From The Novel MILAGU – கவுடின்ஹோ பிரபுவும், விக்ஞான உபாத்தியாயரும், பேய் மிளகும்

இருட்டுகிற வரை கவுட்டின்ஹோ பிரபு எழுந்திருக்கவில்லை.  சுற்றி பேய் மிளகுக் கொடி பந்தலித்து அவர் கால்களை முழுக்கச் சூழ்ந்திருந்தது. பின்னால் இருந்து அது நீண்டு அவர் தலையைச் சுற்றிப் படர்ந்து இறுக்கத் தொடங்கியிருந்தது.

வேலைக் காரர்கள், தோட்டக்காரன், சமையல்காரன், வீட்டு நிர்வாகி என்று எல்லோரையும் இன்று வரவேண்டாம் என்று சொல்லியிருந்ததால் அவருக்கு என்ன ஆனது என்று பார்க்க, தேவையானால் வேண்டிய உதவி செய்ய என்று கூட அடிப்படை கவனத்தை ஈயவும் யாருமே இல்லாமல்  போனார்கள்.

அவரும் விக்ஞான உபாத்தியாயர் ராயப்பரும் மிளகுக்கொடியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரகசியமான நாள் அது. மிளகு சாகுபடியை மேம்படுத்துவது, குறுகிய கால ஊடுபயிராக மிளகு உற்பத்தி செய்வது,  அதிக திடமும்,  கனமும், வாசனையும், நீண்ட நாள் கெடாததுமாக மிளகின் தன்மையை மேம்படுத்துவது, இதெல்லாம் அல்லது இதில் யாதானும் ஒன்று நோக்கமாகக் கொண்டு நல்ல சிந்தையோடு கவுட்டின்ஹோ பிரபு விக்ஞான உபாத்தியாயாரைக் கூட வைத்துக் கொண்டு நடத்தும் ஆராய்ச்சி அதென்று கருதினால் பெருந் தவறாகும் அது.

மிளகு பயிர்பண்ணி சிறு கொடியாக வளர்ந்த பருவத்தில், கப்பலில் பயணம் போகும் பிரயாணி பத்திரமாக எடுத்துப்போய், ஒரு மாதம் கடலில் பயணப்பட்டு, போகுமிடம் போய்ச் சேர்ந்ததும் சேர்ந்த இடத்தில் அந்த மிளகுக் கொடியை ஊன்றி வைத்தால், உடனே பல்கிப் பெருக ஆற்றல் உள்ள மிளகை உருவாக்குவதே கவுட்டின்ஹோ பிரபுவின் தேடலாகும்.

விக்ஞான உபாத்தியாயருக்கு இனிப்பு லட்டுருண்டை தின்கிறது போல் ரொம்பவே பிடித்துப்போன ஆராய்ச்சி இது. அவருக்கு வயது எழுபதாகி, மறதி நிறைய ஏற்பட்டு, நடுராத்திரி தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டு வாசல் திண்ணையில் நின்று பாடம் நடத்துவதாகக் கேள்வி.

அது இல்லாமல் நாள் பூரா கவுட்டின்ஹோ பிரபு ஆக்ஞைப்படி அரைத்து, கரைத்து, கொட்டி, கிளறி, வேகவைத்து, வறுத்து, பொடித்து, கலக்கி, வடிகட்ட என்று நாள் முழுக்க விக்ஞான உபாத்தியாயருக்கு வேலை தருவதால் உபாத்தியாயர் பிரபு மேல் மதிப்பு கொண்டுள்ளார் என்பது சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஆய்வுகளுக்கு விக்ஞான உபாத்தியாயருக்கு மாதத்துக்கு பத்து வராகன் கவுரவ உழைப்புக்காக பிரபு தருகிறார் என்பது சந்தோஷமான விஷயம்.

இன்றைக்கு அபூர்வமானதான பேய் மிளகு என்ற வகை மிளகுக்கொடி ஆய்வுக்குக் கிடைத்தது பிரபுவுக்கு. காலையிலேயே பிரபு, உபாத்தியாயர் இருவரும் ஒரு குடுவை நிறைய மூத்திரம் பெய்து முகத்தில் துணி கட்டிக்கொண்டு அதைக் காய்ச்சினார்கள். அதில் வந்த உப்பை ஜாக்கிரதையாகச் சேமித்துக் கொண்டார்கள் அடுத்து.

வீட்டுக்குள் கழிப்பறை வாடை ஜாஸ்தியாக வந்ததால் மட்டிப்பால் ஊதுபத்திகளையும் சாம்பிராணியையும் கொளுத்தி வீடு முழுக்க நல்ல வாடை வர வைத்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன