கோழிக்கோட்டு சாமுத்ரியும் குறுமிளகும் – பெருநாவல் மிளகு சிறு பகுதி

பெருநாவல் மிளகு – சொல்வனம் இணைய இலக்கிய இதழில் இந்த வாரம்

இம்மானுவல் பெத்ரோவை இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல் தேசத்தின் தலைமை அரசப் பிரதிநிதியாக நியமித்து அரசராணை வந்து சேர்ந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அது சம்பந்தமான பரபரப்பு ஓய்ந்தபடியாக இல்லை.

அவரை சந்தித்துப் பேச, இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல்லில் இருந்து பல தரத்தில் உத்தியோக நிமித்தம் வந்திருக்கும் பிரமுகர்கள் நிறையப்பேர் ஹொன்னாவருக்கு வந்து போகிறார்கள்.

தில்லியில் முகல்-எ-ஆஸம் மொகலாய சக்கரவர்த்தி அக்பர் அரசவைக்கு போர்த்துகல் பிரதிநிதியாக உள்ள பால்தஸார் ட சில்வா முதல் திருவிதாங்கூர் அரச அவையில் லிஸ்பனிலிருந்து பங்குபெறும் ராஜ்ய பிரதிநிதி ஜோஸ் பிலிப்போஸ், கொச்சி பிரதிநிதி ஜியார்ஜ் புன்னோஸ் வரை வந்து காத்திருந்து சந்தித்து மரியாதை செய்து திரும்பப் போகிறார்கள்.

ஒவ்வொருவரும் இரண்டு வாரம், மூன்று வாரம் என்று நீண்ட நெடும்பயணமாக வந்து, உத்தர கன்னடப் பிரதேசத்தில் பெத்ரோவைக் சந்தித்து விட்டு, அரபிக்கடல் இந்தியப் பெருங்கடலோடும், வங்காள விரிகுடா சமுத்திரத்தோடும் ஒன்று கலக்கும் குமரித்துறை வந்து சேர்கிறார்கள். அங்கிருந்து புறப்பட்டு மதுரையும் ராமேஸ்வரமும் பார்த்து விட்டு

ஊர் திரும்புகிற திட்டத்தில் வந்து போகிறார்கள்.

தென்னிந்தியாவில் போர்த்துகீசியர்களின் இருப்பு வட இந்தியாவில் இருப்பதைவிட அதிகம்தான் என்பதால் இங்கே அவர்களுடைய சிநேகிதர்கள், உறவில் பட்டவர்கள் இப்படியானவர்களைச் சந்தித்துப் போகவும் இந்தப் பயணத்தை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பெத்ரோ வீட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் கொண்டு வந்து அன்பளிப்பாக பெத்ரோவுக்குத் தரப்பட்ட இனிப்புகளும், கலைப் பொருட்களும், உடுக்கவும், போர்த்திக் கொள்ளவுமான ஜரிகை சேர்த்த, பட்டும் பருத்தியும், சீன வெல்வெட்டுத் துணிகளுமாக நிறைந்திருக்கின்றன.

பெத்ரோவின் மனைவி மரியா போன மாதமே தாய் வீட்டிலிருந்து ஹொன்னாவர் திரும்பி வந்திருக்க வேண்டியது தாமதமாகி, வரும் மாதம் தான் வர இருக்கிறாள். பிறந்த குழந்தை அவளுடைய ஆரோக்கியத்தை சார்ந்திருப்பது தீவிரமாகத் தேவைப்படுவதால் தாயும் சேயும் இன்னும் மருத்துவர் கண்காணிப்பில் தான்.

ஈதிப்படி இருக்க, பதவி உயர்வு கிடைத்ததும் பெத்ரோ துரை மாதாகோவிலுக்குக் கூட வழிபடப் போகவில்லை. மிர்ஜான் கோட்டைக்குச் சென்று மிளகு ராணி சென்னபைரதேவியவர்களிடம் செய்தி பகிர்ந்து, மகாராணியின் வாழ்த்துகளைப் பெற்றுத் திரும்பினார். ஆனைத் தந்தத்தில் செய்த நீளமான படகும் படகோட்டிகளுமாக அற்புதமான சிற்பத்தை மிளகு ராணி அன்பளிப்பாக அளித்தது தன் மீது அவருடைய தனிப்பட்ட அன்பைக் காட்டியதாக நினைத்து நினைத்துப் பேருவகை அடைந்தார் பெத்ரோ.

”இந்துஸ்தானம் முழுமைக்குமான போர்த்துகீஸிய அரசப் பிரதிநிதி என்பது நல்ல பதவி தான்” சந்திப்பின் போது மகாராணி கூறினார். “இந்துஸ்தான் முழுவதும் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் சென்னா அடுத்து. அப்போது தான் இந்துஸ்தானை அறியப் பயணம் செய்ய பெத்ரோ திட்டமிட்டார்.

இந்திய நாடு முழுவதும் சிறிது சிறிதாகப் பயணம் போய் அங்கங்கே பேரரசர்களையும், சிற்றரசர்களையும் கண்டு பழகி நன்னம்பிக்கையும் நல்லிணக்கமும் தேடி வர முனைப்பாக இருக்கிறார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன