ஹிட்லரின் கேமரா-லெனி

 

லெனி ரைபென்ஸ்தால்

2003 செப்டம்பர் உதிர்த்துப் போனது சார்புநிலை எதையும்

கைக்கொள்ளாத, நிறுவனங்களின் அதிகாரத்தை எதிர்ப்பதையே வாழ்க்கை

லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட எட்வர்ட் சையத் என்ற அறுபத்திரெண்டு

வயதுக் கலை இலக்கிய விமர்சகரை மட்டும் இல்லை. சதமடித்துக் கொசுறாக

இன்னொரு ரன்னும் போட்டு, ஆனாலும் சமூக வாழ்க்கையின் இருண்ட

விளிம்புகளிலேயே கடந்த அறுபது ஆண்டுகளைக் கழிக்க வேண்டி வந்த லெனி

ரைபென்ஸ்தாலையும் தான்.
நூற்றியொரு வயது கடந்த மூதாட்டி. நம்மிடையே இதுநாள் வரை உயிரோடு இருந்த

மிக மூத்த நடிகை. பழம்பெரும் இயக்குனர். கதைப்படங்களிலும்

ஆவணப்படங்களிலும் தனித்தடம் பதித்தவர். இதெல்லாவற்றையும் விட முக்கியமாக,

உலகின் முதல் பெண் திரைப்பட இயக்குனர் என்ற பெருமை – இப்படி எல்லாத்

தகுதியும் பெற்ற லெனியின் சாவு கார்சியா மார்க்வசின் ‘பெரியாத்தா கருமாதி’ போல்

கம்பீரமாக ஊடகங்களில் வலம் வந்து, கலை உலகம் முழுக்கத் திரண்டு அவருக்கு

அஞ்சலி செலுத்த வைத்திருக்க வேண்டிய ஒரு ‘கல்யாணச் சாவாக’ நிகழ்ந்திருக்க

வேண்டும்.

ஆனால், பிபிசியில் ஒரு சிறிய செய்தித் துணுக்காக, ஒரு சில பத்திரிகைகள் தவிர

மற்றவற்றில் எட்டாம் பக்கத்தில், முக்கியத்துவம் இல்லாத ஈசானிய மூலைச்

செய்தியாக லெனி உதிர்ந்து போனார். காரணம் ஹிட்லர்.

லெனி உலக ஆவணத் திரைப்படத்துறையின் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த

சாதனையான ‘மன உறுதியின் வெற்றி’ (Triumph Of The Will) என்ற ஜெர்மன்

மொழிப் படத்தை உருவாக்கிய படைப்பாளி.

பன்னாட்டு மக்கள் குழுமிப் பங்குபற்றிக் கலந்துறவாடிக் களிக்கும் ஒலிம்பிக்

விளையாட்டுகள் பற்றிய ‘ஒலிம்பியா’ வும் (Olympia) லெனியின் கைவண்ணத்தில்

உருவானதுதான். திரைப்பட ஆவணம் என்பதோடு, சமூக ஊடாடுதலின் முக்கியமான

வெளிப்பாடான விளையாட்டு பற்றிய குறிப்பிடத்தக்க சரித்திர ஆவணமுமான முதல்

திரைப்படப் பதிவு அது. இரண்டு பகுதிகளாக அமைந்தது அந்தப் படம்.

1935ல் ‘ட்ரையம்ப் ஓ•ப் த வில்’. அதற்கு மூன்றே ஆண்டுகள் கழித்து 1938ல்

வெளியான ‘ஒலிம்பியா’. இந்த இரண்டு படங்கள் மட்டுமே லெனியைத் திரைப்பட

மேதை செர்ஜி ஐசன்ஸ்டினோடு சேர்த்து வைத்துப் பார்க்கக் கூடிய மிக உயர்ந்த

தளத்துக்கு உயர்த்தி இருக்க வேண்டியவை.

ஐசன்ஸ்டினின் ‘போர்க்கப்பல் பொடம்கின்’ போன்று திரை ஆர்வலர்கள்

தலைமுறைகளின் தொடர்ச்சியாகப் போற்றிக் கொண்டாடும் செல்லுலாய்ட்

காவியங்களின் பட்டியலில் இந்த இரண்டு படங்களும் சேர்ந்திருக்க வேண்டியவை.

ஆனால் லெனியின் படைப்புகள் அவரது தனிமனித எச்சங்கள் மட்டும் இல்லை.

மறக்க நினைத்தாலும் முடியாதபடி சமுதாய ஒட்டுமொத்த நினைவில் பதிந்து

போயிருக்கும் மிகக் கொடிய இனக்கொலை நாட்களின் வரலாற்று எச்சங்களும்

ஆனவை.

போன நூற்றாண்டின் மிகக் கொடுமையான •பாசிச நிகழ்வாக ஹிட்லர் என்ற மனித

சமுதாய விரோதி அதிகாரமேற்றெடுத்ததும், லெனியின் படைப்புலகம் அந்த

நிகழ்வின் நீட்சியானதும் தான் அதற்குக் காரணம்.

லெனியின் வாழ்க்கையைச் சற்று நோக்கினால், எவ்வாறு சமூக, அரசியல்

நிகழ்வுகள் படைப்பாளியைக் கருத்தாக்கம் மற்றும் செயல்பாடு சார்ந்த தளங்களில்

பாதிக்கின்றன என்று புலனாகும்.

இவை ஆக்கபூர்வமாக அமையும்போது ஒரு கார்க்கியோ, சார்லி சாப்ளினோ,

சுந்தரதாசோ, பீஷ்ம சஹானியோ, தோப்பில் பாசியோ, சப்தர் ஹஷ்மியோ

உருவாகிறார்கள். அல்லாதபோது லெனி ரைபென்ஸ்தால்கள் உருவாகிறார்கள்.

சமுதாய அமைப்பு நிலை, இனக்குழு, தனிமனித அடிப்படை உரிமைகள் பற்றிய

மனித குலத்தின் சிந்தனைத் தொடர்ச்சியும், பரிணாம வளர்ச்சியும் ஆரோக்கியமான

விழுமியங்களை சதா முன்நிறுத்திக் கொண்டிருப்பவை. இவற்றுக்கு நேரெதிரான

சிந்தனைகளைப் படைப்பாளியின் மனதில் விஷவித்துக்களாகச் சூல் கொள்ள

வைக்கும் சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்பே லெனி போன்ற கலாச்சார

அசுரர்கள் பிறக்க மூல காரணம்.

இந்த எதிர்மறைக் காரணிகளால் பாதிக்கப்பட்ட கலைஞர்களின் ஆக்கங்களில்

கலை நேர்த்தி இயல்பாக மிகுந்து வரும் போதிலும், பெரிய அளவில் வழித்திரிவு

காணக் கிடைப்பதை லெனியின் ஆவணப் படங்கள் மூலம் அவதானிக்க முடியும்.

(அழகியல் மெருகிட்ட அரசியலே •பாசிசம் என்ற கூற்று நினைவு வருகிறது இதன்

பின்னணியில்).

லெனி ஒரு திரைப்பட நடிகையாகத்தான் ஜெர்மன் திரைப்பட ரசிகர்களுக்கு

அறிமுகமானார். அது 1920களின் இறுதியில். மலைகளைப் பின்புலமாக வைத்து

எடுக்கப்பட்ட மவுண்டன் மூவிஸ் (குறிஞ்சிப் படங்களின் காலம்) என்று

சொல்லலாம் இதை.

யூதர், பொதுவுடமையாளர்கள் தவிர்த்த ஐரோப்பியர்களைச் சுத்த ஆரியர்கள் என்று

பெருமையோடு அடையாளம் காட்டி அழைத்துக் கொண்டவர்கள் ஹிட்லரின்

நாஜிக்கட்சியினர்.

வலிமையின் தூல வடிவமாக ஓங்கி நிற்கும் மலைகளை ஆரிய வலிமை பற்றிய

குறியீடுகளாகப் புனைந்து புதிய ஒரு பிம்பத்தைக் கட்டி நிறுத்திய ஒரு

பின்புலத்தில், ஜெர்மனியில் தொடர்ந்து பிரபலமான இந்த குறிஞ்சிப் படங்களைக்

காண வேண்டும்.

இப்படங்கள் அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த உத்திகளான மெதுவாக நகரும்

படப்பிடிப்பு (ஸ்லோ மோஷன் •போட்டோகிரா•பி), ஒளியை வடித்துத்

தனியழகோடும் கம்பீரத்தோடும் காட்சித் தோற்றம் ஏற்படுத்தித்தரும் வடிகட்டிகளின்

(கமெரா •பில்ட்டர்ஸ்) பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுத்து முன்கூட்டியே பதிவாக்கி

வைத்த படத் துணுக்குகள் (ஸ்டாக் ஷாட்ஸ்) அடிப்படையில் ‘சர்வ வல்லமை வாய்ந்த

ஆரியன்’ பிம்பத்துக்குத் தீனி போடும் வகையில், மலையும் மலை சார்ந்த

இடங்களிலும் நிகழும் கதையமைப்போடு அமைந்தவை.

நாட்டியத் தாரகையுமான லெனி, 1926ல் வெளியான ‘புனித மலை’ படத்தில்

மலைப்பரப்பிலும், அலையடிக்கும் கடல்புரத்திலும் பம்பரமாகச் சுழன்றாடி

ஜெர்மானிய மக்களின் மனதில் இடம் பிடித்ததோடு, ஹிட்லரின் கவனத்தையும்

கவர்ந்தார். அவன் மனதில் எழுப்பி வைத்திருந்த உன்னதமான ஆரியப்பெண்ணின்

பிம்பத்துக்கு உயிர்க் கொடுத்தவள் லெனி.

நாஜிக் கட்சியினர் பெரும்பான்மை பெற்று ஜெர்மனிய அரசியலில் சாக்கடை

வெள்ளமாகப் பெருகி நூற்றாண்டுகளின் தொடர்ச்சியான பாரம்பரியத்தோடு

அதுவரை ஏற்றம் பெற்றிருந்த கலையை, கலாச்சாரத்தை, நாகரிகத்தை

மலினப்படுத்தி நசித்தொழிக்கத் தொடங்கிய நாட்கள் அவை.

ஆரியரல்லாத கோடிக்கணக்கான மக்களுக்கும் – பழங்குடி மக்கள், நாடோடிகள்,

கறுப்பர்கள் ஆகிய பாவப்பட்ட இனக்குழுக்கள் இவர்கள் – யூதர்களுக்கும்,

பொதுவுடைமையாளர்களுக்கும் உலகில் ஜீவிக்க உரிமையில்லை என்று பிரகடனம்

செய்ததோடு மட்டுமில்லாமல், அவர்களைத் தேடித்தேடி அழித்தொழிக்கவும்

தயங்கவில்லை ஹிட்லரும் அவனுடைய நாஜிக் கட்சியினரும்.

ஹிட்லரின் மாயையால் கவரப்பட்ட லெனி தன் படைப்பு நேர்மையை, சமுதாயக்

கடமையைப் புறக்கணித்து அவனுடைய அடிவருடிக் கும்பலில் ஒருத்தியாக, தன்

சிந்தனையையும், கலையையும் சமுதாய நலனுக்கெதிரான ஆயுதங்களாக மாற்றியது

அடுத்து நிகழ்ந்தேறியது. அப்போது லெனி, நடிகை என்ற நிலையிலிருந்து,

திரைப்பட இயக்குனராக மாறியிருந்தார். புத்திசாலித்தனமும், படைப்பூக்கமும்

மிக்க, உலகின் முதல் பெண் திரைப்பட இயக்குனர்.

லெனி 1932ல் இயக்கிய ‘நீல வெளிச்சம்’ (The Blue Light) திரைப்படமும் ஒரு

குறிஞ்சிப் படம் தான். இயக்கியதோடு மட்டுமல்லாமல் அதில் கதாநாயகியாக

நடித்தும் இருந்தார் அவர்.

இப்படத்தில் சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்ட கதாபாத்திரம் அவருடையது.

சர்ரியலிசப் பின்புலத்தில், வெவ்வேறு ஆண்களைக் காதலித்து அவர்களை நீலப்

படிவங்களாலான தன் மலைக் குகைக்குத் தந்திரமாக வரவழைத்துக் கொன்று

தீர்க்கும் கதாநாயகியாக லெனி இப்படத்தில் வேடம் கட்டினார். கதையாக்கத்தில்,

இடதுசாரிச் சிந்தனையாளரும் யூதருமான பெலா பலாஸ் பங்கேற்ற இந்தப்

படத்தைத் தான் ஹிட்லருக்குப் பிந்திய காலத்தில் லெனி தன் அரசியல்

சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லி வந்தார். படத்தின் முடிவில் அந்த

மாயக் குகையைக் கதாநாயகி இழந்து வெளியேறுவது ஒரு படைப்பாளி என்ற

தளத்தில் தனக்கு ஏற்பட்ட நிராசையின் படிமம் என்று பின்னாட்களில் அவர்

அர்த்தப்படுத்த முயன்றாலும், அவர் ஹிட்லரின் எண்ணத்தைக் கலையாக்கிய ஒரு

கருவியாகவே மக்கள் மனதில் பதிந்து போயிருந்தார்.

யூதர்களை அழித்தொழித்து வலியோர் மட்டும் கூட்டமாகச் சுவாசித்து நடமாடும்

சுத்த ஆரிய சாம்ராஜ்யத்தை மண்ணில் கொண்டுவரக் கனவு கண்ட ஹிட்லரின்

மேடைப் பேச்சை இந்தக் காலகட்டத்தில் கேட்ட லெனி, ஹிட்லரின் பேச்சால்,

உடல் மொழியால், சிந்தனையால் கவரப்பட்டது ‘நீல வெளிச்சம்’ வெளியான

காலகட்டத்தில் தான். ஹிட்லரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து அவர்

எழுதிய கடிதம் உடனே அவனால் படிக்கப்பட்டு, சந்திப்பு நிகழ்ந்தது. ஒன்றல்ல, பல

முறை ஏற்பட்டன இச்சந்திப்புக்கள்.

ஹிட்லரின் பாதிப்பால், ஒத்திசைந்த இயக்கத்தில் வலிமையான மனித உடல்களைக்

காட்டுவது ஒரு அலுப்பில்லாத ஈடுபாடாக லெனிக்கு மாறியிருந்தது அப்போது.

மனிதர்களின் தனித்தன்மை, அறிவு, இலக்கிய, கலை ஈடுபாடுகள், மனிதம்

இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இயங்கி, இலக்கு நோக்கி முன்னேறும்

மாபெரும் சக்திவாய்ந்த இயந்திரக் கூட்டம் அவர்கள். அந்த இயக்கமே அவர்களின்

வாழ்க்கையின் சகலமும். லெனிக்குப் பிடிபட்ட, பிடித்துப்போன சித்தாந்தம்

இதுதான்.

1933 மார்ச் மாதம் நடந்த ஜெர்மனிய நாடாளுமன்றத் தேர்தலில் ஹிட்லரின் நாஜிக்

கட்சியினர் வெற்றி பெற்றார்கள். யூதர்கள் தொழிலிலும் வணிகத்திலும் ஈடுபடுவதைத்

தடைசெய்தலில் தொடங்கித் திரைப்படம் உள்ளிட்ட சகல துறைகளிலும் அவர்கள்

ஓரங்கட்டப்பட்ட நேரம் அது.

அந்த வருட நாஜி தேர்தல் பேரணியை ஆவணப் படமாக்கித் தரும்படி ஹிட்லர்

லெனியைக் கேட்டுக் கொண்டான். ‘நம்பிக்கையின் வெற்றி’ (Victory Of Faith)

என்ற அந்தப் படம் தான் இரண்டு ஆண்டுகள் சென்று 1935-ல் லெனி எடுத்த

‘ட்ரையம்•ப் ஓ•ப் வில்’ படத்தின் முன்னோடி.

‘டிரையம்•ப் ஓ•ப் வில்’ ஆவணப் படமும், நாஜிக் கட்சியின் பேரணி குறித்துத்தான்

உருவாக்கப் பட்டது. கதைப் படங்கள் போல் சீரான தாளகதியில் நகரும்

உருவங்களின் தொகுப்பு, ஹிட்லருக்கு மிகவும் பிடித்த இசை மேதை ரிச்சர்ட்

வாக்னரின் பாணிப் பின்னணி இசை, நேர்த்தியான படப்பிடிப்பு ஆகியவை

இப்படத்தை கலாரூபமாக உயர்ந்த தளங்களுக்கு இட்டுச் சென்றன. ஆனால்

படைப்பின் நோக்கம் •பாசிசச் சீரழிவு வாதத்தை உயர்த்திப் பிடிப்பதுதான்.

இதைத் தொடர்ந்து 1936ல் பெர்லின் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. ஜெர்மனியில்

யூதர்களுக்கு எதிரான இனவாதம் உச்சத்தில் இருந்த நேரம் அது. ஆரியச்

சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த ஹிட்லருக்கு ஏற்பட்ட வெறிக்கு, ஒலிம்பிக்ஸ்

விளையாட்டுகளை ஜெர்மனியில் நடத்த ஏற்பட்ட இந்தச் சந்தர்ப்பம் தீனி போட்டது.

விளையாட்டு விழாவை பெர்லினில் நடத்துவது மட்டுமில்லாமல் அதைப் பற்றிய கலை

நுணுக்கத்தோடு கூடிய ஓர் ஆவணப் படம் தயாரித்து உலகம் முழுக்க வெளியிட்டு,

தன் மூன்றாம் ஜெர்மன் பேரரசின் வலிமையை உலகமே வியந்து செயல் மறந்து

தலைவணங்கிப் போற்ற வைக்கலாம் என்று நம்பிய அவன் உதவிக் கரம் நீட்ட

அழைத்தது லெனியை.

பணம் ஒரு பிரச்சனையே இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் செலவழித்துக்

கொள். எந்த விதமான தொழில் நுட்பம், புத்தம் புதியதாக வந்திருக்கும் உபகரணம்,

தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லாமே நீ கேட்ட மாத்திரத்தில் கிடைக்கும்.

ஒலிம்பிக்ஸைப் படம் எடு. ஜெர்மனியின் வலிமை ஒவ்வொரு •ப்ரேமிலும் தெரிய

வேண்டும். அதுதான் நான் வேண்டுவது.

இப்படி லெனியிடம் கேட்டுக் கொண்டான் ஹிட்லர்.

லெனி அவன் எதிர்பார்த்ததற்கு மேலேயே செய்நேர்த்தியோடு கடமையை

முடித்தார்.

இருநூற்றைம்பது மைல் தூரம் நீளும் மொத்த •பிலிம் சுருள், இரண்டு ஆண்டு அசுர

சாதனையாகத் தொடர்ந்த எடிட்டிங்க். சளைக்காமல் லெனி உழைத்து 1938ல்

படத்தை வெளியிட்டார்.

இரண்டு பாகங்களாக வெளியாகியது ‘ஒலிம்பியா – நாடுகளின் திருவிழா – அழகின்

திருவிழா’ என்ற அந்த ஆவணப் படம் (Olympia (Festival Of Nations / Festival Of

Beauty). ஹிட்லரின் 49ம் பிறந்த நாள் விழாவில் வெளியான அந்தப் படத்தைக் காண

வந்த பிரமுகர்களில் முதன்மையானவன் ஹிட்லர்தான்.

ஒரு பக்கம் யூதர்கள் கூட்டம் கூட்டமாக அழித்தொழிக்கப் பட்டுக் கொண்டிருக்க,

இன்னொரு பக்கம் ஜெர்மானியர்கள் அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை

என்பதுபோல் ஹிட்லர் புகட்டிய ஆரிய மாயையில் மயங்கித் தங்களைச் சகல

வல்லமையும் கொண்ட, உலகை ஆளப் படைக்கப்பட்ட பிறவிகளாகக் கற்பனை

செய்து கொண்டு லெனியின் திரைப்படத்தைக் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு

களித்து அதை வெற்றியடைய வைத்தார்கள்.

இதனால் பெருமகிழ்ச்சியடைந்தாலும், திருப்தியடையாத ஹிட்லர், லெனியைப்

படத்தோடு உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பினான். அமெரிக்காவில் படப்

பெட்டியோடு லெனி வந்திறங்கிய போது, ஜெர்மனியில் யூதர் வதை உச்சகட்ட

அடைந்திருந்த நேரம். இந்த இனப்படுகொலையைக் கண்டித்த அமெரிக்கப்

பொதுநலக் குழுக்கள் லெனியின் வருகையை எதிர்த்து பெருமளவு மக்களின்

கருத்தை உருவாக்கிப் போராட்டங்கள் நடத்தின. வால்ட் டிஸ்னி மட்டும்தான்

லெனியை வரவேற்ற அமெரிக்கத் திரைப்படத் துறைப் பெரும்புள்ளி.

ஜெர்மனியில் பெற்ற பெருவெற்றியை ஒலிம்பியா ஆவணப்படம் அதே அளவு மற்ற

நாடுகளில் அடைந்ததாகத் தெரியவில்லை.

ஹிட்லரோடு நெருங்கிய நட்புறவோடு பழகிய லெனியைப் பற்றி அவருடைய மாஜி

காதலர்கள், நண்பர்களே அவர் ஹிட்லரின் ஆசைநாயகியரில் ஒருத்தி என்று

எழுதவும் பேசவும் ஆரம்பித்திருந்தார்கள். ஹிட்லரின் மனைவியான ஈவா ப்ரவுனின்

டயரிக் குறிப்பாகவும் இது வெளியானது.

லெனி ஒலிம்பியா படச் சுருளோடு உலகம் சுற்றத் தொடங்கியதற்கு முன்னரே

இப்படிப் பேச்சு அடிபட ஆரம்பித்தது என்றாலும், அது உச்சமடைந்தது இந்தக்

காலகட்டத்தில் தான். நூத்தியோரு வயதில் பழங்கிழமாக இறக்கும் வரை தனக்கும்

ஹிட்லருக்கும் இடையே உறவு இருந்ததை மறுத்துக் கொண்டே இருக்க வேண்டிப்

போனது லெனிக்கு.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது லெனி போர்முனையில் ஜெர்மனிய

வெற்றியை உடனுக்குடன் கமராவில் பதிவு செய்யும் நிழல்படக் கலைஞராக யுத்த

பூமிக்குப் புறப்பட்டார். போலந்தில் யூதர்கள் நாஜிப்படைகளால் குரூரமான

முறையில் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்து நிலைகுலைந்து போன லெனியை

ஒரு ஜெர்மானியப் படைவீரன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பிளாக்மெயில்

செய்ததாகவும் தகவல்கள் உண்டு. நாஜிப் படையினர் யூதர்களைக் கொல்லும்போது

ஹிட்லரின் ஆதர்ச ஆரியப் பெண் சந்தோஷமாகச் சிரிக்காவிட்டால் ஹிட்லருக்குக்

கோபம் வராதா என்ன?

போர் தீவிரமடைந்தபோது லெனி ஸ்பெயினில் ‘டைப்லாண்ட்’ (Tiefland) என்ற

நாட்டிய நடனத் திரைப்படத்தை (opera film) உருவாக்குவதில் முழு மூச்சாக

ஈடுபட்டார். அதுவரை தீவிர ஹிட்லர் ஆதரவாளராகத் தன்னை இனம் காட்டிக்

கொண்டிருந்த லெனி அவ்வாறு விலகிப் போகத் தொடங்கியதற்கான காரணங்கள்

லெனியின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்கிறவர்களால் இன்னும் முழுமையாக

அலசப்படவில்லை.

எனினும் 1945ல் போர் முடிந்த தறுவாயில் லெனி அமெரிக்கப் படையினரால்

சிறைபிடிக்கப் பட்டார். அவரைக் கைது செய்த அமெரிக்கப் படைவீரர்களில்

ஒருவர் ஹாலிவுட்டில் கதாசிரியரும் லெனி அமெரிக்கா வந்தபோது அவரை எதிர்த்து

ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் முனைந்து செயல்பட்டவருமான பட்

ஷ¤ல்பெர்க் (Budd Schulberg).

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து தோல்வியுற்றுப் பிடிபட்ட நாஜிகள்

நியூரம்பெர்க்கில் நடந்த சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் தக்க

தண்டனை வழங்கப்பட்டார்கள். ஆனாலும் லெனி மீது குற்றம் எதுவும்

நிரூபிக்கப்படவில்லை. அவர் நாஜிக்கட்சியில் ஆரம்ப உறுப்பினராகக் கூட

இல்லாமல் ஹிட்லருக்கு வெளியிலிருந்தே ஆதரவு அளித்து வந்த புத்திசாலித்தனம்

இப்படி அவர் தப்பிப் பிழைக்க வழிவகை செய்தது.

எனினும், ஜெர்மனி நாடு பிரிவினையாகிய போது, மேற்கு ஜெர்மனி அரசாங்கத்தால்

லெனி நாஜிகளின் ‘கூட்டுக் களவாணி’யாக அறிவிக்கப்பட்டு மூன்றாண்டு வீட்டுச்

சிறையில் வைக்கப்பட்டார். அவருடைய அடிப்படை உரிமைகளும் பறிமுதல்

செய்யப்பட்டன.

அது முடிந்து அவர் வெளியே போய்ப் புழங்க அனுமதி அளிக்கப்பட்டாலும்,

ஹிட்லரின் வெறியாட்சியின் விளைவுகளிலிருந்தும், உலகே அதைக் கண்டித்ததால்

ஏற்பட்ட குற்ற உணர்விலிருந்தும் முற்றிலும் மீண்டு வராத ஜெர்மன் மக்கள்,

ஹிட்லரின் விருப்பத்துக்குரியவரான லெனியைச் சகல விதத்திலும் தவிர்த்தார்கள்.

போரின் இறுதி நாட்களில் லெனி தயாரித்த ‘டைப்லாண்ட்’ நாட்டிய நடனத்

திரைப்படம் அப்போது பிரான்சு அரசாங்கத்திடம் இருந்தது. அதை ஒரு வழியாகப்

பெற்றாலும், அப்படத்தின் கலைத்தன்மை பற்றி சில விமர்சகர்களிடமிருந்து பலத்த

சிபாரிசு இருந்தாலும் 1954ம் வருட கேன் திரைப்பட விழாவில் படம் திரையிட

ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நிகழ்ச்சி

ரத்தாகியது.

டைப்லாண்ட் படத்தில் துணை நடிகர்களாகப் பைசா செலவின்றி நடித்துக்

கொடுக்க, நாஜி வதைமுகாம்களில் இருந்த பல யூதர்களை லெனி பயன்படுத்திக்

கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் நேர்ந்தது அது. பயன்படுத்திக் கொண்டது

மட்டுமில்லை, அவர்களிடம் ‘இந்தப் படத்தில் நடித்தால் அப்புறம் நீங்கள் உயிர்

பிழைத்து விடுதலையாகலாம்’ என்று தெரிந்தே பொய்யான வாக்குறுதியை லெனி

கொடுத்ததாகவும், ஆனால் படம் முடிந்தபின் அந்த யூதக் கைதிகள் விஷவாயுக்

கூடத்துக்கு அனுப்பப்பட்டு மற்ற கைதிகள் போலவே கொல்லப்பட்டதாகவும்

நிரூபணமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகம் லெனியை முற்றாக

வெறுத்து ஒதுக்க இது ஒன்றே பலமான ஆதாரமாக இருந்தது.

ஆனாலும் லெனி மனம் தளராமல் ஆழ்கடலுக்கு அடியில் புகைப்படம் எடுக்கும்

துறையில் நுழைந்தார். எழுபது வயதில் ஆழ்கடல் நீச்சல் கற்றுத் தேர்ந்து இப்படி

பழசை மறக்கடிக்க இன்னொரு அவதாரம் எடுத்த லெனியின் விடாமுயற்சியைப்

பாராட்டத்தான் வேண்டும்.

1972ல் ஜெர்மனி ம்யூனிக் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் போது லெனி

இன்னொரு தடவை தலைகாட்டினார். 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸின் போது

ஆஸ்தானப் படப்பிடிப்பாளராக ‘ஒலிம்பியா ஆவணப் படத்தை உருவாக்கிய லெனி,

இந்த ஒலிம்பிக்ஸின் போது லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் படப்பிடிப்பாளராக

இருந்தார். ஆனாலும் போன இடத்தில் எல்லாம் அவர் ஒதுக்கப்பட்டார்.

1960 தொடங்கிக் கிட்டத்தட்ட நாற்பது வருட காலம் ஆப்பிரிக்காவில் தெற்கு

சூடானில் நூபா இன மக்களோடு அவருடைய தொடர்பு ஏற்பட்டது. ஆறு மாத காலம்

நூபா பிரதேசத்தில் தங்கி இருந்து அவர்களைத் தொடர்ந்து நிழற்படம் பிடித்ததோடு

நான்கு நூல்களையும் அம்மக்களைப் பற்றி எழுதினார் லெனி.

நூபா இன மக்கள் தங்கள் உடல் வலிமைக்குப் பிரதானம் கொடுப்பவர்கள்.

வலிமையை வெளிப்படுத்தும் அசைவுகள் கொண்ட குழு நடனங்களில் களிப்போடு

ஈடுபடும் இவர்களுக்கு முகம் என்பது பலவிதமான வண்ண முகமூடிகளைத் தரிக்க

ஏற்பட்ட ஒரு இடம் மட்டும்தான்.

ஒத்திசைந்த உடல்களின் இயக்கம், வலிமையே வாழ்க்கை என்ற நாஜிக்

கருத்துக்களை இறக்கும்வரை துறக்காத லெனிக்கு நூபா இனத்தின் மேல் ஏற்பட்ட

நேசத்தை அவருடைய •பாசிச மன இயக்கத்தின் நீட்சியாகவே விமர்சகர்கள்

காண்கின்றனர்.

1990களில் ஒரு வழியாக லெனியின் மீதான எதிர்ப்பு கால ஓட்டத்தில் முனை

மழுங்கி ஜெர்மனியில் அவருடைய பழைய சில படங்கள் மீண்டும் ஒரு விழாவில்

திரையிடப்பட்டபோது, லெனியின் கலையாக்கமும் கருத்தாக்கமும் பற்றிய

விவாதங்களும் மீண்டும் எழுந்தன.

பாப் இசைப்பாடகி மடொனா லெனியைச் சந்தித்து அவருடைய வாழ்க்கை

வரலாற்றைத் திரைப்படமாக்கித் தான் அதில் நடிக்கப் போவதாகத் தெரிவித்தாலும்

லெனி இந்த செப்டம்பரில் இறக்கும்வரை அது நடக்கவில்லை.

நூற்று ஒரு வயதில் லெனி இறக்கும்போது என்ன நினைத்திருப்பாரோ தெரியாது.

ஆனால், ஹிட்லர் என்ற அசுர பட்சியின் நிழல் மட்டும் அவர் மீது படியாமல்

இருந்தால், இன்னேரம் அவர் மறைவுக்கு உலகம் முழுக்க அஞ்சலி செலுத்திக்

கொண்டிருக்கும்.

நுண்ணிய கலையுணர்வும், சலியாத உழைப்பும், புதிய கலை வெளிப்பாட்டு

உத்திகளில் ஈடுபாடும் கொண்ட லெனி ரைபென்ஸ்தால் இவை எல்லாவற்றையும் மனித குலத்துக்கு எதிரான நாசகாரச் சக்திகளின் கரங்களைப் பலப்படுத்துவதற்குப் பயன்படுத்தியதின் விளைவு இது.

ஹிட்லரை வரலாறு மறக்கவே மறக்காது. மறந்தாலும், மன்னிக்காது லெனியை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன