வடக்கிருக்க இருட்குகை புகுந்த மருத்துவர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான்.

இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம் ஒரு கம்பித் தாரையாக உள்நுழைந்து கீழே கசிந்து திடமாக நிற்கிறது,

மருத்துவர் அந்த கிரணத்தை ஆவலோடு பிடித்து மேலேறப் பார்க்கிறார். கை மீது ஒளி பூசி நிற்கிறவரின் தலைக்கு மேல் அந்த ஒளி படிந்து மேலே எழுகிறது. அவர் திரும்பிப் பார்க்கிறார்.

ஒன்றிலிருந்து ஒன்றாக எத்தனை குகை கடந்து, எந்தக் குகையில் தொடங்கினேன் என்பதே நினைவின்றி, ஓரத்துக் காற்றும் சின்னஞ்சிறு வெளிச்சமும், படிகம் போல் சுத்தமாகக் கசிந்து வடியும் நீரும் அவரிடம் சொல்கின்றது போல் உணர்கிறார் –நாங்கள் உன்னோடு இல்லை. நீ எங்களோடு இருக்கிறாய் .

தோளில் மாட்டிய சஞ்சியில் கொண்டு வந்த சேமச் செப்பு கூட வைத்திருந்த வெங்கல நடராஜர் உள்ளங்கையகலச் சிறு சிற்பத்தோடு மோதி நலம் விசாரித்து ஓரம் நகர்கிறது. நலமான நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார்.

சஞ்சியில் கை நுழைத்து, எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்த இரட்டை கதலிப் பழங்களை வெறுமனே தடவிப் பார்க்கிறார்.

பசித்தால் உண்ணலாம். எத்தனை தடவை? பசி எப்படி வரும்? வைராக்கியம் கொண்டு தானே பசியும், பெயரும், புகழும், ஆரோக்கியமும், பொன்னும் பொருளும் துறந்து வந்தது.

இனியும் உணவு எதற்கு? இருக்கட்டும். எனக்கு வேண்டாவிட்டால் வேறு யாருக்காவது பயன்படாது போகாது. இந்தக் குகைச் சிக்கலில் யார் வரப் போகிறார்கள்? எப்படி வந்து எப்படி எங்கே போகப் போகிறார்கள்?

எல்லாம் வெறுத்து என்னைப் போல் யார் இங்கே வருவர் என மருத்துவர் யோசிக்க, மனதின் மூலையில் ஆயுசு நீட்டிப்பு மருந்து சஞ்சீவனி வைத்த சம்புடம் உருள்கிறது.

ஊருக்கெல்லாம் ஆயுள் வளர மருந்து கொடுத்தாயே உனக்குக் கொஞ்சம் வாயிலிட்டு விழுங்கினாயா? முன்னோர்கள் சொன்ன சொல் பொய்யாக இருக்க முடியாது. ஆயுள் நீட்டும் மருந்தென்றால் நீட்டாமல் இருக்காது. அறிவியலை சுக்கைத் தட்டிப் போட்டுக்கொண்டவுடன் குதத்தைத் தொட்டு நரகல் வந்துவிட்டதா எனச் சோதிப்பது நடக்குமா?

நடக்காது தான். ஆனால் உடலில் சின்னஞ்சிறு மாறுதலைக் கூட, அதுவும் தன்னுடலில் மாற்றம் வந்தால் உணர முடியாமல் போகுமா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன