புது நாவல் ‘மிளகு’ – 1960இல் இருந்து 1596க்கு

பரமன் என்ற பரமேஸ்வரன் 1960-இல் நாக்பூர் சிறு விமானத் தளத்தில் சொல்லாமல் விமானம் விட்டு இறங்கித் திரிந்தபோது நான்குவாயில் மண்டபம் வழியே 1595-ம் ஆண்டு உத்தர கன்னடப் பிரதேசத்தில் ஜெர்ஸோப்பா நகர் போய்ச் சேருகிறான். மிளகு ராணி காலம் அது.
———————————
கண்ணில் முன்னால் பட்ட வாசல் பக்கம் போய் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக நின்றார் பரமன். அப்போதுதான் கவனித்தார். அந்தக் கட்டடமே ஏதோ அச்சில் சுழல்கிறது போல மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது.

இந்தக் காட்டில் கட்டிடம் கட்டிப் புழங்க விடுகிறவர்களுக்குக்கூட கட்டிடக் கலையிலும், சுழலும் மண்டபங்களிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, தாங்கு கட்டைகள் மேல் உறுதியாகக் கால் ஊன்றி நின்று கதவு அடுத்துத் தான் இருக்கும் இடத்தைக் கடக்கக் காத்திருந்தார் பரமன். வாழ்க்கையே இப்படி விளையாட்டும் விநோதமுமாக ஆகியிருந்தால் எல்லாவற்றையும் மறந்து விட்டு சுழலும் கட்டிடத்தோடு ஓடிக் கொண்டிருக்க ஆசை. தாங்கு கோல்கள்?

அடுத்த கதவு பக்கத்தில் வர, திறந்து உள்ளே நடக்க, ஒரு வினாடியில் தலை குப்புற விழுந்தார் பரமன். எழுந்த போது கட்டைகளைக் காணோம். மண்டபத்தையும் காணோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை அப்பியிருந்த நிலம் கண்ணைக் கொள்ளை கொண்டது. பரமன் கவனித்தார். தாங்குகட்டைகள் இல்லாமல் அவர் கால்கள் சுபாவமாக இருப்பதுபோல் முழுமையாக இருந்தன. தோளில் மாட்டிய பை அப்படியே தான் இருந்தது. எங்கே வந்திருக்கிறார் அவர்? தில்லி பம்பாய் விமானம் எங்கே போனது?

ஹோ என்று சத்தமிட்டார் பரமன். யாரும் ஏற்று வாங்கிப் பதில் சொல்லவில்லை. தலைக்கு மேல் சத்தம். தலை தூக்கிப் பார்த்தார். பெரிய கழுகு ஒன்று தோளில் அவர் மாட்டியிருக்கும் பையைக் குறிபார்த்துச் சுற்றிச் சுற்றி வந்து நேரே இறங்குகிறதுபோல் பாவனை செய்தது. அந்தப் பையில் அதற்கான பொருள் என்று என்ன இருக்கிறது? கருப்பு கலரில் ஒரு பேண்ட், இரண்டு அரைக்கை சட்டைகள், கடலை உருண்டை பாக்கெட் ஒன்று, பர்ஸில் நூற்று இருபத்தைந்து ரூபாய் பணம், விக்ஸ் இன்ஹேலர், ஃப்ளைட்டில் கொடுத்த நான்கு ஸ்லைஸ் ரொட்டி, ஜாம் சின்ன ஜாடியில் அவ்வளவுதான் நினைவு வருகிறது. கடலை உருண்டையோ ரொட்டியோ கழுகு சாப்பிடுகிற உணவு இல்லை. பேண்ட் சட்டை அதற்கெதுக்கு? வாச்சி வாச்சியாகப் பல் இருக்கற பெரிய சைஸ் சீப்பு ஒன்று மாடுங்காவில் ஸ்டேஷன் பக்கத்தில் வாங்கியது கூட உள்ளே வைத்திருக்கும் நினைவு. பரமேஸ்வரனுக்குத்தான் படியாத தலைமுடி, பெப்பரப்பே என்று சிலும்பி நிற்கிற அதை தலையில் படிய வைத்து வாரி ஒதுக்கி நிறுத்த அந்தப் பிரம்மாண்டமான சீப்பை வாங்கி இதுவரை ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை. அதோடு பெட்டியில் வைத்திருந்து பரிசோதனையின்போது கீழே போட்ட ரேசர், ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப், டூத்பேஸ்ட், டூத் ப்ரஷ் எல்லாம் ஒரு பாலிதீன் பேப்பர் பையில் வைத்து இருக்கிறது. பெட்டி விமானத்தோடு போய்விட்டது. அதில் முக்கியமாக ஒன்றும் இல்லை; பெட்டியில்லாமல் வாழ முடியும். பை வேணும்.

கால் தானே சரியாகி விட்ட சந்தோஷம் பரமனை ஓடச் சொன்னது. ஓடினார். நெல்லோ வேறே பயிரோ செழித்து வளர்ந்திருந்த நிலப்பரப்பில் வரப்புகளில் காலூன்றி அவர் மெல்ல ஓடினார் முதலில். அடுத்து வேகத்தை அதிகமாக்கினார். கால்கள் வேறு யாருடையதோ என்பது போல் ஓடின. நிற்கிற இடத்திலேயே குதித்தார். முழு பலமும் பரந்த பரப்பில் ஊன்றி நிற்க வகை செய்து கால்கள் உயர்ந்து மீண்டும் கீழே இறங்கின. கனவில்லை. நிஜம்

மூச்சு வாங்க ஏஏஏஏஏய் என்று யாரையோ கூப்பிட்டார். யாரும் எதிர்ப்பட்டால் கால் முளைத்த கதையைச் சொல்லலாம். பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று. மணிக்கட்டில் கடியாரம் இருக்கிறதா என நோக்கினார். பிற்பகல் ஒரு மணி. எங்கே ஒரு மணி? அவருக்குக் குழப்பமாக இருந்தது.

பச்சைத் தாவரப் போர்வை போர்த்திய நிலம் ஒரு திருப்பத்தில் பாதை ஒன்றைச் சேர்ந்தது. பெரிய வீதிதான். முழுக்க சன்னமான கப்பி அடித்துப் போட்டிருந்த வீதி. தார் பூசிய, சிமெண்ட்டால் முழுக்க இட்ட தெரு இல்லை அது.

வீதியில் போகும் வாகனம் எதையும் கைகாட்டி நிறுத்தி வழி கேட்டால் என்ன. தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனம் நிற்கும் என்று பட்டது. அது அருகில் வந்தபோது குதிரைகள் இரண்டு பூட்டிய சாரட் என்று புலப்பட்டது. பரவாயில்லை, வேகமாக நகரும் ஏதோ ஒரு வண்டி. வலதுகை ஆள்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்திக் காட்டியபடி நின்றார் பரமன்.

தடக்கென்று குதிரைகள் வேகம் மட்டுப்படுத்தி அருகில் நின்று கால் அசைக்க, ஓட்டி வந்தவன் அவசரமாகக் கீழே குதித்தான். புராண நாடகத்தில் வாகனம் ஓட்டுகிறவனாக வரும் நடிகன் போல் ஒப்பனை செய்திருந்தான் அவன்.

சகோதரா, நாக்பூர் விமான நிலையத்துக்கு எப்படிப் போகணும்? இதைத்தான் பரமன் கேட்டார். திடுக்கிட்டது போல், வியப்படைந்தவனாக நின்று கேள்வியையே திரும்பச் சொன்னான். சாரட்டின் ஜன்னல் ஒன்று திறக்க பருமனாக உள்ளே அமர்ந்திருந்தவன் வாயில் வெற்றிலை அரைபட, என்ன ஆச்சு என்று தலையை உயர்த்தி ஆட்டி கேட்பதாக பாவனை செய்தான்.

நாக்பூர் ஏர்போர்ட். மை டியர் ப்ரண்ட். குட் யூ ப்ளீஸ் டைரக்ட் மி? நல்ல பிபிசி உச்சரிப்பில் ஆங்கிலத்தில் வினவினார் பரமன். அவன் முகம் ஆச்சரியத்தைச் சொல்ல சாரட்டில் இருந்து கீழே குதித்தான். போச்சு, புராண, சரித்திர நாடகத்துக்கு பெரும் தனவந்தராக வேடம் போட்டு நடிக்கிற நடிகனாக அவன் தோன்றினான்.

சாரட்டின் ஜன்னல் பக்கம் உள்ளே யாரோ பெண் வண்டிக்குள்ளிருந்து வந்து நோக்கினாள். அவள் பார்வையை பரமன் மறக்க முடியாது. வண்டிக்குள் இருந்து நிற்பவர்களிடம் ஏதோ சொல்லி பரமனையும் விழுங்கி விடுவது போல் பார்த்தாள் அவள். எழுபது வயதுக் கிழவனிடம் அப்படி என்ன பொலிவு கண்டாள் ? பெருவணிகன் பரமனை சாரட்டில் ஏறச் சொல்லிக் கை காட்டினான்.

அந்தப் பெண் புன்முறுவல் பூத்தது மிக்க அழகாக இருந்தது. ஒப்பனை இல்லாத அழகிய முகம் அது. சாரட்டில் பக்கவாட்டுக் கதவில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தபடி பரமன் கைப்பை சுமந்தபடி சாரட்டில் ஏற, கண்ணாடியில் தெரிந்தது பரமனில்லை. இளைஞன். 1920களில் பரமன் அப்படித்தான் இருந்தார். கதர்ச் சட்டையும் மூக்குக் கண்ணாடியுமாக அச்சு அசல் அப்படித்தான் இருந்தார். இருபதுகளுக்கு மறுபடி போனதுபோல் அவருக்குத் தோன்றியது. ஆனால் இவர்கள்?

சதுர்முகபஸதி (சதுர்முகவசதி கட்டிடம் – கர்க்கலா)
படம் நன்றி விக்கிபீடியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன