Historic fiction, Hanuman, The Hindu and the Wikileaksவரலாற்றுப் புனைகதை, வானில் எவ்வும் அனுமன், விக்கிலீக்ஸ் மற்றும் தி ஹிந்து பத்திரிகை

அண்மையில் நண்பர் கமல் ஹாசன் அவர்களோடு நாவல்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது நாவல் முழுக்க கற்பனையான கதாபாத்திரன் ஒன்று மட்டும் வர, மற்றையவை எல்லாம் வரலாற்று பாத்திரங்களாக (அண்மைக் கால வரலாறு) அமைத்து முயற்சி செய்யலாம் என்றார்.

அரசூர் வம்சத்திலும், அதன் தொடர்ச்சியான விஸ்வரூபம் நூலிலும் சில கதாபாத்திரங்களை நிஜமாகவும், மற்றப் பலரைக் கற்பனையாகவும் உலவ விட்டதைப் பேசிக் கொண்டிருந்தபோது இந்த எண்ண ஓட்டம்.

‘ஹே ராம் சாகேத் ராம் போலவா?’ என்று கேட்டேன். ‘அதற்கு மேலேயும்’ என்றார்.

கத்தி மேல் நடக்கிற வேலை இது. ஜாக்கிரதையாகக் கற்பனையையும் நிஜத்தையும் கல்க்காவிட்டால் விமர்சனங்கள் வந்து விழும். நிஜம் நிறைய இருந்தால் இன்னொரு வரலாற்று நூலாக வாய்ப்பு உண்டு.

யோசித்துப் பார்த்ததில், இந்த மாந்திரீகத்தை வெகு இயல்பாக முதன்முதலில் தமிழில் செய்தவர் மகாகவி பாரதியார். சந்திரிகையின் கதை – முற்றுப் பெறாத நாவல்.

தேசபக்தரும் சுதேசமித்திரன் பத்திரிகை உரிமையாளருமான வீரேசலிங்கம் பந்துலு, அவர் மனைவி இருவரையும் காண சென்னைக்குக் குழந்தை சந்திரிகையோடு கதாநாயகி வருவாள். பந்துலு அழும் குழந்தையை எடுத்துக் கொஞ்ச அது அழுகையை நிறுத்தும். பந்துலு அவர்களின் மனைவி சொல்வாள் -’கிழவருக்கு வேறெதுவும் தெரியாவிட்டாலும் குழந்தைகள் அழுகையை நிறுத்தத் தெரியும்’. பந்துலு காங்கிரஸ் மாநாட்டுக்குப் போகிற பரபரப்பில் இருப்பார். உடலில் அங்கங்கே வேனல் கட்டி ஏற்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் பயணத்தில் எடுத்துப் போக காரமான எலுமிச்சை ஊறுகாய் வைப்பாள் மகள்..

பந்துலுவோடு ஒரு நாள் முழுக்க இருந்து பார்த்து எழுதியிருப்பாரோ பாரதியார். அவர் சுதேசமித்திரன் ஆசிரியராக இருந்தவர் தான். ஆனால் பந்துலு வீட்டுச் சூழலை இவ்வளவு தத்ரூபமாக எப்படி வர்ணித்தார்?
————————————
டிஜிட்டல் மீடியா, ப்ரிண்ட் மீடியா சமாதான சகவாழ்வு பற்றி ஏ.எஸ்.பி ஹிந்து பத்திரிகையில் நேற்று ஒரு நல்ல கட்டுரை எழுதி இருந்தார்.

விக்கிலீக்ஸ் கிட்டே இருந்து பழைய பேப்பர் பல்பொடி மடிக்கற காகிதம் எல்லாம் மொத்த விலைக்கு வாங்கற ஹிந்து பத்திரிகை ஒப்பந்தம் பற்றி அவர் சொல்வது –
The legacy media can function as a fine curator by classifying and categorising the digital platforms’ abundance, become a silos breaker of its insularity, to bridge the virtual and real world, to provide a context and hence give a meaning to information. This cooperation has the potential to give information an edge in making our own choices in our daily democratic practices. The partnership between WikiLeaks and The Hindu is an indicator of the ways legacy media can fruitfully coexist with the digital possibilities.

முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முந்திய ஊகம், ஊர் வம்பு, பாதி உண்மையை எல்லாம் நேற்று சாயந்திரம் நடந்ததுபோல் பகிர்ந்து கொள்வதால் என்ன நன்மை? பல விக்கிலீக்ஸ் எஜமானனுக்கு (அமெரிக்க அரசு) நம்ம நாட்டில் இருக்கற அவங்க தூதரகம் அனுப்பிய லோக்கல் ஊர் வம்பு சமாசாரமாகத்தான் இருக்கு…

எமர்ஜென்ஸி காலத்தில் சென்னை பத்திரிகைகள் எல்லாம் சென்சாருக்கு சரி என்று சொல்ல தினமணி வெற்றுத் தாள் தலையங்கம் கொடுத்து எதிர்ப்பைச் சொல்லி இருக்கு. எமர்ஜென்ஸி உத்தரவு என்ற பயங்கரமான சரித்திர விபத்து நிகழ்ந்தது போலக் கூட காட்டிக்கொள்ளாமல் ஹிந்து எப்பவும் போல் தினசரி அச்சடிச்சுத் தள்ளியிருக்கு.. விக்கிலீக்ஸை வைத்துக் கொண்டு ஒரு சுய விமர்சனம் செய்து கொள்ள ஹிந்துவுக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் பயன்படுத்தப்படும்னு தோணலை..

ஏஎஸ்பி வேறே நல்ல உதாரணத்தைச் சொல்லி இருக்கலாம்.

http://www.thehindu.com/opinion/Readers-Editor/the-possibility-of-coexistence/article4617428.ece?homepage=true
————————————————
இலங்கை வெல்ல அனுமன் எழுந்து பறக்கும் அற்புதக் காட்சியைக் கம்பன் சொல்கிறான் –

வால்விசைத்து எடுத்து, வன்தாள்
மடக்கி,மார்பு ஒடுக்கி, மானத்
தோள் விசைத்துணைகள் பொங்கக்
கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால்விசைத்தடக்கை நீட்டி,
கண்புலம்கதுவா வண்ணம்
மேல்விசைத்துஎழுந்தான், உச்சி
விரிஞ்சன்நாடு உரிஞ்ச – வீரன்.

(வீரன் – அனுமன்;வால்விசைத்து எடுத்து – வாலை வேகமாக
உயர்த்தி; வன்தாள் மடக்கி – வலிமையான திருவடிகளை மடக்கி; மார்பு
ஒடுக்கி – மார்பைச் சுருக்கி; மானத் தோள்விசைத் துணைகள் பொங்க –
பெருமையும் புகழும் வெற்றியும் பெற்ற இரண்டு புயங்கள் பூரிக்க;
கழுத்தினைச் சுருக்கி – கழுத்தை ஒடுக்கி; தூண்டும் கால்விசைத் தடக்கை
நீட்டி – தூண்டுகின்ற காற்றைப் போன்று வேகமாகக் கைகளை நீட்டி; உச்சி
விரிஞ்சன் நாடு உரிஞ்ச – தலை பிரம்ம லோகத்தை உராயும்படி; கண்புலம்
கதுவா வண்ணம் – கண்ணின் பார்வை பற்ற முடியாதபடி; மேல் விசைத்து
எழுந்தான் – விண்ணில் வேகமாக எழும்பினான்.

அனுமன் வால்எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, கழுத்தினைச்
சுருக்கி, கை நீட்டி உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச விசைத்து எழுந்தான். – நன்றி தமிழ் வெர்ச்சுவல் யூ)

இந்தக் கம்பீரமாக திருக்கோலத்தை ஓவியம் வடித்திருக்கிறார்களா யாரும்?

தேடியதில் ரவிவர்மாவின் ஒரே ஒரு ஓவியம் கிட்டத்தட்ட இந்த வர்ணனைக்கு ஒப்ப இருந்தது. அல்லது நான் தான் கற்பனை செய்து கொண்டேனா?

நண்பர் க்ரேஸி சொல்கிறார் – அனுமன் வாலில் நெருப்பு….கையில் கணையாழி போல் தோன்றுகிறது….கண்டேன் சீதையை சொல்பவர் கையில் சூடாமணி அல்லவா இருக்க வேண்டும்…!!!!ஒருவேளை அனுமனின் விச்வரூப கோலத்தில் சூடாமணி சுருங்கி கணையாழி ஆகிவிட்டதோ….யாமறியோம் அனுமனின் பறாபறமே….இது RETURN JOURNEY என்று நினைக்கிறேன்….ஓவியத்தில் ரவிவர்மாவின் சாயல் இருக்கு ஆனால் செயல் திறன் இல்லை ….போலி அல்ல அதே சமயம் ரவிவர்மா “போலி”ருக்கு….இதே போல பல ரவிவர்மா ஜாடையில் சரஸ்வதி ,லஷ்மி பார்த்திருக்கிறேன்….கிரேசி மோகன் ….//

valid point.. objection sustained..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன