Viswaroopam Novel – Poet Kalapriya writesவிஸ்வரூபம் நாவல் – திரு. கலாப்ரியா அவர்களின் கடிதம்

அன்புள்ள முருகன்

வணக்கம்

சும்ம ஒரு புள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறாருன்னு.. நானுமெழுத உக்காந்தாத்தான் கஷ்டம் புரியும்.உண்மையிலேயே பெரிய்ய கேன்வாஸ்தான். அரசூர் வம்சம் படிக்கும்போதே ஆச்சரியம் தாங்கலை.. என்ன ஒரு வேகம் என்ன ஒரு கேலியும் கிண்டலுமான நடை.அது இதிலும் தொடர்கிறது.நான் அம்பலப்புழை கிருஷ்ணனைப் பார்த்ததில்லை. எனக்கு ஆரண்முலா கிருஷ்ணன்தான் அறிமுகம். பம்பா ஆறும் அவன் உசந்த கோயில் படிக்கட்டும் அம்பலப்புழைக்கு தானாகவே மாறிக் கொண்டது.அதுவும் ஒரு மாயாவாதம் தானே.நீ/நீங்கள் சொல்கிற மாதிரிகொஞ்சம் சரித்திரப் பாத்திரங்களைப் பிடித்து யாரின் மடியிலாவது உயிரை விட வைத்திருந்தால்.. ஒரு மேக்ரோ நாவல் ஆகியிருக்கும்.இங்கே எல்லோரும் “காட் சேவ் தி கிங்க்” பாடிவிட்டுப் போகிறவர்கள்.எந்த அத்தியாயத்திலும் கதை ஒரு முடிவை நோக்கிப் போகிற மாதிரி, மற்ற நாவல்களில் வருகிற, சோக பாவம் இல்லாதது ஒரு புது விஷயம்.மகாலிங்கய்யன் மட்டும்தான் ரெட்டியாகி மிக அதிகமாகக் கஷ்டப்படுகிறான். கடைசி வரை அவனுக்கு கடைத்தேற்றமே இல்லை. இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் கதாசிரியன் (நீ /நீங்க இல்லை) அனுபவிக்க நினைக்கிற பல கொண்டாட்டங்களை அவன் அனுபவிக்கிறான்.அதற்கான தண்டனைகளையும் கையோடே அனுபவிக்கிறான்.வாசகன் யாராவது மகாலிங்கய்யனாக நான் இருக்கலாமே என்று நினைத்தால் அவன் படும் கஷ்டங்கள் வாசகனை வெருட்டி விட்டு விடும்.

பரசு- பட்டன் சமாச்சாரங்களொன்றும் புதிதில்லை.சொல்வதில் உனக்குள்ள நடையும் சுவாரஸ்யமானதுதான். இன்னும் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

அதே போல ‘புஸ்தி மீசைக் கிழவன்’ அடக்கமுடியாத சிரிப்பை வரவழைக்கிற சாரை வேகத்துடனான நடை. கொஞ்சம் நீளமதிகமோ.சொல்வது எளிது எழுதினாத்தான் தெரியும் கூட்டல் குறைத்தல் விவகாரமெல்லாம். தெரசாவும் சரி அவளது அனுபவங்களும் சரி…. வாசகனுக்கும் பேரபனுவம்தான்.நாயுடுவும் நீலகண்டனும் பகிர்ந்து கொள்கிற கோட்டையும் ஹை கோர்ட்டும். ராஜலக்‌ஷ்மியும்,ராஜகுமாரியும்அப்புறம் வருகிற லக்ஸ் பாப்பாவும்(அது யாருப்பா அது…புரியலையே எனக்குத் தெரிஞ்சு சாவித்ரிதான் முதல் லக்ஸ்ஸ்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.)

பயனீர் பத்திரிக்கை குறிப்பாக தெரிசா – ஸ்காட்லாந்து இங்கிலாந்து கதை சொல்லப்படுவது சுவாரஸ்யமாயிருக்கிறது பெரும் உழைப்பைக் கோரும் விஷயம்.பத்திரம் வேதைய்யன் கைக்கு கிடைத்த பின்னும் நடேசன் சென்னை வந்து போவதற்குக் காரணம் குறைவு. லாஜிக்கை நினைத்து,என்னடா புறப்பட்டவனை அங்கேயே விட்டு வீட்டோமே என்று நினைத்தாயோ என்னவோ.நான் சொல்லறதெல்லாம் நான் நாவல் ஆரம்பித்தால் எனக்கு உபயோகமாயிருக்கும்.

நாவல் முழுக்க உன்/உங்கள் நடையும் வேகமும் கிண்டலும் கேலியும் அமர்க்களப்படுகிறது.ஒரு அசுர சாதனைதான் செய்திருக்கிறாய்.போன ஜென்மத்தலியே இதற்கான சாதகத்தைப் பண்ணி விட்டாயோ, என்னவோ.அம்பலப்புழையோ, ஆரண்முலாவோ கிருஷ்ணன் உனக்கு/உங்களுக்கு இன்னும் அசுரத்தனமெல்லாம் தருவான். சர்வம் கிருஷ்ணார்ப்பனம்,முருகார்ப்பணம்.

கலாப்ரியா
27 ஏப்ரல் 2013

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன