நிக்கொலா பெனடிட்டி என்ற வயலின் கலைஞர்

என் ‘ஏதோ ஒரு பக்கம்’ கிண்டில் மின்நூலில் இருந்து –

எடின்பரோ அஷர் ஹால் வாசல். ஒரு கோடை கால சாயந்திரத்தில் நண்பர் ஆண்டோவும் நானும் க்யூவில் நிற்கிறோம். ஆண்டோ இத்தாலியர். முழுப்பெயர் அண்டோனியோனி. புதுக் கவிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெயர் என்றாலும் சுருக்கி உச்சரிக்க சிரமப்பட்டதால் எனக்கு ஆண்டோ ஆனார்.

‘நிக்கோலா பெனடிட்டின்னு ஸ்காட்டிஷ் பொண்ணு. இத்தாலிய வம்சாவளி. அற்புதமா வயலின் வாசிக்கிறா. கிளாசிக்கல் வெஸ்டர்ன். உனக்குப் பிடிக்குமே, வா, போகலாம்’. ஆண்டோ வற்புறுத்தவே எடின்பரோ கோட்டை பக்கம் விளிம்பு நாடக விழாவில் ‘ரசீது’ நாடகம் பார்க்க உத்தேசித்ததைத் தள்ளிப் போட்டேன்.

டிக்கெட் வாங்க க்யூவில் நிற்கிறபோது அஷர் ஹால் வாசலில் நிக்கோலாவின் போஸ்டர் கண்ணில் பட்டது.

அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பெனலோப் க்ரூசில் தொடங்கி எனக்குத் தெரிந்த எல்லா அழகான பெண்களும் வரிசையாக நினைவு வந்த அதியற்புத நேரம் அது. பார்க்க மூக்கும் முழியுமாக இருந்து மற்ற ஏதாவது திறமையும் சொல்லிக் கொள்கிறது மாதிரி அமைந்துவிட்டால் இவர்களுக்கு வானமே எல்லை.

நிக்கோலா பெனடிட்டிக்கு சமீபத்தில் தான் 18 வயது முடிந்தது. மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதக் கச்சேரி சர்க்யூட்டின் இப்போதைய சர்வதேசப் பிரபலங்களில் இளையவர் நிக்கோலா தான்.

நம் ஊர் சைல்ட் பிராடிஜிகளின் சாதனைக்குச் சற்றும் குறைந்ததில்லை நிக்கோலாவுடையது. நாலு வயதில் வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, ஒன்பது வயதிற்குள் வரிசையாக எட்டு இசைத் தேர்வுகளில் வெற்றி பெற்று வயலின் மேதை யஹூதி மெனுஹ்சின் இசைக் கல்லூரியில் பட்டம் வாங்கியவர். ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா, ஸ்காட்டிஷ் பாலே இசைக்குழு போன்ற புகழ்பெற்ற குழுக்களில் வாசிப்பவர். பிரிட்டீஷ் அரச குடும்பத்துக்காக அரசவைக் கலைஞராகத் தனிக் கச்சேரி செய்தவர்.

சூயிங்கம் மென்றபடி பெரும்பாலான பிரிட்டீஷ் கன்யகைகள் விஸ்கி குடிக்கும் பாய் பிரண்டோடு சுற்றும் பருவத்தில், ஷைக்கோவிஸ்கி சைமனோவிஸ்கி, ஸ்ட்ராவின்ஸ்கி என்று இசைமேதைகளின் படைப்புகளைத் துரத்திப் பிடித்து ஆழ்ந்து கற்றவர். லண்டன் பிபிசி ப்ரோமனேட் இசைவிழாவிலும் இதற்கு முந்தைய எடின்பரோ சங்கீத சீசன் கச்சேரியிலும் ஒளி வட்டத்துக்கு வந்து கண்டிப்பான பத்திரிகை விமர்சகர்களால் தாராளமாகப் பாராட்டப்பட்டவர். இவருடைய ரசிகர் கூட்டமும் ஸ்காட்லாந்தில் அதிகம்.

நாலாம் வரிசையில் உட்கார டிக்கெட் தலா முப்பது பவுண்ட் கொடுத்து வாங்கியானது. சென்னை மியூசிக் சீசனில் சௌம்யா, நித்யஸ்ரீ கச்சேரிக்கு வாங்குவதைவிட ரெண்டாயிரம் ரூபாய் அதிகம்.

இவர்களுக்கு ஈடான க்ளோஸ் அப் புன்னகை சவிதா நரசிம்மன் கச்சேரி ஓசியிலேயே மதிய அரங்கில் கிட்டியதுண்டு. ஆண்டோவை சென்னை சீசனுக்கு அழைத்தபோது மணி அடித்துத் திரை உயர, மேடையில் வயலினை ஏந்தியபடி ஒயிலாக நிற்கும் நிக்கோலா.

‘வாவ், கிரேஸ்புல்’. பக்கத்தில் ஒரு ஸ்காட்டிஷ் பாட்டியம்மா சிலாகித்தாள். கோடைகாலம் என்பதால் மேல் சட்டையைக் கழட்டிப் பந்து போல் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டூ இளைஞன் ஒருத்தன் விடாமல் கைதட்டினான். முத்தங்கள் எல்லாத் திசையிலிருந்தும் மேடைக்குப் இறக்கை இன்றிப் பறந்தன. ‘ஷீ இஸ் ம்யூசிக் பெர்சானிஃபைட்’. பரவசத்தோடு சொன்னார் ஆண்டோ. இத்தனைக்கும் நிக்கோலா வயலினை வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை.

‘அந்தப் பொண்ணு கையிலே வச்சிருக்கற வயலின் மதிப்பு தெரியுமா?’ ஆண்டோ என் காதில் கிசுகிசுத்தார்.

என்ன, நம்ம லால்குடி, குன்னக்குடி, கன்யாகுமரி வாசிக்கற மாதிரி சமாச்சாரம். மிஞ்சிப் போனால் ஐயாயிரம் ரூபாய். இல்லையாம். கிட்டத்தட்ட ஐம்பது லட்ச ரூபாய். மயக்கம் போட்டு விழாமல் சமாளித்துக் கொண்டு ஏன் என்று விசாரித்தேன். ஸ்ட்ராடிவாரி என்றார் ஆண்டோ சுருக்கமாக. பதினெட்டாம் நூற்றாண்டில் வயலின் தயாரித்த மேதை கையால் உருவானதாம். உலகத்திலேயே தற்போது ஆயிரத்துக்கும் குறைவான ஸ்ட்ராடிவாரி வயலின்களே மிச்சம். லண்டன் ராயல் மியூசிக் அகாதமி நிக்கோலா வாசிக்க இப்படி அரைக் கோடி ரூபாய் வயலினை கடன் கொடுத்திருக்கிறது. அந்த அழகி ‘கொடுங்க ப்ளீஸ்’ என்று கேட்டால், ஒரு ஆர்க்கெஸ்ட்ராவே இலவசமாகக் கிடைக்கலாம்.

சும்மா சொல்லக் கூடாது. வில்லைக் கையில் எடுத்ததும் நிக்கோலா விசுவரூபம் எடுத்தார். மெண்டல்சன் வயலின் கான்சர்ட்டோ ஈ-மைனர், மோசர்டின் வயலின் அடாகியோ, ப்ராஹ்ம்ஸின் வி மெலோடியன், எல்லோருக்கும் தெரிந்த ஆவே மரியா என்று அடுத்தடுத்து நேர்த்தியாக வாசித்து அசத்திவிட்டார்.

அடுத்து வந்த இசையை எங்கோ கேட்ட நினைவு.

‘இளவரசர் சார்ல்ஸின் முன்னாள் மனைவி டயானாவின் சவப்பெட்டி வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டு அடக்கத்துக்கு முந்திய வழிபாடு நடந்ததே, நினைவு இருக்கா?’. ஆண்டோ கேட்டார்.

நினைவு வந்துவிட்டது. ஜான் டவனர் இசையமைத்த அற்புதமான ‘அத்தீனுக்கான பாட்டு’ அது. இழவு நேரத்திலும் இசையை அரங்கேற்றிப் பிரபலப்படுத்த வெள்ளைக்காரர்களால் தான் முடியும். நிக்கோலா வாசித்தது ஹமீர் கல்யாணி போல் கம்பீரமான சோகம் ததும்பும் இதே ‘சாங்க் ஃபார் அதீன்’ தான்.

கர்ட்டன் காலாக அவர் கரவொலிக்கு நடுவே மேடைக்கு மூன்று தடவை குனிந்து வணங்கியபடி வந்தும் சத்தம் அடங்கவே இல்லை. நிக்கோலா நினைவில் ராத்திரி முழுக்க கிளாசிக் எப்.எம் ரேடியோ கேட்டபடி விழித்திருந்தாராம் ஆண்டோ.

போன வாரம் நிக்கோவாவின் இணையத் தளத்தில் பார்த்தபோது, அவருக்கு இந்திய ஆன்மீகத்தில் சிரத்தை வந்திருப்பது புரிந்தது. அவர் அண்மையில் வாசிதது வெளியான, ஜான் டவ்னர் இசையில் அமைந்த புதுத் தொகுப்பில் தியானம், லாலிஸ்ரீ போன்றவை பெயரில் மட்டுமில்லாமல் இசை இனிமையிலும் நம்ம ஊர் சாயலுடன் இருக்கின்றன. கூடிய சீக்கிரமே டிசம்பர் சீசனில் மியூசிக் அகாதமி சதஸ்ஸிலோ, சாயந்திரக் கச்சேரியிலோ நிக்கோலா பெனடிட்டியைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அருணா சாயிராம் போல் ஹவுஸ்ஃபுல் நிச்சயம்.

Nicola Benedetti picture courtesy : https://www.nicolabenedetti.co.uk/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன