அபுல் கலாம் ஆசாத்தின் நாவல் ‘போலி’

அண்மையில் படித்த துறை சார்ந்த நாவல்களில் வித்தியாசமானது, நண்பர் அபுல் கலாம் ஆசாத் எழுதிய ‘போலி’ .

சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வில்லனாக, கதைப் போக்கின் படி கதாநாயகன், நாயகி, பெண்ணாக வேடமிட்ட கதாநாயகன் இப்படி சகலமானவர்களிடமும் உதை வாங்கும் அடியாளாக, மூன்றாம் மாடியிலிருந்து கீழே மோட்டார் பைக்கில் குதித்து (சரித்திரப் படத்தில் குதிரைமேல் குதித்து) ஓட்டிப் போகும் ஹீரோவின் டூப் ஆக உயிரைப் பணயம் வைத்து வெள்ளித்திரையில் தோன்றி மறையும் இந்த சண்டைக்கலைஞர்களின் அசாத்தியமான வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது.

அதை பின்புலமாகக் கொண்டு எழுந்த அபூர்வமான தமிழ் நாவல் போலி. நிஜத்தில் ஒரு கீற்று, கற்பனையில் ஒரு கீற்று என்று நேர்த்தியான அனுபவமும் பார்த்து, கேட்டு, பயின்று வந்த தொழில்திறனுமாக புனைவை முடைந்து போகிறார் நாவலாசிரியர் ஆசாத்.

’நான், தவுலத் கான் என்னும் தண்டர் தவுலத்’என்று கம்பீரமாகத் தொடங்கும் நாவல், சிலம்பப் பயிற்சியில் தவுலத் சிறப்பான திறமையோடு மிளிர்கிறது.

தவுலத்தின் சிலம்ப மற்றும் பொதுவான ஸ்டண்ட் அறிவு பற்றிக் கோடி காட்டும் ஒரு சிறு சித்தரிப்பு இது-

//
டெரன்ஸ் ஹில்லும் பட் ஸ்பென்ஸரும் நடித்த ‘ஐ ஆம் ஃபார் ஹிப்பொபொடாமஸ்’, ‘ட்ரினிட்டி இஸ் ஸ்டில் மை நேம்’, டீன் மார்ட்டின் நடித்த ‘த சைலன்ஸர்’ இப்படி சில படங்களைப் பார்த்தேன். பட் ஸ்பென்சர் ஒரே அடியில் எதிராளியை வீழ்த்தும் காட்சிகள் எனக்குப் பிடிக்கும். எம்.ஜி.ஆரின் அலங்காரமான சிலம்பக் காட்சிகளைத் தமிழ்த் திரையில் பார்த்துப் பயிற்சி பெற்று வளர்ந்திருந்தாலும் டெரன்ஸ் ஹில்லின் நகைச்சுவை கலந்த சிலம்ப அடிகள் பிடிக்கும்.
//

1980-களின் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் குறுவரலாறும் கூட இந்த நாவல். பக்கத்துக்குப் பக்கம் கதையோட்டத்தோடு கலந்து அந்தப் பழைய திரைப்படங்கள் பற்றியும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் குறித்தும் சுவாரசியமாகப் பேசிப் போகிறார் ஆசாத். ஜி, அது ஏன் பெண் ஸ்டண்ட் மாஸ்டர் யாரும் இல்லை?

சிலம்பம், செடிகுச்சி சிலம்பம், கராத்தே என்று தவுலத்தோடு நாமும் கம்பு சுழற்றியபடி நடக்கிறோம். ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் எம்.ஜி.ஆர் காட்டிய செடிகுச்சி ஆற்றலை இன்னொரு நடிகரை வைத்து இப்போதும் மறு உருவாக்க முடியாது’ என்று கதையோடு சொல்லும் ஆசாத், சரியா என்று கேட்க, ஆமா வாத்தியாரே என்கிறோம் ப்ரூஸ் லீயோடு.

ராத்திரியில் கதாநாயகனுக்காக அண்ணா சாலையில் மோட்டார் பைக் வேகமாக ஓட்டிப் போகும் டூப் ஆக தவுலத்தை அவன் தந்தை பார்த்து விடுவதில் கதை முக்கியத் திருப்பத்திலாகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் கனவுகளை ஏறக்கட்டி வைத்துவிட்டு சவுதிக்கு எலக்ட்ரீஷியனாக, குடும்பத்தைத் தாங்கி நடத்த தவுலத் அரபுநாடு போய் முப்பது வருடத்துக்கு மேலும் அவன் மனதில் ஸ்டண்ட் டூப் பசுமையாக இருக்கிறதை மெல்லிய நகைச்சுவையோடு சொல்லிப் போகிறது நாவல்.

தவுலத்தின் பார்வையில் சொல்லப்படும் போலி-யில் ஒவ்வொரு அத்தியாயமும் அடிமைப் பெண், தனிப்பிறவி என்று எம்.ஜி.ஆர் படங்களின் பெயர்கள். நடுவில் தவுலத்தின் அப்பா சொல்வதாக வரும் இரண்டு அத்தியாயங்கள் படிக்காத மேதை .. ஆமாம், சிவாஜி படப் பெயர் கொண்டவை. வாஹ் உஸ்தாத்!

சவுதி அரேபியாவில் காலடி வைத்தது முதல் போட்டுக் கொண்டிருப்பதுதான் முதல் டூப் என்ற சொற்றொடரைப் படித்து விட்டு நாவலை மூடி வைக்க, feeling of goodness ஏற்படுவது நிஜம்.

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருத் 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசையில் short listed அபுல் கலாம் ஆசாத்தின் இந்த நாவல் ‘போலி’யும் உண்டு
0

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன