வாழ்ந்து போதீரே நாவலில் ஒரு மதுரைக் காட்சி – 1960களில்

இது டவுண்ஹால் வீதி.நேரே நடந்து போனா ஆவணி மூல வீதி. அது மேலக் கோபுரத்துக்கு கொண்டு போய் விடும். மிஞ்சிப் போனா பத்து நிமிஷம். தெரு வேடிக்கை பூரா பார்த்துக்கிட்டு போங்க. கேமரா உண்டுதானே?

நல்ல யோசனை தான். நடக்கத் தலைப்பட்டாள் கொச்சு தெரிசா. காமிராவை எடுத்து வந்து போகிற இடம் எல்லாம் படம் பிடிக்கும் சுற்றுப் பயணிகளுக்கான ஆவலும் ஆர்வமும் போன இடம் தெரியவில்லை. சொந்த ஊரில், சொந்த வீட்டில் மூலை முடுக்கெல்லாம் படம் எடுத்து வைத்துக் கொள்வார்களா என்ன? யாருக்குக் கொண்டு போய்க் காட்ட அதெல்லாம் வேண்டியிருக்கிறது?

கடை வாசல்களைக் கூட வீட்டு வாசல்கள் போல், கரிசனத்தோடு கூட்டிப் பெருக்கி, குளிரக் குளிரத் தண்ணீர் எடுத்து விசிறித் தெளிப்பதும், நீர் நனைத்த படிகளில் நேர்த்தியாகக் கோலம் போடுகிறதும் கண்ணில் பட கேமிராவை எடுத்து வந்திருக்கலாமே என்று தோன்றியது கொச்சு தெரிசாவுக்கு. படம் எடுத்து எதற்கு வேற்று மனுஷர்களுக்குக் காட்டி ஆனந்தப்பட வேணும்? தானே பார்த்து மகிழலாமே.

இன்னும் திறக்காத கடை வாசலில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பவரை எப்படியோ கொச்சு தெரிசா அறிவாள். தேஜா உ தானா என்றால் தெரியாது. இந்தக் கடைத் தெருவும், வாசல் தெளிக்கும் பெண்கள் இழுத்து வார்த்தைகளை நீட்டிப் பேசும் குரலும், புல்லாங்குழலும், மண்ணில் நீர் பட்டு எழும் வாசமும் எல்லாம் அவளுக்கு ஏற்கனவே அறிமுகமானவை. எங்கே?

மேலக் கோபுர வாசலில் மணக்க மணக்க அல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்த இளம்பெண் கொச்சு தெரிசாவைப் பார்த்தாள். ஒரு வினாடி பூத்தொடுப்பதை நிறுத்தி இன்னொரு பூவாக மலர்ந்து சிரித்தாள் அவள்.

அக்கா, பூ வாங்கி வச்சுட்டுப் போங்க. மனசுக்கு நிறைவா மனோரஞ்சிதம் இது.

கொச்சு தெரிசா பூ வாங்கினாள்.

இதைக் கையிலேயே வைத்துக் கொண்டு கோவிலுக்குப் போய் அப்புறம் கண்காணாத இடத்தில் போட்டு விடலாம் என்று நினைப்பு. கண்ணில் தட்டுப் படுகிற பெண்கள் எல்லோரும் தலையில் பூச்சூட்டி இருக்கிறார்கள். இந்த மிதமிஞ்சிய வாசனையோடு நடக்க முடியுமா, சுவாசித்துக் கொண்டிருக்க முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை.

கைப்பையில் கைவிட்டுத் தேட, மூன்று பத்து ரூபாய் தாள்கள், கிட்டத்தட்ட பத்திரிகையை எட்டாக மடித்த வடிவத்தில் பெரிசு பெரிசாகத் தட்டுப் பட்டன.

இது போதுமா இருந்துதுன்னா வச்சுக்கோ. இன்னும் வேணும்னா சொல்லு.

பூத்தொடுக்கும் பெண்ணிடம் சொல்ல, அவள் செல்லமாக கொச்சு தெரிசாவைக் கோபிக்கிறவளாக உதட்டைச் சுழித்தபடி அவளையே பார்த்தாள். அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு கூடப் பிறந்தவள் போல, உயிர்த் தோழி போல கொண்டாட வேண்டும் என்று கொச்சு தெரிசாவுக்குத் தோன்றியது.

அக்கா, இந்தப் பூவுக்கு நீங்க கொடுக்கற காசு நான் விலை வைச்சு விக்கறதை விட ரொம்ப ரொம்ப அதிகம். இவ்வளவு எல்லாம் கொடுத்து என்னைக் கெடுத்திடாதீங்க நாச்சியா. ரெண்டு ரூபா கொடுங்க, போதும் மகராசி.

அவள் இரண்டு விரலை நீட்டியதைப் புரிந்து கொண்டு இன்னும் இரண்டு பத்து ரூபாய் நீட்டினாள் கொச்சு தெரிசா. பூக்காரிப் பெண் டூ ரூபீஸ் டூ ருபீஸ் என நினைவு வந்த இங்கிலீஷில் தடுமாற, இது கொச்சு தெரிசா சிரிக்கும் வேளை.

அந்தப் பெண் எழுந்து நின்று கொச்சு தெரிசாவை அருகில் கூப்பிட்டாள்.

அக்கா பெயர் என்ன?

கொச்சு தெரிசா.

நான் மீனு. மீனம்மா.

மீனு கொச்சு தெரிசாவைத் திரும்பி நிற்கச் சொல்லி விட்டு அவள் கூந்தலில் பாந்தமாக அவள் வாங்கிய பூவைச் சூட்டி விட்டாள்.

உங்க தலைமுடிக்கு இன்னும் கூட வைக்கலாம். கதம்பம் ஜோரா இருக்கும். இருங்க அக்கா.

அவளாகப் பரிசாகக் கொடுப்பதையும் கொச்சு தெரிசாவுக்கு வைத்து விட்டாள்.

விழுந்துடாம நடப்பீங்களா அக்கா? நீங்க இல்லே, பூவு.

ரொம்பப் புரிந்தது போல் தலையாட்டினாள் கொச்சு தெரிசா.

எங்கே, சொன்னா மட்டும் ஆச்சா, விழுந்துடும் இதெல்லாம். எதுக்கு வம்பு? யக்கா, நில்லுங்க.

அந்தப் பெண் வில்லில் அம்பு எய்வது போல் அபிநயித்து தன் தலையில் வைத்திருந்த ஹேர்பின் இரண்டை உருவி எடுத்து கொச்சு தெரிசா தலைக்கு இடம் மாற்றினாள்.

கொச்சு தெரிசாவுக்கு குளிப்பாட்டித் தலை துடைத்து விட்ட தீபஜோதிப் பாட்டித் தள்ளை நினைவு வந்து நீங்கிப் போனாள்.

இந்த ஹேர்பின்னுக்கு காசு? கொச்சு தெரிசா மென்று விழுங்கினாள். பூக்காரி அவளை வேடிக்கையாகப் பார்த்தாள். அவள் பின்னலைப் பிடித்து இழுத்து விட்டுச் சொன்னாள் –

இப்போ அம்சமா இருக்கு அக்கா.

கொச்சு தெரிசா தேங்க்ஸ் சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினாள்.

நில்லுங்க. நில்லுங்க.

அவசரமாகக் குனிந்து புது ரோஜாப் பூ ஒன்றையும் பூத்தட்டில் இருந்து எடுத்து அவள் காதோரம் சாய்வாகச் செருகி, தான் செய்த அலங்காரத்தைத் தானே ரசித்துச் சிரித்துத் தலையாட்டினாள் பூக்காரிப் பெண். கொச்சு தெரிசா கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சொல்லி அவள் வழி அனுப்பியது –

கோவிலுக்குப் போய்ட்டு வரும்போது ஞாபகமா ஹேர்பின்னை கொடுத்துடணும் அக்கா. ஒன்ணொண்ணும் ஒரு கோடியே அம்பதாயிரம் ரூபாய் விலை.

விடிகாலையில் பூவும் நாருமாகத் தட்டில் போட்டுக் கொண்டு தெரு ஓரத்தில் பூக்காரி ஒருத்தி சிரித்துக் கொண்டிருப்பதை உள்ளூரோ, வெளியூரோ, கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்த ஒருத்தர் விடாமல் ரசித்தபடி போனார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன