான்ஸ்பர் செய்யுங்களேன் என்று ஜாடை காட்ட, அதெல்லாம் தெரியாது என்று கை விரித்து விட்டார் அவர்.

கீழே போனேன். ஜோசபின் தான்.

’இது உன் சுதந்திரம். நீ வரம்பு மீற மாட்டேன்னு தெரியும். ஆனாலும், புதுசு புதுசா இப்படி சிநேகிதம் .. என்ன சொல்றதுன்னு தெரியலே.. நானும் ஒரு வருஷம் முந்தி புது சிநேகம் . எனக்கு நீ மட்டும் தான் அப்படி.. உனக்கு’?

நான் ஒன்றும் சொல்லாமல் காதில் வைத்த ரிசிவரோடு இருந்தேன்.

’உன்னைத் தான். என் கிட்டே பேச பிடிக்கலியா’? ஜோசபின் குரல் இடறியது.

அழக் கூடாது. ரெட்டைத் தெருவில் இருந்த சின்னப் பையன் அழுவான். அவனுக்கு சிநேகிதிகள் கிடையாது. நேசத்தை அவன் வேறொரு மொழியில் புரிந்து கொண்டிருந்தான். இங்கே நான் இன்னொரு மொழியில். இது நட்பு, பிள்ளைக் காதல், ஈர்ப்பு, லயிப்பு, பிரியத்தைப் பகிர்தல் எல்லாம் தான்.

ஜோசபினுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? பெண் பித்தனாக என்னைப் பார்க்கக் கூடாது என்றால் எப்படி அவள் இதை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்? அழகாகச் சொன்னாள் – எனக்கு நீ மட்டும் தான் இப்படி சிநேகம். உனக்கு?

’அமேலியை உனக்குப் பிடிச்சிருக்கா’?

’பிடிச்சிருக்கு’ .

’கயல்விழியை’?

’பிடிச்சிருக்கு’

’என்னை’?

’பிடிச்சிருக்கு. இதை முதல்லே கேட்டிருக்கணும்’.

’எல்லாரையும் பிடிச்சிருக்குன்னா எப்படிடா’?

’லெச்சு, அந்த்வான், வைத்தே, ப்ரான்ஸ்வா, சிற்சபேசன் .. அது போல, ஜோசபின், மேகலா, கயல், ருழே, அமேலி’.

’அந்த்வானுக்கு முத்தம் கொடுப்பியா? லெச்சுவை இடுப்பிலே இறுக்கிப் பிடிப்பியா’?

’சீய்ய்ய்’.

’என்ன தான் சிநேகம்ன்னாலும் ஆணும் பெண்ணும் வைக்கற நேசத்துலே கொஞ்சம் போலவாவது இனக் கவர்ச்சி இருக்கத் தான் செய்யும். இது தப்பு இல்லே. நாம விலங்கா இருந்து மனுஷர்களா பரிமாண சே.. அது என்ன உன்னைத் தான்.. அது…’

’எது என்ன ம ஷெரி’? அன்போடு விசாரித்தேன்.

’ஏய்ய், நான் உனக்கு டார்லிங்கா’?

’வேணாமா, சரி, நான் உனக்கு டார்லிங்கா இருந்துட்டுப் போறேன்’ என்றேன்.

’சட்டு சட்டுன்னு இப்படி தெறிக்கற பேச்சு தாண்டா எல்லாரையும் விழுத்தாட்டுது’..

ஃபோனில் ஜோசபின் கிண்கிணி கிணிகிணி என்று அழகாகக் சிரித்தை மீறி, கொல்லுக் கொல்லு என்று இருமல் சத்தம் பக்கத்தில் கேட்டது. வின்செண்ட் நடராஜன் தான். சட்டென்று கியரை மாற்றினேன்..

’போறுண்டா அந்த்வான். மீதி காட்சி எல்லாம் நாளைக்கு ரிஹர்சல் வச்சுக்கலாம். வசனத்தை படிச்சுட்டு வந்துடு. லெச்சு, ப்ரான்ஸ்வா கிட்டேயும் சொல்லிடு’..

வின்செண்ட் அந்தப் பக்க்ம் போக, அப்பாவா என்று விசாரித்தாள் பயத்தோடு ஜோசபின்.

’அவர் உறங்கியாச்சு. இல்லேன்னாலும் புரிஞ்சுப்பார். இது மிஸ்டர் வாட்ச்மேன்’.

சரிடா, ரவுண்ட்ஸ் போகணும் என்று கிளம்பும் முன் ஜோசபின் சொன்னது –

’நீ கயல் மேலே ஆசைப் பட்டா, அமேலியோடு இவ்வளவு நெருக்கம் காட்டணுமான்னு யோசிச்சுப் பாரு. சொல்லப் போனா என்னோடு கூடவும் தான்’.

’நீ என்ன பைத்தியமா? வேறே யார் இல்லாமலும் நான் இருப்பேன். உன்னை மட்டும் எப்பவும் இழக்க மாட்டேன். நிச்சயமா..ஷெ தைம் ம ஷெரி’ அவசரமாகச் சொன்னேன்.
ஜோசபின் போயிருந்தாள்.

காலையில் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னால் இன்னொரு தடவை சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே என்று முந்தைய நாள் கயலுக்காக வாங்கிய நோட்ஸ்களோடு அவளைத் தேடிப் போனேன். கேண்டீனில் என்னைப் பார்த்ததுமே முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டாள். அதைக் கூட மன்னித்து விடலாம், பக்கத்து மேஜையில் காப்பி குடித்துக் கொண்டிருந்த நெட்டையன் வாசுதேவன் நாயரைப் பார்த்துப் பார்த்து செயற்கையாக வரவழைத்துக் கொண்ட சிரிப்போடு ஏதோ பிரியத்துடன் விசாரித்துக் கொண்டிருந்தாள். எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியரான நாயர் அந்தக் கால மலையாள சினிமா ஹீரோவான பிரேம் நசீர் போலவோ செம்மீன் மது போலவோ கம்பீரமாக இருந்தான் என்று அடுத்த வரியை எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம் காத்திருக்கிறது. ரொம்ப சுமாராக, சின்ன வயசில் சங்கராடி, எஸ்.பி.பிள்ளை போன்ற அப்பா வேட மலையாள நடிகர்கள் போல, அவன் வயசுக்கு ரொம்பவே அட்வான்ஸ் ஆன சொட்டைத் தலையோடு திரிகிற பேர்வழி. ஆனால் என்ன, என்னை இடிக்க அவன் மதி.

‘யூ ஆர் ஸோ டால்..’

இது என்னை மறைமுகமாக பலவீனமான இடத்தில் தாக்க எய்யப்பட்ட அஸ்திரம். ஐந்தரை அடி இருக்கிறேன். பத்தொன்பது வயதில் இன்னும் ரெண்டு அங்குலம் அதிக உயரம் எதிர்பார்க்கலாம். எப்படியும் ஐந்து ஏழுக்குக் கீழே இருக்கப்பட்ட சராசரி இந்தியனாகத் தான் இனி என்றுமிருப்பேன். ஆறடி அடி வாசு நாயருக்கு இன்னும் கூடுதலாக உயர்கிற யோகம் இருக்கும் என்பதால் ஆறேகால் அடிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் டோனி க்ரெக் போல வருவான் என்பதில் சந்தேகமில்லை. சொல்லாமல் சொல்லி, போடா குள்ளா என்கிறாள் என்னை.

இப்படியே விட்டால் கடுப்படித்தபடி தான் இந்த யுகம் முழுக்க இருப்பாள் என்று ஆத்திரம் வர, பக்கத்தில் காபி குடித்துக் கொண்டிருந்த அமேலியிடம் சத்தமாகச் சொன்னேன் –

’அமீ இன்னிக்கு கம்பைண்ட் ஸ்டடி ஆரம்பிச்சுடலாம். ஓகேவா’?

அமேலி கொஞ்சம் திகைப்போடு பார்த்து, ஒரு வினாடியில் திரும்ப முகம் மலர்ந்து உய் என்றாள். கயல் முகத்தில் கடுகு வெடித்ததை ஒரு குரூர திருப்தியோடு நான் பார்த்துக் கொண்டிருக்க முதல் வகுப்புக்கான மணி அடித்தது.

மதியம் சாப்பிட உட்கார்ந்தபோது அமேலி வந்து நின்றாள். முகம் வாடி இருந்தது. வீட்டுக்குப் போகிறேன் என்றாள். நான் எழுந்து அவளை விலங்கியல் லேபரட்டரி பக்கம் தொடர்ந்தேன்.

உள்ளே போய் வாசல் பக்கம் இருந்த அட்டெண்டர் முக்காலியில் உட்கார்ந்து அவள் கரகரவென்று கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

‘அமீ, இட்ஸ் ஆல் ரைட்.. ப்ரபசர் திட்டினாங்களா’? நான் அவள் கண்ணைத் துடைக்க, அடுத்த அணை உடைப்பெடுக்க, விரல் மேலும் நனைந்தது. அவளை யாரோ குத்திக் கிழித்திருக்கிறார்கள். கயல்?

அமேலி நிமிர்ந்து பார்த்து உடனே தலை கவிழ்ந்தாள். எழுந்து நின்று என் தோளில் தொட்டு, ’சாயந்திரம் வீட்டுக்கு வா, சேர்ந்து படிக்கலாம்’ என்றாள். லலி தொலெந்தால் தெருவில் கதவிலக்கம் சொன்னாள். மனதில் உடனே குழூக்குறியாகச் சேமித்துக் கொண்டேன். விரல் சுழல நின்ற என் கையைப் பறித்து விரல் சேர்த்துப் பிடித்து அழுத்தி விட்டு வெளியே போக முற்பட்டாள். ’கயல் என்ன செஞ்சா’? நான் கேட்டதும் வேகமாகத் திரும்பி ’சொல்றேன், வா’ என்றபடி முகம் சுருங்கப் போனாள். எனக்குப் பழக்கமான, மெல்லிய உணர்வுகள் கொண்ட பூப்பெண் அமேலி இல்லை இவள்.

என்னமோ தோன்ற சாயந்திரம் பிஸ்கெயும், ஆப்பிள் பழங்களும் வாங்கிக் கொண்டு லலி தொலெந்தால் தெருவுக்குப் போனேன். இந்த வீடுதான். அமேலி பேயிங் கெஸ்ட் ஆக இருக்கும் வீடு. வாசலில் பெயர்ப் பலகை கர்னல் செல்லத்துரை தேவநாதென் என்றது. இவரா? நம்மாள் ஆச்சே.

கர்னல் அப்பாவுக்குப் பழக்கமானவர் என்பதால் புது அறிமுகம் தேவையில்லாமல் போனது. சக்கர கிளப்பிலோ ரோட்டரியிலோ சிங்கக் கிளப்பிலோ அப்பாவோடு தோளோடு தோள் நின்று கூட்டம் நடத்திப் பேசுகிறவர். என் வகுப்புத் தோழி கட்டண விருந்தாளியாக இருக்கும் வீட்டுச் சொந்தக்காரர் என்று தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது என்று தோன்றியது. அதை எல்லாம் எதுக்கு இப்போது மயிர் பிளக்க வேண்டும்?

அமேலி சாயந்திரமாக இருந்தாலும் தூங்கி விழித்த களைப்போடு வந்தாள்.

’உனக்கு டயர்டா இருந்தா நாளைக்கு இங்கிலீஷ் சேர்ந்து படிக்கலாம்’ என்றேன் எழுந்து புறப்பட்ட படி.

’ஐயோ, அடுத்த மாசம் பரீட்சை வருது. இதுவே லேட்’ என்றபடி அமேலி கர்னலைப் பார்த்துச் சிரித்தாள்.

’ஒங்கிள், எதுதி என்ஸாம்பிள்’ இப்படி சில வார்த்தைகள் நினைவு இருக்க அவள் கர்னலிடம் கேட்டது சேர்ந்து படிக்கப் போவத்ற்காக நான் அங்கே இருக்க அனுமதியாக இருக்கலாம்.

’இ அடொ லெ பொம்’

தனக்கு ஆப்பிள் பிடிக்கும் என்று சொல்லி கர்னல் நான் கொண்டு போயிருந்த கப்பத்தை ஏற்றுக் கொண்டு சின்னப் பெண்ணோடு சேர்ந்து இருந்து கல்வி கற்க உடனடி அனுமதி வழங்கினார்.

’ஆண்ட்டி உடம்பு சரியில்லே. உள்ளே படுத்திருக்கு. க்யூசின்யி சமையல் செஞ்சு வச்சுட்டு இப்போ தான் போனாங்க. சாரி நோ கபே. நோ தெ. இன்னொரு நாள் வா விருந்தே வைக்கறேன்’.

அன்புக் கரம் நீட்டிய கர்னலிடம் நன்றி சொல்லிக் கை குலுக்கி, இங்கிதமான வார்த்தைகள் பரிமாறிக் இரண்டு நிமிடம் வரவேற்பறை சோபாவில் இருந்தேன். ’என் ரூமிலே போய்ப் படிக்கலாமா’ என்று கேட்டாள் அமேலி. போ என்று கை காட்டி விட்டு ஒரு ஹவானா சிகாரைப் பற்ற வைத்துக் கொண்டார் கர்னல். அது கிளப்பிய புகையில் வரவேற்பு அறைக்குள் ஃபயர் இஞ்சின் எந்த நிமிஷமும் வந்துவிடும் என்று தோன்றியது.

நோட்ஸைப் பிரித்து வைத்துக் கொண்டு நான் பத்து நிமிஷம் படித்து விளக்கினேன். ஷேக்ஸ்பியரின் லியர் அரசன் நாடகத்தின் தொடக்கக் காட்சிகளும் அவை மனதில் எழுப்பும் படிமங்களும், மற்ற ஷேக்ஸ்பியர் நாடகங்களில் அவர் துன்பியலைக் கையாள்வதற்கும் கிங் லியரில் கையாள்வதற்கும் உள்ள வேற்றுமைகளும் தெளிவாகப் புரிந்தன. இதில் சுவாரசியமானது என்னவென்றால் நான் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் மூலப் பிரதியைப் படித்ததே இல்லை. புரபசர் பார்த்தசாரதி நோட்ஸ் அருளால், ஷேக்ஸ்பியரே வந்தால் கூட நாற்காலி போட்டு அருகில் உட்கார்ந்து ‘க்வில்லர் கௌச்’ என்ற விமர்சகர் கார்டீல்யா பாத்திரச் சிறப்பைச் இப்படிச் சொல்கிறார் படித்தீர்களா என்று சகஜமான உரையாட முடியும்.

நேரம் போனதே தெரியவில்லை. கடியாரம் எட்டு அடித்தபோது கர்னல் வாசல் கதவில் மெல்லத் தட்டி விட்டு உள்ளே வந்தார்.

’ராச்சாப்பாடு எப்படி’? அவர் என்னைக் கேட்க, ’ஒன்பது அடிச்சா நேரு கபேயிலோ தம்பீஸ் கபேயிலோ, வெந்தும் வேகாத தோசை சாப்பிடணும்’ என்றேன். ’என்னோடு சாப்பிடேன்’ என்றாள் அமேலி. ’ஆமா, எக் ஃப்ரை ரைஸும் போன்லெஸ் சிக்கனும் .. நல்லா செஞ்சிருக்காங்க சமையல்கார அம்மா. சாப்பிட்டுப் படிங்க தம்பி’ என்றார் கர்னல். ’இன்னொரு நாளைக்கு’ என்றேன்.

’சரி, நான் பக்கத்துலே பொம்னாட்லே நடந்துட்டு வர்றேன். நீங்க போகும் போது தோட்டக் கதவை மறக்காம மூடி வச்சுட்டுப் போங்க’.

அவர் வாக்கிங் ஸ்டிக்கை சுழற்றியபடி கடற்கரைப் பாதையில் நடக்கக் கிளம்ப, நாங்கள் ஷேக்ஸ்பியரைத் தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தோம்.

அமேலி சோம்பல் முறித்தபடி எழுந்தாள். சட்டென்று சூழ்நிலை மாறிப் போனது. திமிறி நின்ற அவள் உடலைப் பார்க்கக் கூடாதென்று முயற்சி எடுத்துக் கண்ணைக் கவிந்து கொண்டேன். ஒரு வினாடி தான். விழிகள் மேலே உயர்ந்தன. அவை நோக்கியது முகத்தை இல்லை.

’உள்ளே போய் பிஸ்கெ எடுத்துட்டு வரேன்’

தழைத்த அங்கி அணிந்து நடக்கும் அமேலியைப் பின்னால் இருந்து வெறித்தவன் நான் இல்லை. உடலிலும் மனசிலும் வந்து ஏறிய பிசாசு அது.

அவள் திரும்பிப் பார்த்தாள்

’வீட்டைப் பார்க்கலேயே நீ.. வாயேன்’.

பிஸ்கட்கள் எடுக்க என்ற சாக்கும் சமாதானமுமாய் அவளோடு புறப்பட்டேன். சமையலறையில் திருகும் மூடி போட்டுப் பொத்தி வைத்த அழகான பிரஞ்சுப் பெட்டியில் இருந்தன அவை. பெட்டியோடு என்னை எடுத்து வரச் சொன்னாள் அமேலி.

’இதுதான் என் பெட்ரூம்’

நான் தயங்க, சும்மா வா என்றாள். அழகாக மிதமாக அலங்கரித்து, பெரிய கட்டிலும் அழுத்தமான காட்டுப் பூக்கள் நிறைந்த தலையணைகளும், மெல்லிய நீல நிறத்தில் படுக்கை விரிப்பும் சுவரில் அருவியும் கடலும் மலையும் விரியும் ஓவியங்களுமாக மிக அழகாக இருந்த படுக்கை அறை. மெல்லிய நீல விளக்கொளி நெருடாமல் இதமான இருட்டை அடிக்கோடிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. எனக்கு இப்படி ஒரு படுக்கை அறை இருந்தால், அதை அழகு கெடாமல் அப்படியே வைத்து விட்டு வெளியே தரையில் குற்றாலத் துண்டை வீசி விரித்துப் போட்டுப் படுத்து நித்திரை போவேன்.

அமேலி எதற்கோ தயங்கினாள். ஒரு வினாடியில் தெளிந்து படுக்கையில் அமர்ந்தாள். நான் பக்கத்தில் பிஸ்கெ பெட்டியோடு வேலைக்காரன் போல நின்று கொண்டிருந்தேன். பெட்டியை வாங்கிப் பக்கத்தில் குட்டி ஸ்டூலில் வைத்தாள் அவள். அங்கே இருந்த ஆரஞ்சுகளை மெல்லத் தொட அவை தரையில் உருண்டன. கீழே குனிந்து, உருண்ட பழங்களை அமேலி எடுக்க என் கண்கள் மறுபடியும் தப்பு செய்தன. இறக்கித் தைக்கப்பட்ட அவளுடைய ராத்திரி அங்கிக்குத் தான் எல்லாப் பழியும் போய்ச் சேரணும்.

போ போ போ போ. மனதில் மேகலா பயமுறுத்தினாள். ஓடுடா என்று தீவிழித்தாள் ஜோசபின். கயல் வந்து பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.

’பொஸ்தித்யூ’?

படுக்கையில் இருந்தபடி அமேலி என்னைக் கேட்டாள். அவள் மறுபடி அழ ஆரம்பித்தாள். புரியாமல் அவளை அனுதாபத்தோடு பார்க்க, ஏறி இறங்கிய கனத்த மார்பு மறுபடி பார்வையை விழுங்கியது. இது நானில்லை. என்னில் படர்ந்து என்னைச் சுட்டுத் தகித்து ஒன்றுமில்லாமல் போக வைக்கும் பிசாசு.

பக்கத்தில் உட்காரச் சொல்லிக் கை காட்டினாள். ஒரு வினாடி தயக்கம். அமர்ந்தேன்.

’நான் கால் கேர்ளா’?

அதிர்ந்தேன். பொஸ்தித்யூ என்ற சொல்? பிராஸ்டிட்யூட்னு இங்கிலீஷ்.

கயல் சொன்னாளா? குரலில் கோபம் ஏறியிருந்தது. அமேலி பதில் சொல்லாமல் வழக்கம்போல் தலையைக் குனிந்தாள்.

நான் அவள் அருகே நகர்ந்து கை நடுங்க அவள் மார்பைத் தொட்டேன். என் கை மேல் அமேலி கை பதிந்து நின்றது. அமீ ம ஷெரி என்று மிருதுவாக அழைத்தேன். படு என்றான் சாத்தான். அமேலியை என்னோடு இறுக அணைத்து இழுத்தபடி நான் படுக்கையில் சரிந்தேன்.

சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான கண் இமைகளில், சின்னஞ்சிறு மரு முளைவிட்ட கன்னத்தில், வியர்வை துளிக்கும் நெற்றியில் நெருப்பாக முத்தமிட்டேன். நொடிகள் காலமற்ற வெளியில் நிலைத்து நிற்க, ஈர்ப்பும், பயமும், எதிர்பார்ப்பும் கரைந்து கலந்து ஆசை நுரைத்துப் பொங்கி வெள்ளமாகப் பெருக, உடல்களே தோணிகளாக ஓட்டி விளையாடலானோம். கைகள், இது விலக்கபட்டது என்ற பேதம் கடந்து அரவங்களாக எங்கும் நெளிந்து அரவமின்றி ஊர்ந்தன. ’விளக்கை அணைச்சுடு’ என்றாள் அமேலி. நான் எழ, திரும்பத் தழுவி, இருக்கட்டும் என்றாள். உடுப்புகள் விடை பெற முனைந்த வினாடியில் வெளியே அழைப்பு மணி. பதறி விலகினோம்.

நான் வெளியே ஓடிக் கதவைத் திறந்தேன். கர்னல் தான்.

’நிலாவும் இல்லாம, முனிசிபல் விளக்கும் இல்லாம இருளோன்னு கிடக்கு தெரு எல்லாம். திரும்பிட்டேன். இருட்டுக்கு பயப்பட வேணாம். ஜாக்கிரதையா இருக்கணும் இல்லையா’?

படுக்கை அறையில் இருந்து மெல்ல வெளியே வந்த அமேலி என்னையே பார்த்தாள். காமம் தீ விதைத்துப் பற்றிப் படர்ந்த நெருப்பு உயிர் தகித்துத் தொடர விடாமல் நிறுத்தியதில் ஆசுவாசமும், தொடங்கியதை முடிக்க முடியாமல் போனதில் பசித்தே நின்ற உடலும் மனமும் ஒருசேர எழுப்பிய ஏமாற்றமும் அவள் முகத்திலும் என் முகம் போல் ஆழமாகச் சுவடு விட்டுப் படர்ந்திருந்தது. அவளைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பார்வையை விலக்கினால், மனதில் அவளை நக்னமாக்கி, மேலேறி உள்ளில் எங்கும் தறி கெட்டு ஓடும் மோகத்தைக் கொல்ல முடியவில்லை.

போய்ட்டு வரேன் என்று ஒப்புக்குச் சொல்லிக் கொண்டு சைக்கிள் மிதித்துப் புறப்பட்டேன். அகோரமான பசி. உடலும் வெட்கமின்றி அதேதான் சொன்னது. நேரமில்லா நேரத்தில் குளித்து வந்தேன். திருவாசகம் படித்துக் கொண்டிருந்த அப்பா ’என்னடா எதுக்கு இப்போ குளியல்’ என்றார். ஈரம் நனைந்த தலையோடு அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன். என்ன ஆச்சு என்று கேட்டார். ’தெரியலே யாரோ துரத்திக் குளிக்கச் சொன்ன மாதிரி இருந்துது’ என்றேன். ’நெறைய அலைச்சல், படிக்கறதுலே ஸ்ட்ரெஸ்.. பரீட்சை வேறே வருது.. இப்படித் தான் சமயத்திலே ஆகும். அதுக்காகக் கண்ட நேரத்துலே குளிக்கக் கூடாது’ என்றார்.

’குளிச்சா தூக்கம் வரும் அப்பா. அதான் தேவையா இருக்கு’.

குளித்தும் உறக்கம் வராத ராத்திரி. விடிவதற்கு வெகு முன் எழுந்தேன். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பெரியாஸ்பத்திரி கட்டிடம் சகல விளக்குகளோடும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

ஜோசபின், பேசலாமா?

விடிகாலை அவள் டியூட்டி முடிந்து புறபட்ட ஐந்தரைக்கு இருளில் நின்று கூப்பிட்டேன்.

’என்னடா என்ன ஆச்சு?’

அவள் பயத்தோடு வந்தாள். கேண்டீன் போகலாமா என்று கேட்டேன்.

‘வேணாம், இப்பொ தெறந்திருககாது. இரு காக்கா கடையிலே சூடா டீ சாப்பிட்டு பீச்சுக்குப் போயிடலாம்’..

இருட்டு இன்னும் விலகாத கடற்கரையில் நானும் வர்றேன், நானும் வர்றேன் என்று வம்பு கேட்க ஓடி வந்த அலைகளைப் புறக்கணித்து நானும் ஜோசபினும் அருகருகே அமர்ந்தோம்..

’சொல்லுடா’.

மனதில் அடக்கி வைத்ததை எல்லாம் அவளிடம் கொட்டிக் கவிழ்த்தேன். சொல்லும்போதே அழுதேன்.

அவள் அதிர்ந்தாள். ’எப்படிடா அதுக்கு மனசு வந்தது’?

’தெரியலே ஜோசபின். உடம்பு வழி நடத்திப் போச்சு. அறிவு முடங்கிடுத்து’.

’ஆதிப் பாவம்டா இது. அந்தப் பொண்ணு சம்மதிச்சாலும் தப்பு தப்புதான்.. இந்த வயசு எல்லாம் செய்யச் சொல்லும்.. எனக்கு இருபது வயசுலே, அதான் நாலு வருஷம் முந்தி என் வாழ்க்கையிலேயும் ஒரு கருப்பு அத்தியாயம் வந்துது. உடம்பும் மனசும் புத்தியும் அதிலேருந்து மீள ரொம்பக் கஷ்டப்பட்டேன்’.

ஜோசபின் கண் கலங்கினாள்..

அவள் மௌனமாக என் கைகளைப் பற்றியபடி இருந்தாள். இரண்டு உள்ளங்கையிலும் மென்மையாக முத்தமிட்டேன்.

’இதான், இதான்… நாலு வருஷம் மனசு அடங்கி இருந்தது. உன் பிரியம் என்னை இழுத்துப் போட்டுடுத்து. நான் உடல் ரீதியா உன் கிட்டே எதுவும் கேட்கலே. நீயும்.. சின்னச் சின்ன அத்துமீறல்.. இது போல.. அது ஒரு சுகம் தான்.. தப்பு இல்லேன்னு சொல்ல மாட்டேன் .. ஒரு பெண்ணை இச்சிக்கிற எவனும் அவளோடு மனசில் விபசாரம் செய்கிறான்னு ஜேசு சொன்னாரே’.

அவள் தன் தோள்களில் குரிசு வரைந்து தலை தாழ்த்தி வணங்க நானும் வணங்கினேன்.

’இனக் கவர்ச்சி மனசில் ஆட்டம் போடாம, கன்னுக்குட்டி மாதிரி குறும்போடு, இயல்பாக நேசத்தை வெளிப்படுத்த செய்யறது இதெல்லாம்.. ஆனா நாம இதைக் கடந்து போகலே. போக விட மாட்டேன்.. நீயானா..’

நிறுத்தி என்னைப் பார்த்தாள் ஜோசபின்.

’தப்பு செஞ்சுட்டேன் ஜோசபின். உன் கிட்டேயோ கயல் கிட்டேயோ பழகும்போது பிரியமும் சிநேகமும் சின்னச் சின்ன அத்துமீறலும் இயல்பா வரும். உன் கிட்டே சொல்றதுக்கு என்ன, கயலோடு நான் நிறையவே இப்படி அத்து மீறியிருக்கேன். எல்லாம் முத்தம், அணைப்பு அதோட முடிஞ்சுடும்.. உன்னோட சீண்டவும் பொய்ச் சண்டை பிடிக்கவும், அவ்வப்போது நீ என்னை விடச் சின்னவள்னு எனக்கு நிரூபிச்சுக்கறதுக்காக முத்தம் கொடுக்கறதும் தப்புன்னா .. அது தப்புன்னாலும் விட மாட்டேன்.. அதெல்லாம் இருந்தாத் தான் என் வாழ்க்கை முழுசாகும்.. ஆனா இது.. நேத்திக்கு நடந்தது.. அது வேறே யாராவது பையனா, வேறே பொண்ணா இருக்கக் கூடாதா’.

என் குரல் உடைந்தது…

’அது இருக்கட்டும். காண்டோம் உபயோகிச்சீங்களா? அதாண்டா, நிரோத்’?

நான் மறுபடி தலையைக் குனிந்தேன். இதை எங்கே போய் வாங்குவது, எப்படிக் கேட்டு வாங்குவது? தெரியாது என்றேன்.

’இது தெரியாது, ஆனா அது மட்டும் தெரியும், அப்படித்தானே’? ஜோசபின் சிரித்தாள்.

’காண்டோம் இல்லேன்னா’? நான் கலவரமாக்க் கேட்டேன்

’எதுவரைக்கும் நீங்க போனீங்கங்கறதைப் பொறுத்தது அது’.

வேறு யாரும் இல்லாவிட்டாலும் நான் அவளிடம் ரகசியமாக்க் காதில் சொன்னேன்.

’நிறையத் தொட்டோம். டிரஸ் எதுக்குன்னு .. எடுக்க முந்தி காலிங் பெல் அடிச்சு…. விலகிட்டோம்’.

’நீ சொன்னதைத் தவிர வேறே எதுவும்’?

’சத்தியமாப் பண்ணலே உன் சத்தியமா’.

அவள் தலையில் அடித்துச் சொன்னேன். வருத்தமும் சங்கடமும் பயமும் கலவரமும் கலந்து இருக்க, எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் விவரிக்க முடியாதபடி ஏதோ பெருமையும் எட்டிப் பார்த்தது.

’ஒண்ணும் இருககாதுன்னு தான் தோணறது. எதுக்கும் நான் அமேலி கிட்டேயும் பேசறேன். நீ குளிச்சுட்டு காலேஜ் போ.. இதையே நினைச்சுக்கிட்டிருக்காதே.’

ஆறரை மணிக்குத் திரும்பி வந்து நீண்ட் நேரம் எடுத்துக் குளிக்க, அப்பா சொன்னார் – ஆறு மணி நேரத்திலே ரெண்டு தடவை இப்படி குருவாயூர் கோவில் மேல்சாந்தி மாதிரி குளிச்சா என்னத்துக்காகறது? குளிக்கறதுன்னு வச்சாச்சு, இதமான சூட்டுலே இமர்ஷன் ஹீட்டரை போட்டு தண்ணி சுட வைச்சு எடுத்துப் போயிருககலாமே? பிடிச்சு வச்சு குளிர்ந்த தண்ணியிலே இப்படி பிடிவாதமாக் குளிச்சா எங்கே எங்கேன்னு ஜலதோஷம் வரும், காய்ச்சல் வரும்..

காய்ச்சல் அமேலிக்கு வந்தது. கடுமையான் டைபாயிட் ஜுரம்.

அவளால் பரீட்சை எழுத முடியவில்லை. ஒரு மாதம் படுத்த படுக்கையாக இருந்தாள். நானும், கயலும், ஜோசபினும் அவளைக் கண்போல் கருத்தாகப் பார்த்துக் கொண்டோம்.

காலையில் ஜோசபின் அவளுக்கு உடம்பு துடைத்து விட்டு துவைத்த உடுப்புகளை உடுத்தி விடுவாள். கர்னல் வீட்டில் தொந்தரவு படுத்தாமல் நான் நேரு கஃபேயில் சொல்லி வைத்து தினம் இரண்டு இட்லியும் சர்க்கரையும் சுத்தமான பூவரசு இலையில் பொதிந்து அமேலிக்கு எடுத்துப் போவேன்.

ஜோசபின் எப்படி என்று சொல்ல நான் அமேலிக்கு உணவை ஊட்டி விடுவேன். புரை ஏறாமல் கொஞ்சம்போல் தண்ணீர் புகட்டி மாத்திரை விழுங்கக் கொடுப்பேன். ஜோசபின் சொல்லிக் கொடுத்தது போல் நான் இஞ்செக்‌ஷன் போடக் கூட தயாராக் இருந்தேன். அவள்தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

மதியம் அமேலிக்குக் கஞ்சியும் ரொட்டியும் ஜோசபின் கொடுத்து விட்டு இஞ்செக்‌ஷன் போட்டுப் போவாள்.

கயலும் ஜோசபினும் பெரும்பாலும் சேர்ந்தேதான் சாயந்திரம் வருவார்கள். கயல் வீட்டில் இருந்து எண்ணெய் தொடாத ரொட்டிகளும் பாலும் வரும். ஒரே சைக்கிளில் அவர்கள் இருவரும் வந்து இறங்கி சாப்பாடு கொடுத்து அமேலியோடு பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார்கள்.

முதல் ஒரு வாரம் காய்ச்சலின் தீவிரத்தில் அமேலி துடிக்க, நான் தான் காரணம் என்று திடமாக நம்பினேன். அவளுக்குள் அக்னி மேலெழத் தூண்டிப் பின் விலகி வந்தபோது உணர்ச்சி நிலைகள் எதிரும் புதிருமான முனைகளில் தொடர்ந்து மாறிமாறிச் சஞ்சரித்து அமேலியின் மனதையும் உடலையும் ஆயாசப் படுத்தி நோய் கொள்ளச் செய்திருக்கலாம். கயல் சொன்ன சுடுசொல் அமேலியைத் தன்னையே என்னிடம் இழந்து கயலோடு நடத்திய நிழல் யுத்தத்தில் வெற்றி காணத் தூண்டி இருக்கலாம்.

அமேலி கண் திறந்து ஒரு வார்த்தை இரு வார்த்தை பேச ஆரம்பித்தபோது ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் எதிர்கொள்ளப் பயந்தோம்.. ஜோசபின் தான் அந்தச் சங்கடத்தைக் களைய வைத்தாள். நானும் அமேலியும் சகஜமாகப் பேசிக் கொண்டாலும் என் பார்வை அவள் மேல் அவ்வப்போது ரகசியம் பேசிக் கவிவதையும் அவள் அதைப் புரிந்து கொண்டு ஏற்று வாங்கி ஆதரவாகப் பார்வையில் பதில் சொல்லித் திருப்பி அனுப்புவதையும் தவிர்க்க முடியவில்லை. அவளால் என்னை அதற்கப்புறம் ஒரு முறையும் டா என்று விளித்துப் பேச முடியவில்லை.

’இன்னொரு தடவை சந்தர்ப்பம் கிடைத்தால்’?

ஜோசபின் கேட்டாள்.

’மறுபடியும் கெட்டுத்தான் போயிருப்போம், முழுக்க முழுக்க’ என்றேன். அவள் சிரித்தாள். வேறேதும் சொல்லவில்லை.

அமேலியும் கயலும் மறுபடி சிநேகமாக ருழே பொண்ணு படாத பாடுபட்டாள். கயல் என்ற குழந்தை என்னோடு பேச, உரிமை எடுத்துச் சண்டை போட, நான் அவளுக்கு ஷொகொலா ஊட்டி விட, விட்ட இடத்தில் இருந்து முத்தக் கணக்கைத் தொடர .. எல்லாம் யாரும் உதவாமல் தானே இயல்பாக நடந்தது.

அமேலி ரெண்டு மாசம் ஓய்வெடுக்க பிரான்ஸ் போனபோது நானும், ஜோசபினும், கயலும், ருழேயும் லெச்சுவும், அந்துவானும் அவளைச் சென்னையில் விமானம் ஏறக் கொண்டு போய் விட்டு வந்தோம்.

ஏர்போர்ட் போகிற வழியில் கயல் கவனிக்காத நேரத்தில் நான் அமேலிக்காக வாங்கி வந்த சிறிய தந்தச் சிற்பமாக தாஜ்மகாலைப் பரிசளித்தேன். திரும்பி வந்து உனக்கு மறக்கவே முடியாத பரிசு தர்றேன் என்றாள் அமேலி. என்ன என்று சொல்வதற்குள் மற்றவர்கள் வந்து விட்டார்கள்.

சென்னையில் இருந்து திரும்பும்போது ஜோசபினும் நானும் பஸ்ஸில் கடைசி வரிசையில் இருந்தோம். காலையில் இருந்து அலைந்த களைப்பு கண் இமையை அழுத்தும் உறக்கமாகச் சுழன்று அடித்தது.

நான் ஜோசபின் தோளில் சாய்ந்து அவளுடைய யூதிகோலோன் மணத்தை தீர்க்கமாக முகர்ந்தபடி கண் மூடினேன்.

’இப்படித்தான் சிலது சில நேரம் ஆரம்பிக்கும்’ என்றாள் ஜோசபின். எது என்று கேட்பதற்குள் அமேலியின் படுக்கை அறை நினைவில் இதமாகச் சூழ நான் உறங்கிப் போனேன்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன