பெருநாவல் மிளகு – இருமை கரைந்து வரும் ஒருமை

புரவி கலை இலக்கிய இதழ் மே 2022- இரா.முருகன் நேர்காணலில் இருந்து (நேர் கண்டவர் – காளிப்ரசாத்)

கேள்வி
வணிகமும் சமணமும் கலந்த ஒரு முரணாக ஒரு இழையை காட்சியமைக்கிறீர்கள்.. இது ஒருபக்கம் பொருள் ஈட்டும் பற்று மறுபக்கம் துறக்கும் திகம்பரம் என சமணத்தின் இரு பிரிவுகளை கூறுகிறது. சமண பஸதிக்குள் புத்திர பாசத்தில் சென்று விழும் பரமன் என இந்த duality பாத்திரங்கள் வரை நீளுகிறது. சமணம் மீதான உங்களுடைய பார்வைகளை கூற இயலுமா..? அது குறித்து எழுதும் எண்ணம் உள்ளதா?

இரா.முருகன்
இந்தக் கதை நிகழும் காலத்தில் சமணம் தன் தனி அடையாளத்தைப் பெரும்பாலும் தொலைத்து வைதீக இந்து மதத்தில் கலந்து கரைந்து கொண்டிருந்தது.

சென்னபைரதேவி சதுர்முக பசதி கட்டிய அதே சுறுசுறுப்போடு கோகர்ணம் சிவன் கோவிலில் திருப்பணி செய்கிறார். இது வரலாறு.

நாவலில் சென்னாவின் தத்தெடுத்த புத்திரனாக வரும் நேமிநாதன் இந்த இருமை கரைந்துவரும் ஒருமை மத நம்பிக்கை சார்ந்து கெலதியில் சிவன் கோவிலில் வழிபடுகிறான். வரலாறு அடிப்படையான புனைவில் சென்னபைரதேவி சிவராத்திரியன்று கெருஸொப்பா சிவன்கோவிலில் வழிபாடு செய்யப் போகிறாள் – சமண மதத்தவள் ஆக இருந்தாலும். இது இயல்பாக கதையிலும் வரலாற்றிலும் நடந்த நிகழ்வு.

நேமிநாதன் கதாபாத்திரம் போர்த்துகீசிய கார்டெல் வணிகக் குழு யோசனைப்படி சிவன் கோவிலில் வெடியை விட்டெறியவும் அதே போல் சமண பசதியில் மாமிசத் துண்டை எறியவும் நடந்த சதியின் பின்னணியில் இருக்கிறான். அதுவரை இல்லாததாக, இந்த இரு மதங்களுக்கு நடுவே பரஸ்பர நம்பிக்கை குறைந்து ஒருவரை மற்றவர் சந்தேகப்படும் சூழல் அங்கே உருவாகிறது. மதம் தொடர்பான வன்முறையின் மோசமான அம்சம் வன்முறையைத் தூண்டி விடுவது.

அப்படிச் செய்கிறவர்களை அடையாளம் காண்பது கடினம். மக்களே போல்வர் அக்கயவர். இந்த நிலை சீர்படுமா? மானுடத்தில் நம்பிக்கை வைக்கும் இலக்கியமும், கலைவெளிப்பாடுகளும் அதற்கான நம்பிக்கை தருமா? காலம் தான் சொல்ல வேண்டும்.

சமணம் பற்றி நாவலில் சென்னபைரதேவி உரத்த சிந்தனையாகவும் அப்பக்கா தேவியோடான உரையாடலிலும் சொல்வதுதான் என் நோக்கும். நான் பேச வைத்தபடிதானே அவர்கள் பேசுவார்கள்.

மகாத்மா காந்தியின் அஹிம்சை சமணத்திலிருந்து கால்கொண்டது. பெண்ணுக்கு சுவர்க்கம் கிட்டாது, அவள் ஆணாக மறுபடி பிறந்தே சுவர்க்கம் புக நோற்க வேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகளை கடந்து அஹிம்சையை, புலால் மறுப்பை, கள்ளுண்ணாமையை ஆயிரம் ஆண்டாக பாரத பொதுமனப்பாங்கில் ஏற்படுத்தியிருப்பது சமணம். மகாத்மா காந்தியின் வாக்கால், வாழ்க்கையால் மறு உறுதி செய்யப்பட்டது இவை அனைத்தும்.

பரமன் சுழலும் சதுர்முக பசதிக்குள் நுழைவது ஒரு இலக்கிய உத்திதான். வாசகருக்கு நாவலோட்டத்தில் பழக்கமான பசதியை காலத்தில் முன்னும் பின்னும் சென்று வரும் உத்திக்கான கருவியாகப் பயன்படுத்த நாவலில் வருகிறது அது. மற்றப்படி சுழலும் கட்டிடங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன