எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷனில் வந்து நின்று புறப்படும் நேரத்தில் ஒரு கல்யாணம்

எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷனில் வந்து நின்று புறப்படும் நேரத்தில் ஒரு கல்யாணம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காம் நாவல் பக்கங்கள் சில வரிசையாக இங்கே தினமும் அளிக்கப்படுகின்றன

 

அவன் கற்பகம் பாட்டி கையைப் பிடித்தபடி சுருக்கமாகச் செம்பூர்க் கல்யாணம் பற்றிச் சொன்னான்.

 

போறது, நன்னா இருங்கோ. எங்க காலத்திலே நாலு நாள் கல்யாணம். இப்போ எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷன்லே வந்து நின்னு திரும்பக் கிளம்பற நேரத்துக்குள்ளே கல்யாணம் முடிஞ்சுடும்.

 

பாட்டி ஆச்சரியப்பட, அகல்யா வேலைக்குப் போகப் புடவையும், மற்ற உடு துணியும் சீவில்லிப்புத்தூர் ஸ்னானப் பவுடரும், சாந்துப் பொட்டு பாட்டிலும் அடைத்து எடுத்து வந்த பைகளைச் சுவர் ஓரமாக வைத்தாள்.

 

வெளியே மழை நின்றிருந்தது துல்லியமான வானமாக ஜன்னல் வழியே தெரிந்தது.

 

உக்காருங்கோ ரெண்டு பேரும். பூஷனிக்காய் சாம்பாரைக் கொஞ்சம் போல் பெருக்கி, ஒரு ஆழாக்கு சாதம் வடிச்சுட்டா எதேஷ்டம்.

 

கஷ்டப்பட்டுக்காதே சின்னக் குட்டி.

 

திலீப் பாட்டியைக் கன்னத்தில் தட்டினான். போடா வானரமே என்றபடி அவள்  அகல்யாவைப் பார்த்தாள்.

 

ஒரு பாயசம் வச்சுடறேன் குழந்தே. போன வாரம் தான் தெருக்கோடி கன்னடக்காரா கடையிலே ஏழு ஏழு ஏழு பவுடர் எப்படி இருக்குன்னு பார்க்க வாங்கினேன். இப்படி உடனடியா உபயோகமாகும்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு பாக்கெட் வாங்கியிருப்பேன். ஒரு அரை மணி நேரம் பசி பொறுத்துப்பியோடீ? ரேணுகா, பக்கத்து கர் ஸே தூத் ஆவ். ஏண்டி சிரிக்கறே. கூறு கெட்டுப் போய் இவ ஒருத்தி. குருடும் செவிடும் கூத்துப் பார்த்த மாதிரி நானும் இவளும் இந்த அப்சரஸை பாத்துக்கறோம்.

 

தன் முன்னால் ஏக்கத்தோடு கன்றுக்குட்டி போல வந்து நின்ற ஷாலினியைத் தோளில் தட்டியபடி கற்பகம் பாட்டி சொன்னாள்.

 

நான் பாயசம் பண்றேன் பாட்டி. சுமாரா சமையல் பண்ணுவேன். அம்மா அதுவும் ரெண்டு கீர்த்தனையும் கத்துக் கொடுத்திருக்கா.

 

அகல்யா பேசியபடி சுவாதீனமாக அறை ஓரத்தில் அடுப்பை நோக்கி நடக்க, கீழ்த் தளத்தில் மர ஜன்னல் கரகரவென்று ஓசையோடு திறந்து, ஒரு பெண் குரல் கூவியது.

 

திலீப் அண்ணா, உங்களுக்கு மதராஸில் இருந்து ட்ரங்க் கால்.

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன