நல்ல செய்திகளை அனைவரும் வரவேற்கிறார்கள். அவை இல்லாத பட்சத்தில் உருவாக்கப்படுகின்றன

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி

வைத்தாஸ் கை சுட்டிக் காட்டும் முன் ததரினனா என்ற சத்தம் நின்று போய்த் திரும்ப ஆரம்பத்தில் இருந்து மெல்லிய தம்பூரா மீட்டுதலோடு இசை தொடங்கியது.  உயர்வு நவிற்சியோடு சொன்னான் –

 

இதயம் தைக்கும் இந்த இசையோடு, எங்கள் நாட்டு முரசு வாசிக்கும் கானகம் சார்ந்த கலைஞர்களைச் சேர்ந்து இசைக்கச் சொல்லி சர்வதேச சங்கீதம் உருவாக்கலாம்.  உலகம் முழுக்க ஒற்றுமையும், அன்பும், சகோதரத்துவமும், அமைதியும், ஆதிக்க எதிர்ப்பும் நிலவ இம்மாதிரி சார்பு தவிர்த்த உலக இசை உதவி செய்யக் கூடும்.

 

அவன் பேசியது அவனுக்கே பிடித்துப் போனது. அடுத்த மாதம் தூதரகம் வெளியிடும் மாதப் பத்திரிகையில் முதல் பக்கக் கட்டுரை எழுத இதுவே கருப்பொருள். இந்தப் பேச்சு அமைச்சரையும் அதிகாரி சின்னச் சங்கரனையும் கூடப் பாதித்திருப்பதாக அவன் நம்பினான். அதிகாரி அவன் பேசியதைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதைக் கவனிக்கத் தவறவில்லை வைத்தாஸ். பாட்டைத் தொடர்ந்து ஒலிப்பதிவு நாடாவிலேயே வைத்தாஸின் குரலை அதிகாரி சின்னச் சங்கரன் அடக்கிக் காட்டியிருந்தால் வைத்தாஸுக்கு அவன் மேல் மேலதிக வாத்சல்யமும் மரியாதையும் ஏற்பட்டிருக்கும். இப்போதும் தாழ்வில்லை. நேச நாட்டு அமைச்சருக்குப் பிரியமான அதிகாரிகள் தூதரகமும் தேசமும் காட்டும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களே.

 

அமைச்சர் அதிகாரியைப் பார்த்து, சொல்லு என்று கண் காட்ட சின்னச் சங்கரன் வைத்தாஸிடம் சகல மரியாதையோடும் சொன்னது இது –

 

கலாசார அமைச்சகத்தின் ஆதரவில் அடுத்த மாதம் கேரள மாநிலம் அம்பலப்புழையில் பாரம்பரிய இந்திய இசையும் நடனமும் என்ற கருத்தரங்கு நடக்க இருக்கிறது. பல காரணங்களால் நான்கு முறை தள்ளிப் போட்டு ஒரு வழியாக இப்போது நடக்க இருக்கிறது. ஒரு வல்லரசு நாட்டின் தூதர் கௌரவ விருந்தாளியாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்தார். அவரைப் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பைத் தொடர்ந்து திருப்பி அவருடைய நாட்டுக்கே அனுப்ப வேண்டிப் போனது. கலை ஈடுபாடு உள்ள அறிஞரான வெளிநாட்டவர் வேறு யாரையும் உடனே தேடிப் போக முடியாத சூழலில், உதவி செய்யும்படி நட்போடும் உரிமையோடும் உங்களிடம் கேட்கலாம் என்று அமைச்சர் யோசனை சொன்னார். நீங்கள் பெரிய எழுத்தாளர் என்றும் நுண்கலைகளின் மகா ரசிகர்  என்றும் அவர் தான் எங்களுக்குத் தெரியப் படுத்தினார்..

 

அனைத்தும் அவனருள் என்று அதிகாரி மெய்மறந்து அமைச்சரைத் துதிக்க, எல்லாப் பெருமையையும் உணவு செரிமானமாகும் மிதமான ஒலியோடு அமைச்சர் வெளிப்படுத்தி, மேஜை உள்ளே இருந்து வெற்றிலைகள் ஒன்றிரண்டை எடுத்து மடித்து வாயில் திணித்துக் கொண்டார்.

 

தான் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பி ஒரு மாதம் விடுமுறையில் மனைவியோடு வெகு காலம் கழித்துக் கூடி இருக்க உத்தேசித்ததைத் தெரிவிக்கலாமா என்று யோசித்தான் வைத்தாஸ்.

 

அது வேண்டாம், இந்த அழைப்பை ஏற்பதே இரண்டு நாடுகளுக்கு இடையே நல்லுறவு வலுப்பட உதவக் கூடியது என்று அவனுக்கு நம்பிக்கை வந்தது.

 

நந்தினியை இங்கே வரச் சொல்லலாம். கடவுளின் மூத்த சகோதரி முதல் பயணமாக ஆடும் பறவைகளின் நட்பு நாட்டுக்கு வருகிறார் என்று உள்நாட்டில் தகவல் பரவட்டும். நல்ல செய்திகளை அனைவரும் வரவேற்கிறார்கள். அவை இல்லாத பட்சத்தில் உருவாக்கப் படுகின்றன.

 

வைத்தாஸ் அம்பலப்புழை மாநாட்டில் பங்கு பெற ஒத்துக் கொண்டான். அர்ஜுன நிருத்தம் என்ற நடனம் பற்றி அவன் பேச வேண்டும் என்று அழைப்பு. ஆண்கள் மயில் தோகை அணிந்து ஆடும் ஆட்டமாம் அது. அவன் நாட்டிலும் பறவை இறக்கை அணிந்து ஆடும் ஆட்டம் ஒன்று உண்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பேச அவனுக்கு முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன