போகிற போக்கில்

 

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நேற்றே சொல்லியிருக்க வேண்டியது. டிசம்பர் 31 இரவு விருந்து அதைத் தள்ளிப்போடச் செய்து விட்டது.

மய்யம் இணைய இதழ் (Portal) வெகு விரைவில் மின்னரங்கேற இருக்கிறது. விருந்துக்கு கொஞ்சம் முன்னதாகவே போய் கமல் அவர்களுடன் அது பற்றிய கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்தேன். தமிழில் இது மிக முக்கியமான, இலக்கியம் – கலை இரண்டையும் இன்றைய தொழில்நுட்ப நேர்த்தியில் இணைத்து வழங்கும் பரபரப்பான தலைவாசலாக இருக்கும். அடுத்த திரைப்படத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. சரித்திரம் இல்லை. சமகாலம் தான். உன்னைப்போல் ஒருவனை விட இன்றைய சூழலுக்கு still more socially relevant ஆன கதைக்கரு. தலைப்பு? அடுத்த பதிவில் சொல்கிறேன்.

கே.எஸ்.ரவிக்குமாரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது நண்பர் சந்தானபாரதியும் சேர்ந்து கொண்டார். ‘ஆதவன்’ வெற்றிக்கு வாழ்த்து சொல்லி, பேச்சு புதுப்படத் தலைப்பு பற்றி திரும்பியது. ‘தசாவதாரம், பத்து ரோல் என்றதுமே சக்சஸ்னு சொல்லிட்டேன். அந்த எதிர்பார்ப்பு தலைப்பில் இருக்கணும்’ என்றார் கே.எஸ்.ஆர். கமல் மெல்லப் புன்னகைத்தார். எல்லாரும் நண்பர்களே! எல்லோரும் உறவினரே!

கமல் அவர்களின் சகோதரி திருமதி நளினி அவர்களைப் பல வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிக்கூடத்து மாணவனாக சிவகங்கையில் இருந்த போது, பரமக்குடியில் இருந்து அவரும் கமலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் அவர்களின் சித்தப்பா வீட்டுக்கு விசிட் அடிக்கவும் வந்த நினைவுகளை அசைபோட்டோம். சிவகங்கை ரெட்டைத் தெருவின் பிரமுகர்களை நளினி அவர்கள் மறக்கவில்லை இத்தனை வருடம் கழித்தும். அவர்களில் பலரும் என் ’40, ரெட்டைத்தெரு’ bio-fictionஇல் இடம் பெற்றவர்கள். முக்கியமாக அந்த சித்தப்பா (தீபாவளி அத்தியாயங்களைப் படித்துப் பாருங்கள்).

ஒய்.ஜி.மகேந்திரா ‘வியட்நாம் வீடு’ நாடகத்துக்கு அன்பாக அழைத்தும் போக முடியாத சூழலை அவரிடம் தயக்கத்துடன் தெரிவித்தபோது சகஜமாக, ‘அதனாலென்ன, அடுத்த வாரம் ஒய்.ஜி.பி ஹாலில் அதே நாடகம் இருக்கு. அவசியம் வந்து பார்த்து கருத்து சொல்லுங்க’ என்றார். சிவாஜி நடித்த அதே நாடகத்தையும் சினிமாவையும் பார்த்தவர்கள் ஒய்.ஜி.மகேந்திராவை எப்படி பிரஸ்டிஜ் பத்மநாப ஐயராக ஏற்றுக் கொள்வார்கள்? ஏற்றுக் கொள்ளாமலா 50 காட்சிக்கு மேல் அரங்கேற்றி இருக்கிறார் மகேந்திரா?

நண்பர் நாசர், திரைப்படக் கல்லூரி தலைவர் ஹரிஹரன் ஆகியோருடன் அடுத்த அரட்டை. நாசர் எப்போதுமே படு கேஷுவலாகத்தான் உடுப்பும் பேச்சும். குரலிலும் அந்த அன்னியோன்யம் தெரியும்.

குஞ்ஞன் நம்பியாரின் ஓட்டந்துள்ளலிலும், சாக்கியார் கூத்திலும் வெளிப்படும் சமூக விமர்சனத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். செம்பகச்சேரி ராஜாவையும், மற்ற பிரதானிகளையும் முன்னால் வைத்துக் கொண்டு அந்தக்கால அரசு, அரசியல் விமர்சனத்தை மேடையில் செய்தவர் குஞ்ஞன் நம்பியார். சாக்கியார் கூத்தில் அந்த அங்கதமும், சுதந்திரமும் மாணிமாதவச் சாக்கியார் வரை தொடர்கிறது.

‘தெருக்கூத்து இதைவிட சுதந்திரமான சமூக விமர்சனங்களை ரொம்ப இயல்பாக நடத்திக் காட்டுகிறது’ என்றார் நாசர். அரசர் நாட்டு நிலவரம் பற்றிக் கேட்டதும் ரேஷன் கடை அரிசி புழுத்துப்போய் இருக்கிறது என்று தற்காலத்துக்குத் தாவி, நாடக அரங்கின் நவீன பாணியை சர்வசாதாரணமாக கிராமத்து மேடைக்குக் கொண்டு வந்தது தெருக்கூத்து என்றார் நாசர். ‘அது மட்டுமில்லே சார். கூத்துக்காரர் வீட்டுலே பெண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு வந்திருப்பார். அவர் வசனத்துலே அதுவும் அன்னிக்கு அரங்கேறிடும். அவங்களுக்கு கலைக்கான சட்டகங்கள் தெரியாது. ஆகவே நீங்களும் நானும் ஏற்படுத்தற ப்ரேம் ஒர்க்கை சர்த்தான் போய்யான்னு மீறிட முடியுது அவங்களாலே’.

நாசர் தான் கூத்து பார்த்த அனுபவத்தைச் சொன்னார். ‘முதல் வரிசையிலே நான் உக்காந்திருக்கேன். பபூன் வந்து ஆடிட்டு என்னைப் பார்க்கிறான். ‘இந்தப் பார்’யா இம்மாம் பெரிய மூக்கோடு உக்காந்திருக்கானே, அவனும் ஆட்டக்காரன் தான். குளுகுளு ரூம்புலே உக்காந்து ஆடிட்டு காசு வாங்கிட்டுப் போறான். நல்லா இரு. நல்லா இரு’.

பபூன் ‘இம்புட்டு பெரிய மூக்கு’ என்று சொன்னதை நாசர் அபிநயித்துக் காட்டுகிறார் – முழங்கையை இடுப்புக்குக் கீழே முழ நீளம் நீட்டி, பெரிய என்றதற்கு அப்புறம் ப்ரேக் கொடுத்து.. சிரிப்பு அலையாகப் பரவுகிறது.

கர்ணன் நாடகத்தை திரும்ப எப்பப் போடப் போறீங்க என்று நாசரிடம் கேட்டேன். ‘ஆமா சார், ஒய்.எம்.சி.ஏவிலே பார்த்தவங்க எத்தனை பேர்னு தெரியலை. திறந்த வெளி அரங்கு நாடகம். இன்னும் பரவலாக மக்களைப் போய்ச் சேரணும்’ என்றார்.

அவரும் நானும் குழந்தைகள் ஒலிப்புத்தகமாக ‘கரடி டேல்ஸ்’ செய்திருக்கிறோம். கரடி டேல்ஸ் இந்திப் பதிப்பு (குல்சார் குரலில்) கார்ட்டூன் டிவியில் வருகிறதாம். தமிழும் அடுத்து வரும் என்று தெரிகிறது.

திரு ஹரிஹரன் பிரசாத் திரைப்படக் கல்லூரியில் திரைக்கதையாக்கம் குறித்து உரையாற்ற அழைத்தார். ‘காட்பாதர்’ அல்லது சத்யஜித் ராயின் ‘தீன் கன்யான்’ பற்றி இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டோம். அடுத்த இரண்டு வாரத்தில் ஒரு நாள் அது ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

திருமதி சுஹாசினி, அவர் மகன் நந்தன் ஆகியோரோடும் அடுத்துப் பேசிக் கொண்டிருந்தேன். நந்தன் தற்போது எடின்பரோவில் படிக்கிறார். என் பிரியமான நகரத்தின் தெருக்கள், முடுக்கு சந்துகள், ஓவிய, சிற்பக் கூடங்கள், திரை அரங்குகள் பற்றி எல்லாம் சுருக்கமாக அந்த இளைஞரிடம் பகிர்ந்து கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு ஸ்காட்லாந்தில் குளிர் அதிகம். எடின்பரோவில் -4 டிகிரி செல்சியஸ் பனிப் பிரதேசமாக இருக்கிறது. நான் எடின்பரோவில் இருந்து திரும்பி இருக்க வேண்டாமோ!

கௌதமி அவர்களுக்கு வாழ்த்து சொன்னேன்.

அபிராமி சீரியலுக்கு இல்லை. நீங்க டைரக்ட் செய்யறீங்களாமே?

நானா? அவர் ஆச்சரியப்பட கமல் சிரித்தார். ஆமா, நான் தான் திரைக்கதை எழுதறேன். கதாநாயகன் கே.பி.சார். இசை ஸ்ருதி. மாதவன் கூட இருக்கார்.

நான் அவருக்கு முன்னாலேயே தகவலைச் சொல்லியிருந்தேன். மாத்ருபூமியில் முந்தாநாள் ரெண்டாம் பக்கத் தலைப்புச் செய்தி. ரொம்ப இண்ட்ரஸ்டா இருக்கே என்றார் அவர் படு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு.

தமிழ்ப் பத்திரிகையில் தான் இப்படி உறுதி செய்யப்படாத தகவல் வரும் என்றால், மாத்ருபூமியிலுமா?

பனிரெண்டு மணி அடித்ததும், புத்தாண்டு வாழ்த்து மைக்கில் மிதந்து வந்தது. காமன்மேன் குரல் அது.

8888888888888888888888888888888888888888888888888888

போன வாரக் கடைசியில் மதுரைப் பயணம். ‘ரெட்டைத் தெரு’ குறும்ப்டம் ஆகிறது இல்லையா? அதில் சில காட்சிகளில் பங்கு பெற வேண்டி இருந்தது. இரண்டு நாள் ஷூட்டிங் ஷெட்யூல் மூன்று நாளாக நீண்டு போய்விட்டது. நடிப்பு அனுபவங்கள்? இன்னும் ஒரு மணி நேரத்தில் அடுத்த ஷூட்டிங் சென்னையில் இருக்கு. முடிச்சுட்டு வந்து சொல்றேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன