காசா லே சா – இதுவும் அதுவும் உதுவும் மின்நூலில் இருந்து

இருபத்தைந்து பைச வரை இருக்கிற நாணயங்கள் டீ-மானிடைஸ் செய்யப்பட்டு, பணப்புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டதாக வெளியான செய்தி துக்ககரமானது.

 

ஓட்டைக் காலணாவைப் பார்த்த ஞாபகம் தேசலாக இருக்கிறது. சாளூரில் இருந்து வெள்ளரிக்காயும், பச்சைக் கத்திரிக்காயும் விற்க வருகிற அப்பத்தாக்கள் தாலியில் கோர்த்துப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதைத்தவிர அறுபதுகளில் அந்தக் காசுகளுக்கு ஒரு பயனும் இருந்ததாகத் தெரியவில்லை.

 

நிக்கல் காசு புழக்கத்தில் வந்ததும், அரசாங்கத்தில் அழகியல் ரசிகரான யாரோ அதிகாரி ரொம்ப யோசித்து குட்டியூண்டு சதுரமாக ஒரு பைசாவை உருவாக்கினார். ஊர் முழுக்க ஒரு பைசா புழங்கினாலும் அதற்கும் பிரயோஜனம் இருந்ததாக நினைவில்லை. தப்பு. இருந்தது.

 

காதி வஸ்திராலயத்தில் தக்ளி வாங்கினால் பதினாலு பைசா விலை. மதராஸ் சர்க்கார் வெளியிட்ட சிறிய சைஸ் பாரதியார் பாட்டு புத்தகமும் அதே பதினாலு பைசாதான் விலை. அரசாங்கமே பதினாலு பைசா வருமானத்துக்காக ஏழெட்டு பேருக்கு வேலையும் கதர்ச் சட்டை, வேட்டியும் கொடுத்து உட்கார்த்தின அந்தக் கதர்க் கடைகளில் பதினைந்து பைசா கொடுத்து பொருள் வாங்கும்போது நாம் மறந்தாலும் அவர்கள் ஞாபகமாக கல்லாவில் இருந்து ஒரு பைசா எடுத்துத் தருவார்கள்.

 

ரெண்டு பைசா வந்ததும் இருந்ததும் மறைந்ததும் கனவு போல் இருக்கிறது. வட்டமான செப்புக்காசு, கொஞ்சம் ராஜராஜசோழன் கால சாயலில் இருக்கும் என்று நினைவு மட்டும் இருக்கிறது. அதுக்கு சாதா ஐஸ் ப்ரூட் கிடைக்கும். அழுக்கான வண்டியில் வைத்து வியர்த்து வடிந்து தள்ளிக் கொண்டு வருகிற ஐஸ்காரர் இப்படி இரண்டு இரண்டு பைசாவாக வருமானம் சேர்த்து என்ன மாதிரி வாழ்க்கை நடத்தியிருப்பார்?

 

மூன்று பைசா நிக்கல் காசு ஒரு புரட்சிக்கு வித்திட்டது. புனல் வாதத்தில் ஓம் நமசிவாயா என்று எழுதின சுவடி வைகை தண்ணீரில் மிதக்க சமணர்களின் ‘அஸ்தி நாஸ்தி’ சுவடி அடித்துப் போனதாக ஒரு டைப் பக்தி பிளஸ் வரலாறு பள்ளிக் கூடங்களிலேயே சொல்லிக் கொடுத்த காலத்தில் கனமான பொருட்கள் கூட மிதக்கும் என்ற நம்பிக்கையைப் பரவலாக்க மூன்று பைசா நாணயம்தான் வெகுவாக பயன்பட்டது.

 

நடுவிரலில் பாந்தமாக உட்கார்த்தி, கிண்ணத்தில் பூத்தாற்போல் விட, அந்தக் காசு மிதக்கிற அழகே தனி. தேர்த் திருவிழாக் கடை சர்பத் வாங்க அந்த மூன்று பைசா போதும். யார் வாங்கிக் குடித்துவிட்டுப் போனாலும் கொடுத்த காசு அடுத்த நிமிஷம் அலுமினிய பேசின் தண்ணீரில் குஷியாக மிதக்க ஆரம்பித்து விடும்.

 

ஐந்து பைசா அதிகம் தட்டுப்பட்ட காசு.  வேகாத வெய்யிலில் பள்ளிக்கூடத்தில் எங்கள் ஏழு-சி வகுப்பு பானையை நிரப்பப் பக்கத்து செட்டியூரணியில் இருந்து தண்ணீர் சுமந்து வந்து ஊற்றிப் போகும் காது வளர்த்த அம்மாவுக்கு ஐந்து பைசா தான் தினசரி கிளாஸ் ஃபண்டில் இருந்து எடுத்துக் கொடுத்து செலவுக் கணக்கு எழுதப்படும். அந்தம்மா தினசரி பத்து வகுப்புக்குத் தண்ணீர் சுமந்து வந்து ஊற்றுகிறவள். தினசரி ஐம்பது பைசா வருமானத்தில் ஐஸ்காரரை விட கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது வசதியாக இருந்திருப்பாளோ.

 

பத்து பைசா கொஞ்சம் கவுரவமான காசு. பாக்கெட்டில் வைத்து காணாமல் போனால், அலைச்சலைப் பொருட்படுத்தாமல் ஒரு நடை வந்த வழியே திரும்பி நடந்து தேட வைக்கக் கூடியது. பத்து பைசாவுக்கு ஒரு நாட்டு வாழைப்பழம் வாங்கலாம். சென்னைப் பக்கம் வாழக்கா பழம் என்று சொல்கிறது இது. பத்து பைசா ரெண்டு கொடுத்தால் ஆனந்த பவானில் இட்லி கிடைக்கும்.  தவிர சந்தைக் கடையில் அட்டை முழுக்க ஒட்டி வைத்த பாக்கெட்களை ஒரு பாக்கெட் பத்து பைசா கொடுத்துக் கிழித்தால் பம்பர் பிரைசாக ஐந்து முழு ரூபாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதென்னமோ பத்து பைசா அலுமினிய டம்ளரோடு தான் நினைவில் வருகிறது. அந்த டம்ளர் கூட பத்து பைசா லாட்டரி பரிசுதான்.

 

இருபது பைசா வந்தபோது அது உடனே காணாமல் போனது. செப்பில் அடித்த காசு என்பதே காரணம். வாங்கியவர்கள் உருக்கிச் சேர்க்க ஆரம்பித்தார்கள். பின்னால் அது நிக்கல் ஆனபோது சீந்துவாரற்றுப் போய்விட்டது. எந்தக் காசோடும் சேராமல் தனியாகவே இருந்து தனியாகவே போய்ச் சேர்கிற காசு இது.

 

கால் ரூபாய், நாலு அணா என்றெல்லாம் வீட்டிலும் வெளியிலும் பெரிசுகள் அறிமுகப்படுத்திய இருபத்தைந்து நயாபைசா முக்கியமான துட்டு. எதை எடுத்தாலும் இருபத்தைந்து பைசா வண்டியில் விற்கிற ரப்பர் பந்து, பாரீஸ் தேங்காய் சாக்லெட், தொண்டைக் கட்டுக்கு பெப்ஸ் மாத்திரை, மலச்சிக்கலுக்கு பர்கோலாக்ஸ், வைடமின் பி மாத்திரை, ராயர் கடை பஜ்ஜி, பள்ளிக்கூட மேஜிக் ஷோ டிக்கட், பழைய சினிமா பாட்டுப் புத்தகம், நடராஜ் பென்சில், இங்க் பில்லர், வெற்றிலை பாக்கு இப்படி இருபத்தைந்து பைசாவுக்கு ஏகப்பட்டது கிடைத்தது.

 

இருபத்தைந்து பைசா தோழர் காசி கடையில் கொடுத்தால் தமிழ்வாணனின் கல்கண்டு வாரப் பத்திரிகை கிடைக்கும்.

 

காலணா நான்பார்த்தே கால்நூறு ஆண்டுதண்ணீர்

மேல்மிதந்த மூணுபைசா ஞாபகம் – போலொருநாள்

நாலணா போனவழி நாடு மறந்துவிடும்

காலமெலாம் காசாலே சா

 

 

இரா.முருகன் 04/06/2011

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன