லண்டன் டயரி – நூலில் இருந்து

என் ‘லண்டன் டயரி’ பயண நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம், Stall F 7, Chennai Book Fair 2021 )
வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லா கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில்.

கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஒரு இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய இசை வாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் சுவரில் ‘இங்கே பஸ்கிங்க் busking அனுமதிக்கப் பட்டுள்ளது’ என்று எழுதியிருப்பது கண்ணில் படுகிறது. ரயில் நிலையத்தில் இப்படி வாத்தியம் வாசித்து துண்டு விரித்துக் காசு சம்பாதிக்க (இதற்குப் பெயர்தான் பஸ்கிங்க்) லண்டன் மாநகராட்சி ஏற்படுத்திய தடை சமீபத்தில் நீங்கியதால், ரயில்வே ஸ்டேஷன்களில் அங்கங்கே இசைமழை. துண்டு விரிப்பில் காசு போட்டுவிட்டு “என்ன வாசிக்கிறீங்க?” என்கிறேன். ரிச்சர்ட் வாக்னர் எழுதிய இசை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்கிறார். அடுத்து இடத்தைப் பிடிக்கத் தயாராக ஒரு ஆப்பிரிக்கக் கூட்டம் முரசுகளோடு நிற்கிறது.

ரயில் நிலையக் கழிவறையில் நுழைய ஐம்பது பென்ஸ் கட்டணம். ஒன் பாத்ரூம் போக நாற்பத்தைந்து ரூபாயா? “பக்கத்திலே செடிகொடி இருக்காமலா போயிடும்?” தோளைக் குலுக்கிக் கொண்டு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் வெளிநடப்புச் செய்கிறார்கள். உள்ளே காசைக் கொடுத்துவிட்டுக் கனவான்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள். “குப்தாஜி, இஸ் மே ஸரா பானி ..” அடைத்த கதவுக்குப் பின்னால் இருந்து யாரோ காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டிலை வெளியே நீட்ட, வெளியெ நிற்கும் குப்தாஜி காகிதத்தை உபயோகிக்கச் சொல்லி இந்தியில் மன்றாடுகிறார். உள்ளே இருந்து இன்னும் அதிகாரமும் அவசரமுமாக குப்தாஜி மிரட்டப்பட, காலிபாட்டிலோடு தண்ணீர் பிடிக்க ஓடுகிறார் அவர். இனிமேல் இந்த பிராண்ட் மினரல் வாட்டர் வாங்கப் போவதில்லை என்று தீர்மானித்தபடி ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறேன்.

பாதாள ரயில் பாதையின் இருட்டைப் பார்த்துப் பழகிய கண்ணுக்கு, ஸ்டேஷனுக்கு வெளியே கண்ணைக் குத்தும் காலை வெய்யில் இதமாக இருக்கிறது. இங்கிலாந்தின் பரபரப்பான சரித்திரம் தொடர்ந்து நிகழ்கிற பெரிய வெட்டவெளி மேடையாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பிரதேசம், வெய்யில் காய்ந்தபடி சோம்பலோடு கொட்டாவி விட்டுக்கொண்டு நிற்கிறது.

மூடியிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தின் வாசலில் நூற்றுச் சொச்சம் வயதானவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து ஒரு கடமையை நிறைவேற்றுகிறது போல் நிதானமாகச் சாக்லெட் க்ரீம் வடியும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பின்னால், வெஸ்ட்மின்ஸ்டர் கல்லறைகள். மூச்சுவிட மறந்துபோன வி.ஐ.பிகளால் அந்த இடம் நிறைந்து கிடக்கிறது. பெரிய சைஸ் சதுரங்கப் பலகைகளிலிருந்து வாரியெடுத்துக் கிடத்திப் படுக்க வைத்தது மாதிரி ராஜா, ராணி, மந்திரி, மதகுரு என்று ஒரு நட்சத்திரக் கும்பலே அங்கே உண்டு. கூடவே புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா, நாடக நடிகர்கள், அரசியல்வாதிகள். இன்னும் நிறையப் பிரபலங்களை இங்கே புதைக்க இங்கிலாந்து மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், உயிரோடு இருக்கிறவர்களைப் புதைக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதுதான் சின்னச் சிக்கல்.

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை வாசல். அப்படிச் சொன்னால் ஆட்டோக்காரருக்கு வழி தெரியாது. நாடாளுமன்றம் என்று சொன்னால் சுலபமாகப் புரியும். (குறுக்கு வெட்டாக ஒரு தகவல் – இங்கிலாந்தில் ஆட்டோக்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன. நம்ம ஊர்த் தயாரிப்புதான்.

இன்னும் இவை லண்டனுக்கு வராவிட்டாலும் அறிமுகப்படுத்திய இடங்களில் சக்கைப்போடு போட, லண்டன் டாக்சி டிரைவர்கள் முஷ்டியை மடக்கிக்கொண்டு காத்திருக்கிறார்களாம்).

நாடாளுமன்ற வாசல் முன்பாக நின்றபடி முறைத்துப் பார்க்கிற பழைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை. கன்சர்வேடிவ் கட்சி – லிபரல் கட்சி – திரும்ப கன்சர்வேடிவ் கட்சி என்று தாத்தா அந்தக் காலத்திலேயே ஜம்மென்று கட்சித் தாவல் நடத்தினாலும் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதமரமாக சக்கைப் போடு போட்டிருக்கிறார்.

அதிமுக்கியமான நூறு பிரிட்டீஷ்காரர்கள் யார் என்று பி.பி.சி டெலிவிஷன் இரண்டு வருடம் முன்னால் எடுத்த கணக்கெடுப்பில் எலிசபெத் மகாராணி, மறைந்த அவருடைய மருமகள் டயானா எல்லோரையும் பின்னால் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தவர் இவர். மகாத்மா காந்தியைப் பற்றி, ‘அந்த அரை நிர்வாணப் பக்கிரியைக் கையையும் காலையும் கட்டி, டில்லித் தெருவிலே போட்டு யானை மேலே வைஸ்ராய் துரையை உக்கார வச்சு ஓங்கி மிதிச்சுக் கொல்லச் சொல்லணும்’ என்று அழுகல் வாக்கு அருளிய இந்தச் சுருட்டுக்காரக் கிழவரைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்துக்கு முன்னால் சுற்றி வளைந்து போகிற சந்து பொந்துகளில் கால்போன போக்கில் நடக்கிறேன். பழைய காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசித்த இந்தத் தெருக்கள் இன்னும் பழைய கேஸ் விளக்கு அலங்காரத்தோடு காலத்தில் உறைந்துபோய் நிற்கின்றன.

நாடாளுமன்றத்தில் ஏதாவது மசோதா மேல் ஓட்டெடுப்பு வந்தால் அங்கே முழங்கும் மணிச்சத்தம் இந்த முடுக்குச் சந்துகளில் சத்தமாகக் கேட்க, சாப்பிட உட்கார்ந்த, தூங்க ஆரம்பித்த, சும்மா வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து காதைக் குடைந்து கொண்டிருக்கிற உறுப்பினர்கள் எல்லாரும் போட்டதுபோட்டபடி ஓடி வருவார்களாம்.

தற்போது நாட்டை ஆளும் தொழிற்கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிரும் புதிருமாகத் தலைமைச் செயலகம் அமைத்திருந்த தெரு நிசப்தமாக இருக்கிறது. ஐம்பது வருடம் முன்னால் இரண்டு கட்சி ஆபீசிலும் தொண்டர்கள் மாடியில் ஏறி நின்று கட்சித் தாவலுக்காக எதிர்க் கட்டிட ஆசாமிகளைத் தூண்டுவார்கள். இந்தோ வந்தாச்சு என்று யாராவது நிஜமாகவே கட்டிடம் விட்டுக் கட்டிடம் தாவித் தவறி விழுந்து காலை உடைத்துக்கொண்டார்களோ என்னவோ தெரியாது, ரெண்டு கட்சிகளும் ஆபீசை வேறுவேறு இடங்களுக்கு மாற்றி விட்டன.

வெஸ்ட்மின்ஸ்டர் சுரங்கப் பாதையில் மறுபடி புகுந்து நான்காம் வாசல் வழியாகத் தேம்ஸ் நதி தீரத்துக்கு வருகிறேன். போன நூற்றாண்டில் கிட்டத்தட்ட லண்டன் கூவமாகக் கிடந்த தேம்ஸ்.

சுத்தமும் சுகாதாரமும் பளிங்கு போன்ற தண்ணீருமாக மணக்க ஆரம்பித்து வெகுகாலம் ஆகிறதை நினைத்துப் பார்க்கிறேன்.. கூவம் ஐயோ பாவம் என்று பக்கத்தில் பிக்பென் கடிகாரம் சத்தமாக மணியடித்து அனுதாபப்படுகிறது.

தேம்ஸ் படித்துறையில் பான்கேக் கடை பூட்டியிருக்கிறது. இந்தியக் களையோடு எந்த மூஞ்சியாவது தட்டுப்பட்டால், பான்கேக் வார்க்கிற இரும்புச் சட்டியில் கரண்டியால் டொண்டொண் என்று தட்டி, ‘தோசை சாப்பிட வாங்க’ என்று அன்போடு கூப்பிடுகிற பிரிட்டீஷ் பாட்டியம்மாளைக் காணோம். பான் கேக்குக்கும் தோசைக்கும் உள்ள ஒற்றுமையை யாரோ அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். “ஒரு மாதம் கடையை மூடிட்டு தென்னிந்தியாவிலே சுத்தலாம்னு இருக்கேன்” என்று போனமுறை சந்தித்தபோது சொன்னார். மெரினா மிளகாய் பஜ்ஜிக் கடைகள் பக்கம் புதுசாக ஸ்டால் போட்டு, ‘இங்கிலீஷ் தோசை’ விற்கிற, கத்தரிப்பூ கலர் கவுன் மாட்டிய ஒரு வெள்ளைக்காரப் பாட்டியை யாராவது பார்த்தால் தகவல் சொல்லவும்.

DIGITAL CAMERA

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன